Thursday, November 30, 2006

மகள்

முத்தே நவமணியே என்
மூச்சிருக்கும் கண்மணியே
சின்ன சின்ன பாதமதை
சிங்காரமாய் மேல் தூக்கி
வெள்ளிக் கொலுசுதனை
விரல் பிடித்து அளவெடுத்து
வாய் நிறைய நீ சிரிக்க
மனம் நிறைந்து போகுதடா

மெல்ல எழுந்து நீயும்
பட்டு பாதந்தான் தேய
வீடெங்கும் ஒடியாடி
விதவிதமாய் குறும்பு செய்ய
வரப்போகும் திருநாளை
விழி வைத்து காத்திருப்பேன்

Monday, November 27, 2006

மேய்ச்சல் 2

ஒரு வழியாய் நன்றி நவிலும் விடுமுறை முடிந்தது. இலையுதிர் காலம் போல விடுமுறை காலத்தில் சோர்வை உதிர்க்க மனம் பாரம் குறைக்கிறது.ஊர் கதை, திரைப்படம் இரண்டு, மகளுடன் பொழுது , பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று என கலவையாய் போனது. மீண்டும் அடுத்த வருடம் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடுமுறை விடை பெற அலுவலகம் வந்து சேர்ந்தாகி விட்டது.

விடுமுறையே இல்லாத வேலையை எண்ணி பார்க்கையில் சற்று பயமாக உள்ளது. ஊர் பக்கம் அது போல் உறவினர் நிறைய உண்டு. சொந்த தொழில் புரியும் அவர்களுக்கு ஒய்வு, ஒழிச்சலே இருப்பதில்லை. மனதில் சக்கரம் கட்டிய வாழ்க்கை. எப்போதும் தொழில் ரீதியான சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும். முதல் போட்டவனுக்குதான் தொழிலின் வலி புரியும் என்பார்கள். சொந்த தொழில் புரிவோருக்கு சோதிடம், கடவுள் ரீதியான நம்பிக்கை அதிகமாய் இருப்பதாய் எப்போதும் ஒரு எண்ணம் உண்டு. தொழிலின் மேடு பள்ளங்களின் போது அவை ஒரு குஷனாக அவர்களுக்கு அவை உதவுகின்றன.

கடல் சார்ந்த கரையோரங்கள் இனிமையானவை. இரு வருடங்களுக்கு முன் டேடோனா பீச்சில் செலவிட்ட விடுமுறை நாட்கள் நியாபகம் வந்தது. நாள் முழுதும் கடலுக்குள் செல்வதும், கரைக்கு வருவதுமாய் போனது. ரசிக்கதக்க பொழுது அது. சூடும் , குளிர்ச்சியும் ஒன்றாய் பரவும் அந்த கணத்தின் ஈரச்சுவடுகள் இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளன.

கடலை பற்றி யோசனை வருகையில் பசிபிக் கடலில் ஹவாய் அருகே உருவாகி இருக்கும் ப்ளாஸ்டிக் வோர்டெக்ஸ் பற்றி படித்தது பற்றி சொல்ல வேண்டும். இந்த ப்ளாஸ்டிக் சுழல் கிட்டதட்ட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணம் அளவிற்கு பெரியது. பொறுப்பற்ற முறையில் கடலில் வீசப்படும் ப்ளாஸ்டிக் இந்த சுழலை உருவாக்கி கடல் உயிரினங்களை கொன்று கொண்டு வருகிறது. சுற்றுலா, கடலில் கலக்கும் கசடுகள்,மீன் பிடிப்பு, கப்பல்களில் இருந்து வரும் குப்பை என்ற நான்கு காரணிகளால் கடலில் இந்த பாதிப்பு உருவாகி வருகிறது. கையிலிருக்கும் ப்ளாஸ்டிகை மறுசுத்திகரிக்கும் குப்பை கூடையில் போட மறுக்கும் தனி நபரின் சோம்பேறி தனமோ, அலட்சியமோ இன்று இந்த அளவுக்கு கடலை பாதிக்கும் ஒரு காரணியாய் பெரிதாய் வளர்ந்துள்ளது. இது வருந்த தக்க ஓரு விஷயம்.






இன்று படித்த ஒரு சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால் ஹம்ப்பேக் திமிங்கலங்களிடம் ஸ்பின்டில் நியுரான் எனப்படும் மனிதரிடமும், சிம்பன்ஸி வகையினத்திலும் காணப்பட்ட மூளை செல்கள் இருப்பதாய் அறிவியலார்கள் அறிவித்துள்ளனர்.


ஸ்பின்டில் நியுரான்கள் மனித அறிவிற்கும், சிந்திக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான செல்கள் ஆகும். நம்மிடையே வாழும் சில சிந்தனாவாதிகள்(!) போல் இந்த ஸ்பின்டில் நியுரான்கள் ஹம்பேக் திமிங்கலங்களால் எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பதை இன்னும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

சுற்றுப்புற சுழலின் கேடுகளின் பாதிப்பு கங்கையை தொட்டு விட்டதை பற்றி இந்திய செய்திகளில் பார்க்க முடிந்தது. பல்வேறு அரசியல் மற்றும் கிரிகெட் காமெடிகளுக்கு இடையே இந்த செய்தி மறைந்திருந்தது. கங்கோத்ரியில் பனி 1935ம் வருட வாக்கில் ஏழு மீட்டர் கணக்கிற்கு ஓவ்வொரு வருடமும் உருகி வந்திருந்ததாம், இப்போது இது இருபத்தி மூன்று மீட்டர் ஒரு வருடத்திற்கு உருகுகிறதாம். புனித நதி , வருட விழா என கங்கையை கொண்டாடினால் மட்டும் போதுமா? அதன் இருப்பை பற்றி அக்கறை கொள்ள வேண்டாமா? உட்கார்ந்து யோசிக்க வேண்டும்.


உட்கார்ந்து யோசிக்கையில் ஒரு விஷயத்தை நினைவு கொள்ள வேண்டும். 90 டிகிரியில் நேராய் உட்கார்தலே நலம் என்று நினைத்து தவறு என்று அறிவியலார் கூறுகின்றனர்.135 டிகிரியில் உட்கார்தலே நலம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.முதுகு வலி வராமல் இருக்க இதுவே நல்ல வழி என கனடாவை சேர்ந்த அல்பெர்ட்டா பல்கலை கழக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

(ஹம்பேக் திமிங்கலத்தின் பட உரிமை gwoodford. )

Tuesday, November 21, 2006

பருத்தி விதை

பருத்தி விதையும், தேங்காய் புண்ணாக்கும் மாட்டு தீவனமாய் ஊரில் பார்த்ததுண்டு. டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த எ அன்ட் எம் கல்லூரியை சேர்ந்த கீர்த்தி ரத்தோர் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதை மனிதருக்கும் உணவாய் மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பருத்திக் கொட்டை புரதசத்து அதிகமுள்ளது. ஆனால் பருத்தி விதையில் உள்ள காஸிபோல் என்னும் நச்சு பொருள் இரத்ததில் உள்ள பொட்டாசியம் அளவை குறைக்கும், இதன் விளைவாய் கிட்னி பாதிக்கப்படும். ஆகவே இப்போதுள்ள நிலையில் பருத்தி விதை மனித உணவாக பயன்படுத்துதல் சரி வராது.

ரத்தோரின் ஆய்வுக் குழு புதிய ஜீன் மட்டுறுத்தும் முறையின் மூலம் பருத்தி விதையில் உள்ள காஸிபோலை அப்புற படுத்துகின்றனர். ஓரு மில்லிகிராம் பருத்தி விதையில் 10 மைக்ரோ கிராம் அளவிலான காஸிபோல் உள்ளது. அதை 0.1 மைக்ரோ கிராமாக குறைத்துள்ளனர். ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 0.6 மைக்ரோ கிராம் அளவிருந்தால் மனித உடல் நல பாதிப்பு கட்டுப்படுத்தபடும் என்று அறிவித்துள்ளது. அதோனோடு ஓப்பிடுகையில் 0.1 மைக்ரோகிராம் உள்ள பருத்தி விதை நல்ல உணவாக உலவ வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமான உணவுகளையும், உடல் இளைக்க வைக்க வைக்கும் உணவு முறைகளையும் தேடி செல்லும் மேற்குலகம் அதிக புரதம் உள்ள பருத்தி விதையையும் அரவணைக்கலாம். இப்போதைக்கு ஆய்வு சாலையில் உள்ள இந்த முயற்சி சந்தை மயமாகிறதா என பார்க்கலாம்.

எந்த அப்பாவாது நீ பருத்திக் கொட்டை திங்கதான் லாயக்கு என திட்டினால் நல்ல உடல்நலத்தை பார்க்க சொல்கிறார் என மகிழலாம்.

Monday, November 20, 2006

மேய்ச்சல் 1

மற்றுமொரு தேங்ஸ் கிவ்விங் டே வந்து விட்டது. கண்ணை கட்டி திறப்பதாய் காலம் நகர மீண்டும் முளைத்து நிற்கிறது. தொடர்ந்தாற் போல் நான்கு நாட்கள் விடுப்பு. நவம்பர் மாத கடைசி வாரத்தின் வியாழனில் இப்பண்டிகை கொண்டாப்படுகிறது. அமெரிக்க மரபுபடி இந்நாளில் வான்கோழி உணவு சாப்பிட்டு இரவு உணவு நடக்கும். நம்ம ஊர் பக்கம் தீபாவளி சமயங்களில் வான்கோழி பிரியாணி திடீர் கடைகள் தோன்றுவதை பார்த்திருக்கிறேன்.

அக்காலத்தில் குடியேறிய அமெரிக்க மூதாதைகள் இங்கிலாந்தின் உழவர் திருநாளை இங்கு தேங்ஸ் கிவ்விங் டேயாக கொண்டாட ஆரம்பித்தார்கள் என உடன் வேலை பார்க்கும் அமெரிக்க தோழர் கூறினார்.

இப்பண்டிகைக்கு அடுத்த நாள் கறுப்பு வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஆடிமாச சிறப்பு தள்ளுபடி கும்பல் போல் கறுப்பு வெள்ளி அன்று இங்குள்ள கடைகளில் கும்பல் அள்ளும். காலை இரண்டு மணி வாக்கில் இருந்தே கடுங்குளிரில் நின்று இந்த தள்ளுபடி விற்பனைக்கு கும்பல் காத்திருக்கும்.முதல் நாள் செய்திதாளில்தான் இந்த தள்ளுபடி பற்றிய அறிவிப்புகள் வரும். காலை ஆறு மணிக்கெல்லாம் எல்லா செய்திதாளும் விற்றுப் போகும்.

போன வருடம் மனையாள் அலுவலகம் சென்று விட நானும் நண்பன் ஒருவனும் வீடியோ கேம் நாள் என கறுப்பு வெள்ளியை எக்ஸ் பாக்ஸூடன் கொண்டாடினோம். இந்த முறை முதன் முறையாக அம்மா, அப்பா மற்றும் மகளுடன். வீடியோ கேம் வீட்டின் அடித்தளத்தில் படுத்துக் கொண்டு பார்க்கும் போதேல்லாம் என்னை பார்த்து புலம்பிக் கொண்டே இருக்கிறது.

செய்திகளில் வாசிக்கையில் குவாண்டம் கணிப்பொறி பற்றி படித்தேன். அசாத்திய ஆற்றல் உடையதாய் அதை பற்றி சொல்லியிருந்தார்கள். அமெரிக்காவின் உடா மாகணாத்தை சேர்ந்த ஆய்வுக்குழு ஓன்று சிலிக்காவில் பொதிக்கப்பட்ட பாஸ்பரஸின் அணுக்களின் சுழற்ச்சியில் தகவலை பொதித்து அதை படிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். குவாண்டம் கணிணி தொழில் நுட்பம் அதன் முதல் அடிகளில்தான் இன்னும் இருக்கிறது.

தற்போதுள்ள கணிணிகளில் தகவல் 0 மற்றும் 1 என பிட்ஸ்(bits) ஆக சேமிக்கப்படுகிறது. ஓவ்வொரு பிட்டும்(bit) 0 அல்லது 1 என்ற நிலையைதான் சேமிக்க முடியும். குவாண்டம் கணிணி நுட்பத்தில் க்யுபிட்(qubit) என்பதில் தகவல் சேமிக்கப்படுகிறது. ஓரு க்யுபிட் என்பது 0 மற்றும் 1 என்ற இருநிலைகளிலும் ஓரே சமயத்தில் இருக்க முடியும். ஆக சாதாரண பிட்டை விட க்யுபிட்டில் இரு மடங்கு தகவல் சேமிக்க முடியும். அப்படியானால் இதன் ஆற்றலை கற்பனை செய்து பாருங்கள்.

தற்போதைய யுடா சோதனையில் தனிப்பட்ட அணுவின் சுழற்சியை படிக்க முடியவில்லை. ஆனால் ஓரே நேரத்தில் 10,000 அணுக்களின் சுழற்சியை படிக்கும் முறை வரை வந்திருக்கின்றனர். இதற்கு முந்தைய முயற்சிகளில் 10 பில்லியன் அணுக்களின் சுழற்சியையே படிக்க முடிந்தது. அதனோடு ஓப்பிட இது பெரிய முன்னேற்றம்.

மேலும் தகவல்களுக்கு

சென்ற வார இறுதியில் எம்டன் மகன் என்ற படம் பார்த்தேன் சாவு வீட்டின் நகைச்சுவை நன்றாய் வந்திருந்தது. தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அதன் தாக்கம் இயக்குனரிடம் உண்டு.கிளைமாக்ஸ் காட்சி அதற்கு உதாரணம். ஓரு பாட்டில் பணக்காரனாய் மாறுவதை எப்போதுதான் நிறுத்த போகிறோமோ? பரத் நன்றாக செய்கிறார். கோபிகா வடிவாய் இருக்கிறார். யுகபாரதியின் கோலி குண்டு பாடல் ரசிக்க வைக்கிறது.

சாக்லேட் சாப்பிடுவது பற்றி சுவையான தகவல் ஓன்றை என்.பி. ஆர் ரேடியோவில் கேட்டேன். சக்கரை இல்லாத சுத்தமான சாக்லேட் இதயத்திற்கும், குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் நல்லதாம். இது எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த மருத்துவர்களின் ஆய்வு முடிவு. சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்ட்ஸ் என்னும் கெமிக்கல் இக்தகைய நல்லதை செய்யும். அதற்காக தட்டு நிறைய அள்ளி வைத்து சாப்பிட வேண்டாம். அது என்றும் நல்லதற்கில்லை.

Wednesday, November 15, 2006

விழா

உச்சி வெய்யில் பளிச்சென்று இருந்தது. மாணவர்கள் வரிசையாய் மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.சண்முகத்துக்கு வெயில் தலையில் அடித்தது. சட்டை வேர்த்து உடலோடு ஒட்டிக் கொண்டது. விடுமுறை நாளுக்கும் வீட்டில் இருக்க முடியவில்லையே என ஏக்கமாய் இருந்தது. முன்னால் நின்று கொண்டிருந்த சத்திய சீலன் சற்று முன் கால் வலிக்கிறதென உட்கார பிடி மாஸ்டர் கணபதி வெளு வெளு என்று வெளுத்து விட்டார். சுற்றும் பார்த்தான். பி.டி மாஸ்டர் மூன்றாம் கிளாஸ் பசங்களை ஐந்தாறு வரிசை தள்ளி விரட்டிக் கொண்டிருந்தார்.

"சார் " - சண்முகம் சத்தமாய் கூப்பிட்டான்.

"என்னடா"- கணபதி வேகமாய் வந்தார். ஞாயிற்று கிழமையும் அதுவுமாய் தாலி அறுக்கிறார்களே என கோபமாய் இருந்தார்.

"தலை சுத்துது சார். மயக்கமா இருக்கு சார். ஓடி போய் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வந்திடறேன்"- சண்முகம்

அவர் கையில் இருந்த பிரம்பு சுழன்றது. சண்முகத்தின் பின்புறத்தில் நிச்சயம் ஒரு கோடு விழுந்திருக்கும்.

"ஏமாத்தவாடா பாக்கறே. உன்னோடத்த பசங்கதானே மத்தவன்லாம். அவன்லாம் நிக்கல. எவனும் நகர கூடாது. காலைல பத்து மணிலருந்து கஷ்டப்பட்டு இப்பத்தான் வரிசைல நிக்க வச்சிருக்கேன். எவனாவது நகர்ந்திங்க பின்னிடுவேன் பின்னி. மினிஸ்டர் வந்து போன பின்னாடிதான் நகரனும்."-கணபதி

***************
வெயில் இன்னும் ஏற ஆரம்பித்தது. கணபதி மெல்ல நடந்து மைதானத்தின் ஓரமாய் மர நிழலில் நின்று கொண்டார். ஏற்கனவே கணக்கு வாத்தியார் பரமசிவன் அங்கே நின்று கொண்டிருந்தார்.

"என்னா சார் இது. இன்னைக்கு வயலுக்கு போகனும். இங்க வந்து நிக்க வேண்டியிருக்கு. அந்தாளு பதினோறு மணிக்கு வரேன்னான். இப்ப மணி ஓன்னாச்சு இன்னும் காணலே. இவனுங்க போஸ்டர் ஒட்டிக்க நாம காய வேண்டியிருக்கு" - பரமசிவன்

"ஆமா சார். ஞாயித்து கிழமையாச்சே. சித்த சாப்பிட்டோமா, தூங்கினோமானு இருக்கும். இன்னைக்கு எல்லாம் போச்சு. காலாண்டு தேர்வே முடிஞ்சு போச்சு. இப்ப போய் புத்தகம் இலவசமுனு கொடுக்கறானுங்க. இந்த கூத்துக்கு நாம வேற வந்த நிக்க வேண்டியிருக்கு. மினிஸ்டருக்கும் அறிவில்ல. அவன் கூட இருக்கவனுக்கும் அறிவில்ல."-கணபதி

"பத்து புள்ளைகளுக்குதான் வேற தாரானுங்க. அதுக்குதான் இத்தனை அலம்பல். அந்த பத்தும் பாத்திங்களா, நம்ப பள்ளிக்கூடமே இல்லை. கட்சிகாரன் புள்ளைங்க. பாவம் நம்ம நண்டும் சிண்டுந்தான் வெயில்ல கருகுதுங்க"- பரமசிவன்.

"நீங்க வேற. ஆயிரம் புள்ளைங்களுக்கு இலவச புத்தக கணக்கு காட்டியாச்சு. காசும் கை மாறியாச்சு, இப்ப பண்ணறது வர எலக்ஷனுக்கு கொசரம். மினிஸ்டருக்கே இவனுங்க பண்ணி கூதல் முழுசா தெரியுமானு தெரியல"-கணபதி
***************

சண்முகத்துக்கு கண்கள் இருள ஆரம்பித்தது. நாக்கு வரண்டு உதடு ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. பசி வேறு வயிற்றை கிள்ளி கொண்டிருந்தது. அழுகையாய் வந்தது. மர நிழலில் நிற்க்கும் வாத்தியாரை பார்த்தான். கை பிரம்பு இடதும் வலதும் நகர்ந்து பெண்டுலம் போல் இருந்தது.

தரை நழுவுவது போல உணர்வு ஏற்பட்டது.மயங்கி விழுந்தான். விழுந்த சுருக்கில் வரிசையில் சலசலப்பு ஆனது. கணபதி ஓடி வந்து, ஞாயித்து கிழமை தூக்கம் போன வேதனையில் பிரம்பால் இரண்டு அடி விட்டார். சண்முகம் அசைய கூட இல்லை. அதற்க்குள் இரண்டு கரை வேட்டியும், அசிஸ்டன்ட் எஜிகேஷன் ஆபிஸரும் ஓடி வந்தார்கள்.

"யோவ் வாத்தியாரே. என்னையா இதெல்லாம். நீ பார்க்கறதில்லையா. மினிஸ்டர் ஐயா வர நேரம் ஆச்சு. இந்த பயலை தூக்கிட்டு போய் ஸ்கூல்குள்ள போடு"- கரை வேட்டி ஓன்று.

கணபதிக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. இதில் கரை வேட்டி ஓருமையில் பேசியது வேறு கோபம் வந்தது. ஆனால் கரை வேட்டியை பார்த்த பயம் கோபத்தை தின்று விட்டிருந்தது.

"சார் நான் தூக்கிட்டு போறேன். நீங்க பசங்க வரிசை கலையாம பார்த்துகுங்க. மினிஸ்டர் ஐயாவுக்கு டிசிப்ளின்னா உயிரு"- எஜிகேஷன் ஆபிஸர்.

சண்முகத்தை தோளில் போட்டுக் கொண்டு கொண்டு ஓடினார்.

"நம்ம ஆளுங்க இரண்டு பேரையும் இங்க ஓரு கண்ணு வச்சுக்க சொல்லு. இன்னும் ஏதேனும் மூதேவி மயக்கம் போட்டா உடனே எடுத்திட சொல்லு. வூட்டை விட்டு கிளம்பும் போதே அம்மா மூஞ்சில முழிச்சிட்டு கிளம்பினேன். தாலியறுத்த மூஞ்சை பார்த்திட்டு போகாதிங்கனு வீடல சொல்லியும் கேட்காம அவசரத்தில ஓடி வந்திட்டன். கருமம் இங்க இப்படி ஆகுது."- கரை வேட்டி இரண்டு புலம்ப ஆரம்பித்தது.

கரை வேட்டி ஓன்று காலையில் தான் யார் மூகத்தில் முழித்தோமென யோசிக்க ஆரம்பித்தது.

கணபதி பதட்டமாய் லேசாக கலைந்த வரிசைகளை ஓழுங்கு படுத்த ஆரம்பித்தார்.

********************

அசிஸ்டென்ட் எஜிகேஷன் ஆபிஸர் மைதானத்தில் இருந்து கொண்டு வந்த சண்முகத்தை மேடைக்கு பின்புறம் போய் பெஞ்ச் ஓன்றில் படுக்க வைத்தார். தண்ணீரை தேடி சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்தார்.

"சார் உங்களை எங்கெல்லாம் தேடுறது. மினிஸ்டரோட ஓன்னு விட்ட மச்சினி கூப்பிடறாங்க. அவங்களுக்கு மினரல் வாட்டர் எடுத்து வரச் சொன்னா சாதா தண்ணீயை கொண்டு போய் கொடுத்திடிங்களாமே"- தலைமயாசிரியர் வேர்த்து விறுவிறுத்து ஓடி வந்தார்.

அசிஸ்டென்ட் எஜிகேஷன் ஆபிஸருக்கு பேச்சு மூச்செல்லாம் நின்றிடும் போல் இருந்தது. ஏதாவது தண்ணியில்லா காட்டுக்கு மாற்றல் வந்தால் என்ன செய்வதென்ற கவலையும் வந்தது.

"அப்படி கொடுப்பேனா சார். ப்யூன் ராஸ்கல் மினரல் வாட்டர்னுதான் சொல்லி க்ளாக்ஸை கொடுத்தான். அவனை என்ன பண்ணறேன் பாருங்க'- சொல்லிவிட்டு தலை தெறிக்க அந்த அம்மாவை பார்க்க ஓடினார்.

தலைமை ஆசிரியரும் நடக்க போகும் கூத்தை பார்க்கும் ஆர்வத்தில் பின்னால் ஓடினார். சண்முகம் வெய்யில் கிடந்தான்.

**************************

கூட்டம் முடிகையில் மூன்று மணியாகி விட்டது. வெயில் அதிகமாக இருந்ததால் ஏசி காரில் வந்த ஏழை பங்காள தலைவர் குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலமென முழங்கி, உண்மை , நேர்மை, கடமை பற்றி அறிவுறுத்தி, எதிர் கட்சிகாரனுக்கு எச்சரிக்கை விடுத்து இலவச புத்தகம் பத்து பிளைகளுக்கு கொடுத்து விட்டு ஓய்வெடுக்க ஏசி அறை தேடி சென்று விட்டார்.

தலைவர் என்னமா பேசினாரென கட்சிக்காரர்கள் பெருமையாடு பேசிக் கொண்டனர். வள்ளுவருக்கு அப்புறம் சுருங்க சொல்லி இவ்வளவு அர்த்தமா பேசறது தலைவர் ஓருத்தர் தானேன கரை வேட்டிகள் சொல்லி பெருமை பட்டுக் கொண்டனர்.

பிள்ளைகள் பசியோடு வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தனர். சத்திய சீலன் சண்முகத்தை தேடி பள்ளியை சுற்றி வந்து விட்டு மேடைக்கு பின்னால் போன போது சண்முகத்துக்கு மூச்சு காற்று இல்லை.

விளையாட போன சண்முகம் தடுக்கி விழுந்து தலையில் காயம் பட்டு இறந்து விட்டதாக கட்சிக்காரர்கள் சொன்னார்கள். யாரும் அதை மறுக்கவில்லை.

Monday, November 13, 2006

செய்திகள் இரண்டு

நாம் எதில் மிக திறமையானவர்களாக இருக்கிறோமோ அதை முழுக்க தொழில் ரீதியாக பயன்படுத்தும் வாய்ப்பை அவுட்சோர்சிங் இந்தியர்களுக்கு கொடுத்திருக்கிறது. இன்றைக்கு ஐபின்-சிஎன்என் நியுஸை மேய்கையில் பெங்களுரில் இருக்கும் ப்ரிக் வொர்க் எனும் கம்பெனி அமெரிக்க செனட்டருக்கு பேச்சு எழுதி கொடுத்திருக்கிறது.

சந்தைமயமாக்கப்படுதல் எல்லா வகை திறமை வாயிலாக பணம் ஈட்ட வழி செய்கிறது. அமெரிக்காவின் ஆரிகான் மாகாண செனட்டர் ப்ராங் மார்ஸ் என்பவருக்கு இவ்வுரை எழுதி வழங்கப்பட்டுள்ளது. இவர் புஷ் கட்சியை சேர்ந்தவர். நான் பேச நினைப்பெதெல்லாம் நீ எழுத வேண்டும் என்று காலாட்டிக் கொண்டு பாடிக் கொண்டு இருந்தால் கை மேல் பேச வேண்டியது உட்காரும் காலம் வந்து விட்டது.

பெங்களூரில் இருந்து இயங்கும் உஜ்ஜிவன் என்னும் மைக்ரோ நிதி நிறுவனம் பற்றியும் செய்தி இருந்தது. முகமது யுனுஸின் சிந்தாந்தங்களை பின்பற்றி பெங்களூரில் இயங்குகிறார்கள். இரண்டாயிரத்து ஓன்றாம் ஆண்டின் கணக்கு படி பெங்களூரின் மக்கள் தொகையில் 35 சதவீதம்
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள். இப்போது இன்னமும் இது அதிகரித்து இருக்கலாம். இதனை நிறுவியவர்களில் நியுக்ளியஸ் மென்பொருள் நிறுவன தலைவரும் உண்டு. இவர்கள் சேவை அடித்தட்டு மக்களுக்கு எவ்வாறு போய் சேருகிறதென பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, November 9, 2006

உத்தமர்

இலவச வேட்டி ஓன்று
இரு கோவணமாச்சு
இடையில் நடந்த ஊழலில்

ஆதியில் உடுத்தது இதுதானென
ஆள்பவன் பிரச்சாரம் பேச
வழக்கம் போல் தலையாட்டி
வக்கணையாய் கைதட்டி நாங்கள்

இவனாவது வேட்டியை கோவணமாக்கினான்
அவனிருந்தால் கட்டியிருப்பதும் காணாமல் போகும்
அவனோடு பார்க்கையில் இவன்
என்றும் உத்தம கொளுந்து

Monday, November 6, 2006

கிப்ரா எனும் புரதம்

ஞாபகம் என்பது மூளையில் எங்கிருக்கிறது? எது ஞாபகத்தை உருவாக்குகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலாக ஜெனிடிக் அறிவியலார்கள் ஞாபகத்துக்கு சொந்தமான ஜீனை கண்டறிந்து விட்டார்கள்.

கிப்ரா எனும் அந்த அற்புதமான ஜீன் ஞாபகங்களின் காரணமாக அடையாளம் காண பட்டதன் விளைவாக மருத்துவ உலகில் பல புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.ஆயிரம் வேறு வேறு ஞாபக திறனுள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஜெனிடிக் ப்ளுபிரிண்ட்களை ஆராய்ந்து இந்த ஜினை கண்டுபிடித்துள்ளார்கள்.

ஞாபகம் ஒரு மனிதனையும், மனிதத்தையும் வரையறுக்கிறது.ஞாபகத்தின் மூலம் வழியே இனி ஞாபகத்திற்கும் அளவுகோல் கொணர முடியும்.

இந்த ஜீன் மூளையின் ஞாபகங்களுக்கான பாதையென வழங்கப்படும் ஹிப்போகேமஸ் என்னும் இடத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஹிப்போகேமஸ் மூளையின் டெம்போரல் லோபுக்கு கீழே இருபுறமும் உண்டு. அல்சைமர் நோயினால் பாதிப்பு வருகையில் ஹிப்போகேமஸ்தான் முதலில் சேதம் ஆகிறது. இந்த பகுதியின் பாதிப்பு அண்டேராகிரேட் அம்னிசியா என்ற புதிய ஞாபகங்களை சேமிப்பதை தடுக்கும் வியாதியையும் உருவாக்கலாம்.

அல்சைமர் நோய் உடையவர்களுக்கு கிப்ரா மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.கிப்ராவை பற்றிய இந்த ஆராய்ச்சி கடைகளில் கிடைக்கும் மருந்தாக மாற சிறிது காலம் எடுக்கும்.

இந்த ஆராய்ச்சியை டி ஜென் என்னும் அரிசோனாவை சேர்ந்த ஆராய்ச்சி குழுமத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.இந்த சோதனையின் முடிவுகளை மறு ஆய்வின் மூலம் உறுதியும் படுத்தப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களுக்கு

Friday, November 3, 2006

கடலுணவு

வீட்டில் அம்மா சைவமாக இருந்ததால் அசைவம் சாப்பிட பழகின காலங்களில் முழுக்க முழுக்க ஹோட்டல்களில் மட்டன் வகையறாவில்தான் வாழ்க்கை இருந்தது. ஓரு நாள் அக்கா கையால் வறுத்த மீன் சாப்பிட எல்லாமே மாறி போனது. சாப்பிட்டது என்ன மீன் என்று நியாபகம் இல்லை. ஆனால் அந்த ருசி இன்னமும் மனசில் உண்டு. அப்போது தஞ்சை பக்கம் வீடு. அக்கா வீட்டு மீனுக்காக திருச்சி வர ஏக்கமிருக்கும்.

அமெரிக்கா வந்து பிரம்மசாரியாய் இருந்த போது கோழிதான் பிராதான அசைவ உணவு. அறை நண்பர்களின் அற்புத சமையல்களில் வகை வகையாய் கிடைத்தது. மீன் சமையல் செய்தல் யாருக்கும் புலப்படவில்லை. நல்ல மீன் வருவல் வெளியிலும் கிடைப்பதில்லை. அப்போது கிரிலில் வாட்டி எடுத்த அமெரிக்க மீனிற்கு நாக்கு பழகவில்லை.

ஆரம்ப காலத்தில் கிராப் கேக் என்ற நண்டு உணவு மட்டும் மிக பிடிக்கும். அதை மட்டும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்போது இந்த ஊர் கடல் உணவும் பழகி விட்டது.

இன்று காலை அலுவலகம் வரும் போது என்.பி.ஆர் வானோலியில் அதிர்ச்சி தரும் செய்தியை கேட்க நேர்ந்தது. 2048ல் கடலுணவு எல்லோருக்கும் சாத்தியமில்லை என்று சொன்னார்கள். அதிகப்படி மீன் பிடிப்பும், மாசுப்படுத்தப்பட்ட இயற்கை சூழல்களும் கடல்வாழ் உயிரிகளின் இருப்பை பெரிதும் பாதிக்கின்றன. 1960ல் இருந்து மீன் பிடிப்பது கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இந்த நிகழ்வை எதிர்பார்க்கின்றனர். காரை நிறுத்தி விட்டு நடந்து செல்லாமா என்று யோசித்தேன். என் காரும்தானே சுற்று சூழலின் மாசுக்கு ஒரு காரணம்.நடைமுறையில் சாத்தியமானது அலுவலக பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்தி அலுவலகத்திற்கு நடப்பது மட்டுமே.

மீன் பிடித்தல் பலரின் வாழ்க்கை முறையாய் உள்ளது. அவர்களது அன்றாட வாழ்வும் இது போல் கடல் உயிர்கள் அரிதாவதால் பாதிக்கப்படும். கவலையான விஷயம்.

இதை தவிர்க்க கடலுக்குள் கடல் உயிர்களுக்கான சரணாலயமும், மீன் பிடிப்புகள் தடை செய்யப்பட்ட பகுதிகளும் வர வேண்டியிருக்கும். இது போல் கொணர்தலின் பயன் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் சில இடங்களில் வெளிப்படையாக உள்ளது.

ஏற்கனவே மாசுப்பொருள்களால் உலகில் ஏறி வரும் வெப்பம் துருவ முனைகளில் பனி உருகுதலை அதிகப்படுத்தி உள்ளது. அதன் விளைவுகளையும், கட்டுப்படுத்தும் முறை பற்றியும் விவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன. அதன் பக்க விளைவுகளாய் ஏற்படும் கடல் உயிரிகளின் பாதிப்பும் எதிர்கால மாசுக்கட்டுப்பாடு பற்றிய திட்டமிடல்களின் அவசியத்தை இன்னமும் அதிகமாய் வலியுறுத்துகின்றன.

Thursday, November 2, 2006

இலவசம்

இலவசமாய் கிடைத்தால்
இனிப்பாய்தான் இருக்கிறது
பனி போல் கரைந்தாலும்
பாவனையாய் சுகமுன்டு

மூன்று நாள் மழையில்
மூழ்கி போன வீட்டுக்குள்
ஓரு வேளை உணவுக்கும்
ஓட்டாண்டியாய் ஆக
வரிசையில் நின்று
வக்கனையாய் அரைபடி அரிசியோடு
வேட்டி சேலை வாங்கையில்
வாயெல்லாம் பல்தான் வருகிறது

இலவசமாய் கொடுத்தேன் என்றும்
இறைவன் நானே என்றும்
சுவரோட்டியில் சிரிக்கிறார்
சுந்தரமாய் தலைவர்
கையெடுத்து கும்பிட்டு
அடுத்த வருட மழைக்கு
அடியெடுத்து நாங்கள்

கர்ணணுக்கு பிறப்பில் உண்டு
கவச குண்டலம் உடலோடு ஒட்டி
எங்களுக்கும் பிறப்பில் உண்டு
வழிந்தோடும் தெருக்களும்
வாய்க்கரிசி இலவசமும்
வாழ்வோடு ஒட்டி

தண்ணீருக்குள் தலை முங்கி
மூச்சு தடுமாறும் வேளையில்
முடி பிடித்து அழுத்துபவன்
சிறிதேனும் வெளி இழுத்தாலும்
தயை கொண்டு
தானம் செய்தவனாகிறான்
இங்கு சலவை செய்த
சட்டை இல்லையானாலும்
மூளைகள் நிறைய உண்டு

Wednesday, November 1, 2006

ரெஸ்வெர்டால்

ஆராய்ச்சியாளர்கள் சிகப்பு வைனில் உள்ள ரெஸ்வெர்டால் என்ன மூலக்கூறு ஆயுளை கூட்டும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

குண்டு வெடிப்பு, கொசுக்கடியெல்லாம் இது போக்காது. அதையெல்லாம் தாண்டி பிழைத்து இதை அருந்தும் போது ஆயுள் நீளும்.

டையட் இருந்து உடம்பை காய்த்து நாக்கு செத்து போவது தண்டனைதான். ரெஸ்வெர்டால் இது போன்ற டையட் முறைக்கு மாற்றாயும் வரும்.

நாம் சாப்பிடும் அதிக கலோரி உணவின் கெடுதல்களை கட்டுப்படுத்தும் திறனும் இந்த மூலக்கூறுக்கு உண்டு. ஆந்திரா மெஸ் போகும் போது முழு மீல்ஸ் சாப்பிட்ட யோசிக்க வேண்டாம்.

எலிக்கு கொடுத்து பரிசோதித்து பார்த்துள்ளார்கள். நன்கு வேலை செய்துள்ளது. இன்னமும் இதிலிருந்து மருந்து செய்யவில்லை.

ரத்தத்தில் சக்கரை அளவையும் கட்டுப்படுத்தும் திறனும் இந்த மூலக்கூறுக்கு உண்டு. டையாபடீஸ் பயம் உள்ளவர்களும் இது நல்ல செய்தி.