Friday, December 29, 2006

நடைமுறை

மக்களாட்சி தன்னை காக்க வாங்கோ
மக்கள் மேல ஏறி ஓடி வாங்கோ
தேசிய பறவை இனி காக்காதாங்கோ
மந்திரி எல்லாம் மன்னர்தாங்கோ

மக்கள் வரிப்பணத்தில் குளிப்பாட்டுங்கோ
மாசமொரு பட்டம் கொடுக்கோனுங்கோ
அடுத்தவன் சொவரில போஸ்டருங்கோ
ஆளுயர மாலை போடனுங்கோ
கம்யூட்டர் பாண்டிலும் கட்சி உண்டுங்கோ
உழுதவன் எலி தின்னாலும் மாறாதுங்கோ

மானம் வெட்கம் பார்க்க முடியாதுங்கோ
மையநீரோட்டம் இப்ப அதுதானுங்கோ
கொள்கை பேச்செல்லாம் மறந்திடுங்கோ
தேவை பட்டா துடைக்க எடுத்துக்குங்கோ

கட்சிக்கு கொடிதான் பறக்கோனுங்கோ
கோவணம் நீங்க கழட்டிதாங்கோ
காரியம் ஆக கால் பிடிக்கோனுங்கோ
கலாச்சாரம் அதுதானு முரசடிங்கோனுங்கோ

அடிப்படை தேவை செலைதானுங்கோ
அடுத்ததெல்லாம் மறந்திடுங்கோ
கலர் டிவி பார்த்து குஷியாகுங்கோ
கையூட்டு இனி தப்பிலிங்கோ
புத்தகமா கொடுக்க உத்தரவுங்கோ

சாதி பேரை சொல்லி கட்சி உண்டுங்கோ
காரணம் கேட்டா மாவோ உண்டுங்கோ
சமூகநீதி இப்ப சக்கை ஜோக்குங்கோ
ஊழல் இங்கே நடைமுறைங்கோ
புத்திசாலியா நீங்க பொழைக்க பாருங்கோ

விலங்குகளும் நிலநடுக்கமும்


Springy Snake
Originally uploaded by Yogi.
அண்மையில் சீன தேசத்தில் நில நடுக்கத்தை கவனிக்க பாம்பு பண்ணைகளில் வெப் கேம் பொருத்தியுள்ளனர். இந்த பாம்பு பண்ணைகளில் உணவிற்காக பாம்புகளை வளர்ந்து வருகின்றனர். நானிங் எனும் நகரத்தில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இந்த நகரம் நிலநடுக்கத்தை உண்டாக்க கூடிய நில தகடுகளில் அமைந்துள்ளது.

இந்நகரத்தின் நில நடுக்க கண்காணிப்பு துறை அதிகாரிகள் பாம்புகள் நிலநடுக்க உருவாக்கத்தை 120 மைல்களுக்கு அப்பாலிருந்தே கவனிக்க வல்லன என்று கூறியுள்ளார்கள். நிலநடுக்கம் கடுங்குளிர் காலங்களில் ஏற்படும் போது கூட பாம்புகள் தங்கள் புற்றினை விட்டு வெளியேறி பதட்டமான நிலைக்கு மாறி விடுகின்றன. கடுமையான நில நடுக்கம் உருவாகுகையில் தங்கள் தலையினை சுவர்களில் மோதவும் செய்கின்றன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நகரத்தில் பாம்பு பண்ணை வைத்திருக்கும் குடும்பங்கள் நிறைய உள்ளனவாம். அக்குடும்பங்கள் இந்த திட்டங்களுக்கு பெரும் ஆதரவை தெரிவித்துள்ளன.

Paso Robles Earthquake
Originally uploaded by Hey Paul.

வரலாற்றில் விலங்குகளின் சுபாவம் நிலநடுக்கம் ஏற்பட்டும் காலத்தில் மாறுவது பற்றிய குறிப்புகள் உண்டு. கிருத்து பிறப்பதற்கு 373 ஆண்டுகளுக்கு ஹெலிஸ் எனும் கிரேக்க நகரத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கதின் முன் எலி,பாம்பு போன்றவை நகரத்தை விட்டு நீங்கின போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

1975ம் ஆண்டு சீன அதிகாரிகள் விலங்களுகளின் பதட்டமான குணங்களை கண்டு ஹாய்செங் நகரத்தின் ஒரு மில்லியன் மக்களை நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். சிலநாட்களுக்கு பின் அந்நகரத்தை 7.3 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் தாக்கியது. அரசின் முன்னச்சரிக்கையால் பெருமளவு உயிர் சேதமும், பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டது.

அறிவியல் பூர்வமாய் விலங்கினங்களின் மாறுபடும் குணங்களையும், பதற்றத்தையும் நிலநடுக்கத்தோடு இதுவரை இணைக்க இயலவில்லை. ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

Thursday, December 28, 2006

அரசு விழாவில் பரிசு பொருள்கள்

அரசு விழாக்களில் பொன்னாடை போர்த்துவதற்கு பதிலாய் புத்தகம் பரிசாக வழங்குமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.

இந்த நேரத்தில் மனதில் கேள்விகள் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை

மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு விழாக்களில் ஏன் பொன்னாடையோ, புத்தகமோ கொடுக்க வேண்டும்? மக்கள் பிரதிநிதி மக்களிடமிருந்து ஏன் இதை எதிர்பார்க்கிறார்?

இது போல் பரிசு பொருள்கள் வழங்க ஆரம்பித்தல் சிறிது சிறிதாய் காக்காய் பிடித்தல், சோப்பு போடுதல் போன்றவையாய் திரிந்து பரிசு வழங்குதலில் போட்டி மனப்பான்மையையும் உருவாக்கி தவறுகள் நடக்க அடி போடுகிறதல்லவா? இந்த தவறுகளை அரசு சட்டரீதியாக அங்கிகரிக்கிறதா?

அரசு அலுவலகம் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொன்னாடை போர்த்தவோ, புத்தகம் வாங்கவோ நிதி எங்கிருந்து கொண்டு வருகின்றார்கள்?

இதற்கு வரிப்பணம் பயன்படுத்தபட்டால் அது வீண் செலவு அல்லவா?

வரிப்பணம் இன்றி பிற வழி பணம் வசூலிக்கப்பட்டால் அது அரசு ஊழியர் மக்கள் பிரதிநிதிக்கு பணம் கொடுப்பது போல் ஆகுமே? அது தவறில்லையா?

சிலைகளால் வரும் போராட்டமோ, சலசலப்போ இது போன்ற விஷயங்களுக்கு வருவதில்லையே ஏன்?

மக்கள் பிரதிநிதி எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் நேர்மையையாய் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறா?

வாழ்க மக்களாட்சி என்று சொல்லி கேள்விகளை தூக்கி புதைத்து ்விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டியதுதான் போலிருக்கிறது.

Wednesday, December 27, 2006

ஈரம்

பாசி படர்ந்து ஈரம் கட்டும்
மொட்டை மாடியின் வாசனையுடன்
அவளும் நானும் ஈரமுமிருந்த
மழை ஒய்ந்த ஒருநாளில்
முன்னை போல் நீயில்லையென்றாள்
மாடியின் சிதறிய எச்சங்களாய்
மனதில் நினைவிருக்க
மாறி போனது நம்முறவென்றாள்

எச்சங்கள் மேல் தங்கும்
ஈரந்தான் உள்ளிறங்கும்
ஈரமடி நம் உறவு
என்றென்றும் உள் உண்டு

காய்ந்தாலும் காய்வதென்றும் மேல்பரப்பில்
இதமான குளிரோடு
உன்னன்பின் ஸ்பரிசங்கள்
என்னுள்ளே என்றுமுண்டு

Tuesday, December 26, 2006

பலி


Coastal erosion
Originally uploaded by fredericknoronha.
பலி கொடுக்கின்றோம்
வலியோ உடன் தெரியாது
எனக்கும் பிறருக்குமான
எல்லோருக்கு பொதுவானதுமான
பலி தினமும் உண்டு

வாகனத்தின் புகையிலும்
வாரி இறைக்கப்படும் ப்ளாஸ்டிக்கிலும்
நதி நீரில் கலக்கும்
நாசம் கொண்ட கழிவாலும்
மறக்காமலுண்டு சுற்றுச்சூழலின் பலி

பனிக்கரடியின் தூக்கம் கலைத்திட்டோம்
புலிக்கூட்டத்தின் இருப்பை அழித்திட்டோம்
இடம் மாறும் பறவையை நிறுத்திட்டோம்
சூழலும் சுற்றமும் தாங்கிடுமோ பலி
கடல் கொண்டு காணாமல் போன
குமரிக்கண்ட கதை ஆவோமா நாம்

புடைத்த வேர்களுள்ள
பருத்த மரத்தில் விஷமூட்டி
கனி காண நிற்கின்றோம்

தனைகாத்தல் மரத்தின் இயல்பு
தனைகாத்தல் மரத்தின் அவசியம்
அரவங்களாய் வேர் மாற்றலாம்
அதன் முறுக்கின பிடியில்
பலி கொடுத்தவன் அன்று பலியாடு

Sunday, December 24, 2006

மேய்ச்சல் 6

மக்களாட்சி அருமையான கருத்தாக்கம். இந்த தத்துவத்தில் கூட்டாய் வாழும் சமுதாயம் தனது தேவைகள், பாதுகாப்பு,நிதி அளவு போன்றவற்றை தானே விவாதித்து, வரையறுத்து, செயல்படுத்தும் திறனை கொண்டிருக்கிறது.

இவ்வாறான உயரிய கருத்தாக்கத்தை கிருத்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய பெருமை கிரேக்க நாகரித்தவருக்கே உரியது. அக்காலத்தில் கிரேக்க தேசம் ஒற்றை நாடாய் அமைந்திருக்கவில்லை, பிளேட்டாவின் வார்த்தைகளில் சொன்னால் குட்டையை சுற்றியிருக்கும் சிறு தவளைகள் போல்தான் இருந்தது. மத்திய தரைகடலையையும், கருங்கடலையையும் சுற்றி சுமார் 1500 தனி தனி அரசாய் அமைந்திருந்தன.

எல்லா அரசுகளும் மக்களாட்சியாய் இல்லாமல் சில அரசுகள் இப்போதுள்ள இந்தியாவின் சில மாகாணங்கள் போல் வாரிசுரிமை சார்ந்த அரசுகளாகவும், சில அரசுகள் வசதியான குடும்பங்களின் கையிலும் இருந்தது. இவற்றின் மத்தியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய மக்களாட்சிகளில் ஒன்றாய் ஏதேன்ஸ் மாநகரம் விளங்கியது. அங்கிருந்த மக்களாட்சியின் தீர்மானங்களில் முழு நகரமும் பங்கேடுத்தது. மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்காமல் தீர்மானங்களுக்கான வாக்களிப்பு வர்க்க பேதமின்றி மக்களிடமிருந்தே வந்த பூரண மக்களாட்சி நிலவியது. கிரேக்கத்தில் அக்காலத்தை ஒட்டி அடிமைகளும், பெண்களும் ஒட்டுரிமை இல்லாதவர்களாய் இருந்தனர். மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு நிர்வாக காரணங்களுக்காக பின்னர் வந்து ஒட்டிக் கொண்டது. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் மனசாட்சியை பட்டம் விட கற்றுக் கொள்கையில் பிரதிநிதிக்கு மன்னனான நினைப்பும், மக்களுக்கு பிச்சை பாத்திரமும் வழங்கப்பட்டது.

மகாராஷ்ட்ராவின் விதர்பாவில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஆளுமை திறனை(?) பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயின் பிரச்சனையை தீர்க்க இயல்வதை பார்த்தால் மெய் சிலிர்த்து போகிறது. செத்து போனவன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுகிறார்கள். உயிரோடு இருப்பனுக்கு கிடைப்பது அனுதாபமும், மேடை பேச்சுகளுந்தான். இப்படி செய்தால் தற்கொலை குறையுமென்று நம்புகிறார்களா என்ன?




எல்லா பழியையும் தூக்கி மரபியல் மாற்றம் செய்யப்பட்ட பிடி காட்டன்(Bt cotton) மேல் போட்டு விட்டால் பாசன வசதி குறைவும், மின்சார தட்டுப்பாடும், பருத்தி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக கோளாறும், நிதி உதவி அளித்தலில் நடக்கும் குறைபாடுகளும் யாருக்கு தெரிய போகிறது? ஒற்றை பரிணாம பார்வையில் எப்படி பிரச்னை தீரும்? சூ மந்திரகாளி வித்தை காட்டி மக்கள் கவனத்தை திருப்புவதில் மக்கள் பிரதிநிதிகளின் திறமையை பாராட்டியே தீர வேண்டும்.

நமது இந்திய மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பு செய்யும் நல்ல விஷயம் ஒன்றும் உண்டு. கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் மூலங்களில் உலக தட்ப வெப்ப உயர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து அவற்றை களையும் பனியில் சீன தேசத்துடன் நம் தேசமும் கரம் கோர்த்து இறங்கி உள்ளது. உலக வெப்ப உயர்வின் காரணமாய் புலிகளின் சரணலாயமாய் இருந்த சுந்தர்பன் காடுகளின் இரு தீவுகளை ஏற்கனவே இழந்து விட்டோம். கடல் மட்டம் புவியின் வெப்ப உயர்வால் அதிகரித்து நிலப்பரப்பை விழுங்கி வருகின்றது.

இக்தகைய சூழலில் சுத்திகரிக்கபட கூடிய மாற்று எரிபொருள் அவசியம். அமெரிக்காவின் சான்டியகோ பல்கலைகழகத்தை சேர்ந்த கென்னத் நீல்சன் தலைமையிலான குழு பாக்டீரியாவின் உதவியானல் மின் உற்பத்தி செய்யும் துறையில் ஆய்வு மேற் கொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர். எம்-ஆர்1 எனும் இந்த பாக்டீரியா பால், தேன் மற்றும் மீன் முதற் கொண்டு 75 வகை கார்பன் பொருள்களை மின் உற்பத்திக்கு மூலப் பொருளாக பயன்படுத்தும் திறனுள்ளது. இந்த பாக்டீரியா உலோகங்களின் அரிப்பையும் தடுக்க வல்லது.

கென்னத் நீல்சன் இந்த பாக்டீரியாவின் மின் உற்பத்திக்கு காரணமான ஜீன்களை கண்டறிந்து அதை மேம்படுத்தி புதிய வகை எம்-ஆர் 1 பாக்டீரியாவை உருவாக்கியுள்ளார். இந்த ஆய்வின் வெற்றி மாற்று எரிபொருள் துறையில் ஒரு மைல் கல்லாகும்.


Saturday, December 23, 2006

இளமையின் ரகசியம்

என்றென்றும் இளைமையாக இருக்க சூரணம் பல உண்டு. வேலை செய்கிறதோ , செய்யவில்லையோ வாங்க நிறைய நபர்கள் உண்டு. என்றென்றும் பதினாறாய் இருக்க எல்லோருக்கும் ஆசைதான். மார்க்கண்டேயன் கதையில் அது சூரணமின்றி சாத்தியமானது. அறிவியல் உலகமும் இந்த சூரணம் உருவாக்க ஆர்வமாய் முயன்று வருகின்றது. கண்டுபிடிப்பவன் ஜாக்பாட் லாட்டரி அடித்தவன் போல் ஆகி வடுவான்.

நெதர்லாந்தின் மருத்துமனை ஒன்றில் 1990ல் ஆப்கானை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் ஒரு விதமான மரபியல் குறைபாட்டின் காரணமாய் அவனுது வயதை கடந்த வளர்ச்சியை அடைந்து ஹைப்பர் டென்ஷன், காது மற்றும் பார்வை குறைபாடு , பலகீனம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு தவறி விட்டான்.இந்த வகை குறைப்பாடு எக்ஸ்பிஎப் ப்ரோகிராய்ட் சின்ட்ரோம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

டிஎன்ஏ சேதங்கள் உயிரினங்களில் உடலில் தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு முறை டிஎன்ஏ சேதம் நிகழ்கையிலும் எக்ஸ்பிஎப்(XPF) என்சைம் இஆர்சிசி1(ERCC1) புரதத்தோடு இணைந்து செல்களில் டிஎன்ஏ பாதிப்பை சரி செய்கின்றது. வயதாகும் போது இந்த சரி செய்து கொள்ளும் தன்மை குறைய ஆரம்பிக்கிறது. மருத்துவ உலகம் இப்போது இந்த என்சைம் உற்பத்தி குறைவை கட்டுப்படுத்துவதன் மூலம் வயதாவதை ஒத்தி போடலாமா என்று பார்த்து வருகின்றது.

நெதர்லாந்தில் மருத்துவர்கள் ஆப்கன் சிறுவனிடத்து எக்ஸ்பிஎப் என்சைம் உருவாக்கும் ஜீன்களில் குறைபாடுகளை கண்டறிந்தனர்.மருத்துவ உலகம் தொடர்ந்து இந்த துறையில் முயன்று வருகின்றது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தில் எலியிடத்து இதை பரிசோதனை முறையில் சோதித்து வெற்றியும் கண்டுள்ளார்கள்.

தமிழ் கூறும் நல்லுலகை பவுடர் கோட்டிங் வைத்துக் கொண்டே வயசான கதாநாயகர்கள் பாடாய் படுத்தி வருகிறார்கள். இந்த சோதனை மருத்துவ பரிசோதனைகள் நடைமுறைக்கு வந்தால் கொடுமைதான் போங்க.

Wednesday, December 20, 2006

துணையின்றி கருவுறும் ப்ளோரா


Komodo Dragon
Originally uploaded by Stephen Childs.

லண்டனை சேர்ந்த செஸ்டர் விலங்கியல் பூங்காவில் உள்ள ஊர்வன வகையை சேர்ந்த ப்ளோரா என்ற கமோடா ட்ராகன் துணையின்றி கருவுற்று இருக்கிறது. கமோடா ட்ராகன்கள் இந்தோனேஷியாவின் காடுகளில் வாழும் ப்ராணிகள் ஆகும். இது போன்ற துணையற்ற கருவறுதலுக்கு பார்த்தினோஜெனிஸிஸ் என்று பெயர். இந்த வகை கருவறுதல் மிக அபூர்வமான ஒன்றாகும். சென்ற ஏப்ரலில் இதே விலங்கியல் பூங்காவில் உள்ள சூங்காய் எனும் கமொடோ ட்ராகனும் துணையின்றி கருவுற்றது.


பார்த்தினோஜெனிஸிஸ் வகை கருவுறல் முதுகெலும்பில்லாத சிறிய உயிரினங்களில் சாதாரணமானதொரு நிகழ்வு. உதாரணத்திற்கு சூப்ளாங்கெட்டன் எனும் கடல்வாழ் உயிரிலும், ஆப்பிட் எனும் பூச்சி வகையிலும் இவ்வகை கருவுறலை காணலாம். ஆனால் முதுகெழும்புள்ள உயிரிகளில் இந்நிகழ்வு அரிதான ஒன்றாகும்.


இவ்வகை கருவுறலில் தோன்றும் உயிர்கள் ஆணிணமாகதான் இருக்கும் மற்றும் அவற்றின் நோயெதிர்ப்பு திறனும், சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் திறனும் குறைவாகவே இருக்கும்.



பாலூட்டிகளில் பெண்களிடத்து ஒரே வகை குரோமோசோம்களே உண்டு(XX குரோமோசோம்கள்). மாறாக கோமோடா ட்ராகன் போன்ற ஊர்வனவற்றிலும், சில பறவைகளிலும் பாலூட்டிகளை போல் அல்லாமல் பெண்களிடத்து இரு வேறு வகை குரோமோசோம்கள் உண்டு(ZW). இவ்வகை உயிரினங்களில் ஆண்களிடத்து ஒரே வகை குரோமோசோம்கள்தான் உண்டு. பெண்களிடத்து சினைமுட்டை உருவாக்கத்தில் போது செல் நான்காக பிரிகிறது, நான்கில் ஒன்று சினை முட்டையாகவும், மற்ற மற்ற மூன்றும் போலார் பாடியாகவும் மாறுகின்றது. இதில் பார்த்தினோஜெனிஸிஸ் வகை கருவாக்கத்தில் இந்த போலார் பாடிகளில் ஒன்று விந்தனு போன்று செயலாற்றி சினைமுட்டையோடு இணைகிறது. இரண்டு ZZ குரோமாசோம்கள் இணைகையில் ஆண் குஞ்சு பிறக்கிறது. இரண்டு WW குரோமாசோம்கள் இணைகையில் கருவுறல் நேர்வதில்லை.



ஜப்பானில் அறிவியலார் எலிகளில் செயற்கை முறை பார்த்தினோஜெனிஸிஸ் சாத்தியம் என்பதை நிறுபித்துள்ளனர். ஏப்ரல் 2004ல் ஜப்பானியர்கள் பரிசோதனையில் வெற்றி ்பெற்றனர். இது வரை இயற்கையான பார்த்தினோஜெனிஸிஸ் வகை கருவுறல் பாலூட்டிகளில் நிகழ்ந்ததாக பதியப்படவில்லை


Tuesday, December 19, 2006

ஜோ பார்பேரா

கார்ட்டூன் பார்க்கும் ஒவ்வொருவரும் பிரியமாய் ரசிக்கும் பாத்திரங்கள் டாம் மற்றும் ஜெர்ரி. இந்த பூனை, எலி விளையாட்டு பல காலமாய் எல்லோரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் மகிழ்வித்திருக்கிறது.இந்த பாத்திரங்களை நமக்கு தந்த ஜோ பார்பேரா நேற்று காலமானார். அவருக்கு வயது 95. இவரும் இவரது சகா பில் ஹன்னாவும் காலத்தால் அழியாத கார்ட்டூன் பாத்திரங்களை உருவாக்கியுள்ளார்கள். ஸ்கூபி டூ, யோகி கரடி மற்றும் பிளின்ட்ஸ்டோன் கார்ட்டூன்களும் இவர்களது கற்பனையே.

Monday, December 18, 2006

மேய்ச்சல் 5

காட் மஸ்ட் பி கிரேசி என்ற திரைப்படம் சின்ன வயதில் பார்த்தது. ஆப்ரிக்க கண்டத்தின் புஷ்மென் எனப்படும் பழங்குடியினரை பற்றியது. நகைச்சுவையாய் இயல்பாய் பயணிக்கும் கதை. இரண்டு பாகங்களாய் வந்தது. அண்மையில் படித்த ஒரு செய்தி இந்த திரைப்படத்தை நினைவு படுத்தியது.போட்ஸ்வானா நாட்டின் உயர் நீதி மன்றம் தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 1000 புஷ்மென் பழங்குடியனருக்கு அவர்கள் நிலத்தை திரும்ப வழங்கியிருக்கிறது. பழங்குடியினர் அந்நிலத்தில் உள்ள தாதுப் பொருள்களின் மேலுள்ள ஆசையால் வெளியேற்றப்பட்டார்கள். இப்போது நீதிமன்றத்தின் கட்டளையை ஏற்றுக் கொண்ட போட்ஸ்வானா அரசு அந்நிலத்திற்கு திரும்பும் பழங்குடியினருக்கு மிக கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. அவர்களது தண்ணீரிலும்,அவர்கள் பயன்படுத்தும் குதிரை, கழுதைகளளிலும் கை வைத்துள்ளது. இருபதாயிரம் ஆண்டுகளாக காலகாரியில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முறையான நீதி கிடைக்குமாவென தெரியவில்லை. சனநாயகம் கேலிக் கூத்தாய் சனங்களின் உரிமையில் விளையாடுவதாய் மாறி வருகின்றது.

காலகாரி பாலைவனம்

நம்மூரிலும் சனநாயகத்திற்காக அரசியல் இல்லாமல் அரசியலுக்காக சனநாயகம் மாற இங்கு வேதனையான சூழ்நிலை நிலவுகிறது. எல்லா விஷயங்களும் அரசியல் துகிலுரிக்கப்படுகின்றன. மக்களை மேல் நோக்கி கூட்டி செல்வதற்கு பதிலாய் சனநாயக காவலர்களாய் நியமிக்கப்பட்டவர்கள் கண் கட்டு வித்தை நடத்துகிறார்கள். காவிரி பிரச்சனையாக இருக்கட்டும், பெரியாறு அணை பிரச்சனையாகட்டும், நாட்டை பாதுக்காப்பவனின் மரணமாய் இருக்கட்டும், எல்லாமே எத்தனை ஒட்டுக்கள் கிடைக்கும், எவ்வளவு பரபரப்பை கிளப்பலாம் என்ற ரீதியிலியே கையாளப்படுகின்றது. சனநாயகம் வளர்சிதை மாற்றங்களில் ஆரோக்கியமாய் வளராமல் இது போன்ற திசைகளில் நகரும் போது சற்று மிரட்சியாய் உள்ளது.

பொது சொத்து எனபதை பற்றிய அறிவும், அதை பாதுகாப்பதன் ஆர்வமும் சமூகத்தில் குறைவாய் இருக்கிறது. எதுவாயிருந்தாலும் எடுத்து உடைப்பதில்தான் புரட்சி இருப்பதாய் நினைக்கும் ஆட்டு மந்தை மனநிலையே சமூகத்தில் உள்ளது.ராம்கி என்னும் ஜென்ராம் பொது சொத்து பற்றிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

நீலச்சட்டை நாயகர்கள் வெள்ளைச்சட்டை போட்டவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கங்குலியின் பங்கு இந்த வெற்றியில் குறிப்பிடதக்கது. எல்லாரும் வந்து வந்து போன முதல் இன்னிங்ஸில் உருப்படியாய் ஏதேனும் செய்தவர் இவர் ஓருவரே. இந்த வெற்றியில் அனில் கும்ளேவின் ஆறு விக்கெட்களை மறக்க கூடாது. போலாக்கை இரண்டாவது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தாவிட்டால் கணக்கு மாறியிருக்க வாய்ப்புண்டு. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் என்பது மிக பெரிய நகைச்சுவை துணுக்காக ஆகி கொண்டிருக்கிறது. வாஸிம் ஜாப்பர் பெவிலியனிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கலாம் போலிருக்கிறது. வீணாய் களத்துக்கு வந்து அவர் ஒன்றும் பங்களிப்பதில்லை. சேவாகிற்கு வாழ்வுதான், மற்றப்படி சொல்ல ஒன்றுமில்லை.

காசநோயை பற்றி இரண்டு செய்திகள். ஒன்று நல்லது, மற்றொன்று அதற்கு மாறானது. புழக்கத்தில் உள்ள மாத்திரைகளின் வீரியத்தை தகர்க்கூடிய வலுவுள்ளதாய் காசநோய் கிருமிகள் மாறி உள்ளன. இந்தியா, ரஷ்யா மற்று சீன தேசத்தில் உள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை உலகின் காச நோயாளிகளில் பாதிக்கு மேல். ஒவ்வொரு வருடமும் காசநோய் 9 மில்லியன் மக்களை பாதிக்கின்றது, அதில் இரண்டு மில்லியன் மக்களை காவுக் கொள்கின்றது.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின்-மேடிசன் கல்லுரியின் மருத்துவ பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் காசநோயை உருவாக்கும் பாக்டிரியாவிற்கும், உடலின் நோய் எதிர்க்கும் வெள்ளை செல்களும் இடையேயான போராட்டத்தை ஆராய்ந்து அதன் நுட்பங்களை பதிபித்துள்ளனர். வெள்ளை செல்கள் உருவாக்கும் தாமிர சத்து தாக்குதலை பாக்டிரியா ஒரு வகை புரத சத்தை கொண்டு தடுக்கின்றது. பாக்டிரியாவின் புரத சத்து உருவாக்கத்தை மட்டுறுதுவதன் மூலம் பாக்டிரியாவினை வலுவிலக்க செய்யலாம் என்று கருதுகிறார்கள். இந்த ஆய்வு சராசரி மனிதனுக்கும் பயனுறும் வகையில் நடைமுறை படுத்தப்படும் போது பலரை காவு வாங்கும் காசநோய் ஒழிய வாய்ப்புண்டு.

இயற்கைமுறை விவசாயிகள் சங்கத்தை பற்றி ஹிண்டுவில் செய்தி வந்திருந்தது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றாய் சேர்ந்து நடத்தும் இந்த அமைப்பு விவசாய பொருள்களை நேரடியாக சந்தைக்கு கொண்டு வருகின்றது. இடை மனிதர் எதுவும் கிடையாதாம். உரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்களுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் தகவல்களுக்கு

காலசுவட்டில் கவிதைகள் பகுதியில் கவிதா என்பவரின் கவிதையை படித்தேன். அழகான வார்த்தைகளால் கோர்கப்பட்டு இருந்தது. சேர்ந்து வாழ்க்கையை பயணிக்கும் முன் பயணத்தை பற்றிய எண்ணங்கள் பல. நடைமுறை சாத்தியமாகுமா , ஆகாதா என ஆராயாத மனநிலையில் உருவாக்கப்படும் பிம்பங்கள் அவை. பயணம் நகர்கையில் பிம்பம் நொறுங்கிறது.அப்போது பிம்பங்களை நகர்த்தி உண்மை ஏற்றுக கொள்ளுதல் சிரமமாய் இருக்கையில், பயணத்தை வெறுத்தல் சுலபமான தீர்வாக தோன்றலாம்.

அவன் எழுதுகோல் காதலன்
அவள் பிரபஞ்சத்தின் வாசகி
காலம் அவர்களை நேர்க்கோட்டில் நிறுத்தியது.
அங்கு கனவு போன்ற ஒரு சிறுகதை
உருவாவதாக அவர்கள் நினைத்தார்கள்
அவன் வேண்டும்போது அவள்
தன்னை ஒரு முத்தமாக மாற்றிக்கொண்டாள்.
அவள் விரும்பும்போது அவன்
பெயரற்ற இசையாக வெளிகளில் கரைந்தான்
சிறுகதைக்குள் இருக்கும் அவன்தான்
அந்தச் சிறுகதையை எழுதுவதாக
அவன் நம்பினான்.
கனவிலுள்ள அவள்தான் நிஜமென்று
அவளும் நம்பினாள்.
அகாலம் சிரித்தது.
அவர்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்
தான் வசித்த கனவு கலைந்த கோபத்தில்
அவள் பைத்தியக்காரியாகவும்
களவுபோன எழுதுகோல் தேடி
அவன் நாடோ டியாகவும்
நமக்கு மிகவும் பழகிய வீதிகளிலேயே
திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

புகைபடத்திற்க்கு நன்றி quinnums

Saturday, December 16, 2006

வலி

ஐயோ, அப்பா, அம்மா, கடவுளே என்ற நான்கு சப்தங்களும் வலியோடு பிண்ணி பினைந்திருக்கின்றன. என்ன வலி வந்தாலும் மூளைக்கு செல்லும் வேதியல் சிக்னல்கள் இந்த வார்த்தைகளை வடிவமாக்குகின்றன. ஒரு சில நபர்களுக்கு இந்த பிரச்சனையே கிடையாது. அவர்களுக்கு வலி உணர்வே இல்லை. ஆகாயத்திலிருந்து யாரும் வந்து இதை வரமாய் தந்து போகவில்லை. ஒரு வகை மரபியல் மாற்றங்களால்தான் வலியின்மையை உருவாக்குகிறது

பாகிஸ்தானின் வடபகுதியில் இது போன்ற மரபியல் மாற்றங்கள் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். விஞ்ஞானிகள் இந்த குறிப்பிட்ட மரபியல் மாற்றத்தை உருவாக்கும் ஜீனை அடையாளம் கண்டுள்ளனர். வலி கொல்லும் மாத்திரை பற்றிய அறிவியல் துறையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்த மரபியல் மாற்றத்தை மரபியல் குறைபாடாக அறிவியலார் கூறுகிறார்கள், ஏனேனில் இந்த மரபியல் மாற்றம் ஏற்படும் போது அது பெரும்பாலோரின் மூளையின் வளர்ச்சியை பாதிக்கின்றது. மிக குறைவான நபர்களே இந்த மரபியல் மாற்றத்தோடு இயல்பான மூளை வளர்ச்சியோடு உள்ளனர். இந்த மரபியல் மாற்றம் உள்ளவர்களுக்கு தட்ப வெப்பங்களை அறியும் உணர்வும், அழுத்தங்களை உணரும் உணர்வும் மற்றும் கூர்மையான பொருள்களை மழுங்கிய பொருள்களோடு வேறுபடுத்தும் உணர்வும் இருக்கின்றது. ஆனால் வலி இருப்பதில்லை.

வலி வரும்போது நரம்பின் செல்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜீன் வலிக்கான மின்சார சிக்னல்களை எடுத்துச் செல்லும் புரதத்தை உருவாக்குகிறது. இந்த மரபியல் மாற்றங்களுக்கு ஆளானவர்கள் உடம்பில் நரம்பு செல்கள் வலியின் மின்சார சிக்னல்களை கடத்தும் புரதத்தை உருவாக்குவதில்லை. இந்த மரபியல் குறைபாடு CIPA (Congenital insensitivity to pain with anhidrosis) என்று அழைக்கப்படுகின்றது.

வலிக்கு காரணமான ஜீனை போல் சொரணைக்கும், அடிமை தனத்திற்கும் ஏதாவது ஜீன்தான் காரணமாய் இருக்கும். அதை கண்டறிந்து சொரணையை அதிகரித்து, அடிமை தனத்தை குறைக்கும் மரபியல் மருந்துகள் வருங்கால் சமூக விழிப்புணர்வு நாட்டில் வர வாயப்புண்டு.

Tuesday, December 12, 2006

மேய்ச்சல் 4

புது வருடம் வரப் போகிறது. கலிபோர்னியாவில் குடியிருந்த போது புது வருட இரவை கொண்டாட சான்பிரான்சிஸ்கோ யுனியன் ஸ்கோயர் போவது வழக்கம். ஆர்ப்பாட்டமாய், ஆரவாரமாய் போகும். வர்ஜினியா வந்த பின் யார் யாரோ ஆரவாரமாய் கொண்டாடுவதை தொலைக்காட்சியில் பார்த்து முடித்துக் கொள்வதே திருப்தியாய் உள்ளது.

விதர்ப்பாவில் கிராமத்தை விற்பதற்கு விவசாயிகள் முன் வந்துள்ளனர். டோரிலி கிராமத்தை சேர்ந்த அவர்கள் டாடாவின் கார் தொழிற்சாலைக்காக தங்கள் கிராம நிலங்களை விற்க முன் வந்துள்ளனர். இதற்காக மத்திய அமைச்சர் சரத்பவாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருத்தி விவசாயிகளான அவர்களுக்கு நல்ல மழை இருந்தும் இந்த வருடம் விளைச்சல் போதவில்லை. கடன் சுமை தாங்காமல் கூலி வேலைக்கு போய் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயம் வாழ்க்கை முறையாகவும் இல்லாமல், தொழிலாகவும் இல்லாமல் இடை நிலையில் நின்று கொண்டிருக்கிறது.

விதர்ப்பாவை பொறுத்தவரை எதனால் இந்த வருடம் விளைச்சல் சரியில்லை? போன வருடமும் இதே பிரச்சனையா? கடன் யாரிடம் வாங்கியிருக்கிறார்கள்? கடன் தொகை எதில் செலவு செய்யப்பட்டுள்ளது? யார் அவர்களை இவ்வருடம் பருத்தி பயிரிட ஆலோசனை கொடுத்தது? என்ற பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன. அதை பற்றி சிஎன்என்-ஐபின் செய்திகளில் விவரம் இல்லை.

தஞ்சை பக்கம் சொந்தக்காரர்கள் விவசாயத்தை பார்த்த போது மழை அதிகம் பெய்தால் பயிர் மழையில் மூழ்கிவிடும். குறைவாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் பிரச்சனை. மழை ஒரு அளவாக பெய்தால் மட்டுமே பிரச்சனை இல்லை. என் உறவினர் இது தாள முடியாமல் இந்த முறை சவுக்கு போட்டு விட்டார். இன்னோரு பிரச்சனை என்னவென்றால் குறுகும் நில அளவு. உதாரணத்திற்கு தாத்தாவிடம் 10 ஏக்கர் இருந்தது. அடுத்த தலைமுறையில் அது இரு மகனிடம் 5 ஏக்கராய் பிரிந்தது. அதற்கு அடுத்த தலைமுறையில் இரண்டரை ஏக்கராய் பிரிந்தது. இவ்வாறு நிலம் குறுகி கொண்டே போகிறது.குறுகிய நிலத்தில் பயிரிட லாபம் குறையும் என்றும் உறவினர் கூறினார்.

மிதமான மழை வருவது இனி குறையும் என வானிலை ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். மழை பொழிவு இனி குறைவாக இல்லையென்றால் மிக அதிகமானதொரு நிலையிலியே இருக்கும். பூமியின் வெப்ப அதிகரிப்பே இதற்கு காரணம். இதெல்லாம் பற்றி கவலைப்பட என்ன உள்ளது? ஏதோ சிலை வைத்தோமா மாலை போட்டோமா என போய் கொண்டே இருப்பதுதான் கலாச்சாரத்தின் அடையாளமாய் உள்ளது.

இந்த வாரம் என்பிஆர் வானாலியில் சக்கரை வியாதிக்கான முக்கிய மருந்து இந்த வருடத்தில் மூன்றாம் நிலை சோதனைக்கு வந்ததுள்ளதை பற்றி அறிவித்தார்கள். 2008 இறுதியில் இந்த மருந்து நடைமுறை படுத்தப்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. ஊசி வடிவில் இன்சுலினை செலுத்தாமல் இன்ஹேலர் வடிவில் இன்சுலினை கொண்டு வந்துள்ளனர். இந்த மருந்தை மான்கைன்ட் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. பொதுவாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வோரின் எடை அதிகரிக்கும். ஆனால் மான்கைன்ட் நிறுவனத்தாரின் மருந்தினால் அப்பிரச்சனை இல்லை என்று தெரியவருகின்றது.

மேலும் தகவல்களுக்கு

மரம் நடுவதால் பூமியின் வெப்ப அதிகரிப்பை மட்டுறுத்தலாம் என்பதேல்லாம் நடைமுறையாகாது என அமெரிக்கன் ஜியோபிசிக்கல் சொசைட்டியின் வருடாந்திர கூட்டத்தில் கோவிந்தசாமி பாலாவின் ஆய்வு பதிப்பிக்கபட உள்ளது. பாலாவின் கூற்றுப்படி அட்ச ரேகை மிதமானது முதல் அதிகமாகும் பகுதிகளில் நடப்படும் மரங்களும் பூமியின் வெப்பநிலையை அதிகப்படுத்தும். பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள மழைக்காடுகளை பாதுக்காப்பதன் மூலமும் , அக்காடுகளை விரிவு படுத்தலுமே பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும். அவரது ஆய்வுகளை காடொழித்திலால் கடல், நிலம்,வெளி எனப்படும் மூன்று இடங்களில ஏற்படும் பாதிப்பை முப்பரிமாண சூழல்-கார்பன் மாடல்களை கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் நிறுப்பித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு

Thursday, December 7, 2006

நியாபகம் எங்கே உள்ளது

ரொம்ப தர்ம சங்கடமான கேள்வில ஒன்று என்ன என்னை உங்களுக்கு நியாபகம் இருக்காங்கறதுதான். முதல்லலாம் யாரும் இப்படி கேட்டா ஙேனு முழிக்க வேண்டியதா இருந்தது. இப்பல்லாம் இல்லைனு நேரா சொல்லிடறது. வீணா சமாளித்து ஒன்றும் ஆகவில்லை. இப்படி இருக்கறது அலுவலக மற்றும் நட்பு வட்டாரத்தில சரியா இருக்குது. ஆனால் ஊர்ல கல்யாணம் காதுகுத்துனு போகும் போது யாரும் கேட்டா ஞாபகம் இல்லைனு சொல்ல யோசனையா இருக்கு. வெளியூர் போனப்புறம் பசங்க யாரையும் மதிக்கறதில்லைனு முத்திரை குத்திடுவாங்க. அதனால ஒரு மாதிரி மையமா சிரிச்சி மழுப்பி பேச வேண்டியிருக்கும்.

இந்த மாதிரி தர்ம சங்கடமான வேளைகளில் மூளையின் நரம்பு செல்களில் உள்ள டென்ரிடிக் ஸ்பயின்ஸ் என்னும் அமைப்பைதான் அதிகம் திட்ட வேண்டும். இந்த அமைப்புகள் நியாபகங்கள் சேகரிக்கையிலும், கற்றுக் கொள்கையிலும் உருவாகுகின்றன. ஒவ்வொரு டென்ரிடிக் ஸ்பயினும் அதன் அருகில் உள்ள நியுரான்களின் டென்ரிக் ஸ்பயினுடன் வேதியல் சிக்னல்களை பரிமாற்றி கொள்ள முடியும். புதிய டெனெரிடிக் ஸ்பயினின் வளர்ச்சி புதிய நியாபகங்களை மூளையில் உருவாக்குகிறது. இந்த டென்ரிடிக் ஸ்பயின்களின் அளவிலும், உருவத்திலும் நியாபகங்களுக்கு தக்க வித்தியாசம் இருக்கும். இதில் ஏற்படும் பாதிப்புகள் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளையும், அல்சைமர் வியாதி, ஆட்சிசம் போன்ற குறைபாடுகளையும் உருவாக்குகின்றன. இவற்றின் உருவாக்கத்திற்கான அடிப்படை புரதங்களை ஆய்வு குழுக்கள் சோதனை செய்து வருகின்றன. அமெரிக்காவின் ட்யுக் பல்கலைகழகம் டென்ரிடிக் ஸ்பயினின் வளர்ச்சியை படமாக எடுத்துள்ளனர்(படம் பார்க்க )


எத்தனை நாளைக்குதான் இதயம் முழுதும் நீயேனு ஒரு பம்பை வைச்சிட்டு கதை கொடுத்திட்டு இருக்கறது,டென்ரிடிக் ஸ்பையினெல்லாம் டேட்டாவாக நிறைந்தாயேனு காதல் கவிதையையும் எழுத வேண்டியதுதான்.

Wednesday, December 6, 2006

மேய்ச்சல் 3

உடம்பில் சூடு ஏறினால் கண்ணை கட்டிக் கொள்கிறது. அப்புறம் எண்ணைய் தேய்த்து குளித்து வெந்தய பொடி சாப்பிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நான்கு நாளாகிறது. சொந்த விஷயங்களை பற்றி கவலைப்படுவதில் உலக விஷயங்கள் ஒளிந்து கொள்கிறன.





Not so much thin...
Originally uploaded by m.o.m.o..







உலகத்தின் சூடும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. இதை குறைக்க, கட்டுப்படுத்த விஞ்ஞான துறையும் முயன்று வருகின்றது. பூமிக்கு எண்ணைய் குளியலா, வெந்தய பொடியோ உதவாது. வேறு ஏதாவதுதான் வர வேண்டும்






மாற்று எரிபொருள் துறையில் முக்கிய கண்டு பிடிப்புகள் கடந்த வாரத்தில் பதிபிக்க பட்டு இருக்கிறது. ஆரம்ப கால சோலார் செல் தொழில் நுட்பம் சிலிகானை அடிப்படையாக கொண்டது.

இதில் முக்கிய மாற்த்தை கொணர்ந்தது மைக்கேல் கிரட்சல் எனும் சுவிசர்லாந்து நாட்டின் அறிவியலார் ஆவார். இவரது 1991ம் வருடத்திய Ti02(டைடானியம் டை ஆக்ஸைடு) அடிப்படையாக கொண்ட புதிய வகை செல்கள் கண்டுபிடிப்பு சோலார் செல்கள் தயாரிப்பை எளிமைப்படுத்தின. கிரட்சல் செல்கள் என்று இவர் பெயராலேய அந்த வகை சோலார் செல்கள் வழங்கப்படுகின்றன.

அண்மையில் மைக்கேல் கிரட்சலின் அணி சூரிய ஒளி கொண்டு நீரை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரிக்கும் தொழில் நுட்பத்தில் 42 சதவீத குவாண்டம் திறனுள்ள கருவியை கண்டறிந்துள்ளனர். போட்டோ ஆக்ஸிடைஷேசன் தொழில் நுட்பம் இது வரை 37 சதவீத குவாண்டம் திறனுடைய அளவிலியே இருந்தது. குவாண்டம் திறன் என்னும் அளவீடு ஒளியின் போட்டான்கள், எலக்ட்ரானாக மாறுவதை குறிக்கிறது. ஹைட்ரஜன் எரிபொருள் மிக சுத்தமானது. அதனால் சுற்று புற சூழல் கேடுகள் விளையாது.

மேலும் தகவல்களுக்கு

இந்திய பெருங்கடல் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுப்புற சூழலின் வெப்பம் அதிகரிக்கும் ஆய்வை யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா சான்டியாகோவை சேர்ந்த ராமநாதன் மற்றும் ஜெப்ரி வின்சென்ட் என்பவர்கள் நடத்தி பதிப்பித்துள்ளனர். இவர்களின் முடிவு படி சுற்று புற சூழல் கேடுகளே மழை அளவை நம் நாட்டில் குறைக்கிறன என்றும், சுற்று புற சூழலில் கார்பன் டை ஆக்ஸைட் போன்றவற்றின் அதிகரிப்பே இரவு நேரங்களில் வெப்பநிலையை குறையவிடாமல் பயிரை பாதிக்கின்றன. உணவு தன்னிறைவு அவசியமாதலால் இது பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் வர வேண்டும். , 4000ம் ஆண்டு என பழம் பெருமை என வெட்டிப் பேச்சு பேசுவதிலும், சிலைகளை வைப்பது இடிப்பது என காலம தள்ளுதலையையும் விட இது போன்ற ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நோக்கி செல்லுதல் முக்கியமானதாக எனக்கு படுகிறது.

மேலும் தகவல்களுக்கு

மற்றுமொரு சுவராஸ்யமான செய்தி என்னவெனில் செல்போனிலும், லேப்டாப்பிலும் பொருந்தக்கூடிய புரோஜக்டர் தொழில்நுட்பம் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோலாகிராபி அடிப்படையாக கொண்ட இந்த வகை புரோஜக்டர்கள் LCOS வகை பேனல்களால் ஆனது. முதன் முதலில் ஹாலாகிராபி தொழில் நுட்பம் சாதாரண நுகர்வோருக்கும் பயன்படும் வகையில் இந்த தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு



புகைப்படத்திற்கு நன்றி m.o.m.o