Wednesday, May 30, 2007

பண்ணை மன நிலை

தமிழக மக்களால் வாக்களிப்பட்டு தேர்ந்தெடுத்த முதல்வராய் இருப்பதால் மொத்த தமிழகத்தின் பிரதிநிதியாய் அவர் தன்னை முன் நிறுத்தி உள்ளார். அவரது சொல்லும் செயலும் தமிழக கலாச்சாரம் எனும் கட்டப்பட்டும் பிம்பத்திற்கு எடுத்துக்காட்டாய் இருத்தல் நலம். மக்களாட்சி அமைப்பின் நான்காம் தூணாண பத்திரிக்கை அமைப்பை சார்ந்தவரை அடா புடா என்றழைத்து அதை பற்றிய குற்ற உணர்வோ மனசாட்சி உறுத்தலோ இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது. கலாச்சார காவலர்களாய் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் புனித உருவங்களும் இது போன்ற செயல்களை கண்டு மவுனம் சாதிப்பது அவர்களது கலாச்சாரம் குறித்த அக்கறையை காட்டுகின்றது. அரசியலமைப்பை மதிப்பேன் என உறுதி எடுத்து கொண்டு ஆளும் நிலைக்கு வருவோர் அதனை பற்றிய அடிப்படை அறிவை கூட இழந்து நிற்பதும் அதற்கு வலுவாக ஜால்ரா தட்டும் நிலையில் மக்கள் மந்தையும் இருப்பது வேதனை தருகின்றது.

பரந்த சிந்தனையும், பகுத்தறிவு முன்னிறுத்தும் ஆளுமையும் கொண்ட அரசியல் வளராமல் வியாபார சிந்தனையுள்ள தனிநபர் புகழ் வளர்க்கும் குருட்டு பக்தி உள்ள ஜமீன் ரீதியான அரசியலே தொடர்ச்சியாக முன்னிறுத்தப்படுகின்றது. சின்ன ஜமீன் சிறு வயதிலேயே அடையாளம் காணப்பட்டு பண்ணை ஆட்களால் கவனிக்கப்படுகின்றார். பண்ணை ஆள் என்றைக்கும் ஜமீன் ஆக இயலாது. பண்ணையில் வலுவான நிலையில் குரல் உயர்த்தும் நிலையில் ஜமீன் குடும்பமே உள்ளது. பண்ணையாள் மனநிலையில் ஜமீன் வாரிசுகளை விமர்சிப்பதே பண்ணைக்கு செய்யும் துரோகமாக தோன்றும். பண்ணை என்றைக்கும் பொது சொத்தல்ல. பண்ணை என்றைக்கும் ஜமீன் குடும்பத்திற்கே. வர்ணாசிரம தன்மையுள்ள பிறப்பால் தகுதி நிர்ணயிக்கும் அமைப்பே உள்ளது. அடிமை தன்மை மூளையின் அடுக்குகளில் ஊரியுள்ள நிலையில் இதனையெல்லாம் சொன்னால் பிரச்சனை ஆகி விடும்.

கே.எஸ். ரவிக்குமார் , ஆர்.வி.உதயகுமார் படங்களில் காட்டப்படும் புனிதமான ஜமீன்களும், காலையில் வாசலில் நின்று துண்டை அக்கத்தில் வைத்து வாயெல்லாம் பல்லாக வணக்கம் சொல்லும் பண்ணை ஆட்களுமே நினைவுக்கு வருகின்றார்கள். அந்த திரைப்படங்களில் பண்ணையார் விமர்சனத்துக்கும் கேள்விகளும் அப்பாற்பட்டவர்.

போற்றி பாடடி பெண்ணே மட்டுமே அனுமதிக்கப்பட்டது. கக்கத்தில் பை வைத்துக் கொண்டு பண்ணையாருக்கு ஆலோசனை சொல்லும் நிலையில் கொஞ்சம் கும்பல் உண்டு. அந்த கும்பல் அதிக பட்ச இடம் அதுதான். பண்ணையாள் பண்ணைக்காக வால் இருந்தால் ஆட்டும் நிலையில் சித்தரிக்கப்படுவார். இந்த மனநிலை உள்ளவர்கள் பகுத்தறிவு குறித்து பேசும் போது வேடிக்கையாக இருக்கின்றது. இவர்கள் செயலும் வர்ணாசிரமும் வேறல்ல.

Monday, May 7, 2007

மேய்ச்சல்-8

அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதை மேம்படுத்த முயல்வது மக்களாட்சியின் முக்கிய அம்சமாகும். அரசியலமைப்பு என்பது நிர்வாக ரீதியாக குடிகளை காப்பாதற்காக உருவாக்கப்பட்டதே அன்றி குடிகளை விட பெரிதாவது கிடையாது. அதனை அடிப்போம், நொறுக்குவோம் என கூறுதல் விடலை பருவத்தில் அப்பா அம்மாவின் விதிகளை மீறுகின்றோம் என பெருமை பேசிக் கொண்டு வெண் சுருட்டு ஊதி உடம்பை கெடுத்துக் கொள்ளுவதுதான்.

அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர். அவர் இதுதான் கடைசி என்றெல்லாம் கெடுவெல்லாம் சொல்லி போகவில்லை. அவர் மாதிரி அரசியலமைப்பை பற்றி பேசும் போது கூறியது இது

"Constitutional morality is not a natural sentiment. It has to be cultivated. We must realise that our people have yet to learn it. Democracy in India is only a top-dressing on an Indian soil, which is essentially undemocratic."( நன்றி; ஆசியன் ஏஜ்


அரசியலமைப்பை சார்ந்த முதிர்ச்சியான அணுகுமுறை டீக்கடையில் கேட்டவுடன் டீ ஆற்றி தருவது போல் உடனடியாக வருவது கிடையாது. வளர்க்கப்பட வேண்டிய குணமே. எதிர்கால தலைமுறைகள் பாடப்புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமில்லாது அதை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தவும் போதிக்க வேண்டும்.

தனிதனியே சிந்திக்க தெரிந்து கூட்டமாய் வாழும் சமூகத்தை உருவாக்குவதை விட ஒரே பொருள் சிந்திக்கும் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம் உருவாக்குதல் எளிது. அதற்கு ஒன்றுபட்ட சமூதாயம் என மேல் பூச்சும் பூசிவிடலாம். வீணாய் பன்முனை சமுதாயம் சேர்ந்திருந்து கண்பட்டு போனால் என்ன செய்வது.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று பார்த்தால் தீர விசாரிப்பவன் சொல்வது பொய்யாகிறது. என்கவுண்டர் எனும் காவல்துறை கொலைகள் நாடெங்கும் உண்டு. எண்கவுண்டர் ஒரு கதாநாயக தன்மை கொண்ட குணமாகவே கருதப்படுகின்றது. அரசியலமைப்பை சுண்ணாம்பாய் வெற்றிலையில் மடித்து தின்ன இது போன்ற மனநிலை உதவும். சட்டம் சார்ந்த நியாயங்களின் மீது சாமான்யனுக்கு எப்படி நம்பிக்கை வரும், பயந்தான் வரும். அரசியலமைப்பும் அதை சார்ந்த நிர்வாகமும் சாமான்யனுக்கானதாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிக வலிமை உடையவர் மேலோர் என்ற பாசிச தத்துவமே வளரும்.

மதுரைக்கும், சென்னைக்குமான பங்காளி சண்டையில் களப்பலி இரண்டு (கோபி மற்றும் வினோத்) (தகவல் உதவி:தினகரன்). குடும்பத்தின் மேலாளர் ஏதாவது சிக்கன் குனியா இல்லவே இல்லை என சத்திய முழக்கம் செய்தது போல் ஏதேனும் ஒரு முழக்கம் செய்து விட்டு பொன் விழா, ஒராண்டு விழா, மூவாண்டு விழா என ஏதாவது ஒரு் விழா கொண்டாட போய்விடுவார். தொலைக்காட்சிக்கும் அதில்தான் டிஆர்பி ரேட்டிங் அதிகமாகும். சண்டை காட்சிகள் இரண்டரை நிமிடந்தான் இன்பம். அடுத்து அலுப்பாகிவிடும். பெட்ரோல் குண்டுகள் வீசி பத்திரிக்கை அலுவலகத்தில் தாக்குதலாம். இது போன்ற தகவல்கள் அச்சமூட்டுகின்றது. காவல்துறை பல்குத்தி கொண்டு இருந்தது போல. பல் இடுக்குகள் சுத்தமாயிற்றா இல்லையா என முதல் தகவலறிக்கையில் தெரிந்ததா இல்லையா?