Wednesday, September 27, 2006

மரபெனும் பார்த்தீனியம்

இப்படிதான் இருக்க வேண்டும்
அப்படிதான் இருக்க வேண்டும்
என்றார்கள்
அவர்கள் சொன்ன
இப்படியும் அப்படியுமில்
அடங்கி முடங்கினோம்
விதைகள் சில
எங்கள் தோட்டத்தில் விழுந்தது
நாங்கள் அதை கவனிக்கவில்லை

ஏனடா இதுவென
கூடி பேசிய பொழுது
இப்படிதான் பேச வேண்டும்
அப்படிதான் பேச வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
பேசாமல் எழுதி கொடுத்தை
வாசிக்க ஆரம்பித்தோம்
வாசிப்புக்குள் பேசவும் கற்றோம்
மெல்ல களைகள் விதை
தாண்ட ஆரம்பித்தன
நாங்கள் அது தரும்
நிழலுக்குள் ஒன்டிக் கொண்டோம்


குரங்கை போல கேள்விகள்
தொங்க தடியாலும் தட்டினார்கள்
எல்லாம் ஒடுங்கி போக
பழக்கி கொண்டோம் எங்களை
அப்போதே
ஏதேனும் கேட்டிருக்கலாம்
எழுந்து நின்றிருக்கலாம்
களை அகற்றியிருக்கலாம்
எனக்கென்ன என
இருந்து விட்டோம்

கண்ணுக்கு தெரிந்தே
பார்த்தீனியம் படர்ந்தது
எங்கள் இருப்புக்குள்
அதற்கு
மரபெனும் பெயரும் வந்தது
பெயர் வந்த பின்
யாரேனும் வெட்டப் போனால்
தோட்டத்தை கெடுக்காதேவென
பசுமை புரட்சி பேசுகிறார்கள்

பசுமைக்கென்ன கேடு
இந்த பார்த்தீனியம் பிடுங்கி
கொஞ்சம் வேப்பமரம் வைத்தால்
வெட்டவா சொல்ல போகிறோம்

No comments: