Tuesday, December 11, 2007

ஏதோ ஒரு மாதத்தில் எழுதிய டைரி குறிப்புகள்

ஏதோ ஒரு மாதத்தின் மூன்றாம் நாள் எழுதியது
-----------------------------------------------------------
வெற்றுக் காகிதம் ஒன்று அந்த அறையின் மூலையில் கிடந்தது. அதீத வெறுமையோடு இருந்த அந்த வரவேற்பறையில் ஏதாவது எழுதிய காகிதம் ஒன்று இருந்தாலாவது கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமென நான் நினைத்தேன்.


படுக்கையறை கதவு காற்றில் அசைய உள்ளுக்குள் சத்தியவாணி தெரிந்தாள். படுக்கையோடு இருந்தாள். கண்கள் வெறித்திருக்க பேசாமல் இருந்தாள். படுக்கை அறைக்குள் நிறைந்த குளிர் வரவேற்பறைக்கும் கொஞ்சம் வழிந்து கொண்டிருந்தது.



கொஞ்ச நாளாய் சத்தியவாணிக்கும் எனக்கும் சேருவதில்லை. ஏதேனும் பிரச்சனை வெடித்துக் கொண்டே இருந்தது. அலுவலகத்தில் புதிதாய் வந்த பார்க்கவியுடன் பழக்கம் ஆன பிறகுதான் இந்த பிரச்சனையே. வீட்டுக்குள் நுழைந்தாலே தலை இடிபடும் அளவுக்கும் குரல் கேட்க ஆரம்பித்து விட்டது.



எனக்கும் பார்கவியுடன் சாதாரண நட்பாகதான் பழக்கம் ஆரம்பித்தது. சிறிது சிறிதாய் வளர்ந்து அவள் கணவன் இல்லாததை பயன்படுத்தி நேற்று மதியம் அவள் வீட்டுக்கு சென்று வந்த பின் எங்கள் உறவு வேறு நிலைக்கு வந்து விட்டது. யாருக்கும் தெரியாத ரகசியமாய் வைத்திருத்தல் பிரம்ம பிரயத்தனமாய் இருந்தது.


எனக்கு பார்கவியை விட்டு இனி இருக்கவே முடியாதென முடிவு செய்து விட்டேன். எனக்கு ஆனால் சத்தியவாணியும் முக்கியம். என் வாழ்க்கையில் சத்தியவாணி இல்லாமலும் இருக்க முடியாது. அவளுக்கு என்றைக்கும் உன்னுடனே இருப்பேன் என சத்தியம் செய்திருந்தேன். அதை மீறுவதில் விருப்பமில்லை.



ஏதோ ஒரு மாதத்தின் ஐந்தாம் நாள் எழுதியது
-----------------------------------------------------------

இன்று பார்கவி என் வீட்டுக்கு வந்தாள். வெறுமையாய் இருந்த வரவேற்பறை அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

"ஒரு டேபிள் , சேர் ,சோபா கூட இல்லாமல் வச்சிருக்கிங்க"- பார்கவி

"சத்தியவாணிக்கு இதுதான் பிடிச்சிருக்கு என்ன பண்ணறது?"- நான்

"ஒ அப்படியா?"- பார்கவி.

அடுத்து எங்களுக்குள் நடந்த உரையாடல் என் குறிப்புகளில் எழுதும் அளவுக்கு இல்லை. பார்கவி பேசுவது அவ்வளவு சுவையில்லை. சத்தியவாணி பேச்சில் அசத்திடுவாள்.

எல்லாம் முடிந்து படுக்கையில் அசந்திருக்கும் போது பார்கவி அந்த கேள்வியை கேட்டாள்.

"சத்தியவாணி எங்கே?"- பார்கவி.

சத்தியவாணியை பார்கவி சந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லாத காரணத்தால் ஏற்கனவே எடுத்து வைத்த ப்ளாஸ்டிக் பேகை வைத்து அவள் முகத்தை மூடினேன். கொஞ்சம் முரண்டினாள்.

அப்புறம் சொன்னேன்.

"இனி நீதான் சத்தியவாணி"- நான்.

புதிதாய் வாங்கி வந்திருந்த ஐஸ் பெட்டியை தயார் செய்ய எழுந்தேன். பழசெல்லாம் வேறு தூசு படிய இருக்கின்றது.