Saturday, September 2, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமானு கேட்கப்படும் கேள்வி இடத்தை குறித்து பொருள் மாறும்.

நசுக்கப்பட்ட, நசுக்கப்பட்டு கொண்டிருக்கும் சக மனிதன் தோழா கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா நாங்களும் மேலே வருகிறோம் என்று கேட்கலாம். பதிலுக்கு நாலு படி மேல வந்திருக்கவுங்க, கீழே பத்து பேர் இருக்கானேனு கொஞ்சம் கையை நீட்டி இரண்டு இரண்டு பேரா தூக்கி விடலாம். நல்ல வளமுள்ள சமுதாயத்துக்கு இது உதவும்.

சவுத் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில சாப்பாடுக் கடையில போய் லிப்ட் கொஞ்சம் கிடைக்குமானு சொன்னிங்கனா என்ன லிப்ட் வேணும் கேட்டு குடிக்க கோக் ஒன்னு தருவாங்க. கோக் நிறுவனம் நாட்டுக்கு நல்லதா கெட்டதா? இல்லாட்டி கோக் குடிச்சா உடல் ்நலத்திற்கு நல்லதா கெட்டதானு விவாதம் பண்ணிக்கிட்டு லிப்டை உள்ளே விட்டுக்கலாம். நல்ல அசைவம் சாப்பிட்டு கோக்கை உள்ளுக்கு விட்டா சுகம்தானே.

ஓரு மருத்துவரிடம் போய் அம்மணி ஓன்னு ஐயா எனக்கு கொஞ்சம் லிப்ட் கிடைக்குமானு விசாரிச்சு மேஸ்டாபெக்ஸி செஞ்சுதுனு வைங்க, அம்மணிக்கு இரசிகர் மன்றம் தமிழ் நாட்ல அதிகமாகலாம். இலக்கிய காலம் தொட்டு இன்னைய காலம் வரைக்கும் கிட்டதட்ட தமிழர்கள் ஓற்றுமையா ஓரே மாதிரி இரசிக்கிற விஷயங்கள்ல இது உண்டு. பண்ணிவங்க நடிகையா இருந்தா அரசு பதில்கள்ல அதை பத்திய விவரம் வரும்

கார்பரேட் கலாச்சாரத்தில கொஞ்சம் லிப்ட் கிடைக்குமானு கேட்டா அதோட பொருள் வேற. சின்ன சின்ன பொறுப்புகளிலிருந்து ஜூனியர் குடும்ப உறுப்பினர்கள் மேல பெரிய பதவிக்கு வரும் போது, சீனியர்களிடம் கேட்பது வழக்கம். இது இயற்கையாக நடக்கிறதுதான். இதை நாம அம்பானி குரூப், டாடா, பல மாநிலங்களின் ஆளும் கட்சிகள், எதிர் கட்சிகள் ,கூட்டணி கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் போன்ற நிறுவனங்களில் பாக்கலாம். குடும்பத்தின் சொத்துக்களை சிதறாம பாதுகாக்க அடித்தளத்திலேருந்து வாரிசுகளை வளர்ப்பாங்க, அதனால அவங்களுக்கும் நிறுவனத்தோட கஷ்ட நஷ்டங்களும் பிரச்சனைகளோட நெளிவு சுளிவுகளும் தெரியும். எடுத்தவுடன் தலைக்கு கீரிடம் வந்தா அதை சமாளிக்க கூடிய பக்குவமிருக்காது, இந்த மாதிரியா வேர்களிலிருந்து வளர்ந்தா நிறுவனத்திற்கும் நன்று, நிறுவனத்திலிருந்து பயன் பெறுவோர்க்கும் நன்று.

விமானம் ரன்வேல கிளம்பையில லிப்ட் கொஞ்சம் கிடைக்குமானு பைலட் கோ பைலட்டுட்ட கேட்க வாய்ப்பிருக்கு. லிப்ட்தான் விமானத்தை பறக்க ்வைக்குது. விமானத்தின் எடையை சம்ப்படுத்தி விமானத்தை வானில் செலுத்த இதுவே அடிப்படை. அடுத்த ்முறை பறக்கையில் நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்குனு பாடி லிப்ட்டுக்கு நன்றி சொல்லலாம்

வெளிநாட்டு படம் பார்க்கும் நண்பர்களிடம் லிப்ட் கிடைக்குமானு கேட்டிங்கனா ஒரு டிவிடியோ, இல்லையென்றால் வீடியோ கேசட்டோ கொடுப்பாங்க. டச்சு நாட்டு திகில் படம். நடுராத்திரி போர்வையை போர்த்தி விளக்கனைத்து உன்னிப்பாக பார்த்தால் பயம் அல்லது தூக்கம் இரண்டில் ஒன்று வர வாய்ப்புண்டு.

எலிவேட்டர் நிறுவனத்திடம் சென்று கொஞ்சம் லிப்ட் கிடைக்குமாவென கேட்டால் இரவோடி இரவாக விற்பனை பிரதிநிதி அனுப்பி கொஞ்சமென்ன முழு லிப்டே தருகிறோமென சொல்வார்கள். பீகாரில் ஏழைப் பங்காளன் வீட்டில் லிப்ட் இருந்ததாம். கேட்கவே மகிழ்ச்சியாய் இருந்தது. லிப்ட் வைத்திருப்பவனே ஏழைப் பங்காளேன்றால் மாநிலம் எவ்வளவு செழிப்பாய் இருக்க வேண்டும்.

கையை காட்டி நடுராத்திரி ஓரு வயசு பொண்ணா, வயசை தாண்டின பொண்ணோ ரோட்ல லிப்ட் கிடைக்குமானு கேட்கையில அங்க சில பேருக்கு கொஞ்சம் சூடு தணிவிக்கப் படலாம் , இல்லாட்டி சில பேருக்கு வரக்கூடாத வியாதிய வர வைச்சுக்க வேண்டிய நேரமா இருக்கலாம். இது ரெண்டும் இல்லாம யாருக்கோ போக வேண்டிய இடத்துக்கு வேகமாக போக வேண்டிய அவசியமிருக்கலாம்.

கொஞ்சும் கிளி ஓன்று லிப்டுலிப் கொஞ்சம் கிடைக்குமாவென் அவசரத்திலும் மற்றும் சுற்றி சப்தமாய் இருக்கும் வேளையிலும் கேட்க யாருக்கோ அது லிப்ட் கொஞ்சம் கிடைக்குமாவென காதில் விழுந்து கேனையன் ஆகவும் வாய்ப்புண்டு.

தேன்கூட்டில் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமாவென கேட்கையில் கதைகளும், கவிதைகளும் மற்றும் கட்டுரைகளும் கிடைக்கிறது.

No comments: