Monday, September 4, 2006

அவள்

பெங்களுரிலிருந்து திரும்பி வெளியில் பூட்டியிருந்த கதவை திறந்த கணேசனுக்கு குழப்பமாய் இருந்தது. யாரோ ஒரு பெண் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பின் பார்த்திராத ஒரு முகம். இவனை திரும்பி பார்த்து சகஜமாக சிரித்தாள்.திருப்பி சிரிக்க வேண்டியதாயிற்று.

"வாங்க மாமா நீங்க நாளைக்குதான் வருவீங்கனு சண்முகம் மாமா சொன்னாங்க. மாமா இன்னிக்கே வந்தீட்டிங்க. அவங்க டூட்டிக்காக நேத்தைக்கு தஞ்சாவூர் போயிருக்காங்க. மதியம் சாப்பாடுக்கு வந்திடுவாங்க"- அந்த பெண்

கணேசனுக்கு தலைசூடு அதிகமானது. அவனுக்கும், சண்முகத்துக்கும் வீட்டு வாடகை மற்றும் செலவு கணக்கு தவிர எந்த சொந்தமும் கிடையாது. இவளோ ஓரே வரியில் இரண்டு மாமா போடுகிறாள். பூட்டிய வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கிறாள், இவனது பொருள் எதுவும் ஹாலில் இல்லை, சண்முகத்தின் ரூம் பூட்டியிருந்தது. சண்முகம் வந்தவுடன் கேட்டுக் கொள்ளலாமென விட்டு விட்டான். அது ஒரு பெட்ரூம் வீடு. சண்முகம் வாடகை கொஞ்சம் கூட பகிர்ந்து கொண்டதால் அவனுக்கு ரூமை எடுத்துக் கொண்டான். கணேசன் ஹாலிலேயே ்வாசம்.

கணேசனுக்கு கம்பியுட்டர் சென்டரில் வாத்தியாராக வேலை. வெளியில் வேலை தேடிக் கொண்டிருந்தான். அறிவு சற்று அளவோடு சுடர் விடுவதால் வேலை கிடைப்பது சிரமமாக இருந்தது. அதிகம் அவனும் அதற்கு அலட்டிக் கொள்வதில்லை.

"காப்பி சாப்பிடறிங்களா மாமா?"-அந்த பெண்.

"உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் பாத்துக்கறேன். நான் சண்முகத்து சொந்தக்காரங்க யாரையும் பாத்தில்ல" - கணேசன்

"நானுந்தான் யாரையும் பாத்ததில்ல. நீங்க அவரு கூட இருக்கறவங்க நீங்களும் பாத்ததில்லியா?"- கொஞ்சம் ஆச்சரியமாக அந்த பெண்

கணேசனுக்கு குழப்பம் கூடி இருப்பது மட்டுமே தெளிவாய் தெரிந்தது. காதலித்து கீதலித்து எந்த எழவையாவது கூட்டி வந்து விட்டானாவென ஒரு எண்ணம் வந்தது. சண்முகம் இல்லாமல் அறிமுகமில்லாத அவளுடன் அறையிலிருப்பதும் சங்கடமாயிருந்தது. அத்தோடு உரையாடலை முடித்துக் கொண்டான். தொங்கிக் கொண்டிருந்த தூக்கத்தை கழட்டி எறிந்துவிட்டு குளித்து உடை மாற்றி வெளியே வந்தால் கையில் காபியோடு நின்றிருந்தாள்.குடித்து முடிக்கையில் மூன்று இட்லியும்,சட்னியும் கொஞ்சம் சிரிப்புமாக நின்று கொண்டிருந்தாள்.

"ரொம்ப தேங்ஸ். காபியும் இட்லியும் நல்லாயிருந்துச்சு. நான் சென்டர் வரைக்கும் போறேன். அவன் வந்தானா போன் பண்ண சொல்லுங்க"- கணேசன்

"மாமா போகையில கதவை வெளிய பூட்டிட்டு போங்க. அவங்க அப்படித்தான் இருக்கனுமினு சொன்னாங்க. மதியம் சாப்பாடுக்கு வந்தீடுங்க"- அவள்.

"கதவைலாம் பூட்டல. நீங்க இருங்க. மதியம் நான் வல்லிங்க. சென்டர்ல வேலையிருக்கு. கொஞ்சம் மறக்காம அவன் வந்தா போன் பண்ண சொன்னீங்கனா போதும்"-கணேசன்

அவள் முகம் சற்று பயந்தால் போல் ஆனது.

"நான் சொல்லறேன். கதவை பூட்டிட்டு போங்களேன். அவங்களுக்கு கோபமாயிடும்"- அவள்.

கணேசனுக்கு என்ன எதுவேன்று புரியவில்லை. வெளியே பூட்டி விட்டு சென்டருக்கு வந்து விட்டான். பூட்டிய கதவு நிறைய கேள்விகளை திறந்துவிட்டிருந்தது. தேவையில்லாத விஷயமென விட முடியவில்லை. மதியம் வரை இதே ஓட்டந்தான். மதியம் சண்முகம் ஆபிஸ் வந்தான். களைப்பாய் சந்தோஷமாயிருந்தான்.

"என்ன கணேசு எப்படி போச்சு பெங்களுர். வேலை எதுவும் தேறுமா? ஒரு வாரமா டேரா போட்டியே?"-சண்முகம்

"இந்த தடவை ஒன்னு தேறுமினு நினைக்கிறேன். அது ்யாரு வீட்ல? ஏன்ட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல"-கணேசன்

"உனக்கு புடிச்சிருக்கா? சொல்லு"- சண்முகம் சொல்லி கண்ணை சிமிட்டினான்.

"என்னடா பேசறே?"-கணேசன்.

"அது பார்ட்டி கணேசு. சேலம் போனேன்ல, போற வழியில லிப்ட் கேட்டுட்டு இருந்துச்சு, கூட்டிட்டு போய் ரெண்டு நாள் ஜாலியா இருந்தேன். கிளம்பையில சாப்பாடு மட்டும் மூனு வேளை போட்டு வைச்சிகிறியா மாமானுச்சு. பெரிய வீடு செட்டாகறத்துக்கு முன்னாடி சின்ன வீடு செட்டாகும் போலருக்கேனு நினச்சி கூட்டியாந்தாச்சி. ஆள் வேலையில கில்லாடி. ஒரு தடவ போய் பாரு தெரியும். என்னோட பார்த்திருக்கியே ஆறுமுகம், அவன் கூட ட்ரை பண்ணிட்டான். மொதல்ல மாட்டேனுதான் சொன்னா. அப்புறம் நான் வைச்சுக்க மாட்டேன்னேன் பாரு. அவ்ளோதான் அள்ளு விட்டுச்சு அவளுக்கு. மூடிக்கிட்டு சரினுட்டா. கிருஷ்ணன் இன்னைக்கு வரேன்னான். நீ வேணும்னா சொல்லு நான் அவனை நாளைக்கு வரச் சொல்லறேன்."- சண்முகம்

கணேசனுக்கு வாந்தி வருவது போல அடி வயிறை புரட்டியது. கதையில் படிக்கையில், பேசிக்கொள்கையில் வராத ஒரு அறுவெறுப்பு அங்கு நின்றது. சண்முகத்தின் மீதா, அந்த பெண்ணின் மீதாவென அவனுக்கு தெரியவில்லை.
சண்முகத்திடம் ஏதோ சொல்ல வேண்டுமென இருந்தது. வார்த்தைகள் காணாமல் போயிருந்தது. சற்று மவுனமாக இருந்தான்

"என்னடா எதுவும் நோய் இருக்குமினு ்பாக்கறியா? அதெல்லாம் இல்லை. ஆறுமுகம் டாக்டர்தானே செக்கப் பண்ணிட்டுதான் வந்தான். நல்லா இருக்காளாம்"-சண்முகம்

கணேசனுக்கு இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லையென பட்டது.

"சண்முகம் நான் வீட்டை ஒரு வாரத்தில காலிப் பண்ணிக்கிறேன். அது வரைக்கும் ்வீட்டுக்கு யாரையும் வரச் சொல்லாதே. இது உன்னோட விஷயம் ரைட்டா தப்பானு நான் சொல்ல விரும்பல. உனக்கும் நல்லது கெட்டது தெரியும். இப்ப நீ கெளம்பு"-கணேசன்.

சண்முகம் கோபமாய் முறைத்து விட்டு கிளம்பி விட்டான். அதற்கப்புறம் கணேசனுக்கு சண்முகத்தின் முகத்திலிருந்த களைப்பான சந்தோஷம், ஆறுமுகத்தின் ஆர்வம் , கிருஷ்ணனின் ஆசை போன்றவை அடிக்கடி நியாகம் வந்துக் கொண்டிருந்தது. இந்த நியாபகங்கள் அவளின் புது மனிதன் பார்த்த படபடப்பையும், அங்கீகாரம் தேடும் அவளின் குறுஞ்சிரிப்பையும் பனி போல போர்த்தியிருந்தன. இவன் வேலைத் தேடி வெளியூர் செல்வதும், அவள் வேலையை நிறுத்த ஊர் மாறியதும் முரணாய் இருந்தாலும் என்றாவது நடக்குமென்ற நம்பிக்கையே இருவருக்கும் பொதுவாயிருந்ததை நினைத்துக் கொள்வான்.

இது நடந்து மூன்று மாதம் கழித்து கணேசன் திருச்சி சென்டருக்கு வேலை மாற்றிக் கொண்டான். நகர்ந்து கொண்டே இருக்கும் ஏதோ ஒருநாளில் அவளை மீண்டும் பார்த்த போது திருச்சி ஜங்சன் பைக் ஸ்டான்ட் வெளியே நின்று கொண்டு கஸ்டமர் தேடிக் கொண்டிருந்தாள். கணேசனை பார்த்து அதே சிரிப்பு.

மூனு வேளை சாப்பாடு போட்டு வைச்சிகிறியா மாமா என்ற கேள்வியும் கேட்டாள்.

No comments: