Sunday, September 24, 2006

அவன் அவள் அவன்

நிகழ்காலம்
------------
காரை நிறுத்தி விட்டு கடலை பார்க்க வந்தேன். ஆக்ரோஷமாய் சீறும் அலைகளும் கடலும், வானின் முழு நிலவும் மலையின் மேலிருந்து ்பார்க்க எதையோ என்னிடம் சொல்ல வருவது போலிருந்தது. இன்றைய நாளின் அலைகள் மனதை கரையாக்கி கடலை போல் மோத ஆரம்பித்தன.

காரை விட்டி இறங்கும் முன் அவள் விம்மி விம்மி அழுதாள். அழுகையை அடக்க முயன்று இயலாமல் போக அழுகை இன்னும் அதிகமாய் வெடித்தது. அழுகையில் சிதறலில் கோபம் முளைத்து அதன் விளைவாய் அவள் கையிலிருந்த செல் போன் உடைந்து போனது. ஆங்கிலத்தில் நான்கெழுத்து கெட்ட வாரத்தையை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. அவனை திட்டுவதாக நினைத்து என்னை பார்த்து கத்த எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அசதியும், சலிப்பும் போட்டி போட்டு உணர்வுகளை ஆக்கிரமிக்க ஷட் தி .... அப் என்று சொல்லலாமா என்று நினைத்தேன், பரிதாபம் அதை தடுத்தது.

இந்த வாரத்தின் முதல் நாள் புராஜக்ட் லைவ் போனது.மண்டை காயும் வேலை. அறுபது மணி நேரத்தில் சில மணி நேர கோழி தூக்கம் போட்டு மானிட்டரை முறைத்துக் கொண்டு அலுவலகத்தின் செயற்கை வெளிச்சத்தில் இருந்தது சிந்திக்கவே இயலாத அளவுக்கு சோர்வை கொடுத்திருந்தது. நல்ல ஒய்வு தேவை. காலை ஆறு மணிக்கு எழுந்தேன். காரை எடுத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சலிஸில் இருந்து மான்ட்ரே வரை செல்லும் சாலை ஒன்றில்(route 1) பயணம் செய்ய முடிவு செய்திருந்தேன். தனியே கார் பயணம் செய்வது மனதை இளைப்பாற்றும். காருக்குள் நாம், இசை, காரை கவ்வி கூட வரும் சாலை, அழகழகான மலையின் மேல் வளைவுகள், சாலை ஒட்டும் கடல். ரம்யமாய் இருக்கும். இரவு வரை சென்று விட்டு எங்கு நிற்க தோன்றுகிறதோ அங்கு ஒரு அறை எடுத்து ஒய்வெடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். நிலவோளியில் மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் பசிபிக் கடல் மின்னும்.

காலை காபி சாப்பிட சாண்டா பார்பராவில் நிறுத்திய போது இவளை பார்த்தேன். நீண்ட நாள் முன் தோழி. அப்புறம் தொடர்பு நின்று போனது. எனக்கு அவளை பற்றி அதிகம் தெரியாத நிலையில் பிடித்து போனதென்ற ஒற்றை எண்ணத்தை வைத்து அவளிடம் என் எண்ணங்களை கொட்டியது என் தவறுதான். இது வேண்டாம் எனக்கு விரும்பமில்லை என சில வரிகளில் அவள் முடித்திருக்கலாம். வார்த்தைகள் நிறைய சொன்னாள். ஒவ்வொன்றும் என்னை சுட்டது. அவளிடம் நான் பார்க்காத இன்னோரு பக்கத்தை பார்க்க நேர்ந்தது. மிக அதிர்ந்து போயிருந்தேன். என்னிடம் யாரும் அப்படி பேசியதில்லை. ஓரே அலுவலகத்தில் இருப்பதால் அவளை பார்க்காமல் தவிர்க்கவும் இயலவில்லை. ஆனால் சிறிது சிறிதாய் மனதை பழக்கிக் கொண்டேன். அதற்கப்புறம் இந்த காதல் கத்திரிக்காய் சமாச்சாரமெல்லாம் எடுத்து புழக்கடையில் எறிந்து விட்டு வேலையை மட்டும் காதலிக்க ஆரம்பித்தேன். அது சுலபமாய் உதவியது.

பார்த்தால் விசாரிப்பு அவ்வளவே உறவாய் இருந்தது. இன்று பார்த்ததும் சிரித்தேன். வழக்கமான கேள்விகளை பறிமாற்றிக் கொண்டோம். அவள் மிக களைப்பாக இருந்தாள். கேட்டதற்கு லாஸ்ஏஞ்சலிஸில் இருந்து இரவு உணவு முடித்ததும் காரை எடுத்து 90 மைல் தாண்டி சாண்டா பார்பரா வந்து அவன் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு அவன் அப்பார்ட்மெண்டை பார்த்துக் கொண்டே இருந்தாளாம்.

தூக்கமில்லாமல் அப்படி இருந்தது வயது அதிகம் ஆன தோற்றத்தை அவளுக்கு கொடுத்திருந்தது. ஆத்மாவை வேலை சுத்தமாக உறிஞ்சி எடுத்து விட்டிருந்ததால், அவள் கதை கேட்க அதிக விருப்பமில்லாத நேரத்தில் அவள் பேச ஆரம்பித்தாள். அவளுக்கு கண் கலங்கலாம் என்ற இடம் வந்தது. காலையை அனுபவித்து உணவருந்த கடைக்கு வரும் யாருக்கும் எங்கள் உரையாடலை பார்த்தால் அனுபவம் பாழாகும். எனவே என் பிரயாணத்தில் அவளையும் கூட்டிக் கொண்டேன்.

அவள் கதை கேட்க ஆரம்பித்த முதல் இரண்டு மணி நேரம் அவளிடமிருந்த வருத்த உணர்வே எனக்கும் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரம் அவளோடு சேர்ந்து அவனை கோபப்பட்டேன். அதற்கப்புறம் இரண்டு மணி நேரமாகி விட்டது. இப்போது சலிப்புதான் இருந்தது. புலம்பி புலம்பி மன அழுத்தம் அதிகமாக்கி அதை எனக்கும் கொடுத்து விட்டாள். காலையில் காபி சாப்பிடுவதை விட்டிருந்தால் இவளை பார்க்க நேர்ந்திருக்காது. காபி சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு நல்லது, இன்றைக்கு கேட்டால் மனதுக்கும் நல்லது. தேய்ந்து போன நாளும் பொழுதும் கட்டிய தளைகளை முடிச்சவிழ்த்து, மூச்சு விடும் நிம்மதி தேடி வருகையில் புதிய முடிச்சுகள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கட்டப்பட்டு கிடப்பதே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது போலும்.

நிகழ்காலத்திலிருந்து 5 வருடங்களுக்கு முன்பு
--------------------------------------
பொறியியல் கல்லுரி படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவை டெல்லராகவும், இன்லேன்ட் லெட்டரை வித்ட்ராவல் ஸ்லிப்பாகவும் பயனபடுத்தும் முதிர்ச்சியே மனதிலிருந்தது. விடுதியின் வாயிலாக வாழ்க்கையின் வேறு திசைகளையும் அறிமுக படுத்தி கொண்டிருந்தது. அது மூன்றாம் வருடத்திற்கும், நான்காம் வருடத்திற்கும் இடைப்பட்ட காலம். கல்லுரி இருக்கும் ஊரில் புரோஜக்ட் ஒன்று கிடைக்க அதை உடனே தொடங்க வேண்டி விடுதியில் விடுமுறைக்கு தங்கியிருந்தோம்.

அவளை அப்போதுதான் பழக்கமானது. எனக்கு ஒரு வருடம் சீனியர். கல்லுரி அருகில் வீடு. பேராசிரியர்களுக்கு விருப்பமானவள், கல்லுரி மேடைகளில், குழுக்களில் நிகழ்ச்சிகளை நடத்துபவள். ஆளுமை திறன் அதிகம். அவள்தான் காம்பஸ் இன்டர்வியு பார்த்துக் கொண்டாள். நான் அவளுக்கு வாரிசாக பதவியேற்பு செய்தததால் அவளிடம் உள்ள அறிவை நாற்றாக பறித்து செய்து என்னிடம் நட்டுக் கொண்டிருந்தாள். இந்த விவசாய வேலைக்காக அடிக்கடி பார்த்துக் கொள்கையில் வேறு சில இடங்களில் வேறு சில விஷயங்களையும் விதைத்துக் கொண்டோம்.

இருவருமே சற்று ஆல்பா சுபாவம். அதனால் முதலில் இருந்த தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. வேலைக்காரணமாக இடமாற்றம் அவளுக்கு கட்டாயமானது. புறாக் காலில் தூது விடுவது பற்றி இருவரும் பேசி உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தொலைபேசி உதவியது. அடிக்கடி இன்டஸ்ட்ரியல் ட்ரிப் போகவும் அப்பாவுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் அதிகம் ஆனது.

அன்பாய் இருந்தாள். ஆசையாய் நேசித்தேன். வாழ்த்து அட்டை வார்த்தைகள் கூட இருவருக்கும் கலை அனுபவமாய் இருந்தது. பௌதிக விதிகள் மனதுக்கு இல்லை என்று நினைத்து சிரித்துக் கொள்ள முடிந்தது. மேல் நோக்கி மனம் செல்கையில் கீழ் நோக்கி எதுவும் இழுக்கவில்லை.யார் காதல் என்று சொன்னாலும், பேசினாலும், பாடினாலும் எங்களை போல் இவர்களால் நேசித்திருக்க முடியாது என்று உறுதியாக நம்ப முடிந்தது. அந்த நேரங்களில் அவளை விட பெரிதாய் எதும் இருக்கவில்லை. அவள் சுவாசக்காற்று படும் இடத்தில் இருக்கையில் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க சித்தமாய் இருந்தேன்.

கல்லூரி முடிந்ததும் மேல் படிப்புக்காக அமெரிக்கா வந்தேன்.மேற்கு கடற்கரை வாழ்க்கை. காதல் சங்கிலி அழகாய் மனிதர்களை கட்டி போடுகிறது.

நிகழ்காலத்தின் முதல்நாள்
----------------------
இரண்டு வாரமாய் இரவு நேரங்களில் பயமாய் உள்ளது. கதவை அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கிறது. அவன் மீண்டும் என்னை தேடி வருவான் என நம்பிக்கை இல்லை. ஆனால் என் கதவுகள் அவன் விரலுக்காக காத்துக் கொண்டே இருக்கின்றன. தொலைபேசியையும் அடிக்கடி எடுத்துப் பார்க்கிறேன். ஏதேனும் எடுக்க மறந்த அழைப்பில் அவன் இருந்திருப்பானோ என எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறை அவன் எண்ணை தொலைபேசியில் அடிக்கின்றேன், அதற்கு மேல் ஏதோ ஒன்று உட்கார்ந்து கொண்டு வேண்டாம் அழைக்காதே என்கிறது. ஒரு முறை என்னை பார்த்தால் அவன் மாறலாம். அதற்காக எப்போதும் அவனுக்கு பிடித்த உடையையே அணிந்து கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது. கண்மனி எனும் அவன் குரலை சேமித்து வைத்திருக்கிறேன். அது கரையக் கூடாதென அதை இறுக்க பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

எத்தனை அணைப்புகள், முத்தங்கள், பாவனையில்லாத பரஸ்பர அன்பு கனிவாய் இந்த வீட்டில் நிகழ்ந்ததே. அந்த நிகழ்வுகள் என்னை சுற்றி அமர்ந்து என் தனிமையை கேள்வி கேட்கின்றன. தன் குடும்பம் முக்கியம், நான் புரிந்துக் கொள்ள வேண்டுமென அவனால் எப்படி சொல்ல முடிந்தது? நானும் அவன் குடும்பம்தானே? ஐந்து வருடங்களில் கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்வின் போதும் அதையேதான் அவை சொல்கிறன என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.

அழுகையை காணும் போது அறுவறுப்பு படும் தைரியத்தை தொலைத்து விட்டேன். வேறு எதையோ கையில் வைத்து வேடிக்கை பார்க்கையில் தைரியம் காணாமல் போயிருக்கிறது. எத்தனையோ முறை இந்த தைரியத்தை வைத்து வார்த்தையால் மற்றவரை கிழித்து போட்டிருக்கிறேன். அவர்கள் அழும் போது அது கையாலாகத தனமாகதானே தெரிந்தது. இன்று நானே அந்த இடத்திற்கு வந்து விட்டேன். ஆறுதலுக்கு யாரை கூப்பிடுவது? இவனைதான் கூப்பிட வேண்டும். இவனுக்காகதானே எல்லாவற்றையும் உதறி விட்டேன். 90 மைல் தள்ளி உட்கார்ந்து கொண்டால் நான் இல்லாமலா போய் விட்டேன். என்னை ஒருமுறை நேராக பார்த்தால் அவன் மனது மாறிவிடும்.

நிகழ்காலத்திலிருந்து இரண்டு வாரம் முன்பு
---------------------------------------
வேலை முடிந்து வீட்டுக்கு செல்லவே விருப்பம் இல்லை. பிரச்சனைகள் அதிகரிக்கையில் அவள் அரவணைப்பு பல நாள் துணையாய் இருந்திருக்கிறது. இன்று அவளே பிரச்சனையாய் தெரிகிறாள். காதலிப்பதென்பது வற்புறுத்தி திணிக்கப்பட்ட உண்ர்வாகவே இப்போதெல்லாம் இருக்கிறது. மூன்று வருடம் முன் அவள் எனக்காக வேலை மாற்றி அமெரிக்கா வந்த போது இருந்த அதிகபட்ச இதய துடிப்புகள் சுத்தமாக மறைந்து விட்டது. கொஞ்சம் சோர்வும், சோகமும்,கோபமும்,மோதல்களுமே இருக்கின்றன. கனவு வாழ்க்கை வாழ காதலித்து, இன்று காதலே ஒர் கனவாய் ஆன வாழ்க்கையாகி கொண்டிருக்கிறது.

இவளை திருமணம் செய்து கொள்ள கேட்டதிலிருந்து அப்பா, அம்மா பேச மறுப்பதே வலி அதிகம் கொடுத்தது. அவளுடன் பழக ஆரம்பிக்கையில் ரொம்ப யோசிக்கவில்லை. வயசைதான் குறை சொல்ல முடியும். ஈசல் விளக்கை பார்த்தது போல் இருக்க வேண்டியதை காந்தங்களின் ஈர்ப்பாய் நினைத்திருந்தேன். அம்மா பூச்சி மருந்து குடித்தால் இதயம் நின்று விடுவது போல் இருக்கும் என்று ஆராயும் நிலையில் அப்போது இல்லை. வெறும் அட்டை கத்தி யுத்தம்தான் பெற்றோருடன் இருக்குமென்று நினைத்தது, இன்று உறவுகளை கிழித்து போடும் கொலைவாள் யுத்தத்தை நோக்கி போய் கொண்டிருந்தது.

வளர்க்கும் போது அம்மா, அப்பா எதிர்பார்ப்பையும் கூட வளர்த்து கொள்கிறார்கள். அவர்கள் நிழலில் இருக்கையில் வளர்ப்பு எந்த திசை நோக்கி போக வேண்டுமென வலிக்காமல் வெட்டி விடுகிறார்கள், அவர்கள் நிழல் தாண்டி பயணிக்கும் நேரம் வளரும் திசை அவர்கள் எதிர்பார்ப்பை மீறி செல்கிறது. அதை அவர்கள் விரும்புவதில்லை.அவர்கள் அழுகையை தாங்கும் சக்தி இல்லாமல் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது.

அவளால் அவள் வீட்டை எனக்காக எப்படி இவ்வளவு சுலபமாக உதற முடிந்தது. வளர்த்தவர்கள் மீது பாசம் இவ்வளவுதானா? இத்தனை வருடம் காத்த பெற்றோரை எனக்காக விட்டு விட்டவளுக்கு ஐந்து வருடமே பழகிய என்னை விட்டு விட வலிக்கவா போகிறது? இந்த திருமணம் நடந்தால் என்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடியுமென தெரியவில்லை. இன்று அவளுடன் பேச வேண்டும். அந்த சாண்டா பார்பரா வேலையை ஒத்துக் கொண்டு இடம் மாறிட வேண்டும். இந்த ஊர் வேண்டாம். எனக்கும் இவளுக்கும் உள்ள இந்த உறவிலிருந்தத விடுவித்து கொள்ள வேண்டும். அப்பா அம்மாவை குற்ற உணர்வில்லாமல் பார்க்கும் மனநிலைக்கு திரும்ப செல்ல வேண்டும். ஆண்டவா எனக்கு அவளிடம் மனம் விட்டு பேசும் வலிமையை கொடு.

நிகழ்காலம்
---------------
அவன் காரை சாலை ஒரம் நிறுத்தி விட்டு கடலின் அலைகளை பார்த்து நின்று கொண்டான்.நான் காரில் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.இவனை காபி ஷாப்பில் பார்த்த போது சந்தோஷமாக இருந்தது. பழகிய முகம் ஒன்று சிரிக்கையில் ஒவென்று அழ தோன்றியது. இவனை காகிதம் போல் கிழித்து எறிந்த நாட்கள் அப்போது நியாபகம் வரவில்லை.

இன்றைக்கு இவன் ஆறுதலாய் பேசினான். நான்தான் கொஞ்சம் அதிகம் பேசி விட்டேன்.
களைப்பின் உச்சத்தில்தான் இந்த பயணத்துக்கு இவன் வந்தான். ஒய்வுக்கு வந்தவனை கல்லுடன் கடலில் தள்ளியது போல் ஆக்கி விட்டேன். இவனுக்கும் இளைப்பாறுதல் அவசியம். இன்று நாள் முடிந்தால் என்ன? இன்னமும் நிலவும், கடலும் இருக்கிறதே. திரும்பி போக இன்னும் 300 மைல் தொலைவும் உண்டு. ஒரு பேச்சு துணையாய் ஆவது அவனுக்கு இருக்க முயற்சிக்க வேண்டும்.

யாரிடமாவது கொட்டி விட வேண்டுமென இரண்டு வாரமாய் தேக்கி வைத்த அனைத்தையும் இன்று பேசிவிட்டேன். சிநேகமாய் பார்க்க, பேச ஆளில்லாமல் தவித்த தவிப்பு கொடுமையாக இருந்தது. கண்ணாடியை பார்த்துக் கூட பேசிக் கொள்ள முடியவில்லை.

இவன் காட்டிய கடல் நன்றாய் இருக்கிறது. நிலவொளியில் கரிய நிற அலைகள் பாறைகளில் வலுவாய் மோதிக் கொண்டே இருக்கின்றன. குளிர் காற்று உடலெங்கும் நடுங்க வைக்கிறது. வீட்டிலிருக்கும் போது இருந்த மயான அமைதி இங்கு இல்லை. இவனது அருகாமையின் அமைதி ஒய்வை தருகிறது. வார்த்தைகள் தீர்ந்து போய் பேசாமலிருத்தலும் மனதுக்கு கொஞ்சம் பிடிமானமாக இருக்கிறது.மலை விளிம்பின் தலை சுற்றல் சுகமாய் இருந்தது.

என் சுயத்தை அவனிடம் இழந்து என்ன தேடினேன். நான் நானாக இருக்குமிடம் எனக்கு முக்கியமென்பதை மறந்து போனேன். தன் ஆழங்களை மறந்து விட்டு கரிய அலையாய் கரையோடு கட்டப்பட்டு பாறையை விடாமல் மோதி எதையோ தேடுதல் விட்டு, ஆழ்கடலாய் என் சூட்சுமங்களோடு காத்திருப்பேன், எவனாவது என்னை தேடி அது வரை வந்தால் பார்க்கலாம்.

No comments: