Wednesday, January 31, 2007

பாடல்கள்


Crazy Music
Originally uploaded by pfly.
பாடல்கள் உடன் வந்து கொண்டே இருக்கின்றன. கார்களின் ரேடியோவிலும், கணிணியிலும் உடன் இருந்து கொண்டே இருக்கின்றன. சின்ன வயதில் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த திரைப்பட பாடல்கள் மேல் ஏற்பட்ட ப்ரியம் இன்னும் அகலவில்லை. சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா என டி.எம்.சவுந்திராஜன் பாடுவது இன்னும் கேட்க இனிமையாக இருக்கின்றது. மற்றோரு பாடலான உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் என் குழந்தைக்கு நான் பாடும் தாலாட்டுகளில் ஒன்றாகவும் தங்கிவிட்டது.

பாடலை எழுதியது யாரென நியாபகம் இல்லை. வாலியோ, கண்ணதாசனோ, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ என அடையாளம் பிரிக்க முடியவில்லை. அடிமை பெண் திரைப்படத்தில் வரும் தாயிலாமல் நானில்லை பாடல் உதடுகளுக்குள் முணுமுணுப்பாக வந்து போகின்றது.

கொஞ்சம் வளர்ந்த போது ஒன்றிரண்டு டப்பாங்குத்து பாடல்களிடத்து பார்வை திரும்பியது. எனன படமென்று நியாபகம் இல்லை குன்னக்குடியின் இசையில் வந்த கொட்டாம்பட்டி ரோட்டிலே ஹோ ஹோய் பாடல் பிடித்த பாடல்களில் ஒன்றாய் இருந்தது. பின்பொழுதில் இளையராஜாவின் உருமியில் மனம் லயிக்க ஆரம்பித்தது.

அப்பா முருக பக்தர். அவரது தாக்கத்தினால் சிறுவயதில் முருகபக்தி மனம் நிறைந்திருந்தது. சீர்காழியின் பாடல்கள் வீட்டில் நிறைய இருந்தன. திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் மிகப்பிடித்த பாடலில் ஒன்று. ஊரில் சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசம் சலிக்காமல் வீட்டில் ஒலிக்கும், அதை சலிக்காமல் கேட்க இயலும். அம்மா பேத்தி பால் சாப்பிட அடம் பிடித்தால் பேத்திக்கு கந்த சஷ்டி கவசம் படித்துக்காட்டுகிறார். சாமி கும்பிடாமல் வளர்க்க கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார்கள். உம்மாச்சியின் இருப்பை பற்றிய கேள்விகளை வாரிசிடம் வளர்கையில் அறிமுகப்படுத்தலாம் என விட்டாகி விட்டது.

புன்னகை மன்னன் வந்த போது என்ன சப்தம் இந்த நேரம் கேட்க ஆரம்பித்து இன்னமும் நிறுத்தவில்லை. எனக்கு தெரிந்து அந்த பாடல் பிடிக்கவில்லையென யாரும் சொன்னதேயில்லலை.

காதல் அரும்பிய தருணம் ஆனந்தம் படத்தின் என்ன இதுவோ என்ன இதுவோ பாடல் தந்த மோகம் மறக்க இயலாத ஒன்று. ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்க காருக்குள் பாடல் பரப்பி சாலையில் அவளோடு நிகழ்த்திய உரையாடல் அசைப்போட்டு செல்லுதல் சேமிக்க கூடிய நினைவுகளில் ஒன்று.

கருத்தம்மா வந்த பொழுதில் மலேசியா வாசுதேவன் பாரதிராஜா குரலில் வந்த காடு பொட்டை காடு ்பாடல் கேட்கையில் திருச்சி அருகே ஊர் பக்கம் போகும் பாதையில் உள்ள வெயில் அடிக்கும் பொட்டை காடுகளும் மாடு மேய்க்கும் சிறார்களும் வயதானவர்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஆக்ரோஷமாய் காய்ந்த மண்ணிற்கு சொந்தகாரர்கள் பாடும் அந்த பாடல் மிகப் பிடிக்கும்.

கோட்டையை விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமாட சாமி பாடல் பிடித்தில் ஒன்று. குடந்தை டைமண்ட் தியேட்டரில் பார்த்த படம். பாடலின் முழு வரிகளோ, இல்லை படமோ நியாபகம் இல்லை. பாடலின் முதலிரண்டு வரிகள் மட்டும் நினைவில் உண்டு.

காதல் ஓவியம், முதல் மரியாதை இரண்டு படமும்தான் எல்லாப் பாடல்களும் பிடித்த படங்கள். கேட்க வைத்த ராசாவிற்கு நன்றி. நிலாவதான் நான் கையில புடிச்சேன் என்று கேட்பது கார் ஸ்டியரிங்கிலும் தாளம் போட வைக்கின்றன.

ஆங்கில பாடல்களுக்கு பரிச்சயம் கல்லூரி காலத்தில்தான் பரிச்சயம் கிடைத்தது. ஈகிள் குழுவினரின் வெல்கம் டு தி ஹோட்டல் கலிபோர்னியா பாடல் மிக பிடிக்க ஆரம்பித்தது. வரவேற்று வெளியே அனுப்ப மறுக்கும் அந்த வகை இடம் பிடித்திருந்தது. பின்னோரு நாளில் வேகாஸின் கேசினோ ஒன்றில் கொஞ்சம் ஜேக் ்டானியல்ஸ் மற்றும் மால்பரோ துணையோடு அமர்ந்திருந்த போது பான் ஜோவி குழுவினரின் இட்ஸ் மை லைப் பாடல் கேட்க நேர்ந்தது. அது முதல் தனியே நானும் ஜேக் ்டேனியல்ஸூம் இருக்கையில் அந்த பாடலை துணைக்கு வைத்துக் கொள்ளுதல் மரபாக வைத்துக் கொண்டேன். தற்சமயம் அந்த குறுந்தட்டும் தொலைந்து விட்டது, ஜேக் டேனியல்ஸையும் விட்டாகி விட்டது.

திருமணத்தின் பின் ்துணைவியின் கர்நாடக இசை ஆர்வத்தின் காரணமாய் எம்.எஸின் குறையொன்றுமில்லை பாடலை கேட்க நேர்ந்தது. அதற்கப்புறம் அடிக்கடி அந்த பாடலை கேட்க வேண்டியிருக்கிறது. மீராவில் எம்.எஸ் பாடிய பாடலையும் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.

இன்னும் பல பாடல்கள் உண்டு. தினதந்தியின் கன்னி தீவு முடியும் வரை எழுதலாம்.

Tuesday, January 30, 2007

பட்டாம்பூச்சி விளைவுகள்


Chaos Theory
Originally uploaded by jurvetson.
எங்கோ ஏதோ நடக்குது எனக்கென்ன என்ற உயரிய கொள்கை(!) நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. எனக்கென்ன சித்தாந்தம் எல்லா நேரமும் வேலை செய்யாது என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கமாய் பட்டாம்பூச்சி விளைவுகளை கூறுவார்கள். காற்றில் நகரும் ஒரு பட்டாம் பூச்சியின் இறகு துடிப்பு எனும் சிறு நிகழ்வு பெரும் சூறாவளியை உண்டாக்கும் பெருநிகழ்வின் முதற்படியாகவும் இருக்கலாம். பனி மலைகளில் சிறு பனி உருண்டு விழும்போது பெரிதாவது போல் சிறு நிகழ்வுகள் பல தொடர்ந்து நிகழ்ந்து பெருநிகழ்வாக மாறுகின்றன.

எதிர்காலம் என்பது நிகழ்கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. எந்த ஒரு சிறு செயலும் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் சில நேரம் வெளிப்படையாகவும் , சில நேரம் மறைமுகமாகவும் பரவுகின்றன. அந்த பரவுதலின் தாக்கம் அடுத்த அடுத்த நிகழ்வுகளின் துவக்கத்தில் சேர பரவுதலின் விட்டம் அதிகரிக்கின்றது.

மில்லியன் விந்தனுக்களில் ஒன்று சினைமுட்டையுடன் சேர கரு உருவாகின்றது. இந்த சேருதல் என்னும் சிறு நிகழ்வு ஒரு உயிரை உருவாக்குகின்றது. அந்த உயிரின் உருவாக்கம் சமூகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளை உருவாக்குகின்றது. சில விந்தனுக்கள் முட்டையுடன் சேரும் சிறு நிகழ்வு ஏற்படாமல் போனால் உலகில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். போர், நாட்டின் வளர்ச்சி, அமைதி, அறிவியல் வளர்ச்சி, வன்முறை வெறியாட்டம்,ஜாதிக் கட்சி போன்ற பல நிகழ்வகளும் ஒரு சிறு நிகழ்விலிருந்தே தோன்றுகின்றன.

கேயாஸ் கருத்தாக்கம் எனப்படுவது கணிக்கமுடியாத,தொடர்ச்சியான, குறிப்பிட்ட இடைவெளி இல்லாத மாறிக்கொண்டே இருக்க கூடிய சூழல்களை அவதானித்து அவற்றை கணித வடிவப்படுத்தும் முயற்சியாகும். இந்த கருத்தாக்கத்தில் பட்டாம் பூச்சி நிகழ்வு குறிப்பிடதக்க ஒன்றாகும்.

Monday, January 29, 2007

ஊடல் வேளைகள்


Love Backwards
Originally uploaded by Victory of the People.
எனக்கும் அவளுக்குமான
எப்போதோ சொல்லப்பட்ட வார்த்தைகளின்
இருட்டு மூலைகளில் அது ஒளிந்திருந்தது
இப்போது பிடறிமயிர் சிலிர்த்து
வெளிவந்து ஆட்டமிடுகிறது
வெளிவராமல் இருந்தால்
விஷவிருட்சம் ஆகியிருக்கலாம்

ஆட்டத்தினை காணும் போது
ஆட்டத்தின் விளிம்புகள் காண
ஆட்டத்தின் எச்சங்கள் எல்லா புறமும் சிதறும்
சிதறுவது ஆட்டதின் நியதி

முடிவில்லா சங்கிலியாய்
நீள்வதாய் நர்த்தனம் வேடமிட்டாலும்
கடைசியில் அதையும் அதோடு உள்ளதையும் சேர்த்து
கடாசிவிட்டு கட்டிக் கொண்டு முடங்குகையில்
வேறோரு ஆட்டம் தொடங்குகிறது

Tuesday, January 23, 2007

மூளையின் அடுக்குகள்


Brain
Originally uploaded by alaspoorwho.

பரிணாம வளர்ச்சியை பார்த்தாமானால் மூளைப்பகுதி மூன்று அடுக்குகளால் கட்டப்பட்டுள்ளது.

முதல் பகுதி ஆர்க்கிபாலியம் என்று அழைக்கப்படுகின்றது. ஊர்வன வகை விலங்களிடத்தும் இப்பகுதி உண்டு. இந்த பகுதி தன்னை தானே காத்துக் கொள்ளும் இயல்பை உயிர்களிடத்து உருவாக்குவதில் பங்கேற்கிறது

இரண்டாம் பகுதிதான் லிம்பிக் பகுதி. இது பாலுட்டிகளிடத்து உண்டு. இது செக்ஸ், தாபம், நெகிழ்வு, காதல், பரிவு போன்ற பல வகை உணர்வுகளுக்கும் காரணமான பகுதியாக உள்ளது.

இந்த பகுதி ஆராயும் சிந்தனைகளை தூண்டுவதில்லை.நேரும் சம்பவங்களை இந்த பகுதியில் சேமிக்கப்பட்ட நினைவுகளோடு ஒப்பீடு செய்து அதனோடு பொருந்துவதை கண்டு உடனே முடிவு செய்ய தூண்டுகின்றது.

உதாரணத்திற்கு சில


ஒரு பெண் திரும்பி சிரித்தால் அது ்காதல் என்ற தமிழ் சினிமா கதாநாயகனின் உணர்வு.


தனக்கு ஒரு மோதிரம் வித்தைக்காரர் கொடுத்தவுடன் உறவுக்கு ஒன்று கேட்டு வயதை மறந்து பஞ்சுமிட்டாய் கண்ட குழந்தை போல் பேசுவது


பழுதை கண்டு பாம்பென அரண்டு ஒடுவது


நடிகருக்கு கட்அவுட் வைப்பது


மூளையின் மூன்றாம் பகுதி முக்கியமானது. இது குரங்களிடத்தும், மனிதரிடத்தும் உண்டு. இதன் பெயர் நியோகார்டெக்ஸ். இந்த பரிமாண வளர்ச்சி லிம்பிக் பகுதியின் வளர்ச்சிக்கு அடுத்த நிலையில் நிகழ்ந்தது. நியோகார்டெக்ஸ் மனிதரிடத்து மூளையின் அளவில் 90 சதவீதமாக உள்ளது. குரங்குகளிடத்து இதன் அளவு குறைவு. சில நபர்கள் இதனை முழுமையாக பயன்படுத்தா பொழுதும் இது நிச்சயம் அவர்களிடத்து உண்டு.


இந்த பகுதிதான் ஆராயும் தன்மையை உண்டாக்குகிறது. இதன் ்மூலம் அமையும் செயல்கள் லிம்பிக் பகுதியின் முடிவுகளை மாற்றி அதன் காரணங்களை ஆராய சொல்கின்றது. உணர்ச்சிகளின் விளிம்பில் பிரச்சனையில் மறுகாமல் அலசி பார்க்க உதவுதலின் அவசியம் பரிணாமத்ததில இருக்க போய் இந்த பகுதி உருவாகி இருக்கிறது.

இந்த பகுதியின் உதாரணங்கள் சில

அந்த பெண் என்னை பார்த்து சிரித்தால் அதன் அர்த்தம் தேடக் கூடாது. திரும்ப சிரித்தால் போதும் என நிஜவாழ்வில் முடிவெடுப்பது

நடிப்பு பிடித்திருந்தால் படம் பார்த்து பொழுதை போக்கி விட்டு கட்அவுட் பின்னால் அலையாமல் வீட்டுக்கு செல்லும் போது

கையூட்டு வாங்கும் போது

கோவில் சன்னதியில் வெளியில் விட்ட செருப்பை நினைக்கையில்


Monday, January 22, 2007

கிராமபுற உள்கட்டமைப்பு மேம்பாடு

கிராமங்களில் உள்கட்டமைப்பை பெருக்குவதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை முதல்வர் கருணாநிதி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.தமிழ்நாட்டில் உள்ள 12,618 கிராம பஞ்சாயத்துகளும் வரும் ஐந்து ஆண்டுகளில் மேம்பாடு அடைய இந்த திட்டத்தின் கீழ் 2500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 2500 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு பஞ்சாயத்து அமைப்புக்கும் 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது.

இந்த 20 லட்சத்தில் முதல் 15 லட்சம் சாலை வசதிகள், குடிநீர் வசதி, சாக்கடை வசதிகள், சுடுகாடு, நூலகம் போன்ற வசதிகளுக்கு பயனபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து லட்சம் பிற திட்டமிடா செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். உள்கட்டமைப்பை கிராமங்களில் மேம்படுத்துவதன் மூலம் நகரங்களுக்கு வரும் மக்களை குறைக்கலாமென்றும் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார்கள்.உள்கட்டமைப்பு உயர்த்துதல் மக்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.

சிறந்த பஞ்சாயத்து விருது ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 15 பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.

நிறைய நல்ல திட்டங்கள் அரசின் உத்தரவிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு செல்வதற்குள் காணாமல் போய்விடுகின்றது. அதை தடுக்க இது போன்ற திட்டங்களில் பணம் செலவிடுதற்கான கணக்கு வழக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு எளிதில் படுமாறு வைக்கலாம்.

நன்றி; தி ஹிண்டு

தண்ணீர் பிரச்சனையும் கருணாநிதியும்

ஒரு சாதாரணுக்கே சிரமமான பிம்ப ஒழிப்பை அரசியல்வாதியான கருணாநிதி செய்திருப்பதை பாராட்ட தோன்றுகின்றது. கழுத்தை பிடிக்கும் மாநில நிதிநிலைமை உள்ளபோது உதவிக்கு வரும் கரம் ஆன்மிகமயமானது என்ற போதும் அதை ஏற்றுக் கொண்டு தனிப்பபட்ட பிம்ப அரசியல் புறந்தள்ளியிருப்பது நல்ல விஷயம்.

கருணாநிதியின் துணைவியார் காலில் விழ துரை முருகன் தோத்திரம் பாட தயாநிதி மோதிரம் அணிந்திருக்க கண்ட புகைப்படமெதிலும் கருணாநிதி கரங்கட்டியோ முகத்தில் பரவசம் பொங்கியோ பார்க்கவில்லை. சரியாசனம் தன்னில் ஆன்மிகவாதியாடு அமர்ந்திருப்பதையே காணமுடிந்தது.

கடவுள் மறுப்பு கொள்கை காரணம் காட்டி தமிழக மக்களின் வாழ்வோடு அரசியல் சித்து புரியாமல் மாற்றுக் கொள்கை உடையோரையும் அரவணைத்து செல்லுதல் பாரட்ட வேண்டிய குணமே. மக்களின் ஜீவாதார பிரச்சனையான குடிநீர் பிரச்சனை நோக்கி பார்வை செலுத்தும் ஆன்மிகவாதியும் பாராட்ட பட வேண்டியவரே. எதையும் பிரதி உபகாரமாய் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்காமல் செய்திருப்பார் என நம்புகிறேன். ஊடகங்களிலும் ஆன்மிக தரப்பிலிருந்து கோரிக்கை எதுவும் வந்தது போல் தெரியவில்லை.

Wednesday, January 17, 2007

சில முடிவுகள்

அவனும் அவளும் அங்கு நின்றிருந்தார்கள். கண்ணுக்கெட்டிய வரை வெறும் வெளியாய் நிலம் பரவியிருந்தது. மதிய நேர மழை பூமியை குளிர்வித்திருக்க, சாரல் கலந்து காற்று மணத்தது. இன்னும் வானம் இருட்டிதான் இருந்தது. அடுத்த மழை இப்போதோ எப்போதோ வரலாம்.

பதட்டம் கலந்த சந்தோஷம் ஒட்டியிருந்த மனநிலைக்கு மழை ்வாசம் வசதியாய் இருந்தது. ஒரு சிகெரெட்டோ அல்லது காபியோ தேடி வந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும் வந்தது.

மூன்று வருடத்துக்கு முன் இங்கு வந்தபோதும் இப்படிதான் இருந்தது. வெற்றுத்தரையும் அடித்துப் போடும் அமைதியும் மட்டும் அங்கிருந்தது. வரப்போவதாய் சொன்ன பேருந்து நிலையமோ, பள்ளியோ வருவதாய் தெரியவில்லை. வாங்கின அனைவரும் விற்பனைக்கு வாங்கியது போல் வீடுகளும் முளைக்கவில்லை. ஆனால் வேறு விஷயங்கள் நடந்து விட்டன.

"அப்பாவுக்கு பயம் சண்முகம். யாராவது வந்து ்கொட்டாய் ்போட்டுட்டா என்ன பண்ணறதுனு புலம்பல். இங்க யார் வர போறானு சொன்னா கேட்க மாட்டேங்கறாரு. சந்திரா ஆசைப்பட்டதால் இந்த எடம் வாங்கினோம். வருஷம் மூனாச்சு. வாங்கின மாதிரியே இருக்கு. அப்பா பிடிவாதத்துக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் வந்துட்டு போறதுதான் மிச்சம்"- நித்யா

"ம்."-சண்முகம்

"என்ன சண்முகம். நீ ஏதாவது டவுன்குள்ள வாங்க வேண்டியதுதானே. நல்ல இன்வெஸ்ட்மென்ட் ஏதாவது பண்ணு கல்யாணத்துக்கப்புறம் ஒரு உதவியா இருக்கும்"- நித்யா

"ம்"- சண்முகம்

"ஏண்டா இவ்வளவு சொல்லறேன். ம் ,ம்னு. போரடிக்குதா"- நித்யா

"ஏன் நித்யா. அமெரிக்காவிலியே இருந்துக்கறதா முடிவு பண்ணிடியா"- சண்முகம்

"அப்பா சொன்னாங்களா? இங்க என்னடா பண்ணறது. ஐடில இருந்தா இங்க தெனம் பத்து பன்னென்டு மணி நேர வேலை. அங்க அப்படியில்லடா பெரும்பாலும் எட்டு மணி நேர வேலைதான். ஜிம், நீச்சல், பிரண்ட்ஸ்னு நேரம் கழிக்க முடியுது. ஒய்வா போகுது. ஊரும் வசதியா இருக்கு"- நித்யா

"ஏன் நாங்களேல்லாம் இல்லியா?"- சண்முகம்

" உன்னைய பாக்கவே முடியலேனு உங்கம்மா புலம்பறது எனக்கு தெரியாதா என்ன? "- நித்யா

" என்னவோ பண்ணி தொலை. எனக்கென்ன. இங்க இருக்கறவனெல்லாம் மனுஷனா தெரியலேனா என்ன பண்ணறது "- சண்முகம்

" ஏன் நீ அங்க வாயேன்டா. நான்தான் விசாவுக்கு ஏற்பாடு செய்யறேனு சொல்றேன். நீதான் கேட்க மாட்டேங்கற " - நித்யா

" ஒண்ணும் வேண்டாம். உன் வேலையை பாரு "-சண்முகம்

அவளுக்கு கோபமாய் வந்தது. அவள் ஊருக்கு வந்ததில் இருந்து கீறல் விழுந்த டேப்பாக இதே பேச்சு. என்ன நினைக்கிறான் என்பதே அவளுக்கு புரியவில்லை. நேராக சில விஷயங்களை சொல்ல முடிவதில்லை. இவள் நினைப்பது அப்பாவுக்கு புரிந்ததால் அவர் குரலை உயர்த்த ஆரம்பித்துள்ளார்.
புதிதாய் கொத்து புகைப்படங்கள் சாப்பாட்டு மேஜையில் முளைத்திருந்தது. காய் ்வெட்டிக் கொண்டிருந்தவள் கத்தியால் எல்லாவற்றையும் கிழித்து விட நினைத்து அமைதியாகி விட்டாள்.

அம்மா வேறு சாதி பெருமையை ஆரம்பித்து இருந்தாள். அம்மா பெருமை பேசுவதில் குறையே வைப்பதில்லை. அவரது அப்பா வீட்டு களத்தில் எத்தனை ஆட்களை நெல்லறுக்க காத்திருந்தனர் என்பதெல்லாம் கேட்டு கேட்டு இவளுக்கு காது புளித்து விட்டிருந்தது. கவுரம், கலாச்சாரம் என்ற வார்த்தை புழக்கங்கள் வீட்டை சுற்றி சுற்றி வர இவளுக்கு தடுமாற்றமாய் இருந்தது.

சண்முகத்திற்கு கேட்பதா, வேண்டாமா என்பது தர்ம சங்கடமாய் இருந்தது. வீட்டில் சொன்னபோது அப்பா குதித்து விட்டார். அம்மா வழக்கம் போல இவனிடம் ஆதரவாய் பேசினாலும், தாலியறுத்தவளை எல்லாம் வீட்டுக்கு கூட்டி வராதேடா என்ன விதிமுறைகள் வழங்க ஆரம்பித்து இருந்தாள்.

அப்பா கடையில் முடி வெட்டி கொண்டிருக்கும் போது அவருக்கு உதவலாமென போய் நின்றால் இவனிடம் அவர் பேசவே இல்லை. உதவிக்கு நிற்கும் கதிரவன்தான் அப்புறம் வா சண்முகம் இப்ப கெளம்பு என்று அனுப்பி விட்டான். அவரை எதிர்த்து இது வரை பேசியதில்லை. பேசவும் இவனுக்கு தயக்கமாய் இருந்தது. இவளுக்காக ஒரு வாரம் விடுப்பு வாங்கி வந்தது சரியா தவறாவென அவனிடத்து எண்ணம் ஒடியது.

கல்லுரி காலத்து பழக்கம். சிநேகிதியாய் அறிமுகமானவள், மெல்ல சண்முகத்து வாழ்க்கையின் ரேகைகளானாள். அவளின் அசைவுகளே அவனது நல்லது கெட்டதுகளை தீர்மானித்தது. அத்தை மகனை மணந்து அவள் நகரும் போது அவனுக்கு வலித்தது. வாழ்க்கை ்சில புதிர்களை புதிராகவே வைத்திருந்தது.

சண்முகத்தின் தோழமை அவளுக்கு அச்சத்தையும் பாதுகாப்பையும் ஒரு சேர அளித்தது. மனம் விட்டு பேச, இவள் இப்படிதான் என வரையறுக்காத அன்பு அவனிடமிருந்தது. அதே நேரம் அவனை பற்றிய மனதின் பிம்பங்கள் நட்பின் அடுத்தக்கட்டத்தை அவள் மனதில் நிறுத்துதல் அவளுக்கு அச்சத்தை அளித்தது. நடைமுறை பேதங்கள் விரிவாய் இருந்ததால் பெற்றோரின் சம்மதம் வாங்க முடியுமா என்பது தெரியவில்லை.

பெற்றோரை மீறுதல் சாத்தியமா என யோசிக்கும் முன்னமே அப்பா சந்திராவை கை காட்டினார். மிக்க சந்தோஷமென பத்திரிக்கை வாங்கி கல்யாண வேலைகளுக்கு உதவி வேண்டுமா என அவன் கேட்க ஏமாற்றமாயிருந்தது. அதற்கப்புறம் தெளிவானது போல் அவளுக்கு இருந்தது.

சந்திரா இனிமையானவனாய் இருந்தான். ஒரு வருடம் விரைவாய் நகர புரிந்து கொள்ளல் நிகழும் முன்பே கனவு போல் இருந்த வாழ்க்கை கார் விபத்தில் முடிந்து விட்டது. தோழன் ஒருவனை விமான நிலையத்தில் விட சென்ற சந்திராவை அதன் பின் அவள் உயிரோடு அவள் பார்க்கவில்லை.

நீண்ட தனிமை கொண்ட இரவுகள் அழுகையையும் , அசசத்தையும் கொடுத்தது. உறவினர்களின் இரக்க பேச்சு முள்ளாய் குத்த அமெரிக்காவிற்கு வந்து விட்டாள். தொடக்கத்தில் இவன் சில முறை தொலைபேசியில் பேசினான். தட்ப வெப்பம், விளையாட்டு, வேலை அரசியல் என வேறு ஏதேதோ பேசினான். கொஞ்சம் வளையத்திலிருந்து வெளி வர அவளுக்கு உதவியாய் இருந்ததது. சில முறை பேச்சு பல முறை ஆனது.

இரண்டு வருடத்தில் மீண்டும் பழைய உணர்வுகள் தலைகாட்டுவதை உணர்ந்தாள். ஊருக்கு வர முடிவு செய்து இந்த முறை வந்தாள். அவன் அவளுக்காக விடுப்பு எடுத்து வர சந்தோஷமாய் இருந்தாள். அவனுடன் தனியே பேசுவதை அவள் அப்பா மறைமுகமாய் தடுத்தே வந்தார். அவன் வீட்டிற்கு வரும் வேலையில் அவருடன் அவன் நேரத்தை செலவிடுமாறு பார்த்துக் கொண்டார். அதுதான் நிலத்தை பார்த்து வருகிறேன் என தனியே கிளம்பி விட்டாள். வழியில் அவன் வீட்டில் அவனை கூட்டிக் கொள்கையில் அவன் பெற்றோரின் பார்வை அவளுக்கு கொஞ்சம் மாறியிருப்பதாய் தோன்றியது. வந்ததும் ஆரம்பித்த உரையாடல் போக கூடாத இடத்திற்கு போய் கொண்டிருந்தது.

நீண்ட நேரம் அமைதி இருந்தது. இருவரும் பேச வார்த்தைகளை துலாவி வந்தனர். என்ன சொல்வது , எப்படி சொல்வது, பெற்றோரின் முகம் என பல துளிகள் மனதில் தெறித்துக் கொண்டிருந்தது. சோவென வெளியில் மழைக் கொட்ட ஆரம்பித்தது. ஒடி போய் காரில் ஏறிக் கொண்டாள்.

சட சடவென மழையின் சப்தம் உரத்து ஒலித்தது. இவ்வளவு நேரம் இருட்டி இருந்த மேகம் இப்போதே பெய்து முடித்து விட வேணுமென முடிவு செய்தது போல் இருந்தது. அவன் இன்னும் மழையிலேயே நின்றிருந்தான். காரிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவன் கண்கள் கலங்கியிருந்தது. கூப்பிடலாம் என நினைத்ததை நிறுத்திக் கொண்டாள். காரின் கண்ணாடியில் மழையின் வேகம் தெரிந்தது. கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள். வினாடிகள் நகர மறுத்தன. நேரத்தின் கணம் மனதில் ஏறியது.

சட்டென காரை விட்டிறங்கி அவன் அருகே சென்று தோளை பிடித்துக் கொண்டாள். அவன் அவள் உதடுகளில் காதல் தேடினான். மழை குறையவில்லை. இன்னும் அதிகமாக ஆரம்பித்தது.

Tuesday, January 9, 2007

ரயில் பயணம்


Train journey
Originally uploaded by Mahatma4711.

ரயில் அதன் உச்ச வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. முத்தையா கதவருகே நின்று கொண்டிருந்தார். எந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம் என்பது அவருக்கு மறந்து விட்டது. வயதாக வயதாக இப்போது நிறைய விஷயங்கள் அவருக்கு அடிக்கடி மறந்து விடுகிறது. எங்கோ போகிறோம் என்பது அவருக்கு நியாபகம் இருக்கிறது. எங்கே போகிறோம் என்பது குழப்பமாக இருந்தது. கையிலிருக்கும் பெட்டியை இறுக்க பிடித்துக் கொண்டார்.

பெட்டியை கீழே வைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால் அவரால் முடியவில்லை. ஒவ்வோரு வைக்க நினைக்கும் போதும் அவள் காற்றில் வருகின்றாள். அவருக்கு கட்டளை இடுகின்றாள். பெட்டியை இறுக்க பிடித்துக் கொள்ள வேண்டியதாகிறது. ரயில் தண்டவாளத்தோடு பாடும் சுருதி இதய துடிப்பு போலிருந்தது.ரயிலின் வேகம் அவரோடு ஒட்டிக் கொண்டிருந்தது.

*****

"ஏங்க எங்க போறோம்"- ராணி. அழுகை கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.

"ஊர்ல இனி இருக்க முடியாது ராணி. உங்கப்பா நம்பளை கோவில்ல பாத்திட்டாரு. இன்னேரம் ஊரேல்லாம் உன்னை தேடிகிட்டு இருப்பாங்க."- முத்தையா

"பயமா இருக்குங்க"-ராணி

"நான்தான் இருக்கேன்ல பயப்படாதே. கம்பார்மெண்ட்ல எல்லாம் தூங்கறாங்க பாரு. மொய் மொய்ங்காம படு"- முத்தையா

ராணி பெட்டியை தலைக்கு வைத்து கண்ணை மூட முயற்சி செய்ய ஆரம்பித்தாள். யாரும் பெட்டியை எடுத்து ்விடுவார்களோ என பயமாக இருந்தது.

"பெட்டியை வேண்ணா குடு. நான் வைச்சிருக்கேன்"-முத்தையா

"வேணாங்க என்கிட்டயே இருக்கட்டும். எல்லாம் எங்கம்மா நகைங்க. நீங்க கண்ணசந்திட்டா கஷ்டம்"- ராணி

முத்தையா நகர்ந்து அவள் காலோரம் உட்கார்ந்து கொண்டான். ரயில் நகர்ந்து கொண்டிருந்தது. மெல்ல ஒவ்வொருவராக கண்ணயரும் நேரம் ஆரம்பித்தது.

********

முத்தையாவுக்கு கை வலித்தது. பெட்டி நாளாக நாளாக கனக்க ஆரம்பித்திருந்தது.ரயிலில் ஆங்காங்கே பல குடும்பங்கள் இருப்பதை கண்ட போது தனக்கேன குடும்பத்தை பிரிந்த கொடுமை அவருக்கு நினைவுக்கு வந்தது. வயதான காலத்தில் சாய இடம் கூட இல்லாமலாகி விட்டதே என கவலையோடு இருந்தார்.

அவள் எதையையும் செய்ய விடாமல் தடுத்தே வந்தாள். கல்யாணம் ஆன போது பெண்டாட்டி முகத்தில் அவள் வாசனை இருந்தது. அன்று இரவு பெண்டாட்டியை நெருங்கும் போதேல்லாம் அந்த வாசனை அதிகரித்தது. வாசனை பயத்தை கொடுத்தது. பயம் எல்லாவற்றையும் தடுத்தது. அன்றுதான் அந்த பெட்டியை மீண்டும் பார்த்தார். கட்டிலோரம் உட்கார்ந்திருந்தது.அதை எடுத்துக் கொள்ளேன காதில் அவள் சொன்னது இன்னமும் நியாபகம் இருந்தது. அப்புறம் கொஞ்ச நாளில் கட்டியவள் பால்காரனோடு ஒடியது நியாபகம் வந்தது.

******

"ராணி காப்பி தண்ணி ஏதும் சாப்பிடறியா? "- முத்தையா ராணியை எழுப்பினான்

"காபி வேண்டாங்க.நான் பாத்ரூமுனு போய்ட்டு வர்ரேன்"-ராணி எழுந்தாள்

"கடைசில இருக்கு. வா காட்டறேன்"-முத்தையா அவளுடன் நடந்தான். ரயில் அடுத்த நிறுத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.

"இந்த பெட்டியை கொஞ்சம் பிடிங்க. நான் போயிட்டு வாரேன்"- அவள் உள்ளே போனாள்.

ரயில் நின்றது. முத்தையா அவசரமாக ரயிலை விட்டிறங்கி நடக்க ஆரம்பித்தான். அவள் பார்க்குமுன் போய் விட வேண்டுமென்ற அவசரம் காலில் தொற்றிக் கொண்டது. ஸ்டேஷனின் ்வெளிப்புறம் காடாய் இருந்தது. அது வழி நடக்க ஆரம்பித்தான்.

"இந்தாங்க கொஞ்சம் நில்லுங்க" - அவள் குரல் அவன் முதுகை தொட்டது

திரும்பி பார்த்தான். அவள் ஒடி வந்து கொண்டிருந்தாள்.

"என்னை விட்டுட்டு எங்க போறீங்க?"

"சனியனே ஏண்டி என் பின்னாடி வந்த. ரயில்ல போய் தொலைய வேண்டியதுதானே"- திரும்பி ஒட ஆரம்பித்தான்.

"என் பெட்டியை குடுங்க. என் பெட்டியை குடுத்துட்டு போங்க"-பின்னால் குரல் துரத்தியது.

திரும்பி நின்று அவளை பிடித்து அறைந்தான். கீழே விழுந்தவள் கல்லையும் மண்ணையும் வாரி இறைக்க ஆரம்பித்தாள். பெட்டியை பிடுங்கி இருட்டில் எங்கேயோ வீசினாள்.

கோபம் தலைக்கேறி கையில் கிடைத்த கல்லை தூக்கி தலையிலடித்தான். ரத்தம் கொட்டி கீழே விழுந்தாள்.

காலை பிடித்து இழுத்து காட்டுக்குள் போட்டான். தேடியதில் இருட்டில் பெட்டி கிடைக்கவில்லை. செத்து போயிருப்பாளோ என பயமும் வந்தது. அவசரமாக பஸ் ஸ்டேன்டை தேடி காட்டு வழி ஒட ஆரம்பித்தான்.

*********

முத்தையாவிற்கு கண்ணீர் பொங்கியது. சில நேரம் அவர் அழும் போது அவள் குரல் ஆறுதலாய் இருக்கும், ஆனால் அப்போதும் பெட்டியை கீழே வைக்க விடமாட்டாள். அதை திறந்து பார்க்க ஆர்வமாய் இருக்கும் நேரங்களில் அவள் மிரட்டலுக்கு பயந்து திறப்பதுமில்லை. இரண்டு முறை ஆற்றில் வீசியும் பெட்டி மீண்டும் அவரை தேடி வந்து விட்டது.

பெரியண்ணண் மளிகை கடையில்தான் வேலை செய்து வாழ்க்கை ஒடியது. அண்ணாச்சியும் வேலை நேரம் போக மீதி நேரம் என்னடா இழவு எப்போ பார்த்தாலும் கையே கட்டிக்கிட்டே இருக்கியேனு கேட்பார். வேலை நேரத்தில் அவள் வந்து பெட்டியை வாங்கி கொள்வாள். அதை அவரிடம் சொன்னால் போடா பைத்தியகாரானு திட்டி விடுவார். அவள் அப்போது கைக்குள் இருக்கும் பெட்டி யாருக்கும் தெரியாது என்பாள்.

அடிக்கடி எங்கேயாது ரயில் போகலாம் என்று கூட்டிச் செல்வாள். முத்தையாவும் மறுப்பதில்லை.

************

ராணி கண் விழித்த போது காலை வெயில் முகத்தில் சுள்ளென்று அடித்தது. தலை பக்கம் ரத்தம் கட்டிக் கொண்டு வலித்தது. முள்ளுக்காட்டுக்குள் கொஞ்சநாள் இருந்தாள். அப்புறம் அந்த ஊரிலியே இருந்துக் கொண்டாள். பின்னாளில் சித்தாள் வேலைக்கு போகும் மணியை கல்யாணம் கட்டிக் கொண்டு குழந்தையையும் பெற்றுக் கொண்டாள். என்னைக்காவது முத்தையாவை ரயில்வே ஸ்டேஷனில் பார்ப்பாள். எதையோ பறிக் கொடுத்தவன் போல் கையை இருக்க கட்டிக் கொண்டு நிற்பான். அவள் அவனிடம் ஆனால் பேசுவதில்லை. அவனை கண்டால் அவளுக்கு பிடிப்பதில்லை.

********

ஒருநாள் முத்தையாவுக்கு ராணியின் குரல் ரயிலில் இருந்து குதிக்க சொல்ல ஓடும் ரயிலில் இருந்து குதித்து விட்டார். அதுதான் கடைசியாய் அவர் குரல் கேட்டது.

Monday, January 8, 2007

சாலைகள்

உள் கட்டமைப்பு உயர்த்துதலின் ஒரு பகுதியாக தமிழக அரசு 303 கோடி ரூபாய் கிராம்புற சாலை மேம்பாட்டிற்காக அறிவித்துள்ளது. மண் சாலைகள் தார் சாலைகளாக மாறும் சாத்தியம் இதனால் வர உள்ளது. வலைதளங்களை தேடி பார்த்தும் இந்த 303 கோடி ரூபாய் எந்தெந்த கிராமங்களில் எப்படி செலவிட பட போகிறது என்பதற்கான விவரங்களை கண்டு பிடிக்க இயலவில்லை. மற்றொரு முக்கிய செய்தியும் பார்க்க நேர்ந்தது. மொத்தமாக இந்த சாலைப்பணிகளுக்கான குத்தகைகளை விடாமல் தனிதனியாக ஒவ்வொரு பணிக்கும் குத்தகை விட அரசு ஏற்பாடு செய்ய போவதாக செய்தி வந்திருந்தது. தகவல் தொழில் நுட்பம் முன்னேறி வரும் இப்பொழுதில் தமிழக அரசு இந்த குத்தகைகளின் விவரங்களையும் அவற்றின் மதிப்பையும் , இக்குத்தகைதாரர்களின் செயல்பாட்டையும் பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து வலைதளத்தில் பதிப்பித்தால் நன்றாக இருக்கும்.

சாலைகளின் தேய்மானத்தையும், மழை நீர் அரிப்பினால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து, அதிக ஆயுள் உள்ள சாலைகள் அமைத்தல் முக்கியம். கிராமத்தில் போடப்படும் சாலைகள் கனமான மழையில் காணாமல் போய்விடும். அப்படி ஆனால் வழக்கம் போல் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கோ, சாதிக்கோ, மதத்திற்கோ வாழ்க, ஒழிக போட்டுக் கொண்டு ஒரு ஓரமாய் ஒதுக்கி வாகனம் செலுத்துவதில் நாம் கில்லாடி ஆகி விட்டோம்.

Wednesday, January 3, 2007

ட்ரீம் 5

பபூன் வகை குரங்களிலும், மேலும் பல குரங்கினங்களிலும் எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. இந்த குரங்கினங்களுக்கு எய்ட்ஸ் நோய் வராது. இதன் காரணத்தை ஆய்ந்த அறிவியலார் ட்ரிம்5-எ எனும் புரதத்தை கண்டறந்துள்ளனர். இந்த புரதம் செல்களில் எய்ட்ஸ் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தை தடுக்கின்றது. மனிதர்களிலும் இந்த புரதம் உண்டு, ஆனால் மனிதர்களிடத்து இருக்கும் புரதத்திற்கு இக்தகைய தடுப்பு சக்தி கிடையாது.

இந்த புரதம் செல்களின் உள்ளுக்கும், வெளிப்புறத்திற்கும் ஏற்படும் தொடர்புகளை கட்டுப்படுத்தும் பணியை செய்கின்றது. ஹாவார்ட் பல்கலைகழகத்தில் விலங்களிடத்து எடுத்த புரதத்தை மனித செல்களில் சேர்த்து பின் எய்ட்ஸ் கிருமிகளை செலுத்திய போது எய்ட்ஸ் பாதிப்பு மனித செல்களிடத்து காணப்படவில்லை. 2004ம் ஆண்டு இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.

அண்மையில் தென் கொரியாவினை சேர்ந்த அறிவியலார் இந்த புரதத்தின் கட்டமைப்பினை பதிப்பித்துள்ளனர். இந்த புரதத்தின் உள்ளிருக்கும் B30.2/SPRY எனும் பகுதியே எய்ட்ஸ் நோயிலிருந்து குரங்குகளை காக்கின்றதாம். மனிதனில் உள்ள ட்ரிம் 5 மாற்றி அமைக்கப்பட்டு எய்ட்ஸ் எதிர்ப்பு உண்டாக்கும் ஆய்வுகளை நோக்கி இப்போது புதிய மைல்கல்லாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

Tuesday, January 2, 2007

மேய்ச்சல் 7


Bamboo Grove, originally uploaded by d'n'c.

மூங்கில் உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. ஆண்டொன்றுக்கு 135 மில்லியன மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறோம். தேசிய மூங்கில் கழகம் மூங்கிலால் செய்யப்பட்ட துப்பாக்கி துளைக்காத உடைகளை செய்வதில் ஈடுபட்டுள்ளது. இப்போது புழக்கத்தில் உள்ள உடைகளின் விலை ரூபாய 1.5 லட்சம் விலை ஆகிறது. இது போன்ற மூங்கில் ஆடைகளின் விலை ரூபாய 50000 மட்டுமே. இந்த உடை 5 கிலோ எடை உள்ளது. இந்த உடை இப்போது ஏகே 47 மற்றும இன்சா துப்பாக்கிகளுக்கு எதிராக பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற உள்நாட்டு அறிவியல் தொழில்நுட்ப உருவாக்கங்கள் நம்பிக்கையை வளர்க்கின்றன. தேசிய மூங்கில் கழகம் தொடர்ந்து மூங்கிலின் புதிய பயன்பாடுகளை குறித்த ஆய்வுகளை செய்து வருகின்றது.


கந்தசாமி அவர்களின் சாயாவனத்தில் கதையின் நாயகமான வனத்துடன் சிதம்பரம் போராடுகையில் வனத்தின் ஆயுதத்துள் மூங்கிலும் உண்டு.
வனவாசிகளின் உரிமைகளை நிலைநாட்டும் முக்கிய சட்டங்களில் ஒன்று கடந்த வருட இறுதியில நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மனதாய் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன உரிமை சட்டம் 2006 எனப்படும் இந்த வரைவு சென்ற வருடத்திய சட்டமான வன உரிமை சட்டம் 2005-ல் குறிப்பிடதக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வனங்களில் வாழும் பூர்வகுடிகளின் வன உரிமையை நிலைநாட்டுவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்ற வருட சட்டத்தில் அக்டோபர் 1980க்கு முன்பு மூன்று தலை முறைகளாக வனங்களில் வாழ்ந்தவர்களுக்கு நில உரிமை என்றிருந்த சட்டம் இநத முறை டிசம்பர் 2005க்கு முன்பு மூன்று தலைமுறைகள் என்று மாற்றப்பட்டுள்ளது. நில உட்ச வரம்பு அதிக பட்சம் 2.5 ஹெக்டேருக்கே உரிமம் என்றிருந்ததும் 4 ஹெக்டேராக உயர்த்தப் பட்டுள்ளது.

சுற்றுபுற சூழல் குழுக்களும், வனவிலங்கு பாதுகாவலர்களும் இந்த சட்டத்தினால் காடுகளுக்கு பாதிப்பு வரும் என ஐயம் தெரிவித்துள்ளனர். காடுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை காடுகளின் மரங்களையும், மிருகளையும் பாதிக்கும் என்பது அவர்களது கருத்து.

இரு தரப்பினரை பார்க்கும் போது யார் சொல்வதும் தவறாய் இராது. அதற்கென ஒரணியும் எடுக்க இயலாது.

சரியாக இருக்கலாம்
தவறாக இருக்கலாமென
இருநிலை பொழுதில்
சிக்கி சீரழிகையில்
மூன்றாம் நிலை
குருடனாய் பார்க்கிறது