Saturday, October 14, 2006

குதிரைக்கு சொந்தகாரர்கள்


காலில்லாத முகம் அழிந்த
குதிரைக்கு சொந்தகாரர்கள்
குதிரை மேல் குந்தி
புவி வெல்ல போகிறார்கள்

கால் வளர்க்கவும்
முகம் கொடுக்கவும்
நேரம் இல்லாதவர்கள்
சவாரிக்கு மட்டும்
முந்தி இருக்கிறார்கள்

பார்ப்போம் இந்த
பயணத்தின் திசைகளை

Friday, October 13, 2006

விழிப்பு பெற

போராட்டங்கள் வெற்றி பெற
பாவனைகள் ஆக்கபட
பரிணாம கோணல்களில்
பாவனைகளே போராட்டங்களாயின

உண்ணவும் கழிக்கவும்
உயிரான சுயமரியாதைக்கும்
தானமாய் தயவுகளை தேடி
தயவுகளே வாழ்வின்
நிதர்சனங்கள் ஆயின

கவுரவமும் விழிப்புணர்வும்
கல்லான தெய்வங்கள் போல
காட்சி பொருளாக
நெஞ்சினில் சுமந்து
நேர்வழி செல்லாமல்
கதவுகள் சாத்தப்பட்ட
கல்லறையிலும் கருவறையிலும்
அலங்காரமும் அர்ச்சனையையும்
அடக்க மறைந்திருகின்றன

கல்வியும் வேலையும்
குடிநீரும் சாக்கடையும்
ஆற்றல் மிக்க மின்சாரமும்
அனைத்தையுமினைக்கும் சாலைகளும்
இல்லோர் இருப்போரேன
இடம் பார்க்காமல்
எல்லோரிடமும் சேர
எழுந்திடும் விழிப்பு

மகள்

வெல்லக்கட்டி
என் வெண்ணிலாக்குட்டி
பட்டு கன்னம் தேய
பாயினிலே புரண்டு
மொட்டு வாயை கூட்டி
மெல்ல பேசும் பேச்சில்
சித்திரங்கள் ஆக்கி
சிந்தையிலே வைத்தேன்
**********************
பாதி இரவில் விழித்து
பாலும் கொஞ்சம் குடித்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஓங்கி அவள் அழுது
தூக்கமவள் வாஙக
அவள் உதட்டில்
வழியும் சிரிப்பில்
பக்கம் நிரப்பும் எழுத்தும்
பயனிலாமல் போகும்

Wednesday, October 11, 2006

நிஜம்

குருட்டுபயல்கள் யானையை
பார்ப்பது போல் பார்த்து விட்டு
பார்க்க கூடாததை பார்த்ததாக
பதட்டமும் ஆகிறார்கள்

எப்போதும் சவுக்கு வைத்திருப்பவனுக்கு
வசதிக்கு வார்த்தை வராதவரை
விசிறு விசிறுவதில் ஏது குறை
அரசியலமைப்பை அப்பாலெறிந்து விட்டு
அண்ணாச்சிகளுக்கு பட்டம்
கட்ட வேண்டியதுதான் போலிருக்கு
நீதிமானாய் நியாயவாதியாய்

புகைமூட்டி நிஜம் மறைத்து
கண் திறந்து நிஜம் தேட
வழி காட்டுகிறார்கள்
புகை கலைகையில்
புகையை நிஜமாகவும்
நிஜத்தை புகையாகாவும்
மாற்றிக் கொள்கிறார்கள்

பாண்டம் செய்பவன் கை
பானையாகிறது நிஜம்
கண்கட்டி தலைசுற்றி
நிற்கும் வரை
அவர்கள் விடுவதாயில்லை
மயக்க நிலை மனிதருக்கு
வித்தை விற்றல் சுலபம்

Sunday, October 8, 2006

Thank You For Smoking- திரை விமர்சனம்

கருத்தாக்கங்கள் சந்தை மயமாக்கப்பட்டு, அலங்காரமான வார்த்தைகளில் வாதங்களை பொட்டலம் கட்டி விற்கும் மனிதனை பற்றி சினிமா இது.

அமெரிக்காவில் லாபி செய்வது என்பது ஒரு தொழில். உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் அதற்கு அரசின் உதவி வேண்டுமென்றால் இவர்கள்தான் அதற்கான இடை மனிதர்கள். பல்வேறு பட்ட தொழில்கள், அமைப்புகள், நாடுகள் இவர்களை தங்கள் பிரதிநிதிகளாக வாடகைக்கு எடுத்து அரசை தங்கள் பக்கம் திருப்ப பயன்படுத்துகிறன. கிட்டதட்ட இந்தியன் படத்தில் கமல் போக்குவரத்து அலுவலகம் முன் பண்ணும் வேலை. ஆனால் சட்டபூர்வமாக அங்கிகரிப்பட்ட வேலை,

படத்தின் நாயகன் உலகத்தில் சரியானது, தவறானது என்று எதுவும் இல்லை. விஷயங்கள் அவை சொல்லப்படும் விதத்தில் சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம் என்பது அவனது முடிவு.

சிகரெட் தொழில் அமெரிக்காவில் பல்வேறு தடைகள், வழக்குகள் மத்தியில் இருக்கிறது. கதை நாயகன் அந்த தொழிலை பற்றிய கருத்தாங்கங்களை மக்களுக்கு விற்பவன்.

சிகரெட் வேண்டும் என்ற வார்த்தைகளை தவிர்த்து, மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்ற உரிமை வேண்டும் என்பதே அவனது வாதமாக வைக்கிறான். தனி மனிதனுக்கான நல்லது , கெட்டதுகளை முடிவு செய்யும் உரிமையை எந்த அரசோ,அமைப்போ தவறென வாதாட முடியாது. ஒரு நாளைக்கு அமெரிக்காவில் 1200 நபர்களை கொல்லும் ஒரு பொருளை எளிமையான ஒரு வாதம் கொண்டு அவனால் நியாயப்படுத்த முடிகிறது

படத்தில் அவனது நண்பர்களாக வருபவர்கள் இரண்டு நபர்கள். ஒருவர் ஆயுத விற்பனையாளர்களின் லாபியை சேர்ந்தவர், இன்னோருவர் மது விற்பனையாளர்களின் லாபியை சேர்ந்தவர். மூவரும் தங்களை மரண விற்பனையாளர்கள் என்று நகைச்சுவையாக அழைத்து கொள்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் நடக்கும் உணவருந்தும் இடத்திற்கான உரையாடல் மிக அழகாய் செல்கிறது. அவர்கள் உணவருந்தும் இடத்தின் பின்னே இருக்கும் ஒரு புகைப்படத்தில் அமெரிக்காவின் பெருமையை பறை சாற்றும் வாக்கியங்கள் இருப்பதில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.

கதாநாயகனின் மகன் தந்தையை கண்டு கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் இருப்பவராக காட்டப்படுகிறான்.அப்பாவின் அஸ்திரமான சொல்லும் விதத்தில் சொன்னால் எல்லா வாதங்களும் நியாங்களே என்பதை தன் அம்மாவுக்கே பயன் படுத்தி அவள் பலவீனத்தை முன்னகர்த்தி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள தயங்குவதில்லை.

மகனின் பாத்திரம் அப்பா தன் தொழிலில் மூழ்கி முத்தெடுக்கும்(!) போது சிறிது காற்றாய் இருந்து சுவாசிக்கவும் வைக்க உபயோகப் படுத்த படுகிறது.

நாகரிக உலகத்தில் திரைப்படங்களின் தாக்கமும் இந்த படத்தில் காட்டப்படுகிறது. திரைப்படங்களின் மூலம் சிகரெட் விளம்பரம் செய்ய லாஸ் ஏஞ்சலிஸ் போகும் நாயகன் தன்னை விட பெரிய வியாபார புலியை சந்திக்கும் இடங்கள் அருமை.

சிகரெட் தொழிலுக்கு எதிராய் போராடும் செனட்டர் படும் தடுமாற்றங்கள் நகைச்சுவையுடன் படம் முழுக்க வருகிறது. எண்ணங்கள் சிறந்ததாய் இருந்தால் மட்டும் போதாது, அதை மக்களிடம் கொண்டு செல்ல தெரிய வேண்டும் என்பது இந்த பாத்திரம் வழியாக காட்டப்படுகிறது. டிவி நிகழ்ச்சியில் ஓரு கேன்சர் நோயாளியை வைத்துக் கொண்டு சிகரெட்டின் தீமைகளை சொல்ல ஆசைப்படுவதும், அதை சரியாக சொல்ல முடியாமல் கதாநாயகனிடம் குட்டு படுவதுமான இடங்கள் இயக்குனரின் திறமையை காட்டுகிறது.

சிகரெட் குடித்து கேன்சர் வந்து கோர்ட்டுக்கு செல்லவிருக்கும் நோயாளியை கதாநாயகன் சுலபமாக கையாளுவான். யாருக்கு எது பலவீனமோ அதை கொண்டு அவன் பொருள் விற்பான்.

இந்த தொழில மனசாட்சிக்கு விரோதமாய் தோன்றாதா என யாராவது கேட்கும் போது சால்ஜாப்பு சொல்லுதலையையும் காட்டியிருப்பார்கள். அந்த சால்ஜாப்பு கதாநாயகன் தனக்கு சொல்லிக் கொள்வதல்ல, அடுத்தவருக்காக அவன் வைத்திருக்கும் பொட்டலத்தில் அதுவும் ஒரு ்பகுதி

பெண் பத்திரிக்கை நிருபருடன் ஏற்பட்ட தொடர்பினால் பழி ஏற்பட்டு பணி இழப்பதையும், பின் நடந்த சம்பவத்தை திரித்து பழியை தனக்கான விளம்பரமாக்குவதும் கதாநாயகனுக்கு லாவகமாய் வருகிறது.

இந்த படம் போதனைகளுக்கான படமல்ல. லாபி உலகின் நடப்புகளை நகைச்சுவையாக சித்தரிப்பது. ஆர்ப்பாட்டமான சண்டைகளோ, அதிரடி திருப்பங்களோ கிடையாது. ஆனால் அவசியம் பார்க்கலாம். அதற்கு முன் அமெரிக்க லாபி பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வார இறுதியில் இந்த படத்தை பார்த்தேன். மரியா பெல்லா, கேட்டி ஹோம்ஸ் ,வில்லியம் மேசி ஆகியோர் தெரிந்த முகங்கள். மரியா பெல்லாவை history of violence படத்தில் பார்த்து இருக்கிறேன். கேட்டி ஹோம்ஸ் batman returns-ல் வருவார். பட கதாநாயகன் ஏரான் ஹேக்ஹார்ட். பாத்திரமுணர்ந்து செய்திருக்கிறார். இயக்குனர் ஜேசன் ரிட்மேனின் திறமை படம் முழுதும் தெரிகிறது.

மறக்காமல் இருப்பவை

சனநாயகத்தின் இரண்டு தூண்கள்
ஊரின் நாட்டாமைகளும்
ஓட்டு போட்ட சனங்களுந்தான்

மறக்காமல் நாட்டாமைகள் செய்வது
ஊர்காசில் விருந்து வைத்து
உபயதாரரில் தன் பெயர் போடுவது

மறக்காமல் சனங்கள் செய்வது
முதல் பந்திக்கு முந்தி
மூழ்கும் அளவுக்கு முகஸ்துதி வழங்குவது

எல்லோரும் மறக்காமல்
இழுத்து போட்டு கடமை செய்ய
என்ன குறை சனநாயகத்துக்கு

Friday, October 6, 2006

அம்மா

பக்கத்து வீட்டு
பேச்சின் சுவராஸ்யத்தில்
பாதம் ஏறி செல்லும் பாம்பை
கவனிக்காமல் இருக்கலாம்
அசரமால் உழைத்ததில்
ஏதாவது ஒரு ஏகாதசி
விரதம் விட்டுப் போகலாம்
விடிகாலை சமையலில்
சோற்றின் உப்பும் மறக்கலாம்
அவ்வப்போது சொல்லும்
கணக்கு பாடத்தில்
ஒரிரண்டு தெரியாமலிருக்கலாம்
எதுவிருந்தாலும்
கண்கள் மூடி உறங்கும் போதும்
பிள்ளைகள் இருவரை விடுவதில்லை
தூக்கத்தின் வார்த்தைகளும்
அம்மாவுக்கு எங்கள் பெயர்தான்

Thursday, October 5, 2006

பிஞ்சு முகம்

நசுக்கி போடும்
ஓரு நாள்
அசந்து காய்ந்து
நொந்து முடிகிறது

உதறி தள்ளி
ஒட விடாமல்
தளையாய் கட்டும்
முடிந்து போன
நாளின் நிகழ்வுகள்

ஏக்கப் பார்வையோடு
நாளை வரும்
தீபாவளி பட்டாசுக்காக
நேற்றிலிருந்து பட்டியலோடு
வாசலில் காத்திருக்கும்
பிஞ்சுமுகம் பார்க்கையில்
தளை அவிழ்கிறது

Wednesday, October 4, 2006

கோபம்

காலை விடியலில் கோவில் கண்டு
விரல் நுழையா உண்டியல் தேடி
செய்ததற்கு கையூட்டளித்து
செய்யபோவதற்கு முன்பணம் கட்டி
சிறப்பு கட்டண சேவையில்
சிந்தை மகிழ்ந்து அய்யனின் நாமம்
போற்றி போற்றி என
பொங்கி வழிய வாசல் வருகையில்
முழம் பூ வழிக் கடையை விட
முக்கால் ரூபாய் கூட வைத்து
கூவி விற்கும் ஐந்து வயது
பெண்ணிடம் கோபம் வருகிறது

Tuesday, October 3, 2006

X-Men: The Last Stand

அன்பு அண்ணன் உல்வோரைன் கலக்கும் X-Men: The Last Stand டிவிடி இன்று வெளி வருகிறது. இது பிரைன் சிங்கர் இயக்கம் இன்றி வெளி வரும் முதல் X-Men படம். திரை அரங்கு சென்று பார்க்க திட்டங்கள் பல தீட்டியும் வீட்டில் செல்லமாக தட்டி சும்மா இரு என்று சொல்லி விட்டதால் அடங்கி போக வேண்டியதாயிற்று.

சாயங்காலம் வீட்டுக்கு போகையில் டிவிடி எடுத்து விட வேண்டியதுதான். தலைவி ஹேலி பேரியும் உண்டு. cat womanல் சம்பாதித்த கெட்டப் பெயர் எல்லாம் இந்த படத்தில் போக்கி கொண்டார்.

வில்லியம் ஸ்ட்ரைக்கருக்கு தண்ணி காட்டிய இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட விறுவிறுப்பு.


மற்றுமொரு முக்கிய தகவல் மியுட்டன்ட் மனிதர்கள் பரிணாம வளர்ச்சியால் உருவானவர்களாய் காட்டபடுகிறார்கள். இந்த படம் டார்வினை ஆதரிக்கிறது.

உல்வோரைனுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து விட்டு தனி திரைப்படம் எடுப்பதாக பேசிக்கொள்கிறார்களாம்.

முதல் முதலில் பார்த்த பிரைன் சிங்கர் படம் usual suspects. திரில்லர் படம். கைசர் சூசே என்ற பெருங்கோபமும், புத்திசாலிதனமும் உள்ள வில்லனை பற்றி சுழன்ற படம். நம்ம ஊர் வில்லன்கள் எல்லாம் வட்டமாக உட்கார்ந்து அட்டை பெட்டி நடுவே கவர்சி நடனம் பார்த்து ஹிரோவிடம் அடி வாங்கி சாகையில் இது போல் வித்தியாசமான வில்லன் பார்க்கையில் பிடித்து போகிறது. கெவின் ஸ்பேசி கலக்கி இருப்பார்.

லாஸ் ஏஞ்சலிஸ் ஆரஞ்சு கவுண்டியில் படையப்பா பார்த்து விட்டு இரவு காட்சியாக நண்பன் வீட்டில் இந்த படம் பார்த்து கிட்டதட்ட ஆறு வருடம் ஆகி விட்டது. ஆரஞ்சு கவுண்டி என்ற உடன் நினைவு வருவது உடுப்பி ஹோட்டல். வடை நன்றாக இருக்கும். இப்போது மூடி விட்டார்களாம். பயானிர் போலிவார்டில் மனதுக்கு பிடித்த ஒரே விஷயம் காணாமல் போனதில் வருத்தம் உண்டு.

அறுமிடம் எது

தளை அறுமிடம் எது
அன்னியர் அகலையில் இல்லை
அகன்ற பின் தெரிந்து கொண்டோம்
சனங்களின் வாக்கினில் இல்லை
கையிட்ட மை காயும் முன் புரிந்து கொண்டோம்
கூவிட்ட கோஷத்தில் இல்லை
காதடைக்கையில் விளங்கி கொண்டோம்
விளிம்பு தளும்பும் உணர்ச்சியில் இல்லை
தூண்டி காய்வோர் தரிசித்து தெரிந்து கொண்டோம்
அறிவகற்றும் குருட்டு பக்தியில் இல்லை
கூழை கும்பிடின் முடிவில் அறிந்து கொண்டோம்
புரிதலில் அறுமோ விழித்தலில் அறுமோ
தன்னை போல் பிறர் நோக்கையில் அறுமோவென
விட்டம் பார்த்து வீணாய் யோசிக்கையில்
நிச்சயம் அறவில்லை

Monday, October 2, 2006

அழைப்பு

கருவறைக்குள் ஒளிந்திருக்கும் தாண்டவகோனே
கதவுடைச்சி வந்திடடா தாண்டவகோனே
அச்சமாக இருக்காடா தாண்டவகோனே
அரவணைக்க நாங்கருக்கோம் தாண்டவகோனே

தீட்டோடு நான் நிற்க தாண்டவகோனே
தினம் பூசை கேட்குதாடா தாண்டவகோனே
பாலும் சோறும் மறந்திடுடா தாண்டவகோனே
மேளத்தோடு நாயனங்கள் தூக்கி எறி தாண்டவகோனே
வானிருக்கு மண்ணிருக்கு தாண்டவகோனே
நடுவில் கொஞ்சம் நாமிருப்போம் தாண்டவகோனே
கள்ளோடு கவுச்சி உண்டு தாண்டவகோனே
மோதும் பறை இசைகள் கேளு தாண்டவகோனே

பக்தனாக நானிருக்க தாண்டவகோனே
உன் வேசம் நீயும் கலைச்சிடனும் தாண்டவகோனே
குறீயிட்டில் அடங்காதே தாண்டவகோனே
வெறும் பேச்சில் மயங்காதே தாண்டவகோனே
வெளி நீயும் வந்திடடா தாண்டவகோனே
வீடுபேறு காட்டிடுவேன் தாண்டவகோனே
பகுத்தறிவு தேடிடலாம் தாண்டவகோனே
பயம் மறந்து வந்திடடா தாண்டவகோனே