Thursday, November 29, 2012

சந்தை

ஒரு பொருள் அது புற வடிவம் கொண்டிருந்தாலும், அக வடிவமான சிந்தனை வடிவம் கொண்டிருந்தாலும் தான்  உற்பத்தி செய்ய பட்ட இடத்தில் இருந்து நகர்ந்து அதன் பயனர்களை சேரும் இடம் என்ன? உற்பத்தியாளரும் , பயனரும் சந்திக்கும் இடத்தினை சந்தை என்று சொல்லலாமா? அக பொருள் , புற பொருள் இரண்டையும்  பயனர், உற்பத்தியாளரிடம் இருந்து துண்டிக்க பட்டு உற்பத்தி பொருளை அனுபவிக்க (அக ரீதியாகவோ ,புற ரீதியாகவோ)   முடியும். டால்ஸ்டோய்சின் இலக்கியத்தினை வாசித்து பயன் அடையும் பொழுது  டால்ஸ்டாய்சின் பெண்களை குறித்த கருத்துகளை  சேர்ந்து சுமக்க வேண்டியதில்லை. டால்ஸ்டோய்சினை சந்தித்தோ, அறிந்தோ இருக்க வேண்டியதில்லை. அதே போல இன்று மின்சாரம் பயன் படுத்தும் பொழுது எடிசனின் எல்லா பிழைகளையும் சுமக்க வேண்டியதில்லை. 

இங்கு மூன்று புள்ளிகள்  உண்டு .

1. பொருளின் உற்பத்தி ( அகம் ,புறம் )
2. பயனர் (நுகர்வோர்?),
3. உற்பத்தி பொருளும், பயனரும் சந்திக்கும் இடம் ( சந்தை?)

உற்பத்தி பொருளும் , பயனரும் சந்திக்கும் இடத்தில் , இந்த உற்பத்தி பொருள் கையாளபடுவது முழுக்க முழுக்க பயனரை சார்ந்து உள்ளது. பயனர் தனது அக திறனால் உற்பத்தி பொருளினை கச்சா பொருளாக்கி அதனை மேம்படுத்தலாம் (நாராயண குரு, காந்தி ) , அல்லது உற்பத்தி பொருளின் மேல் அதிகார விளிம்புகளை (வைதீக பேரொளிகள், பல கம்யூனிச சர்வாதிகாரிகள்)  சுமத்தி அதை ஆயுதமாக்கலாம், அல்லது உற்பத்தி பொருளினை பயன் செய்ய தெரியாமல் போகலாம் , அல்லது வேறு வித முடிவுகளும் நேரலாம்.

இதை புற வடிவு பொருளுக்கும் சொல்லலாம் , அக வடிவ பொருளுக்கும் சொல்லலாம். கதிரியக்கம் கொண்டு உருவாக்க பட்ட எக்ஸ் ரே , கதிரியக்கம் கொண்டு உருவாக்க பட்ட ஆயுதங்கள் என இரு வேறு பொருள்கள், ஒரே கச்சா பொருளில் இருந்து சாத்தியம்.

அக பொருளின் சந்தை வடிவம் பலவாக இருக்க வாய்ப்பு உண்டு. சொல்ல தக்க சில வடிவங்கள். 

1. தனிப்பட்ட குரு -சிஷ்ய வாய்ப்பு  (மத்துரு தயிர்)
2. கல்வி நிலையங்கள் 
3. ஆய்வு மையங்கள் 

இன்னும் பல வடிவங்களும் இருக்கலாம்   

இந்த விதத்தில் பார்க்கும் பொழுது உற்பத்தியாளர், பயனர் என்பது நிலையான இடங்கள் அல்ல. சந்தையில் பங்கு பெரும் பொழுது வகிக்கும் பாத்திரமே. இன்றுஉற்பத்தியாளர் நேற்றோ , நாளையோ ஒரு பயனர் என்ற அளவில் சந்தையை சந்தித்தே ஆக வேண்டும். இன்றைய பயனர் நாளையோ ,நேற்றோ உற்பத்தியாளர் வடிவம் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.  
  
உற்பத்தி பொருள்கள் பல ஒன்று சேர்ந்து புதிய உற்பத்தி பொருள் வடிவம் கொள்ளலாம். இதை புற வடிவில் ,அக வடிவில் இரு நிலைகளிலும் காணலாம்.  பயனர் உற்பத்தியாளராய் மாறும் சாத்தியங்கள் அதிகாரிக்கும் பொழுது, உற்பத்தி பொருள் கச்சா பொருளாய் மாறும் சாத்தியம் அதிகரிக்கும் பொழுது பயனரும்,உற்பத்தியாளரும் சந்திக்கும் புள்ளிகள் (சந்தை) அதிகரிக்கும்.சந்திப்பின் விதிகளை சந்திப்பவர்கள் கூட்டாக நெறி செய்து கொள்ளும் பொழுது 
சந்திக்கும் புள்ளிகள் நேர் பட இயங்க இயலும். 

Wednesday, November 21, 2012

ஒரு கதை

கதவடைத்து ஆண்டு பல ஆகி விட்டது.
இது ஒரு மிக பெரிய கூட்டு குடும்பம்
யாருக்கும் யாரையும் பிடிப்பதில்லை.
சொத்து பிரித்தால் ஓராணாவுக்கு மேல் யாருக்கும்
தேற போவதில்லை.
எனவே யாரும் எங்கும் போகபோவதில்லை.

பக்கத்து வீட்டு பங்காளி செங்கல் செங்கல்லாய்
வீட்டினை சரித்து மாற்ற சொன்னான்.
அவனை பொறுத்த வரை செங்கல் தான் உண்மை
வீடென்பது ஒரு பொய்.
வீடு செங்கல்லின் மீது சிமெண்ட் திணித்த மாயை

ஒப்பு கொண்டு துடிக்கின்றான் ஒன்று விட்ட தம்பி
வீட்டின் நிழலும் கூரையும் , அணைப்பும்
அனுபவிக்கும் ஒரு தருணத்தில்
செங்கல்களின் அடிமை தனம் குறித்து சொன்னான்
பின்னர் வடித்த சோறும் வறுத்த கறியும் தின்று தூங்கினான்
அவனுக்கு மதிய தூக்கம் மிக முக்கியம்
எழுந்த பின் ஒரு எழுபது பக்க உரை உண்டு.
செங்கல்லின் விடுதலை அவனுக்கு மிக பிடிக்கும்
வறுத்த கறியும் மிக பிடிக்கும். 

பங்காளி அவ்வப்போது இல்லத்தின் உறுதி  சோதிக்க
கடப்பாறைகளை அனுப்புவான்.
அவன் தொழிலே கடப்பாரை செய்வது ஆனது
நல்ல வருமானம். நல்ல தொழில்.
மிக்க மகிழ்வு அவனுக்கு.
அவனது ஒட்டின் கூரை அவனுக்கும் சரிய ஆரம்பித்தது .
அவனுக்கு நேரமில்லை சரி செய்ய
ஒட்டிலிலிருது உத்தரம் நோக்கி கறையான் வந்தது
கொல்லாமை என் கடமை
எனவே கறையான் என் நண்பன் என்றான்.

மச்சு வீடு கட்டி மாடி மேலே ஏசி போட்ட
நண்பரே கடப்பாரை தொழில் முதல் போட்டார்.
இரண்டு வீடும் இடிந்து போனால்
வட்டியும் வருமானமும் அவருக்கே.
கொண்டை மேல் இருக்கும் கொம்பினை
சொறிந்து ரத்த சூடு நாக்கினை நீட்டி எச்சில் கூட்டி
இன்பமாய் அவர் உண்டு

ஏதோ சேர்ந்து பிழைக்க சொல்லி ஒரு
பெருசு சொன்னதாய் ஒரு கதை உண்டு
எதுவும் செய்யாமல் பழமொழி சொல்லி
இருக்கும் கிழவி சொன்னது.
அப்பாவும் பங்காளியும் அந்த கோமாளி
கிழவனை அடிக்கவும் உதைக்கவும்
கிழவன்  சொன்ன சொல் திவசமும் செய்ய பட்டது
அப்பா அவ்வப்போது வாழ்க கிழம்  என்பார்.
கிழவன் படத்துக்கு மாலை போடுவார்
தனியே இருக்கும் பொழுது கிழ பைத்தியம் எனபார்.

கண்ணாடியில் பார்த்தேன்.
நாங்கள் புத்திசாலி போல என்றால்
அந்த கிழம் கோமாளி போலதான் இருந்தார்.



 

 
 
  




Wednesday, July 18, 2012

தமிழ் திருவிழாவும் , ஆசிரியர் பதிலும் -ii

நான் ஆசிரியராக நினைக்கும் ஜெயமோகனுக்கு எழுதிய ஒரு கடிதமும் , அதற்கு ஆசிரியர் எழுதிய பதிலும்.

இந்த கடிதம் அதன் தொடர்ச்சியும், இறுதியும். இது ஆசிரியரின் கருத்து நிலையை மாற்ற வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு எழுத பட்டது அல்ல. ஒரு மாற்று கருத்து என்ற அளவில் சொல்ல படுகின்றது. உலகம் கருப்பு , வெள்ளை அன்று என்பதும் ஆசிரியர் சொன்னதே.

ஆசிரியருக்கு,


  வணக்கம். தங்கள் பதில் கண்டேன். நன்றி. தமிழின் மசாலா பண்பாடு , மேடை பேச்சு மேல்தான் வளர்ந்தேன். தங்களது  "யூத்"  கட்டுரையில் எழுதப்பட்ட  "யூத்"  என்னும் அளவில்தான் அறிவு முதிர்ச்சி இருந்தது. அந்த தவறுகள் முதலில் உள்ளத்தில் ஒரு போதாமையை கொடுத்தன. நிறைவு இல்லை. அந்த போலித்தமான பூச்சு வேலைகள் கொடுத்த மனச்சோர்வினை தங்களது சங்க சித்திரங்கள், விஷ்ணுபுரம் போன்றவை கடக்க  உதவின. அன்பு மனைவி இந்த புத்தகங்களை அறிமுக படுத்தி  இந்த பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தாள். இந்த வாசிப்பு ஒரு மன நிறைவினை கொடுத்தது. தொடர்ந்து உங்களை வாசித்து வருகின்றேன்.  நான் பழகி வந்த  மசாலா பண்பாட்டினை முடிந்த அளவில் தாண்டவே முயன்று வருகின்றேன்.

   இப்போது இந்திய பண்பாடு , மரபு முதலியவற்றினை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உறுதி உண்டு. என் பழம் மரபின் மேல் ஒரு அதிகார அரசியல் படர்ந்து உள்ளது. அதை ஒதுக்கி இலக்கியத்தையும், இசையையும் காணுதல் தற்போதைய முயற்சி. நான் கடிதம் எழுதுவது பெட்னாவினை குறித்த தங்கள் கருத்தினை மாற்றி அமைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அல்ல.உங்களது கருத்து  உங்களது அனுபவதின் மீது , நம்பிக்கையின் மீது நீங்கள் உருவாக்கியது. நான் சொல்ல விழைவது ஒரு மறுபக்கம் உண்டென்பதினை மட்டுமே.




பெட்னாவில் சினிமா நிகழ்வுகள் இல்லை என சொல்ல மாட்டேன். இருந்தது. அது வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. எனவே அது இருக்கும். ஆனால் கீழ் கண்ட நிகழ்வுகளும் இருந்தன என்பதை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்.


http://www.youtube.com/watch?v=vssynAcaLT0 ---- காவிய தலைவிகள் நாட்டியம்


http://www.youtube.com/watch?v=6ryxPpR_XWk&feature=relmfu-- கண்ணதாசன் பாடலுக்கு நடனம்


http://www.youtube.com/watch?v=lmXGB4YYn4I&feature=related-- நீயூ ஜெர்சி தமிழ் சங்க நடனம்


http://www.youtube.com/watch?v=h1xyhDk1lAA-- சிலம்பாட்டம்


http://www.youtube.com/watch?v=icq_ahXTROk&feature=related- தமிழிசை (இதை நான் தவற விட்டு விட்டேன். இதில் நிறைய குழந்தைகள் பங்கு கொண்டன. நிகழ்ச்சி நிரல் பார்த்து  தெரிந்து கொண்டேன்)


http://www.youtube.com/watch?v=BQGqQ_Lw_HM&feature=related- வீணை இசை (இதை நான் பார்க்க வில்லை )


இன்னும் ஒரு அருமையான நாட்டிய நிகழ்வு இருந்தது. அதை பார்த்தேன். அதன் ஒளி காட்சி கிடைக்கவில்லை. இந்த நாட்டிய நிகழ்வுகள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் உச்ச வெளிப்பாடு அல்ல.
ஒரு தொடக்க நிலை அனுபவங்களே. ஆனால் இவை புலம் பெயர் குழந்தைகளின் வெளிப்பாடு. பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்க மண்ணில் வேறுபட்ட இடங்களில் வாழும் தமிழ் பிள்ளைகள் தங்களை முன்வைக்க அமைக்க பட்ட தளத்தில் நிகழ்த்தும் வெளிப்பாடு.இங்கு நாம் காண வேண்டுவது மரபு கலை வடிவங்களில் மன மகிழ்வை , கலை வடிவின் நுணுக்கத்தினை அல்ல. தமிழ் நாட்டில் வாழும் பெற்றோருக்கு இல்லாத ஒரு சிரமம் இங்கு புலம் பெயர் தமிழனுக்கு உண்டு. தமிழ் வெளிப்பாட்டு தளங்கள் எங்கள் குழந்தைகளுக்கோ, எங்களுக்கோ எளிதானது கிடையாது. அவர்கள் ஒரு சாதாரண உரையாடலை தமிழில் நிகழ்த்துவது அதிசயமாக உள்ள இடத்தில் மரபு கலை வடிவங்களில் தமிழ் காண விழைவது மிக கடினமான ஒரு காரியம்.


இதை தவிர குழந்தைகளுக்கான தமிழன் தமிழச்சி நிகழ்வு, இலக்கிய வினாடி வினா நன்றாக இருந்ததாக நண்பர்கள் கூறினார்கள். அதன் ஒளி காட்சியும் கிடைக்கவில்லை. நான் குடும்பதோடு செல்லவில்லை. என் நோக்கம் எஸ்.ராவோடு நேரதினை செலவிடுவது. நான் பால்ட்டிமோரிலும் தங்கவில்லை. எனவே மூன்று நாட்களும் தினசரி ஒரு வழி 60 மைல் கார் ஓட்டம் , எஸ்.ராவுக்கு அருகில் இருக்க முயற்சிப்பது என நேரம் செலவாகியது.


நான் மிக மதிக்கும் சில குடும்பங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றன . நான் இந்திய இசை  மரபின் தொடர்ச்சியாக மதிக்கும்  , தமிழ் கல்வி செயல்பாட்டில் பெரும் நேரம் செலவிடும் எனக்கு தெரிந்த குடும்பங்கள் தன்முனைப்போடு பங்கு பெற்றன. இங்கு உணவு கூடத்திலும் ,அரங்கிலும் ,அரங்குக்கு வெளியிலும் நான் பலரது உழைப்பையும் கண்டேன். இவர்களது செயல் எனக்கு பிடித்த விதத்தில் , எனக்கு பிடித்த தளங்களில் மட்டும் இருக்க வேண்டுமென நான் கோர இயலாது. ஆனால் எனக்கு விருப்பமான தளங்களிலும் கூட  உண்டு என்பதை கண்டேன். முன்பே சொன்னது போல இது ஒரு மன மகிழ் நிகழ்வு. தமிழ் நாட்டில் உள்ள உங்களுக்கு பெரும் கூட்ட சூழலில் பல தமிழ் குடும்பங்கள் ஒன்றாய் காண வேண்டும் என்பது ஒரு சிறு ஆசை போல இருக்கலாம் , ஆனால் அது புலம் பெயர் சூழலில் கொடுக்கும் மன நெகிழ்வு சொல்ல இயலாது. திரை கடலோடி திரவியம் தேட வந்து எங்கள் அம்மா ,அப்பா ,உடன் பிறப்புகள் விட்டு தள்ளி வாழ்கிறோம். இந்த வாழ்வு எங்கள் தேர்வே,யாரும் கட்டாயாய படுத்தவில்லை. இந்த தேர்வின் காரணமாய்   நிறைய திருமணங்கள் தவறவிட்டிருக்கின்றேன்.  மொட்டை அடித்தல் , காது குத்துதல் போன்ற சிறு நிகழ்வுகள் தவற விட்டிருக்கின்றேன். இங்கு மொத்தமாய் இத்தனை தமிழ் குடும்பங்கள் காண்கையில் கங்கையின் சங்கமதில் நீங்கள் சொன்ன மன நெகிழ்வே உண்டாயிற்று. கங்கையின் அசுத்தமோ. காசியின் நெரிசலோ முக்கியமில்லை. மனம் ஒரு விஸ்வரூப காட்சியை உருவாக்கி தருகின்றது. அது போலவே இங்கிருந்தது.


இங்குள்ள சில அரசியல்,அதன் வாதங்கள் , சினிமா வேகம் எனக்கு உடன்பாடில்லாமல்  இருக்கலாம் .ஆனால் அவை மட்டுமே அங்கே இல்லை.பிறவும் இருந்தன.  ஆனால் அவை இல்லாத ஒரு தமிழ் இடத்தினை தேடி காணுதல் புலம் பெயர் சூழலில் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. நிச்சயம் என் பெண் இழிவாக காணாத ஒரு தகப்பனாக இருப்பேன் என நம்புகின்றேன். நீங்கள் எனது ஆசிரியர், உங்கள் வார்தைகள்   சரஸ்வதி வடிவம். இது போல என்னை குறித்து சொல்லும் பொழுது சிறிது உறுத்துகின்றது .


ஏதோ ஒரு வகை அரசியலும் , அரசியல்பால் உண்டாகும் குறைபாடுகளும் எல்லா இடங்களிலும் உண்டு. எல்லா மக்கள் திருவிழாவிலும் உண்டு. வேறு வேறு வடிவங்களில், ஆனால் அதை காட்டி திருவிழாக்களை நிராகரிக்க வேண்டுமா?


அன்புடன்
நிர்மல்

Friday, July 13, 2012

தமிழ் விழாவும், ஆசிரியருக்கு எழுதிய பதிலும்

நான் ஆசிரியராக மதிக்கும் ஜெயமோகன் அவர்கள் பெட்னா நடத்திய தமிழ் திருவிழா குறித்து எழுதியது மன வருத்தம் தந்தது.  இது நான் அவருக்கு எழுதிய ஒரு கடிதம்.


ஆசிரியருக்கு,

வணக்கம். இங்கு அமெரிக்க மண்ணில் வாழும் புலம் பெயர் தமிழ் சுழலில் பல வகை அரசியல் செயல்பாடுகள் ,வடிவங்கள் உண்டு. அவரவர் நம்பிக்கைகைக்கு ஏற்றது போல அதை வெளி படுத்தவும் செய்கிறனர். அது ஜனநாயக சமூகத்தில் இயல்பு. எனக்கு பெட்னாவின் உள் அமைபையோ அதன் இயங்கு தன்மை குறித்தோ எந்த அறிமுகமும் இல்லை. நான் கலந்து கொண்ட முதல் பெட்னா நிகழ்வு இதுதான். எஸ்.ராவின் வருகை காரணமாக அவரை சந்திக்கும் ஆவலில்தான் கலந்து கொண்டேன்.



இது ஒரு தமிழ் திருவிழா. தண்ணீரில் உள்ள மீன் தன்னை நீரின் உறுப்பாய் அறியாது, தண்ணீரை தாண்டும் பொழுதே அதற்கு அதன் தவிப்பு

தெரியும். இங்குள்ள புலம் பெயர் தமிழர் நாங்கள் தண்ணீரை விட்டு வெளியில் உள்ளோம். ஒரு தவிப்பு உண்டு. என்னை போல் மொழி பேசும் ஒருவனை , என்னை போல் குடும்பம் உள்ள ஒருவனை , ஒரு தெரிந்த முகதினை கண்போமா எனபது பெரும் தவிப்பு. இந்த விழாவில் எங்கு கானினும் தமிழ் கூட்டம். ஒரு கொண்டாட்ட சூழலில் குழந்தைகள்,ஆண்கள் , பெண்கள். எத்தனை வேறு வயது, வடிவங்களில் மனிதர். அமெரிக்காவின் எல்லா பகுதியில் இருந்தும் வருகின்றார்கள். தமிழகதின் அனைத்து தரப்பிலிருந்தும் பங்கு பெறுகின்றார்கள். இது ஒரு மன மகிழ் நிகழ்வு. எனவே குஷ்புவும் ,அமலா பாலும் அவசியம். அவர்கள் வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. அவர்கள் கலைஞர்கள், எனவே அவர்களும் உண்டு. இது இலக்கிய நிகழ்வு மட்டுமல்ல. ஆன்மீக நிகழ்வு மட்டுமல்ல, நாத்திக நிகழ்வு மட்டுமல்ல என்றே எனக்கு தோன்றியது.



தமிழச்சி பேசியது பெட்னாவின் பொது மேடையில் அல்ல , அவர் பேசியது பொது நிகழ்வுகள் முடிந்த பின்னர் அதன் மறு தினம் ஒரு சிறிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்வு. அந்த இடத்தில் பேசினார். அதற்கு சற்று முன்னர்தான் காந்தியின் பயணங்களின் சிறப்பினை குறித்து எஸ்ரா பேசினார். அவருக்கு பின்னர் சுதந்திர போராட்ட அனுபவங்கள் குறித்து நல்ல கண்ணு அவர்கள் பேசினார்கள். அதற்க்கு பின்னர் சகாயம் அவர்கள் நேர்மையின் அவசியம் குறித்து பேசினார். தமிழச்சி அவர்களின் பேச்சு இந்த வரிசையில் ஒரு பகுதி. உங்களுக்கு கடிதம் எழுதியவர் இதை குறிப்பிட மறந்து விட்டார். அவர் மறதி தற்செயல் என எனக்கு படவில்லை.



ஒட்டு மொத்தமான சித்திரம் தராமல் ஒரு சிறு பகுதியை உங்களிடம் காட்டி ஒரு மன மகிழ் நிகழ்வாக நடந்த ஒன்றினை அரசியல் நிகழ்வாக மாற்றி காட்டுகின்றார். ரவி சங்கர் வந்து வாழும் கலை குறித்து பேசினார், இலக்கிய வினாடி வினா நட்ந்தது, குழந்தைகளின் தமிழன் தமிழச்சி நிகழ்வு நடந்தது, சீதை, பாஞ்சாலி , சகுந்தலை , கண்ணகி எனும் காப்பிய நாயகிகள் குறித்து நாட்டிய நடனம் நடந்தது. குழந்தைகளின் தமிழிசை நிகழ்வு நடந்தது. இது போன்ற பல நல்ல நிகழ்வுகள் உண்டு.



இந்த நிகழ்வு நன்றாக நடக்க எனக்கு தெரிந்த வகையில் சில தன்னார்வ  நண்பர்கள் இரவு பகல் , பார்க்காமல் உழைத்தனர். அவர்களுக்கு அமலா பாலோ ,அரசியலோ முக்கியமாக படவில்லை. நிறைய நிகழ்வுகளின் பொழுது அவர்கள் பின் மேடையிலும் , வந்திருந்தவர் உணவு ஏற்பாட்டிலும், வந்திருந்தவர் தங்க வைக்கும் ஏற்பாட்டிலும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் தமிழ் நாட்டில் இருந்தால் வேறு வேறு பின் புலம் உடைய இந்த தன்னார்வ நண்பர்கள் இது போல இப்படி உணவு ,தூக்கம் மறந்து ஒரு மொழி அடிப்படையிலான நிகழ்வுக்கு ஊதியமின்றி உழைத்து இருப்போரோ என தெரியவில்லை. ஆனால் இங்கு செய்தார்கள்.



உதாரனத்துக்கு ராமக்ரிஷ்ணனின் வாசகரான அந்த பெட்னா உறுப்பினர் ராமகிருஷ்ணன் மேடையில் பேசும் பொழுது அரங்கதிலேயே இல்லை. தண்ணீர் வாங்க சென்று விட்டார். 25 கேஸ் தண்ணீரை அவர் கொளுத்தும் 104 வெய்லில் காருக்கும் உணவு கூடதுக்கும் சுமந்தலைந்தார். அவர்

உழைப்பு அவரது ஆர்வத்தின் காரணமாய். நிகழ்வு முடிந்ததும் ஒரு கல்யாணம் முடிந்த சந்தோசதில் அவர்கள் உள்ளம் இருந்ததை கண்டேன். அதற்கு மரியாதை தர வேண்டுமென நினைக்கின்றேன்.



அமெரிக்க மண்ணில் தமிழரில் எல்லா தரப்புகளும் உண்டு. இடதும் உண்டு , வலது உண்டு. இதன் நடுவே எதுவும் இல்லாமல் சினிமா பார்த்து, அமலா பால் பார்க்க ஆசைப்பட்டு, பிள்ளைக்கு திருமண வாய்ப்பு தேடி , ஒரு திருவிழா மன நிலை தேடி நிற்கும் மனிதரும் உண்டு. இது அனைவருக்குமான பொதுவான ஒரு நிகழ்வு.



நிகழ்ச்சி அமைப்பில், கவனிப்பில் , மேலாண்மையில் ,விருந்தினர் அழைப்பில் எனக்கு பெட்னாவோடு  விழாவில் கலந்து கொண்ட பார்வையாளன் என்ற அளவில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் அடுத்த பெட்னாவில் கலந்து கொள்வேனா என்பது ஆம் என்றே தோன்றுகின்றது. எனது குழந்தைக்கு இங்கு உன் தாய் மொழி பேசுபவர் எத்தனை உண்டென காட்ட ஒரு வாய்ப்பு இதுவென எண்ணுகின்றேன். அவ்ளுக்கான தாய்மொழி வெளிப்பாட்டுக்கான தளத்தில் ஒன்றாய் இது இருக்கலாம். நானும் இத்தனை தமிழ் குடும்பங்களை, மனிதர்களை ஒன்றாய் காண்பதில் மகிழ்வு கொள்கின்றேன். எனவே எனக்கு உண்டான கருத்து வேறுபாடு இருந்தாலும் இது முக்கிய நிகழ்வே. இது நிலம் துடிக்கும் மீன்கள் தண்ணீரை காணும் தருணங்களில் ஒன்று.



அன்புடன்

நிர்மல்

Tuesday, July 10, 2012

தக்ஷிணாமூர்த்தி தருணங்கள்

இரு ஆண்டுகள் முன்பு ஜெயமோகனை சந்தித்தேன்.  அவருடன் உரையாட போதுமான நேரம் இல்லை. மிக குறைவான நேரமே அவருடன் இருக்க முடிந்தது.  அது மறக்க முடியாத துவக்கம். ஆசிரிய பார்வையின் அவசியதினை அறிமுகம் செய்தது.


இந்த வருடம் இரண்டு ஆளுமைகளை சந்தித்தேன். சான்ப்ரான்சிஸ்கோ ராஜனுக்கும், பெட்னா தமிழ் திருவிழாவுக்கும் , கார்திகேயனுக்கும், திருமூர்திக்கும், பாஸ்டன் பாலாவுக்கும் நன்றி பல.

தமிழின் எழுத்து ஆளுமைகளான நாஞ்சில் நாடன், எஸ்,ராமக்ருஷ்ணன் இருவரையும் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் உரையாட முடிந்தது. இவை எனக்கு  ஒரு தக்ஷிணாமூர்த்தி தரிசன தருணங்கள். புதிய பார்வைகள், புதிய கேள்விகள் , புதிய மொழி அனுபவங்கள் இவர்களால் வாய்த்தது. வணக்கதுக்கு உரிய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 


இந்த தருணங்களின் தொடர்ச்சியாய் சில புதிய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது.  அமெரிக்காவில் தமிழ் கல்வி ஒட்டிய செயல்பாடுகளும், தமிழக அரசியல் செயல்பாடும், பெரும் விழா கொண்டாட்ட மகிழ்வும், அதற்கு நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் நண்பர்களின் தன்னார்வ  உழைப்பும் ஒரு பாடமாய் இருந்தது.