Tuesday, February 27, 2007

தனியாக ஒரு பாதையில்


Snake and Fish
Originally uploaded by FotoDawg.
நெடுங்கோடு போல்
தெரிந்த பாதையில்
பயணம் ஆரம்பித்தேன்
அரவம் போல் முறுக்க ஆரம்பிக்க
அடிகளை கவனிக்க வேண்டியதாயிற்று
உறுப்புகள் தொலைந்தன
அரவத்தின் முறுக்கினில்
அழுகையும் அரற்றலும்
பாடுபொருள் ஆன
பொழுதுகள் உண்டு
தூவி விட்ட விதை
தூறலுக்கு குதிப்பதாய்
அறுந்தவை முளைக்க
ஆட்டம் பாட்டமும் இருந்தன
விம்மலுக்கும் சிரிப்பிற்கும்
நடுவே பயணம்
ஆரம்பம் நியாபகமில்லை
முடிவு நியாபகம் இருக்குமோ தெரியவில்லை
முன்னும் பின்னும் இடையிடேயேயும்
முளைத்து வரும் துணைகளும் உண்டு
விடாமல் போவதாய் உத்தேசம்
விட்டு விட்டு போகவும் வேறு இடம் ஏது?

Monday, February 26, 2007

மகள்

ஏதேதோ பேசுகிறாள்
இலக்கணங்கள் அமைக்கின்றாள்
முத்து முத்தாய் சிரிக்கின்றாள்
புத்தகங்கள் படிக்கையிலே
புதுப்பூவாய் மலர்கின்றாள்
எட்டி எட்டி பிடிக்கின்றாள்
எழுத்துகளை ரசிக்கின்றாள்
முட்டி ஓடும் யானைக்குட்டி
தட்டி வாயில் வைக்கின்றாள்
அலுவலகம் செல்கையிலே
ஆசை கொண்டு தாவுகிறாள்
மாலை வந்து சேர்கையிலே
மடியினிலே ஏறுகின்றாள்
பட்டுப்பாப்பா தன்னோடு
பறந்து போகுது நேரந்தான்

பெண்ணாயிருந்து பேசியிருந்தால்

நான் நான்தான்
நான் நானாக இருக்கின்றேன்
நான் என்னால் வரையரை செய்யப்படுபவள்

தாய் கருணை இரக்கம் அன்பு எனும் பாவனைகளால்
தனித்திருக்க மட்டும் நான் ஆள் இல்லை
காமம், பசி, வலி, சிந்தனை, கோபமும் எனக்கு உண்டு
கையில் இருக்கும் அளவுகோலை எறிந்து வந்தால்
கண் நோக்கி உரையாடலாம்.
சிநேகித்திருக்க எனக்கும் விருப்பம் உண்டு

எனக்கான கவலைகளுக்கு
காளான் குடையில் மழைக்கு ஒதுங்க வைப்பதான
குறைந்த பட்ச பால் சார்ந்த அனுதாபங்கள் வேண்டாம்
பால் தாண்டும் தீர்வுகள் இருக்கும்
சாவிகள் தேடி உடன் வர முடிவிருப்பின் வா

கணிணி துறையிலிருந்து ஒரு பார்வை

அண்மையில் பதிப்பிக்கப்பட்ட CRISIL நிறுவன ஆய்வு பதிப்பின்படி ஒவ்வாரு கணிணி துறை வேலையும் நான்கு வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதாம்.

வேலையின்றி இருப்பதன் தவிப்பு வேலையில் இருக்கையில் தெரிவதில்லை. நீளும் இரவுகள், கையில் பிடிபடா எதிர்காலமும் கொடுக்கும் கவலை உக்கிரம் வாய்ந்தது. இன்று கணிணி துறையில் வேலையில் இருக்கும் பலர் சமூகத்தின் அடித்தட்டு அல்லது மத்திய தட்டை சார்ந்தவர்களே. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு அவர்களது தலைமுறையை முன்னுக்கு இழுக்கும் ஆற்றல் வாய்ந்தது. யாருடைய பரிந்ததுரையோ, கையூட்டோ அளிக்காமல் கல்வி தகுதியும், சொந்த புத்தியும் கொண்டு ்வேலைக்கு போன பலரை கணிணி துறையில் பார்க்கலாம். அவ்வாறு வேலை கிடைக்கும் தருணம் தரும் நிறைவு வார்த்தையில் அடங்காது.

கணிணி துறை இந்தியாவின் வேலைவாய்ப்பு துறைக்கு துண் போல் நின்று உதவுகின்றது. 2006 ம் ஆண்டு 1.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் கணிணி துறையால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

2007 ம் ஆண்டு கணிணி துறையின் ஏற்றுமதி 47.8 பில்லியன் அமெரிக்க டாலரை தொடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒரு கூட்டு முயற்சியே. அரசின் ஆதரவு , கட்டுமானங்களில் கவனம், தனியார் முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்று வளரும் இந்த துறையின் முன்னேற்றம் மட்டுறுத்தப்பட்ட சந்தை பொருளாதாரத்தின் வெற்றிக்கு சிறந்த உதாரணமாகும்.

பொதுவாக அரசு உருவாக்கும் வேலைகளை கவனிப்போர், அரசின் மூதலீடுக்கு ஊழியரிடம் பொறுப்புணர்வு இன்றி இருப்பதை கண்டிருக்கலாம்.
மாறாக தனியார் மூதலீடு இருக்கையில் பணியில் ஊழியரின் கவனம் அளவீடப்படுகின்றது, அது ஊழியரின் வேலை செய்யும் திறனை அதிகரிக்கின்றது. ஊழியரின் திறன் அதிகரிக்க லாபம் அதிகரிக்கின்றது, அதனால் ஊழியரின் ஊதியம் அதிகரிக்கின்றது.

அரசுதுறை ்மெத்தனத்திற்கு விதிவிலக்குகளும் உண்டு. பாரத மிகுமின் நிறுவனம் போன்ற சில அரசு துறைகள் லாபகரமாக செயலாற்றி வருகின்றன. வளரும் பொருளாதாரத்தின் காரணமாக லாலுவின் திறம்பட்ட மேலாண்மையில் ரயில்வே துறையும் அருமையாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இவர் ரயில்வே துறையில் காட்டும் கவனத்தை பீகாரில் காட்டியிருந்தால் பீகார் தனது முன்னேற்ற பாதையை தொட்டிருக்கும்.

கணிணி துறையை காழ்ப்புணர்வோடு பார்க்காமல் அரவணைத்து , அதற்கான பாதையை அமைத்து இந்த துறையிலிருந்து பெற்ற அனுபவத்தை பிற துறைக்கும் அளித்து அரசு இயங்குகையில் இன்னும் பல குடும்பங்கள் சமூகத்தின் கீழ்நிலை அடுக்களில் இருந்து மேல் வரும்.

Friday, February 23, 2007

சுடர்; த்ரிஷா மற்றும் கொஞ்சம் அரசியல்

முத்துவின் சுடர்

1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை?

யார் வேண்டுமானாலும் ஆளலாம். நாட்டின் குடிமகனாய் அரசியலமைப்பின் அங்கீகாரம் செய்யப்பட்ட தகுதிகள் உடையவராய் இருந்தால் சரி. நடிப்பென்பதும் ஒரு தொழில்தானே, அதை காரணம் காட்டி ஏன் ஒருவரது அடிப்படை உரிமையை மறுக்க வேண்டும்?

நகலுக்கும், அசலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியும் பகுத்தறிவு குடிகளிடத்து வேண்டும். திரைப்படத்தில் ஏழைகளை அணைத்து, கை காசை வாரி இறைத்து ஏழை குடி உயர்த்தும் நடிகன் ஆட்சிக்கு வந்தால் மக்கள் வரி பணத்தைதான் இலவச போர்வையில் வாரி இறைப்பார் என்ற புரிதல் வேண்டும். அந்த வித்தியாசம் புரியாமல் இருப்பது நடிகர்களின் குறையன்று. சமூதாயத்தின் குறை. ஆட தெரியாமல் மேடை குறை கூறி பயனில்லை.

பகுத்தறிவு இயக்கங்கள் மக்கள் வரிப்பணம் மற்றும் அதன் செலவீடு குறித்த விழிப்புணர்வை மக்களிடத்து உண்டாக்குவதில் முன் வரும் போது இந்த குறைகள் களையப்படும். அது வரை தலைவர்களது பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு தற்கால முடிசூடும் மன்னராய்தான் ஆள்பவர்கள் இருப்பார்கள்.

நமது ஊரில் நிலவும் தனி நபர் துதிபாடும் மனப்பான்மையும் இதன் மற்றொரு முகம். தலைவனாக ஒருவனை உருவகப்படுத்திய பின் கால் நகம் நக்கி சுத்தப்படுத்தவும் தொண்டர் தயங்குவதில்லை. தலைமையின் கொள்கைகாக தொண்டர் இன்றி தலைவனுக்காக தொண்டன் ஆகிறான். ஆண்டவன், அரசன் என்று நகர்ந்த இந்த துதி பாடல் இன்று கட்சி தலைமை, திரைப்பட நடிகர் என்று நகர்ந்து நிற்கின்றது. இது மாறும். சற்று காலமெடுக்கும். சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாக சனநாயகம் விரிய இந்த பண்பில் மாற்றம் வரும்.

********************************************************
2. புரியவே புரியாத கவிதைகளை கண்டிப்பாக எழுதித் தானாக வேண்டுமா? இப்பொழுது கதைகள் கூட புரியாத அளவுக்கு எழுதுகிறார்களே, இது தேவைதானா? மேலும் பெண்ணியம் என்ற பெயரிலும் எதார்த்தம் என்ற பெயரிலும் சொல்லவே நா கூசும் அளவுக்கான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவது அவசியம் தானா?

புரிகின்றது புரியவில்லை புரியவே புரியவில்லை என்ற நிலைகள் இடம், பொருள், நபர் சார்ந்து மாறும். படைப்பாளிக்கு விருப்பத்திற்கு படைக்கும் உரிமை உண்டு. வாசகனுக்கு தேர்ந்தெடுத்து வாசிக்கும் உரிமை உண்டு. எதுவும் திணிக்கப்படுவதில்லை.

சமூகத்தை பார்ப்பவன் தன் மனத்திற்கு பட்டதை எழுதுகின்றான். நாக்கூசும் வார்த்தை நடுவே உலவுகையில் எழுத்தை மட்டும் மாறுவேடம் கட்டி எழுத வேண்டிய அவசியம் எதற்கு? எழுதாததால் அந்த வார்த்தைகள் புலங்கிய இடங்கள் இல்லாமலா போகின்றது? சமூகத்தின் அதிர்வே எழுத்துகளிடையே பரவுகின்றது , சில இடங்களில் காணும் அதிர்வுகள் அந்த நேரத்தில் அதிர்ச்சி தருவதாய் இருக்கின்றது, ஆனால் அதே அதிர்வில் தொடர்ந்திருப்பவர் நிலையை வேறு எவ்வகையில் நாம் உணர முடியும்?

****************************************
3. உண்மையைச் சொல்லுங்கள் திரிஷா அழகு தானே?

இல்லை மிக அழகு.

ஒரு சந்தேகம். திரிஷாவா? த்ரிஷாவா?

**********************************************
4. காவிரிப் பிரச்சனைக்கு என்னதான் வழி? நதிகளை நாட்டுடைமை ஆக்கலாமா?

எல்லாவற்றையும் நடுவன் அரசில் குவிப்பது தேவையற்ற ஒன்று. ஏரிப்பாசனம் உள்ள விவசாய பூமிகளில் தண்ணீர் பிரச்சனை எப்போதும் இருப்பதாக விழுப்புரம் அருகே கிராமத்தை சார்ந்த விவசாய நண்பன் கூறிக் கொண்டிருப்பான்.

கன்னடம் மற்றும் தமிழ் என்ற ஏடுகளை அகற்றி பேசினால் இரு வேறு விவசாய குழுக்களுக்கு நடுவே நீர் பிரித்துக் கொள்வதற்கான பிரச்சனையாக தெரியும். ஏடுகள் ஏற்றி பார்க்கையில் நீர் பிரச்சனை இனப்பிரச்சனையாக தெரிகின்றது. இனப்பிரச்சனையாக இருப்பதால் கௌரவ பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

மாண்டியா ஹாசனில் உள்ளவன் பிழைப்பும் விவசாயந்தான். அவனுக்கும் குடும்பம் , பிள்ளைக்குட்டி உண்டு. காவிரியை குடிநீருக்கு நம்பும் ஊர்கள் அங்கும் உண்டு. தஞ்சை டெல்டாவிலும் இதே கதைதான்.

மழை அளவு, விவசாய நில அளவு, விளைச்சல் போன்ற பல விடயங்களை பல ஆண்டுகள ஆராய்ந்தான் காவிரி பேராயம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அது சரியானதாக எண்ணிதான் இரு மாநில முதல்வர்களும் முதலிலிருந்தே செயல்பட்டு வந்தார்கள். இரு புறமும் அனல் கிளம்பும் குழுக்களால் அவர்கள் தங்கள் துவக்க முடிவிலிருந்து மாற வேண்டியதாயிற்று. பொலிடிக்கல் ரியாலிட்டி நிஜத்திலிருந்து மாறுபட்டே இருக்கின்றது.

பாசன பகுதிகளில் நீர் சேமிப்புக்கு இரு அரசுகளும் மேலும் செயல் படலாம். நீர் விரயம் தவிர்த்தல் இருவருக்கும் முக்கியம்.

************************************
5. உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினால் -of course you can act independently!- என்ன செய்வீர்கள்?

பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வேன்.;-)

**************************************
அடுத்த சுடரை கல்வெட்டு அவர்களிடத்து கொடுக்க நினைக்கின்றேன்.

1) சாதி, இனம், மொழி , தேசியம் என்ற வளையங்கள் குறித்து தங்கள் கருத்தென்ன?

2) SEZ- -சீனாவை உயர்த்த உதவியது. இந்தியாவிற்கு உதவுமா?

3) கலாச்சாரம் என்பது சமூகத்தின் மீது பூட்டப்படும் விலங்கா? அலலது அணிகலனா?

4) பொழுது போக்கு கொண்டாட்டங்களில் தங்களுக்கு பிடித்தது எது

5) சிங்குரில் ்விளைநிலத்தில் துவங்கும் டாடா கார் தொழிற்சாலை சிங்குரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா?

Thursday, February 22, 2007

விபத்துகள்


Traffic Accident
Originally uploaded by silas216.

காலையில் அலுவலகம் வரும்போது போக்குவரத்து நெரிசலில் புகுந்து வேகச்சாலையில்(freeway) வருகையில் அமெரிக்கர் ஒருவர் காரின் பின்னால் மோதி விட்டார். அடுத்த நிமிடம் வண்டியை இருவரும் சாலையின் புறம் ஒதுக்கினோம். அவசரமாய் இறங்கியவர் எப்படி இருக்கிறீர்கள். நலமா? வண்டி மோதியதால் தங்களுக்கு எதுவும் பாதிப்புண்டா என்று விசாரித்தார். இருவரும் ஊர்திக்கான காப்புரிமை தகவல்களை பரிமாறிக் கொண்டு காரில் கிளம்பி விட்டோம். ஒரு பத்து நிமிடங்கள் உரையாடல்கள் நடந்திருக்கும். அமெரிக்காவில் விபத்தை காண்பது இது முதல்முறையல்ல. ஆனால் ஓவ்வொரு முறை விபத்து நேர்கையிலும் அதை ்சுற்றி நிகழும் சம்பவங்கள் கிட்டதட்ட இது போலவே இருக்கின்றன. நிற்க.

நான்கு வருடங்களுக்கு முன் ஊரில் நடந்த சம்பவம் நியாபகம் வருகின்றது. அப்பா அறுபது வயதை கடந்தவர். அவரிடத்து ஒரு பஜாஜ் நிறுவன ஸ்கூட்டர் அப்போது இருந்தது. கடை கண்ணிக்கு போக உபயோகப்படுத்துவார். பொதுவாக அவர் ஸ்கூட்டர் ஒட்டும் வேகம் 30 கி.மீ தாண்டாது. வரும் போகும் எல்லாவற்றிற்கும் வழி விட்டு ஒட்டும் குணம் உடையவர். ஒரு நாள் காய்கறி கடைக்கு போகையில் அப்பா மேல் ஒரு இருபது வயதை ஒத்த இளைஞன் பைக்கில் வந்து மோதி விட்டார். அப்பா கீழே விழுந்து விட்டார். அந்த இளைஞன் மிக வேகமாக வண்டியில் வந்திருக்கின்றார். அது ஓரு பத்தடி சாலை வண்டி வழுக்கி அப்பா வண்டியின் மீது ்மோதி இருக்கின்றது. கீழே விழந்த இளைஞர் அப்பாவை கோபமாக திட்டியிருக்கிறார். காய்கறி கடைக்காரரும் சுற்றி இருப்பவர்களும் அவசரமாய் ஒடி வந்து இருவரையும் தூக்கி விட்டு அந்த கவனமாய் இல்லாமல் வண்டி ஒட்டியதற்காக இளைஞனை திட்டி இருக்கிறார்கள். அப்பாவின் வண்டி சேதம் அடைந்திருப்பதால் நஷ்ட ஈடு கேட்டும் இருக்கிறார்கள். அப்பா அதெல்லாம் வேண்டாம் என சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். சற்று நேரத்தில் அந்த இளைஞர் ஒரு குழாமோடு (பல வயதினரும் கலந்த) எங்கள் வீட்டுக்கு வந்து அப்பாவை கண்ட மேனிக்கு திட்டி கலாட்டா செய்திருக்கின்றார். அப்பாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்திருக்கின்றார். மாத சம்பளம்/பென்ஷன் வாங்கும் மத்திய தர வர்க்கம் நிரம்பிய தெருவில் எல்லோருக்கும் பயம். தடித்த வார்த்தைகளும், நிறைய மிரட்டல்களும், அப்பாவின் ஸ்கூட்டருக்கு ஒரு உதையும் விட்டு அந்த இளைஞர் சென்று விட்டார். அப்பாவை தூக்கி விட்ட கடைக்காரருக்கும் இதே சம்பவம் நடந்திருக்கின்றது. காவல்துறைக்கு சென்று புகார் செய்தால் மிரட்டல் அதிகமாகும் ஆகையால் புகார் கொடுக்கவில்லை.

விபத்து எவ்வாறு கையாளப்படுகின்றது மற்றும் விபத்திற்கப்புறம் தவறு செய்தவரின் குணநலன்கள் இவற்றை பார்க்கையில் சமூக நீதி என்றெல்லாம் போராடும்போது சமூக அடிப்படை உணர்வையும் மக்களுக்கு பரப்பவேண்டும் என்று தோன்றுகின்றது.

அந்த இளைஞரை பொறுத்தவரை அவர் செய்ததது அவருக்கு நியாயமாகதான் பட்டிருக்கும். அவர் வண்டி மோதினாலும் அடுத்தவர் ஒன்று சொல்லக் கூடாதென்ற எண்ணமுடன் இருந்தவரை ஒரு சாதாரணக் கடைக்காரர் திட்டக் காரணமானது ஒரு கிழவர் என்பதை அவர் தாங்க இயலவில்லை. ஒரு சப்தம் போட்டேன் அந்த கிழவன் நடுங்கி போய்விட்டான் என்று சவடால் கடைக்காரரிடம் பேசியிருக்கிறார்.

சமூகத்தில் தான் செய்த செயல் தவறு என்ற பார்வையை விட சமூகத்தில் வலிமையை பறைசாற்ற ஒரு இடம் கிடைத்தாக பெருமையோடு இருந்திருக்கிறார். எல்லாருக்கும் சமூகத்ததி்ல் ஒரு பலகீனம் உண்டு. அதை குத்தி அவரை அடக்குவதில் ஆளுமை கொள்வதை விட பலவீனத்தை மதித்து ஆளுமை வளர்ப்பதே உயர்ந்தது. ஆனால் தற்போது விலங்குகளை ஒத்த ஆளுமையே திரைப்படங்களிலும் தெரிகின்றது, சமூகத்திலும் இருக்கின்றது. அதுவே தலைமைபண்பாகவும் காட்டப்படுகின்றது.

தான் வளர்க்கப்பட்ட விதம் , தன்மை, தான் புரிந்து கொண்ட சமூகதன்மைகள் வாயிலாகவே அவ்விளைஞர் தான் தவறிழைத்த போதும் வயதானவரை மிரட்டுதல் வீரம் என்ற கருத்துக்கும், முடிவுக்கும் வந்திருக்க கூடும். சமூகத்திற்கான நீதியை நோக்கி நகருகையில் ஒவ்வொரு சமூக உறுப்பினனும் தன் உரிமையை மதிககும் அதே நேரம் பிறருடையதை மதிக்கும் பண்பினை கற்றிடல் வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் நேரிடையாகவும், மறைமுகமாகவும் அடாவடியான போக்கே இளைய தலைமுறைக்கு போதிக்கப்படுகின்றது. அடிப்படை நாகரிகமும் , ஒழுங்கும் பலகீனமாக கருதப்படுகின்றது.

சமூகநீதி நிறுவும் பகுத்தறிவு வளரும் பொழுதில் அவவிளைஞரின் செயலுக்கும், இன்று அமெரிக்காவில் நான் கண்ட மனிதரின் செயலுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது. ஆனால் அது நெடுங்கனவு.

பள்ளிகளின் போதனைகளில் அசோகரும், கனிஷகரும் மரம் நட்டதை போதிப்பதை விட்டு விட்டு அடிப்படை நாகரிகம் மற்றும் ஒழுங்கை போதிக்கலாம். நூற்றில் ஒரு பிள்ளையாவது அதை துவக்கத்தில் கற்றுக் கொள்வதால் கடைபிடிக்க முயலலாம்

Tuesday, February 20, 2007

பிடித்ததும் பழகியதும்

என்றாவது ஒருநாள்
இரவு முடிந்து பகல்
வந்தால் பண்டிகையென
காத்திருப்பு
நீளும் இரவுகளோடு
நித்திரை அதிகரிப்பு
பகல்தன்னை தேடும்
பரிதவிப்பும் உண்டு
இரவின் நுனியில்
நாட்கள் அமர அமர
பழக ஆரம்பத்தோம்

தூங்காமல் காணாமல்
போயிருந்தவன் வந்து நிற்க
போன இடம் கேட்ட போது
பகலே இதுதான் என்றான்
என்றோ முடிந்த இரவு
இன்னும் தெரியாமல்
பகலுக்கும் இருள் பூசிவிட்டோம்
வந்தவனை துரோகி ஆக்கி
கொன்று புதைப்பு
இருள் அகல இருளுக்குள்
காத்திருத்தலே பிடித்தம்
இருள் அகன்றால் என் செய்வது

Monday, February 19, 2007

சுழற்சி வாழ்க்கை

தமிழர் ஒற்றுமையென
தலைமை அறிக்கை
மாற்று மொழி ஒழித்திட்டு
மரியாதை காக்க பிரகடனம்
ரத்தம் பொங்க உணர்ச்சி முழக்கம்
இடையிடேயே இலவசமாய் சில
காஸ் அடுப்பு கலர் டிவியும் உண்டு
எல்லாமிருந்தும் ஏதோ போதலை
மழை தண்ணியில் ரோடு கரைய
குடிதண்ணிக்கு நாக்கு காஞ்சு அலைய
வெள்ளத்தண்ணி வீடு புகுந்து நிரப்ப
கொசுக் கடியோடு கையூட்டு கொடுத்து வாங்கி
களச்சி போய் உட்காரையில
மீண்டும்...

மதிய தூக்கம்

பெங்களூர் இந்திரா நகரில் உத்தியோகம் பார்த்த காலத்தில் உடனிருந்த சக தோழர் மதிய நேரம் கண்ணசர்ந்து விடுவார். இருக்கையில் உட்கார்ந்த சாயில் அழகாய் குறட்டை விட ஆளுக்கு இரண்டு தலையில் தட்டி எழுப்புவோம். மனிதர் கடைசி வரை மாறவில்லை. நாங்களும் தட்டுவதை நிறுத்தவில்லை.

இன்று பார்த்த செய்திபடி நண்பர் இதயத்திற்கு நலம் கிடைக்க உடற்பயிற்சி செய்ததாக நினைக்க ்வேண்டியிருக்கிறது. கிரேக்க நாட்டை சார்ந்த ஏதேன்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்சியாளர் ஒருவர் மதியம் தொடர்ந்து தூங்கி ஒய்வெடுக்கும் பலரை சோதித்து இந்த முடிவை வெளியிட்டுள்ளார். மதிய தூக்கம் அலுவலக வேலையினால் ஏற்படும் மண்டை சூட்டை தணித்து விடுகின்றது போலும்.

இனி தூங்கி விட்டு யாரேனும் கேட்டால் மருத்துவர் அறிவுரை எனக்கூறி விடலாம். உயிரினங்களில் காணப்படும் நாள் சுழற்சியினை அடிப்படையாக கொண்ட சிர்காடியன் ரிதம் என்பது உயிரினங்களின் மரபணுக்களியே பொதிந்துள்ளது. இந்த ரிதம் தூக்கத்தையையும் , விழிப்பையும் உயரினங்களிடத்து கட்டுப்படுத்துகின்றது. மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதி இந்த ரிதத்தை கொண்டுள்ளது. வெளிச்சமும், இருளும் வெளிப்புற காரணிகளாய் சிர்காடியன் ரித்ததிற்கு உதவுகின்றன.

Thursday, February 15, 2007

கரையும் பனிக்கட்டி--ii

முதல் பகுதி

மூன்றாவது க்யுப் எங்கள் மத்தியில் கதாநாயகி மாதிரி. வேலையில் கொஞ்சம் முன்னே பின்னே என்றாலும் அட்டகாசமான தகவல் தொடர்பு நுட்பம் புரிந்தவள். தான் சொல்ல நினைத்தது, பிறர் சொல்ல நினைப்பது எல்லாம் புரிந்து கொண்டு சூழ்நிலைக்கேற்ப பேசுவதில் நிபுணி.

வாடிக்கையாளர் கையாள்வதில் எங்கள் மேலாளர் கொஞ்சம் போதாதவர். இவள்தான் அவருக்கு தூண், ஊன்று கோல் இன்னும் மற்றும் பல. எங்கள் பிழைப்பின் கோடெலுதி வாழ்வாரே மேலார் எனும் கருத்து அம்மணியை கண்ட நிமித்தம் மாறி விட்டது. பின்குறிப்பாய் சொல்ல வேண்டியது அவளுடைய உடைநயத்தை. She rocks.

அப்பேற்பட்ட அம்மணியின் ஆண்தோழர் என்ற விதத்தில் புதியவர் மேல் இன்னும் மரியாதை வந்தது.

'அதெல்லாம் விளக்கம் சொல்ல முடியாதுனுட்டா பிரதர். இப்போ ஊருக்கு போ. இன்னும் கொஞ்சநாள் இடைவெளி விட்டு நம்ம உறவை பார்க்கலாம் சொல்லறா. எத்தனை மைல் தாண்டி இவளுக்காக வந்திருக்கேன். இப்படி சொல்லிட்டா பாருங்க. கொஞ்ச நாளாவே விலகி போற மாதிரி இருந்துச்சு நான்தான் தப்பா நினைக்கிறேனோனு பயந்துகிட்டு கேட்காம விட்டுட்டேன். இப்ப இரண்டு மாசமா என் கூட பேசறதே இல்லை'- புதியவர். கண்கள் கலங்கின.

'ஏன் பிரதர் கலங்கறிங்க. ஏதாச்சும் சண்டை எதுவும் போட்டிங்களா? ' - நான். எனக்கு அவர் மீது பாவமாக இருந்தது.

மூன்றாவது க்யுபை சமீபமாக வட இந்தியரோடு அடிக்கடி பார்க்க முடிந்தது. புது வருட முதல் இரவில் சான்பிரான்சிஸ்கோ பாரில் பார்த்தேன். அறைத்தோழனுக்கும் தெரியும். புதியவரிடம் சொன்னானா இல்லையா தெரியவில்லை.

'சண்டை என்னங்க. எப்போதும் வழக்கமா வர்ரதுதான். ரெண்டு பேரும் அப்படி ஓரு அண்டர்ஸ்டான்டிங்ல இருந்தோம். என்கிட்ட போன்ல பேசாம அவ தூங்கவே மாட்டா. திடீருனு மாற்றங்கள். இந்த தடவை நான் வர்ரேனு சொன்னப்ப உங்க ரூம்மேட் வேண்டாம் வராதே, ரொம்ப குழம்பிக்காம இதை விட்டுடு சொன்னான். எனக்குதான் மனசே ஆகலை. கிளம்பி வந்திட்டேன். நேரா பார்த்து என்னனு கேட்டுடலாம்னு நினைச்சேன்' - புதியவர்.

'பிரதர் சொன்னா தப்பா நினைச்சிக்காதிங்க. அண்டர் ஸ்டான்டிங்கலாம் பெரிய வார்த்தை. அதலெல்லாம் காலம் இடம் பொருள் வைச்சு மாறும். ஊர்ல இருக்கையில இருந்த் சூழ்நிலை வேற, இப்ப இருக்க சூழ்நிலை வேற. மனசோட தேவைகளும், சந்தோஷங்களும் மாறுபடலாம் இல்லையா?
குடும்பம, நீங்க அத விட்டா பத்து மணி நேர வேலைங்கற வட்டத்தில யோசிக்கறது எப்படி? இங்க வந்து தன் கால்ல நின்னு நிறைய சொந்த நேரம் கிடைக்கறப்ப யோசிக்கறது எப்படி? வித்தியாசம் உண்டு. கொஞ்சம் இடைவெளி கொடுங்க பிரதர். உங்களுக்கும் யோசிக்க நேரம் வேணும்.' - நான்

எனது அலுவலக கதாநாயகி பக்கம் பேசினேன். நொந்து போன இவர் பக்கம் தொடர்ந்து பேசினால் அவரது குழப்பம் தான் அதிகரிக்கும்.

'நானும் இவன் பிரச்சனையை சொன்னப்ப அவள்கிட்ட பேசினேன். தேங்ஸ். பட் நோ தேங்ஸ்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் அவள்கிட்ட என்னத்த சொல்றது' - அறைத்தோழன்

ஸ்காட்ச் சோகமாய் இருந்த போதும் சுகமான மனநிலையை கொடுத்தது. தோழமை உள்ள பானம் அது ஒன்றுதான். ஐஸ் க்யுபின் இடுக்குகளுக்குள் பரவி அதன் சூட்டில் ஐஸ் உருக ஸ்காட்சின் மணம் நாசிக்கு இனிதாய் இருந்தது. ஐஸ் உருகுவதற்குள் பருக வேண்டும். உருகி விட்டால் அதற்கப்புறம் ஸ்காட்ச் இல்லாமல் போய்விடும். ஸ்காட் தெளித்த தண்ணீர்தான் இருக்கும்.

'பிரதர் சொல்லறது இசி. காதல் மாறக்கூடாதுங்க. இடம் மாறினா மனசு எப்படிங்க மாறலாம். எதிர்பார்த்து காதலிச்சாதான் மனசு மாறும். என்னை பொருத்தவரை எதிர்பார்ப்பு இருந்தா அது காதலே இல்லிங்க. ஆனா நாங்க அப்படி இருந்ததில்ல'- புதியவர்.

'பிரதர் எதிர்பார்ப்பிலாம இருக்கனும்னா சவமா இருந்தாதான் உண்டு. எல்லா இடத்திலும் எதிர்பார்ப்பு உண்டு. சமயத்தில நாம நினைக்கிற மாதிரியே எல்லாம் இருக்கையில அதை தாண்டி வேற எதிர்பார்ப்பு வரதில்லை. அதுதான் உண்மை. எண்ணமோ சிந்தனையோ மனசில நிரந்தரம் கிடையாது. ஓடிக்கிட்டேதான் இருக்கும். சில ்விஷயங்கள் நேரமும் இடமும் மாறும் போதுதான் மனசுக்கு புரிய ஆரம்பிக்கும். காதல்ல காம்ப்ரமைஸ் பண்ணறதிலும் அளவிறுக்கில்ல. ஒரு அளவுக்கு மேல காம்பரமைஸ் பண்ணிக்கிறது மூகமுடி போட்டு நாடகம் நடிக்கிற மாதிரி ஆயிடும். எவ்வளவுதான் நடிக்கிறது , கழட்டி போட்டுட்டு எப்படா போவோமுனு ஆயிடும். அவங்களுக்கும் அப்படி பட்டிருக்கலாம். அதுதான் சொல்லியிருக்காங்க'- நான்.

புதியவருக்கு கோபம் வந்துவிட்டது. பட்டென அறைக்குள் சென்று கதவை மூடி தூங்கிவிட்டார். அறைத்தோழன் என்னை இரண்டு திட்டு திட்டிவிட்டு அடுத்த ரவுண்ட் ஸ்காட்சை ஊற்ற டிவியில் எதையோ பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

' பிரதர் எதிர்பார்ப்பில்லாம வர்ரது அட்வைஸ் இவ்வளவு நேரம் வாரி வழங்கின எதையும் எதிர்பார்த்தா சொன்ன? -சிறிது நேரம் கழித்து அறைத்தோழன் சொன்னான்.

அவன் சொன்னது எனக்கு சரியாகவே பட்டது.

கடந்த வ்ருடம் காய்கறி வாங்க போன போது புதியவரை கடையில் பார்த்தேன். இபபோது மூட்டை முடிச்சுகளோடு அமெரிக்கா வந்து விட்டார். மூன்றாவது க்யுப் அவரது மனைவி இல்லை. வேறு யாரோ இருந்தார்கள். அப்பா ஆக போகிறார் போல. பார்த்து ஹாய் சொல்ல சிரிக்காமல் போய்விட்டார். இன்னும் கோபம் போல இருக்கிறது.

கரையும் பனிக்கட்டி-I

ஐந்து அல்லது ஆறு வருடம் இருக்கலாம். மழை சாரலடிக்கும் ஒரு நாளின் சாயங்கால வேளையில் கலிபோர்னியா மாகாணத்தின் சன்னிவேல் எனும் ஊரில் அந்த உரையாடல் நிகழ்ந்தது. என்னுடன் எனது நண்பனும் அறை தோழனுமாகிய ஒருவனும், அவனுடடைய நண்பனும். நானும் எனது அறைத்தோழனும் குளிருக்கு கதகதப்பாய் ஐஸ்கட்டிகளில் வழுக்கி ஒடும் பழுப்பு நிற திரவமாய் ஜாக் டேனியல்ஸை ரசித்து இருக்க புதிய நண்பர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அவருக்கு ஒரு பிரச்சனை.

புதிய நண்பர் பெல்ஜியமிலிருந்து வந்திருந்தார். அவருக்கும், அவரது தோழிப் பெண்ணிற்கும் ஏதோ வாக்குவாதம். கொஞ்சம் நடப்பதும், பின் ஏங்க இப்படி என்று புலம்புவதுமாய் அந்த நேரம் இருந்தது.

எனது அறைத்தோழனுக்கு பெண்தோழி உண்டு. அவன் கதையை தனியாக புத்தகமாக போடுமளவிற்கு சொல்லாம். இப்போது இரண்டு குழந்தைகள். அது எனக்கு தோழி பெண்ணிடம் பேச ஆரம்பிந்து இருந்த தருணம. உள்மன வார்த்தைகளை கொட்ட பயந்து , மேலோட்டமான உரையாடல்களை நிகழ்த்தி கொண்டிருந்தேன். மின்னஞ்சலும், தொலைபேசியும் கண்கண்ட தெய்வங்களாய் இருந்தன.

'பிரதர் அவளுக்காகதான் இவ்வளவு தூரம் வந்தேன்?'- புது நண்பர்.

எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. பொதுவாக அறைத்தோழன் ஒருவரை பற்றி இன்னோருவரிடம் சொல்லமாட்டான். அதனால் முன்கதை சுருக்கம் சரியாக தெரியாமல் உரையாடலில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று.

'விடுங்க பிரதர். உட்காருங்க. கொஞ்சம் ஸ்காட்ச் சாப்பிட்டா எல்லாம் சரியாயிடும்' - நான். ஸ்காட்ச் ஒரு அருமையான திரவம். கண்டுபிடித்தவன் மேல் எனக்கு ஒரு மரியாதை உண்டு.

'டேய் சும்மாயிரு.' - அறைத் தோழன்.

"அவரை ஒண்ணும் சொல்லாதேடா. அவருக்கு தெரியாது'- புதியவர் எனக்கு ஆதரவாய் பேசினார்.

' ஏங்க ஹாட் சாப்பிடமாட்டிங்களா?' - நான்

' இல்லிங்க. சாப்பிடறதை நிறுத்திட்டேன். அவள்கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கேன் ' - புதியவர்

' கேட்கறேனு தப்பா எடுத்துகாதிங்க பிரதர். யார் அவங்க. என்ன பிரச்சனை'- நான். கதை கேட்பதில் எப்போதும் எனக்கு ப்ரியம் உணடு.

அறைத்தோழன் என்னை சலிப்பாய் பார்த்தான்.

' ஏன்டா ஸ்காட்ச்க்கு தொட்டுக்க சிப்ஸ் பத்தாதா. இவன் கதை வேற வேணுமா'- அறைத்தோழன்

'பிரதர். அவன் கிடக்கான். உங்களுக்கு என்னாச்சு சொல்லுங்க.நான் ஏதாவது முடிஞ்சா பண்ணறேன்' - நான்.

' அவ இங்க சான்உசேல இருக்கா. காலேஜிலேருந்து ரெண்டு பேரும் லவ் பண்ணறோம். மூனு வருஷம் முன்னால பெங்களுர்லேருந்து நான் பெல்ஜியம் போயிட்டேன். கொஞ்ச நாள்அவ இங்க வந்திட்டா. இப்போ என்னடானா ஐ நீட் எ ப்ரேக்னு சொல்லறா. என்னங்க பண்ணறது' - புதியவர். குரல் நைந்திருந்தது.

'விடுங்க பிரதர். எங்கே போக போறாங்க. எதுக்கு கேட்க வேண்டியதுதானே?'- நான்.

'அவர் சொல்லற ஆளு நம்ம ஆபிஸ்தான்டா. யாருனு தெரியுதா?' - அறைத்தோழன் புதிர் போட்டி வைத்தான்.

கிட்டதட்ட மினி மெட்ராஸாய் புரோஜக்ட் இருந்தது. அணியில் மொத்தம் பதினான்ங்கு நபர்கள். பத்து மெட்ராஸ். ஒரு திருச்சி. மூன்று தெலுங்கு. பத்து மெட்ராஸில் ஆறு பெண்கள். யாரை சொல்கிறானென புரியவில்லை. கலந்து கட்டி யோசித்ததில் தலை சுற்றல் வந்தது.

' அட டாபரு. நம்ம மூணாவது க்யுப்தான்டா.' - எனது அறிவுச்சுடர் எரிய வெகுநேரம் ஆனதால் அறைத்தோழன் சொல்லி விட்டான்.

(தொடரும்)

'

Monday, February 12, 2007

குழுக்களும் அவற்றின் சப்தங்களும்

சிந்தனையை கோர்க்கும் போது அதை வெளிப்படுத்த பல வடிவங்கள் உண்டு. சிலையாய், சித்திரமாய் , பாவனையாய், எழுத்தாய், பேச்சாய் வெளிப்படுத்தலாம். இவற்றில் எல்லா தரப்பையும் கவரக் கூடிய இரு படிமங்கள் எழுத்தும், பேச்சும். பல்லியின் நாக்கில் படியும் பூச்சியை போல எழுத்துகளும், பேச்சுக்களும் எண்ணத்தில் படியும்.

பரிணாமத்தின் துவக்கத்தில் சப்தங்கள் வார்த்தைகளாக மாற ஆரம்பித்தன. வேட்டைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் ஏற்படுத்தபட்ட குழுவில் ஒரே போல் எழுப்பட்ட சப்தங்கள் வார்த்தைகளாக நிறுவப்பட்டு பகிரப்பட்டது. வார்த்தைகள் அதிகமாக அதை பாதுகாக்க எழுத்து வடிவம் உருவாகி இருக்கலாம.

குழு அமைப்பு உருவாக்கம் ஒரு செல் உயிரி பல செல்லாக மாறுவதிலிருந்தே உண்டு. பல செல் உயிரிகளில் யானைகள், சிங்களின், கழுதை புலிகள் பற்றி குழு அமைப்புகளை அன்றாடம் டிஸ்கவரி சானலில் காணலாம்.

ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் யானையும், ஆசிய கண்டத்தில் இருக்கும் யானையும் ஒரே போல் சப்தம் இடுகின்றன. கிட்டதட்ட ஒரே போல் குழு அமைப்பில் இயங்குகின்றன. மனிதருக்கு ஆறாம் அறிவின் காரணமாய் இருக்கும் நில அமைப்புக்கேற்ற தனது பயம், பயத்தால் உருவான பக்தி, இனப்பெருக்க தேவைகள், வேட்டை தன்மை இவற்றிற்கேற்ப எழுப்பிய சப்தம் குழுவுக்கு குழு மாறியது. துவக்கத்தில் இருந்த சித்திர வடிவ எழுத்துக்கள் பின்பு வடிவம் மாற ஆரம்பித்தன. குழுக்களின் கற்பனைக்கு ஏற்றது போல் அவற்றின் எழுத்து வடிவம் மாறியது.

அலுவலகத்தில் இருக்கையில் வீட்டோடு தமிழில் பேசினால் அருகிலிருக்கும் சீன தோழருக்கு அது சப்தமாகதான் படுகின்றது. சீன தோழர் அவரது மொழியில் உரையாடுகையில் எனக்கும் அது சப்தமாகதான் இருக்கின்றது. முக அதிர்வுகள்,முன்னர் நடந்த உரையாடல்கள் வாயிலாக பொருள் கொள்ள முடிகிறதே தவிர அவர் சொல்வதன் பொருள் புலப்படுவதில்லை. பேச்சில்தானென்று இல்லை எழுத்தும் இதே கதைதான். நம்முடையது அவருக்கு ஜிலேபியாகவும், அவருடையது எனக்கு குச்சி கோபுரமாகவும்தான் படுகின்றது

சப்தம் மொழியானது, எழுத்து மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கியது. குழுக்கள் பெருகுகையில் அவை பிரிய ஆரம்பித்தன, கிட்டதட்ட உடலில் நடக்கும் செல் பிரிதல் போல் குழு பிரிதலும் ஆரம்பித்தன. குழுவின் வலிமை அதன் உறுப்பினரின் வலிமை கொண்டு மாறியது.

விலங்குகள் குழுவிலும் தலைமையை காணலாம். தலைமைக்கு நடக்கும் போட்டிதனையும் காணலாம். சிந்திக்கும் உரிமையிருந்ததால் மனித குழுக்களில் வலிமை அதிகமானவன் தலைவனாகவும், புத்தி அதிகமுள்ளவன் ஆலோசனை சொல்பவனாகவும் அமைய பெற்றது. புத்தியின் வலிமையை உணர்ந்தவன் புத்தியை பகிர்ந்து குழுக்களை வலிமையாக்குதலில் ஈடுபட்ட அதே தருணத்தில் புத்தியின் உதவியால் தன்னை தற்காத்து கொள்ளவும் ஈடுபட்டான்.

தன்னை மேம்படுத்தி கொள்வது உயிரினத்தின் மரபனுக்களில் உண்டு. தன்னை பாதுகாக்க நினைக்கும் உணர்வின் திரிபே வலிமையானதே வாழும் எனும் கோட்பாடு. தனிமனிதன் குழுவாகதான் இதை சாதிக்க முடியும் என்பதை அறிந்ததால் குழுவை வலிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டான். குழுவை இணைப்பதற்கான பொதுவானதொரு கருவி தேவைபடுகையில் மொழி சுலபமாய் அவ்விடத்தில் பொருந்தியது.அதனால் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சாதனமாய் உண்டான மொழி உணர்வுகளை இயக்குவதாய் மாற ஆரம்பித்தது. மொழியின் அடிப்படையில் குழுக்களிடையே மோதல்கள் உருவாயின. அறிவியல் பெருகி உலகம் சுருங்க தொடங்கும் இக்காலத்திலும் அது மாறாமல் உண்டு. கணிணி உலகத்திலும் டாட் நெட், ஜாவா மோதல்களாக குழு மோதல்கள் உண்டு.

சித்திரமும், சிலைகளும் காலந்தொட்டு மாறியது போல் எழுத்தும், பேச்சும் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றது. குழுக்கள் தன் விட்டம் அதிகரிக்க மொழியினை பரப்புதலும் , பிற மொழி அழித்தொழித்தலும் ஒரு வழி என அடையாளம் கண்டதால் அம்முயற்சியிலும் ஈடுபட ஆரம்பித்தனர். சில குழுக்கள் மொழியினால் உண்டான அதிகார அமைப்பினை காக்க மொழியை குறைந்த விட்டத்திற்கு கொண்டு வர அம்மொழிகள் அழிய ஆரம்பித்தன.

பொருளாதாரத்தை உயர்த்தும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளோடு ஒத்திசைந்து அதனை விரைவாய் உள்வாங்கும் தன்மை கொண்ட சிந்தனையாளர் சார்ந்த மொழிகள் விரைவாய் வட்டங்களை விரிவுபடுத்தின. விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உள்வாங்காமல் நின்ற மொழி கொண்ட குழுக்கள் நாள்போக்கில் அவற்றினை அவசரமாக கற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் பிற மொழி வாயிலாக அறிய தொடங்கி அவ்வழி நகர ஆரம்பித்தனர். மொழியால் குழு வளராமல் குழுவால் மொழி வளர வேண்டிய அவசியம் அக்தகைய மொழிகளுக்கு உண்டானது.

Friday, February 9, 2007

தோழி

முன்னோரு காலம் எழுதியது.
------------------------
வருடலாய் வரும்
இனிப்பாய் பரவும்
இதமாய் மிதக்கும்
வரையரை பல
வகுத்து கொடுத்திருந்தார்கள்
இதயம் இடிக்க வந்தது
இனிப்பினும் தாண்ட கசந்தது
இருக்கும் பூமி கனத்தது
வரையரை காணா மறைந்தது
எல்லாம் உன்னாலே தோழி

காற்றின் பரவும் காணா வாசம்
கண்மணி நீயாய் இருக்கின்றாய்
இமைக்கு உள்ளும் புறமும்
இயல்பாய் பரவி
கனவாய் காட்சியாய் தெரிகின்றாய்
இழுத்து அணைத்து என்னுள்
சேர்க்க நொடிகள்
எண்ணி இருக்கின்றேன்

Wednesday, February 7, 2007

கொந்தளிப்பின் ஊடே

நாசாவின் அஸ்ட்ராநாட் ஆவதற்கு கடுமையான பயிற்சி உண்டு. முக்கிய முடிவுகளை விநாடி நேரத்தில் எடுப்பதற்குண்டான பயிற்சிகளும் உண்டு. நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ நகரத்தில் லிசா மேரி நோவாக் எனும் பெண் ஷிப்மென் எனும் இன்னொரு பெண்ணை காரில் தாக்கி அவர் கண்ணில் மிளகு தூளை தூவி அவரை கடத்த முயற்சி செய்ததாக வழக்கு பதிவாகி உள்ளது. இருவருக்கும் இடையேயான பிரச்சனை அவர்களுக்கும் பில் ஒப்லின் என்பவருக்கும் இடையேயான உறவை பற்றியது. இது காதல் சம்பந்தப்பட்ட விஷயம். உரிமை கோரி மோதி கொள்வது பரம்பரை பரம்பரையாக உண்டே என்று தோன்றும் அதே கணம் இவர்களது பின்புலத்தை பார்க்கையில் கொஞ்சம் ஆச்சரியமாக உள்ளது.

லிசா மேரி நோவாக் ஒரு அஸ்ட்ராநாட் சென்ற ஜீலையில் விண்வெளிக்கு சென்று 22 நாட்கள் இருந்து வந்திருக்கின்றார். கடுமையான மனப்பயிற்சிகளை பயின்றவர். ஆனாலும் பின் விளைவுகளை யோசிக்காமல் உணர்வுகளின் கொந்தளிப்பில் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கின்றார். இந்த பிரச்சனையை தீர்க்க பல வன்முறை சாரா வழிகள் இருந்து அந்த வழிகளை பற்றி அவர் யோசிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு பல்வேறு விதமான தீர்வுகளை யோசித்து அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட்ட பயிற்சிகளை அவர் அந்த நேரத்தில் யோசிக்கவில்லை.

கர்நாடகத்திற்கும் , தமிழகத்திற்கும் இடையேயான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சசனையை கையாண்டு யார் வளர்வது என்ற நோக்கில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பிற்கு மக்களை தயார் செய்வதில்தான் பத்திரிக்கை தலைப்பு செய்திகளும், மக்கள் தலைவர்களாக இன்று அறியப்படுபவர்களும் முன் நிற்கிறார்கள். பேருந்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. வரிப்பணத்தில் வந்த பொது சொத்துகள் நொறுக்கப்படுகின்றன. அந்த படங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டு இந்திய இறையாண்மையை நோக்கிய தேவையற்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இருப்பவனும் விவசாயிதான், கர்நாடகாவில் இருப்பவனும் விவசாயிதான். பகிர்ந்து கொண்டால் வளமை இருவருக்குந்தான். சொத்து பிரிப்பதில் இருக்கும் பங்காளி பிரச்சனைதான் ஆனால் அந்த நிலையை முன் வைத்தால் கவர்ச்சி குறைந்து போகிறது.

எவனேனும் முடியை பிடித்துக் கொண்டு சண்டை போட்டால்தான் பார்க்க நன்றாக இருக்கின்றது. ரோம பேரரசின் போது மைதானங்களில் சாகும் வரை சண்டையிட சொல்லி வேடிக்கை பார்த்து கை கொட்டுவார்களாம். அந்த மனநிலை சற்று மருவி இன்று இங்கு வந்திருக்கின்றது.

இந்த முறை உயிர் சேதம் எதுவும் காவிரி பிரச்சனையால் ஏற்படவில்லை. இரு மாநில நிர்வாகத்தையும் இதன் பொருட்டு பாராட்ட வேண்டும். ஏற்பட்டிருந்தால் செய்தியாளர்கள் இரங்கல் வார்த்தைகளை அச்சில் ஏற்றி மனமெங்கும் மகிழ்ச்சியோடு செய்திகளை தண்டோரா அடித்திருப்பார்கள். தங்கள் நோக்கங்களை நோக்கி நிகழ்வுகளை திரிப்பதில் காட்டும் கவனத்தை நிகழ்வுகளை உள்வாங்குவதில் செலுத்தினால் நலம்.

தமிழகத்திலும், கர்நாடகத்திலும் எதிர்கட்சியாய் இருப்பவர்களின் ஒரே அரசியல் நிலை ஆளும் கட்சியை எதிப்பதே. இறையாண்மையும், அமைதியான மாநில சூழ்நிலையும், விவசாயிகளின் உண்மை பிரச்சனையும் அவர்களுக்கு முக்கியமில்லை, அக்கறையுமில்லை. மாநில நலன் என்பதை விட ஒட்டு வங்கியின் அசைவே முக்கியம்.

கொந்தளிக்கும் நிலையில் பயிற்சி அளிக்கப்பட்ட அஸ்ட்ராநாட் நிலையிழக்கிறார், சராசரி மனிதர் எம்மாத்திரம். சிந்திக்கும் நிலை மக்களமைப்பு அரசியலமைப்புகளுக்கு பிரச்சனை. ஆகவே அவர்களை உணர்ச்சிவசப் பட வைக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகின்றார்கள். மக்கள் கொந்தளிக்கும் நிலையில் ஆளுங்கட்சியாய் இருப்பவர்களும் கொந்தளிப்பிற்கு ஆமாம் போட வேண்டியிருக்கிறது. கொதிக்கும் தணலுக்கு மற்றுமொரு விசிறி.

Friday, February 2, 2007

மென்பொருள் துறையும் இன்னும் பலவும்

மென்பொருள் துறையால் சம்பளம் அதிகரிக்கின்றது. விலைவாசி ஏறுகின்றது. அதன் பலன் பல தட்டு மக்களிடம் சென்று சேருவதில்லை.விதர்பாவில் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வது மறக்கப்படுகின்றது போன்ற கருத்துகள் வலைத்தளங்களில் முன்னிறுத்தப்படுகின்றது.

விதர்பாவின் பிரச்சனையை முதலில் எடுத்துக் கொள்வோம். விதர்பா மகாராஷ்டிர மாநிலத்தில் இணைக்கப்பட்ட காலத்திலிருந்தே பிரச்சனைதான். மென்பொருள் துறை வளர்ச்சி அடையாமல் இருந்திருந்தாலும் இப்போது உள்ள குறைபாடுகள் எதுவும் களையப்பட்டிருக்காது. மகாராஷ்டிர மாநில ஆண்டு நிதி அறிக்கையில் எப்போதும் விதர்பா பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு குறைவே. மகாராஷ்டிராவின் மொத்த நீர் வள பெருக்கும், தடையில்லா மின்சாரமும் வேறு பகுதிகளுக்கு திருப்பப்டுகின்றது. இதை பற்றிய பல தகவல்களை வலைதளங்களில் காணலாம். ஆட்சில் இருப்போர் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வந்து கொண்டு இருப்பதால் அந்த பகுதியின் ஓட்டு வங்கியை காப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள்.

விதர்பாவின் பாசன வசதிகள் மிக மோசமானவை. அதை மேம்படுத்தும் திட்டம் பற்றிய குரல்கள் எழுவதில்லை. விவசாயியை ஆதரிப்பதாக வரும் குழுமங்கள் கூட அவர்களின் நோக்கமான வெளிநாட்டு நிறுவன எதிர்ப்பு என்ற நிலையில் பிடி காட்டனை கண்டிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள். அடிப்படை உரிமையான பாசன வசதி பற்றிய விழிப்புணர்வோ, முக்கியத்துவமோ மறக்கப்படுகின்றது. மரபணு மாற்றப்ட்ட பிடி காட்டனிலும் போலி விதைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை செய்தவர் யார், தொழில்ரீதியாக இவ்விதைகளை விற்பனை செய்வதற்கு தனிமனிதர் இயலாது, ஒரு கூட்டம் இருக்கவேண்டும். அவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் காண இயலவில்லை. விவசாயம் நஷ்டமடைந்து வறுமையில் இருப்பவர்களிடம் செத்தால் இரண்டு லட்சம் என அறிவிக்கும் 'புத்திசாலி' நிர்வாகமே மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் உண்டு. மகாராஷ்டிரா பருத்தி கொள்முதல் கூட்டுறவு அமைப்பின் ஊழல் மற்றும் நிர்வாக கோளாறுகளை பற்றி தகவல்களை வலைத்தளங்களில் காணலாம். இருப்பே போராட்டமாய் இருக்கும் விதர்பாவின் விவசாயிகளின் கடைசி கோவணத்தையும் உருவும் இவர்களின் கரை படிந்த கரங்களையும் பல வலைத்தளங்கள் கண்டு கொள்வதில்லை. இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் எனெனவென்றால் இது போன்று ஊழல்களில் ஈடுபடுவோரும் சாமானயரே. குழந்தை, மனைவி பாசம் என்று எல்லா விஷயங்களை அனுபவித்து டிவி சீரியல் பார்த்து கண்ணீர் விடும் மத்திய தர வர்க்கத்தினரே.

வெறும் மென்பொருள் துறையை பிடித்து குறைப்பட்டு கொண்டே இருந்தால் நிகழ்வின் வேறு குறைபாடுகள் புனிதப்படுத்தப்பட்டு மறக்கடிக்க படுகின்றன. மென்பொருள் துறைக்கெதிரான பிரச்சாரத்திற்கே இது பெரிதும் பயன்படுகின்றது.தெலிங்காணா பருத்தி விவசாயிகள் விஷயத்தில் தொடக்கத்தில் கோட்டை விட்டாலும் இழுத்து கட்டி குறை களைந்த ஆந்திர அரசு மென்பொருள் துறையிலும் கவனம் செலுத்து மாநிலம் மேம்படுத்துவதை காணலாம்.

மென்பொருள் துறையில் வேலை செய்வது காற்றில் மிதப்பது போல் சுகமானது என்ற கருத்துகள் பல இடங்களில் உண்டு. இங்கு வேலை நிரந்தரம் இல்லை, வேலைக்கான தகுதிகள் மேல் நோக்கி பிரயாணித்து கொண்டே இருக்கும். எட்டு மணி நேர வேலை, வாரக் கடைசி இளைப்பாறுதல் போன்றவை அவ்வளவு சுலபமாக எல்லா மென்பொருளாளருக்கும் அமைவதில்லை. மன அழுத்தமும், கடின உழைப்பும் தேவைப்படும் துறையாகவே மென்பொருள் துறை உள்ளது.

உருவாக்கப்படும் மென்பொருள்கள் வானில் விண்கலம் செல்லவும், சுலபமாய் புகைவண்டி சீட்டு வாங்கவும், தட்பவெப்பநிலைகளை கணக்கிடவும் மேலும் பல துறைகளிலும் உதவுகின்றது என்பது அவ்வளவாக நினைவில் கொள்ளப்படுவதில்லை.

மென்பொருள் நிறுவன உருவாக்கம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது. என்பதுகளில் வேலை என்றால் அரசு வேலைகளே என்றிருந்த நிலை மாறி தனியார் நிறுவன வேலைகளையும் திரும்ப பார்க்க வைக்கின்றது. மென்பொருள் உருவாக்கத்தின் காரணமாய் கட்டடம் கட்டுதல், கட்டட நிர்வாகம், சாலை வசதிகள், புதிய குடியிருப்புகள், மின்சார உற்பத்தி மேம்பாடு, மின் விநியோக மேம்பாடு , விமான போக்குவரத்து, மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், வங்கிகளும் அதை சார்ந்த தொழில்களும் என பல உப தொழில்களும் வேறு வழியில்லாமல் மேல் வருகின்றன. மென்பொருளின் பயன்பாட்டை அதிகரித்து அதை முறைபடுத்தி அரசு அலுவலகங்களுக்கு கொண்டு வந்தால் நிர்வாகம் மேம்படும், ஊழல் குறையும் சாத்தியமும் உண்டு.

சர்வீஸ் தொழில் நிறுவனங்களே அதிகம் நம்நாட்டில் வர காரணம் மனிதவளமே. அடிப்படை கட்டுமான பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. நம்நாட்டில் தடையில்லா மின்சாரமும், மேடு பள்ளம் இல்லா சாலைகளும் ஒரு ஆடம்பர பொருளாகவே உள்ளது. இவை அடிப்படையாக மாறும் பொழுதே உற்பத்தி தொழில்களுக்கான முதலீடு அதிகரித்து அந்த வகை தொழில்கள் மேம்படும்.

இப்போது நிகழ்ந்திருக்கும் டாடா- கோரஸ் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் சாத்தியம் உண்டு. டாடாவிற்கு ஐரோப்பாவின் மிக பெரிய சந்தையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இரும்பு கோரஸ் வழியாக ஐரோப்பாவை குறைந்த விலையில் அணுகுவது சாத்தியமே. இந்த டாடா-கோரஸ்க்கான நிதி இந்தியாவின் மென்பொருள் நிறுவனமான டிஸிஸ்லிருந்து கிடைத்திருப்பதாக பத்ரியின் பதிவில் படித்தேன். ஒரு துறையின் லாபம் வேறு துறைக்கு முதலீடாக நகருகையில் அந்த துறை மேம்பட்டு பணிவாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

மென்பொருள் துறையின் மேம்பாடு சமான்யரின் பொருளாதார நிலையை உயர்த்த அதில் ஒரு பகுதி இல்லாதவருக்கு சேருதலும் அதிகரித்துள்ளது. இயற்கை சேதங்களின் போதும, கல்வி உதவிகளிலும் மென் பொருள துறை சார்ந்த இளைஞர்கள் கொண்ட தன்னார்வ அமைப்புகள் இயங்குவதை காணலாம்.

திரைப்பட மோகமும், பரபரப்பு செய்திகளுக்கு அலைவதும் நமது அடிப்படை குணம். மென்பொருள் துறை அறவே இல்லாமல் இருந்தாலும் விதர்பா விவசாயின் தற்கொலை முதல் பக்கம் வரப் போவதில்லை. ஐஸ்வர்யா-அபிஷேக்தான் முதல் பக்கம். அவர்களது திருமணமே முதல் கவனம். அது நமது கலாச்சாரம். வேலைவாய்ப்பு அதிகரித்து படிப்பறிவு பட்டறிவாக மாற காலம் பிடிக்கும். பேஸன்சர் ரயிலின் வேகத்தில்தான் கலாச்சார மாற்றங்கள் நிகழும்.