Tuesday, March 27, 2007

சில்லறை வணிகம்-DSCL முதலீடு

சில்லறை வணிகத்தில் நுழையும் பெருமுதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை பெருக்க இடைதரகு அமைப்புகளை களைதல் முக்கியம். டாடா, ஐடிசி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் மொத்த குத்தகை விவசாய முறைக்கு விவசாயத்தை நகர்த்த ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிக்கும், நுகர்வோர்க்கும் நாற்பது சதவீதம் வரை கூடுதல் பலன் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பெருமுதலீட்டாளர்கள் மொத்த குத்தகை விவசாயத்திற்கு நகரும் போது அதற்கான துவக்க செலவீடும், உழைப்பும் மிக கடினமான ஒன்றாகும். நுகர்வோரின் தேவையையும், அதற்கேற்ற பொருள்களின் கையிருப்பையையும் காப்பதற்கு பெரிய அளவிலான விவசாய தொடர்புகளும் வரத்துவாரியும் உருவாக்குவது எல்லாருக்கும் சுலபமல்ல.

ஸ்ரீராம் கன்சாலிடெட்டட் நிறுவனம் இப்போது இது போன்ற பின்புல கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் பெருவணிகருக்கும், விவசாயிக்கும் இடையே தொழில் புரிய திட்டமிட்டுள்ளனர். பல நிலை இடைதரகர் அகன்று ஒரு இடைதரகருக்கு வந்து ்நிற்பது போன்றதே. சோதனை முறையில் இவர்கள் பிக் பஜார் (pantaloon retail) மற்றும் ஸ்பென்சர் ரிடெய்லுடன்(RPG Group) ஒருங்கிணைந்து செயலாற்றுகிறார்கள். இந்த ஒப்பந்தில் ஸ்ரீராம் நிறுவனம் விவசாய மொத்த குத்தகையையும், போக்குவரத்து, தானிய சேமிப்பு முதலியவற்றை பார்த்துக்கொள்ளும். விற்பனையை இதர பிற வணிகர் பார்த்துக் கொள்வார். எனக்கு இந்த அமைப்புகள் காலப்போக்கில் நேரடி வணிகத்தில் இறங்கும் என்றே தோன்றுகின்றது. டாடா, ஜடிசி, ரிலையன்ஸ் நேரடி கொள்முதலுடன், பின்புல கட்டமைப்பையும் பார்த்துக் கொள்வதால் அவர்களுக்கு விலையை இன்னும் குறைத்து தர இயலலாம்.

ஸ்ரீராம் நிறுவனத்தார் ஹரியாலி கிசான் பசார் அமைப்பை வடக்கே விவசாய மாநிலங்களில் நிறுவி உள்ளனர். விவசாயத்திற்கு தேவையான தொழில் முறை ஆலோசனைகள், உரம், பெட்ரோல், ்டீசல், கடன், கொள்முதல் என எல்லா வகை தேவைகளையும் இந்த ஹரியாலி அமைப்பு மேற்கொள்கின்றது. விவசாயம் தொழில்முறை அமைப்பாக மாற்றப்படுதலின் அறிகுறிகள் தெரிகின்றன. இந்த ஹரியாலி அமைப்பில் கால்நடை மருத்துவர்களையும் உள் கொண்ர்வதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

Thursday, March 15, 2007

பணமும் தொழிலும்

பணம் என்பது அங்கிகரிக்கப்பட்ட சமூக சூழ்நிலையில் அது குடும்பத்தின் ஆணி வேராகிறது. குடும்பத்தின் வளர்ச்சி பணத்தினை அடிப்படையாக கொண்டே அளவிட படுகின்றது. சில இடங்களில் குடும்பத்தை நிராகரிப்பவர் கூட பணத்தை நிராகரிப்பதில்லை. பண்டமாற்று முறையில் நடைபெற்ற பொருளாதாரம் பணத்திற்கு நகர்ந்த நாள் தொட்டு ஆண்டி முதல் அரசன் வரை இயக்கம் பணத்தின் வாயிலாகவே.

பல குடும்பங்களின் வளர்ச்சி ஒரு சமூகத்தின் வளர்ச்சியாக அறியப்படுகின்றது. தத்துவ ரீதியாக ஆயிரகணக்கான சித்தாந்தங்கள் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு பணத்தினை யாரும் நிராகரிக்கப் போவதில்லை. பொருளீட்டும் வழிகளில் ஒன்று சுயமாய் தொழில் தொடங்குதல், இன்னோன்று அங்கனம் தொழில் தொடங்குவோருக்கு பணி புரிந்து பொருள் ஈட்டுதல். செய்யும் தொழிலின் வருவாய்க்கேற்ப்ப தொழிலின் கூலி பொதுவாய் அமைகின்றது. எல்லா தொழிலுக்கும் ஒரே கூலி சாத்தியமில்லை, அது நடைமுறைக்கு ஓவ்வாது.

கூட்டு சமூதாயத்தில் வரிப்பணம் வசூலிக்கப்பட்டு அது சமூதாயத்தின் வளர்ச்சிக்கு செலவிடப்படுகின்றது. அதை நிர்வகிக்க அரசு நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. உலக அறிவு, தொழிலறிவு வளர்க்க எண்ணி அரசால் இலவச கல்வி நமது நாட்டில் எல்லோருக்கும் வழங்கப்படுகின்றது.
கல்வி வேலையை உருவாக்கவும், வேலை புரியவும் தகுதியை தருகின்றது.
கல்விதான் தகுதியா? கல்வி இல்லாமல் ஆனவர்கள் இல்லையா போன்ற கேளவிகள் இந்த இடத்தில் எழுவதை தவிர்க்க இயலாது. இது போன்ற தனித்து விளங்குபவர்களின் மொத்த விழுக்காடு பொது சமூதாயத்தில் மிக குறைவே. அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று புலம்பும் முன் அடிப்படை தகுதியான கல்விக்காக அரசு செய்யும் முயற்சிகளை எண்ணி பார்க்க வேண்டும்.

தனி மனிதன் தகுதியை வளர்த்துக் கொள்ள உதவிய சமூகம் தகுதிக்குறிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தது. இரு வழிகளில் சமூகம் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். கூட்டுசமூதாயம் தானே பொதுப்பணம் முதலீடு செய்து வேலைக்கான அமைப்பை உருவாக்குதல் ஒன்று. இந்த முறையில் பொதுப்பணம் பற்றிய அறிவு எல்லோருக்கும் வருதல் வேண்டும். பேருந்துக்கு தீ வைத்து, பக்கத்து ்வீட்டு சுவற்றில் உச்சா போய் விட்டு, தெரு ்விளக்கில் கல் வீசி கலாட்டா பண்ணும் மனித வளர்ச்சி உள்ள நிலையில் இது போன்ற பொதுப்பணம் கொண்டு வேலைவாய்ப்பை உருவாக்குதல் எத்தனை சுத்தமாக இயங்க இயலும்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மற்றொரு முறை தொழில் தொடங்குவதற்கான ஆயத்தங்களை சமூகம் உருவாக்கி சமூக உறுப்பினர்களை முதலீடு செய்ய வைத்தல். பக்கத்து வீட்டு ்சுவற்றில் உச்சா போகும் அறிவுள்ளவன் கூட சொந்த வீட்டை துடைத்துதான் வைப்பான். குடும்பம் , சொத்து போன்ற அமைப்புகளை இயல்பாக ஏற்றுக் கொண்ட மனித அமைப்பில் தான் முதலீடு செய்து ்செய்து துவங்கும் தொழிலில் தனிக் கவனம் செலுத்தப்படும். முதலீடு ்விரையம் செய்யப்படாது. தனி மனித முதலீடு சமூகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்க கூட்டுச சமூகம் விதிமுறைகளை உருவாக்கி கொள்ளுதல் வேண்டும். முதலிட்டுக்கான உள் கட்டமைப்புகளை உருவாக்குதலும், முதலீட்டுக்கான விதிமுறைகளை மட்டுறுத்தலும் கூட்டு சமூகத்தின் நிர்வாக அமைப்பின் கடமையாக இருத்தல் வேண்டும்.

சமூக அமைப்பில் அதிகாரத்தினை உச்சிக்கு கொண்டு செல்லாமல் பரவலாக்கபடுதல் முக்கியம். தற்போது நடைபெறும் நந்திகிராம பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். மேற்கு வங்க மாநில அரசு சிறப்பு பொருளாதார திட்டத்தினை பற்றிய அறிவினையும், அதனால் வரும் பலன்களையும் மட்டும் அறிவிக்கும் அமைப்பாக இருந்து, தனியார் அமைப்பு நேரடியாக கிராமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி கிராம அமைப்புடன் ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று நினைக்கின்றேன். மாவட்டத்திற்கோ, அல்லது ஊராட்சி அமைப்பிற்கோ தங்கள் பகுதியில் நிர்மாணிக்கப்படும் தொழில் அமைப்பினை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டால் திணிப்பு தவிர்க்கப்படும். அமெரிக்காவில் இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை காணலாம். இந்தியாவின் மாவட்டத்தினை ஒத்த கவுண்டி எனப்படும் அமைப்பே உள்ளூர் தொழில் அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றது. பல்வேறு சலுகைகளும், ஊக்கங்களும் தொழில் தொடங்குவோறு வழங்குவதாய் கூறி தொழில் முனைவோருக்கு கவுண்டி அழைப்பு விடுப்பதை கண்டிருக்கின்றேன். மக்கள் பிரதிநிதித்துவம் உள்ள அமைப்பு கவுண்டி அளவில் உண்டு.

வேலைவாய்ப்பு உருவாக்கம் சமூகத்திற்கு முக்கியமானதாகும். அதில் உருவாகும் தேக்க நிலை சமூக அமைதியை குலைக்க கூடிய தன்மை உடையது. தொழில்மயமாக்கப்படல் கெடுதலான பக்க ்விளைவுகளை கொண்டிருந்தாலும் சமூக இயங்குதன்மைக்கு அது முக்கியமானதாகும்.
கடுமையாக தொழில் உருவாக்கத்தை எதிர்ப்பவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு என்ன செய்வது என்று சொல்வது இல்லை. அப்பன் செய்த தொழில் செய்தே வாழ்ந்தால் போதாதா எனறு கேட்டால் எனக்கு போதாது என்றே தோன்றுகின்றது.

Tuesday, March 6, 2007

தோழிக்கு மடல்

உறுப்பு சில பாகுபாடு
உன்னை பொருட்காட்சி ஆக்கிடாது
வல்லினமோ மெல்லினமோ
பெண்ணவளே உன் முடிவே
இடையினமாய் அழகுபிம்ப
இருப்பு மட்டும் நீயில்லை
தவறில்லை பெண்ணே
தனித்தியங்கும் வல்லமை கொள்
கதவு விளிம்பு காட்சியாகி
நாணத்தின் கோனலிலே நிலம் கீறும்
தளை அறுப்பாய்
ஆண்டாண்டு காலமாய்
உன்மேல் அடுக்கி வைத்த பிம்பமது
ஆடிபோல் நொறுக்கி விடு
நம்பிக்கையும், சிந்தனையும்
சீர்படுத்தும் வல்லமையும் நிதம் தேடி
பிரபஞ்சம் பறக்கும் பருந்தென மாறு

Monday, March 5, 2007

தீட்டு

உதிரத்தின் வாயிலாக தீட்டு
மாதவிலக்கிலும, மனிதன் பிறப்பிலும்
மையம் கொண்டாடுது இந்த தீட்டு
அதிகார போதையில் ஆழ்ந்திருக்க
அடிப்பட்டவனுக்கு கொடுத்தது தீட்டு

அவனுக்கு இவன் தீட்டு
இவனுக்கு எவனோ தீட்டு
ஆக எங்கும் உண்டு இந்த தீட்டு
ஆகாசம் தாண்டி புது வேஷம்
போடுமடா தீட்டு

புணர்வின் ஆசைக்கும்
உடலின் சூட்டுக்கும் ஏதடா தீட்டு
இச்சையின் வியர்வையில்
கரைஞ்சே போகும் அந்த தீட்டு

கல்லா பெட்டியிலே
நல்லா தூங்கும்
அந்த காசுக்கும் ஏதடா தீட்டு
காசின் சுகத்தினிலே
கற்புர புகைதானே தீட்டு

கழுத்தினிலே கத்தி வர
பயத்தினிலே காணலடா தீட்டு
பயம் வந்தா நனைந்துபோகும்
பரிகாச பூச்சுதாண்டா தீட்டு

சில்லறை வணிகம்-ii

பெருவணிகர் நிலையில் லாபமே அவருக்கு பிரதானம். அவர்கள் தங்கள் பங்குதாரருக்கு லாபமூட்டும் வகையில் மூலப்பொருள் வழங்கும் விவசாயியை நோக்கி தங்கள் கரத்தை செலுத்துவார் என்பதும் நடக்க கூடியதே.விவசாயிகள் கூட்டுறவு முறையில் இயங்கி கொள்முதல் செய்யும் முதலாளிகளோடு பேரம் பேசி விலை நிர்ணயம் செய்யும் உரிமை கொண்டிருந்தால் இந்த பிரச்சனை தவிர்க்கப்படலாம்.

இடைமனிதர்களும், கடமை உணர்வற்ற அரசு கொள்முதல் இயந்திரங்களும் அகற்றப்பட்டு விவசாயம் தொழிலாக மாற்றப்பட்டு சந்தையில் இயங்கலாம். பிரச்சனையே இல்லாத தொழிலாக விவசாயம் இருக்குமென்பதற்கான உறுதி பத்திரம் எதும் கிடையாது.எல்லா தொழில்களுக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களோடு ஆனால் தனியார் மயமான விவசாயி விளைபொருளுக்கு விலை நிர்ணயம் தொழிலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

பெருவணிகர் கொள்முதல் வருகையில் வருட சாமான்கள் விற்கும் சந்தைகள் காணாமல் போகலாம் அல்லது அதன் அளவு குறைந்து போகலாம். இப்போது திருச்சியில் இருந்து கொல்லிமலை சென்று சந்தையில் பொருள் வாங்கும் எங்கள் ஊர் பொது மக்கள் அதற்கு மாற்றாக வேறு ஒன்றை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்கையில் பொருளாதார நட்டம் எங்கள் ஊருக்கு உண்டான போதும், கொல்லிமலையில் சந்தை வைக்கும் விளைவிப்போருக்கு பெருவணிகரிடம் விற்பதால் ஒரே தவணையில் விற்பனைக்கான பணம் கிடைக்கும்.

பெருவணிகர் வருகையில் அவர்களை மட்டுறுத்தும் நுகர்வோர் நலம் காக்கும் சட்டங்களை தூசு தட்டி எடுத்தலும், அவற்றின் இருப்பை பற்றிய அறிவை பொதுமக்களிடம் கொண்டு செல்லுதலும் மற்றும் இவ்வாறான சட்டங்கள் பாரபட்சமற்ற முறையில் நடைமுறை படுத்தபடுதலும் முக்கியம். நுகர்வோர் தங்கள் உரிமைகளை பற்றிய தெளிவான அறிவை கொண்டு, எல்லாம் என் விதி என்று நினையா மனநிலைக்கு வருதல் பெருவணிகர் வளர்களையில் அவசியமான ஒன்றாகும்.

பெருவணிகர் பங்குசந்தையில் பங்குகளை விற்று பொது அமைப்பாக இயங்குகையில் தொடர்சியான லாபம் முக்கியமானதாகும். கலப்படம், எடைக்குறைவு போன்றவை இவற்றை பாதிக்கும் என்பதால் இவ்வழியில் செலவதை தவிர்ப்பார். பெருவணிகம் நேரடி கொள்முதலால் பதுக்கல், கருப்பு சந்தை போன்றவற்றை குறைக்கவும் செய்யலாம்.

அடுப்பில் பாத்திரம் வைத்து விட்டு தாளிக்க கடுகு வாங்குவது நமதூரில் சகஜமான ஒரு செயல். இது போன்றவற்றால் தெருமுனை கடைகளில் நடக்கும் வியாபாரம் பெருவணிகர் வருகையால் பாதிக்கப்படாது. சிறு, பெரு நகரங்களில் மாத சாமான்கள் விற்கும் மத்திய தர கடைகள் இது போன்ற பெருவணிகர் வருகையால் பாதிக்கப்படும். தொழில்கள் விரியும் போது பாதிப்பென்பது இயல்பே. இது சில்லறை வணிகத்துக்கு மட்டுமன்று மற்ற எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்.

Saturday, March 3, 2007

சில்லறை வணிகம்

சில்லறை வணிகத்தில் பெரும் வணிகர்கள் இறங்குவதன் விளைவுகளை ஆய்வு செய்து பதிப்பிக்க வேண்டி இந்திய பன்னாட்டு வணிக உறவு ஆய்வு மைய குழுவை நமது பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் ஐந்து மாதத்தில் இதன் முடிவுகள் வழங்கப்படும்.

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலாளிகளை எதிர்ப்பவர்கள் உள்நாட்டு முதலாளிகளையும் எதிர்க்கின்றார்கள். ரிலையன்ஸின் ப்ரஸ், டாடாவின் இன்பினிட்டி போன்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் கொடி பிடிக்கப்படுகின்றது.

தற்போதைய வணிக சூழ்நிலையில் விவசாயிகள் விளைபொருள்களுக்கு முழுவிலை கிடைப்பதால் மகிழ்ச்சியாகவும்,நுகர்வோர் சரியான விலை உள்ளதால் மிக மிக மகிழ்ச்சியாகவும் இருப்பது போன்றும், இனி பெரு வணிகர்கள் வருவதால் இது பாதிக்கப்படும் என்றும் காட்சி வைக்கப்படுகின்றது.

எங்கள் வீட்டில் புள்ளிவிவர கணக்கு எடுத்ததில் அப்பா,அம்மா திருச்சியில் ரிலையன்ஸோ,டாடாவோ வந்தாலும் அவர்கள் போவாதாயில்லை என்று சொன்னார்கள்.நூறு கிராம், அல்லது நூற்றம்பது கிராம் என காய் வாங்குகிறோம். பால் ஒரு நாளின் தேவைக்கு பாக்கெட்டில் வாங்கி கொள்கிறோம். இதற்கு தெருமுனை கடைதான் வசதி என்றார்கள்.

நீங்கள் மொத்தமாக வாங்கி குளிர்பதன ்பெட்டியில் பதப்படுத்திக் கொள்ளலாமே என்றதற்கு செய்யலாம் ஆனால் இப்போது இருக்கும் குளிர்பதன பெட்டி சிறியது, வாரக் கணக்கில் சேகரிக்க இது ஆகாது, பெரிதாய் வாங்க வேண்டும். கோடையில் மின்சார தட்டுப்பாடு வருகையில் பெரிதாக இருந்தாலும் புண்ணியமிருக்காது என்றார்கள். மளிகை கடைகாரருக்கு எங்கள் வீட்டால் கிடைக்கும் வியாபாரம் எதிர்காலத்தில் மாற போவதில்லை.

உள்ளூர் சந்தையை காண்கையில் அங்கிருக்கும் வணிகர்கள் விவசாயிடம் இருந்து நேரடி வணிகம் செய்வதில்லை. அவர்கள் ஏல முறையில் காலையில் காய்கறிகளை இடைமனிதர்களிடத்து வாங்குகிறார்கள். அந்த இடைமனிதர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடைமனிதர்களிடத்து இருந்து பொருள்களை உள்ளூர் சந்தைக்கு தருவிக்கிறார்கள் போலும். இரண்டாம் நிலை இடைமனிதர்கள் விவசாயிகளிடத்து இருந்து விலைக்கு பொருள்களை வாங்குகிறார்கள். உள்ளூர் ்விவசாயி ்நேரடியாக விளைபொருளை கொணர்ந்து கடை விரிக்க இயலாதாம். இரண்டு இடை மனிதர்களுக்கான பங்கு பணம் பொருளின் விலையின் சேர்க்கப்பட்டு அதற்கும் சேர்த்து விலை செலுத்துகின்றோம். இந்த தகவல் செவிவழி அறிந்தது.

பெரும் வணிகர் வருகையில் இரு இடை மனிதர்கள் காணாமல் போகிறார்கள். விவசாயி, பெருவணிகர், நுகர்வோர் என்ற மூன்று அடுக்கு அமைகின்றது. இரு அடுக்குகள் காணாமல் போவது அதை தொழிலாக கொண்டிருப்போருக்கு இழப்பே. அவர்களின் இழப்பு நுகர்வோருக்கும், விவசாயிக்கும் வருமானம்.

மற்றொரு முக்கிய கோணம் வரிப்பணம். இடைமனிதரோ, சிறு அளவு வணிகம் புரிவோரோ வரி பொதுவாக செலுத்துவதில்லை. வரிப்பணமே சத்துணவாக, அங்கன்வாடியாக, இலவச மின்சாரமாக பொதுமக்களுக்கு போய் சேருகின்றது. ஆனால் பெரு வணிகம் வரும்போது வரிப்பணம் அரசுக்கு சேருகின்றது.

இப்போதே சிறு பெரு நகரங்களில் சூப்பர் மார்கெட் கடைகள் உண்டு. இவை உள்ளூரில் உள்ள சிறு கடைகளுக்கு போட்டியே. சிறு கடைகளை விட விலை குறைவே. அவைகளை எதிர்த்து போராடுவதில்லை. பால் சில்லறையாக கதவுக்கு வருவது கிட்டதட்ட காணாமல் போய் பாக்கெட்டுகளில் கடைகளில் கிடைக்கின்றது. அதற்காக கண்டண கூட்டங்கள் நடத்துவதில்லை. ஆனால் ரிலையன்ஸ்,டாடா என்ற பெயர்கள் வருகையில் அச்சம் பரப்பபடுகின்றது.

எனக்கு தெரிந்து காதி கதராடை கடைகளிலும், கோஆப்டெக்ஸிலும் மட்டும் வணிகம் செய்வோம் என யாரும் தீர்மானம் போட்ட்தில்லை. கெடுநாள் அறிவித்ததில்லை. மாற்று கடைகள் உண்டு, வணிகமும் உண்டு.சிறு வணிகர்,பெரு வணிகர் என்ற குரல்கள் இல்லை. கடந்த ்முறை சென்னை வந்தபோது ஆலன் சாலியும், டாக்கர் பேண்ட்ஸூம் நல்ல முறையில் ஸ்பென்சரில் இருந்தன.

Thursday, March 1, 2007

நிதி அறிக்கை

இந்த ஆண்டு நிதி அறிக்கையில் கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பை முன்னேற்றுதல் போன்ற திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வழக்கம் போல் எதிர்கட்சிகள் கடுமையாய் கண்டணம் தெரிவித்துள்ளன. நிதி அறிக்கை வெளியாகும் முன்னரே கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கின்றேன்.புதிய பொருளாதார கொள்கைகள் வாயிலாக அரசின் நிதி அளவு வரிகளின் மூலம் 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது, அதுவே இப்போது சமூக முன்னேற்றத்திற்கு செலவிட பட போகிறது.

இந்த வார ஜீனியர் விகடனில் சமூகத்தை அறிவியல் பூர்வமாக(?!) ஆராய்ந்து வண்ண தொலைக்காட்சி அளித்தால் சமூகம் மேம்படும் என்று அரசு முடிவு செய்து கொண்டு வந்த திட்டத்தில் ஊழல் நடப்பதை பற்றி சொல்லியிருந்தார்கள். இந்த மாதிரியெல்லாம் ஊழல் செய்ய முடியுமா என நாமெல்லால் ஆச்சரிய படுமளவுக்கு ஊழல் செய்கிறார்கள். இந்த திட்டத்தினால் சமூகம் எந்த அளவுக்கு முன்னேறுகின்றது என்பதை எப்படி அளவிட போகிறார்கள் என்று தெரியவில்லை.

மான்யங்களும் இலவச திட்டங்களும் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு படிக்கட்டுகளாகவும் இருத்தல் நலம். மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடிகள் இதற்கு சிறந்த உதாரணம்.

சமீப காலங்களில் சமூக நல திட்டங்களில் செலவிடல் நிறைய கட்சிகாரர்களின் நிதி இருப்பை அதிகரிக்கின்றதே தவிர யாரை குறிவைத்து திட்டம் அறிவிக்கப்படுகின்றதோ அங்கே போய் சேருவதில்லை. சுவரோட்டிகளிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இந்த திட்டங்களை பற்றி அதிகம் காண முடிகின்றது. ஒரு கட்சிகாரர் இன்னோரு கட்சிகாரரிடம் என் தொலைக்காட்சி சானலுக்கு அரசு விளம்பரம் கொடுங்கள் என்று பொது மேடையில் கேட்டு விட்டு சமூக நீதியும் பேசுகிறார், அதற்கும் கை தட்டுகின்றோம். ஒரு கட்சி தலைவர் விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரக்கூடிய சந்தையை போன ஆட்சியில் அமைக்கப்பட்டது என்ற ஒரே காரணம் காட்டி மூடி விடுகின்றார், அவருக்கும் கை தட்டுகின்றோம். விதியை மீறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதித்த அரசு ஊழியர் கண்டிக்கப்படுகின்றார், அவரை பிழைக்க தெரியாதவர் என்று முத்திரை குத்தி விளையாட்டு வீரருக்கு கைதட்ட போகின்றோம். கலாச்சாரம் என்பது கைதட்டுதலிலும், புகழ்பாடுதலிலும், கையூட்டு வாங்குதலிலும் உண்டு.

கல்விக்கான நிதி அறிக்கையின் அளவு 34 சதவீதம் உயர்ந்துள்ளது. மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான அளவு 21.9 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வில் எத்தனை சதவீதம் உண்மையில் சமூக பலனளிக்க சென்று சேர போகிறதோ தெரியவில்லை. ஊழலையும், சுரண்டலையும் கட்டுப்படுத்தாமல் விடுவது பொருளாதார முன்னேற்றத்தை பெரிதும் பாதிக்கும். மக்களின் மனோபாவம் கையூட்டு வாங்கினால் என்ன தவறு என்று ்கேட்கும் நிலையில் வந்து நிற்கின்றது. இந்த மனோபாவம் வளரும்போது எங்கு போய் முடியும் என்பது பயமாக உள்ளது. இது பிரச்சனையே இல்லை என்று கண்களை மூடிக்கொண்டு சமூக மேம்பாட்டிற்கு உழைக்க முன்னே போவதும் ஒடுகிற ஆற்றில் வரிப்பணத்தை கொட்டுவதும் ஒன்றுதான்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவதலின் ஊடான பிரச்சனைகள், சலுகை மட்டும் கேட்டு ஒட்டு போட வராத மத்திய தர வர்க்கமும், மேல் தட்டு வர்க்கமும், வரப்போகும் தேர்தல்கள் போன்ற பல மூடப்பட்ட கதவுகள் நடுவே இந்த நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயம் அறுபது சத வீத மக்களை தாங்கும் பொருளாதார அமைப்பின் நடுவே விவசாய துறையை நவீனபடுத்துதலுக்கும், அதன் மேம்பாட்டிற்கும் எதும் சொல்லபடவில்லை. தொழிளாளர் சட்ட சீர்திருத்தங்கள், பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், வெளிநாட்டு முதலீட்டை அதிகப்படுத்துதல் குறித்தும் எதும் தகவல்கள் இல்லை.