Wednesday, September 13, 2006

கிட்டதட்ட ஒரு காதல் கதை

சண்முகம் சாப்பிட்டு விட்டு மற்றும் சாப்பிடும் போது வேர்த்து விட்டு கிளையன்டுக்கு பணி புரிபவன். அவனை சில சமயம் சாப்பிடுவேர் எஞ்சினியர் என்றும் சொல்லுவார்கள். டிவியின் எல்லா புரோக்கராம்களையும் தலைகீழாக மனப்பாடம் செய்து விடிய விடிய பார்ப்பதால் புரோக்ராமர் என்ற பெயரும் உண்டு.

இந்த வேலை இப்போதெல்லாம் செய்ய அலுப்பாக உள்ளதால் அதிக நேரம் பேசும் வேலைக்கு போக ஆசைப்பட்டான். தமிழனாய் பிறந்து இதைக்கூட செய்ய ஆசைப் படவில்லையென்றால் என்ன ஆவது? அதனால் பிசினேஸ் அனாலிஸ்ட் ஆக அடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

குறுக்குப்பட்டியில் அப்பா மகன் அமெரிக்காவில் அமெரிக்கனாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அரசாங்க வேலையிலிருக்க இங்கே இவன் சீட்டை தேய்த்துக் கொண்டு பத்து முறை காப்பி (டீ பிடிக்காது) இடைவேளை எடுத்து வேலை அளவுக்கு குறைவாக செய்து சன் டிவீ பார்த்து தமிழ் பட டிவிடிக்காக நடையாய் நடந்து தமிழ் நண்பர்களுடன் அளஅளாவி அப்பாவுக்கு போட்டியாக கடமையாற்றிக் கொண்டிருந்தான்.

சண்முகமும், பெரு வேட்டரையனும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் செர்மன் ஒக்ஸ் என்னும் புண்ணிய பூமியில் இருந்தார்கள். வேட்டரையனுக்கு பெண் தோழி உண்டு. சண்முகத்துக்கு பெண் தோழி வேண்டுமென்ற ஆசை உண்டு. பொதுவாக வேட்டரையனின் புரோக்ரமாக இருந்தால் வெட்டி ஒட்டிக் இவன் பெயரை எழுதிக் கொள்வான். வேட்டரையனின் தோழியை எல்லாம் வெட்டி ஒட்டி இவன் பெயரை ஒட்டிக் கொள்ள முடியாதே. அந்த தோழியின் ஒன்று விட்ட சித்தி மகளின் தோழி நியுயார்க்கிலிருந்து செர்மன் ஓக்ஸ் வர ஆசைப்பட்டதால் வரும் பெண்ணுக்கு ஊர் சுற்றிக் காட்டும் வேலை இவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது. மாதம் இரண்டாயிரம் போன் பில் கட்டி பெங்களுரிலிருக்கும் அந்த பெண்ணுக்கு பெருவேட்டரையன் கொத்தடிமையாக இருந்தான் என சண்முகம் இரக்கப்படுவான்.

சண்முகத்தின் குடும்ப பாசப்பிணைப்பு ஒரு ஐந்து ரூபாய் போன் கார்டில் ஆறுமாதம் பேசுமளவுக்கு இருக்கும். பெரும்பாலும் அவனுக்கும் ஊருக்குமிருக்கும் தகவல் தொடர்பு மணிரத்தினம் படத்தின் டயலாக் போல இருக்கும். பொண்ணு பாத்தாச்சா என்று இவன் கேட்க இல்லை என்று அவர் ஊரிலிருந்து சொல்லுவார். அடுத்த நொடி இவனோ இல்லை அவரோ போன் வைத்து விடுவார்கள். பெருவேட்டரையனுக்கு ஒரு வருடம் முன்னால் அவன் அறைத்தோழனாக வந்த நாள் முதல் இதுதான் நடந்துக் கொண்டிருந்தது.

சொப்ன பிரியா என்ற நாமம் கொண்ட அப்பெண்ணும் நியுயார்கிலிருந்து வந்து பார்க்க ஏதுவாய் இருந்தாள். அவளை பார்த்த கணத்தில் சண்முகத்திற்கு அவளை பிடித்து விட்டது. சண்முகத்திற்கு ஒரு வருடமாக எல்லாப் பெண்களையும் பார்த்தவுடன் பிடித்திருந்தது. அதற்கு முன் பெண்கள் பெயரை கேட்டாலே அவனுக்கு அந்த பெண்ணை பிடித்து விடும். இப்போதெல்லாம் மெச்சூர் ஆகி விட்டான்.

அவளை பார்த்த நிமிடம் முதல் சண்முகம் சிரித்த முகமாய் இருக்க முயல அவனுக்கு கான்ஸ்டிபேசனா என அவள் கேட்க நேர்ந்தது. அவள் கேட்ட முதல் கேள்வியே இவ்வாறிருக்க சண்முகத்து தலைக்குள் பட்டாம் பூச்சிகள் முட்டைப் போட்டது போலிருந்தது.

இரவு உணவு சாப்பிட்டு முடிக்கும் வரையில் இவனது சம்பாசணைகள் ஆமாம் , இல்லை , அது எனக்கும் பிடிக்கும் , சே சே சுத்தமாக பிடிக்காது என்ற ரீதியில் பெருவேட்டரையனுக்கும், சொப்ன பிரியாவுக்கும் இடையே நடந்துக் கொண்டிருந்த உரையாடலுக்கு நடுவே நகர்ந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் எதற்கு என்ன பதில் சொல்கிறோமென்றே அவனுக்கு புரியவில்லை. அலுவலகத்தில் நடந்த ஸ்டேடஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட மாதிரி அவனுக்கு உணர்விருந்தது. அவர்களும் இவனுடைய பதிலை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஆங்கில இசை, இலக்கியம், சினிமா பற்றி பேசியதாக வேட்டரையன் உறங்கும் நேரத்தில் கூறினான்.

இவனுக்கு தெரிந்த உலக சினிமா ஜாக்கிசான் மற்றும் ஆர்னால்ட் நடித்தாகவே இருந்தது. அவர்கள் அதை பற்றி ஒன்றும் பேசவில்லை. இவனுக்கு தெரிந்த ஆங்கில புத்தகங்கள் பி எல் தெரஜா மற்றும் பாலகுருசாமி எழுதியதாகவே இருந்தது. இசையில் கமல்ஹாசன் மற்றும் எஸ்.பி.பியை தெரியும். இந்த பெயர்களே அவர்கள் உரையாடலில் வரவில்லை. மனதை தேற்றி படுத்தால் சொப்னமெங்கும் சொப்ன ப்ரியாவே இருந்தாள்.

மனசு சரியில்லாமல் கொஞ்சம் இரவு நேர சினி மேக்ஸ் சானல் குடும்ப படம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் வெளியே வந்தான். சொப்ன பிரியாவும் சீரியல் டப்பாவிலிருந்து சீரியலை பௌலில் கொட்டி அதை வெறும் வாயில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பாவம் இலையையும் தழையையும் டயட் என்ற பெயரில் இரவு உணவுக்கு சாப்பிட்டது பத்தவில்லை போலிருக்கிறது என நினைத்துக் கொண்டான். சண்முகத்தை கண்டவுடன் பேந்த பேந்த முழித்தாள். கிளையன்ட் சைட்டில் க்ராஷ் ஆன புரோக்ராம் மாதிரி இமேஜ் ஆகி விட்டதே என அவளுக்கு வருத்தமாய் இருந்தது.

(தொடரலாம்)

No comments: