Sunday, April 29, 2007

ப்ரஸ்டீஜ்-திரைவிமர்சனம்

ஆங்கில படம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகின்றன. அவ்வப்போது லார்ட் ஆப் தி ரிங்ஸ் தொலைக்காட்சியில்(தொடர்சியான மறு ஒளிபரப்பு) பார்ப்பதோடு சரி. முழு அளவில் போக்கிரி ஆரம்பித்த சகல தமிழ் திரைப்படங்களோடு வாழ்க்கை.

மதியின் ப்ரஸ்டீஜ் குறித்த விமர்சனம் படித்த போது இந்த படம் பார்க்காமல் விட்டது நியாபகம் வந்தது. இன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்டோபர் நோலன் தரமான இயக்குனர். அருமையான திரைக்கதையோடு படம் நகர்கின்றது.

இரண்டு தொழில் முறை மேஜிக் வித்தைகாரர்களை குறித்த கதை. எடிசன், டெஸ்லா போன்ற மின்சார கண்டுபிடிப்பாளர்களும், எடிசனின் குரூரமான வியாபார தந்திரங்களும், டெஸ்லாவின் சிரமங்களும் பாத்திரங்களாக வருகின்றார்கள்.

லண்டனை மையமாக கொண்ட கதையில் தொழிலே வாழ்க்கையாகும் போது அதற்குன்டான விலைகளும், விளைவுகளும் படமெங்கும் வருகின்றது.

இரண்டு தனிமனித குறிப்புகள் படத்தின் பெரும்பகுதியில் வாசிக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் குறிப்பில் இன்னோரு மனிதனின் குறிப்பை ்வாசித்த அனுபவங்களை சொல்லியிருக்கின்றான். அதை அந்த இன்னோரு மனிதன் ்வாசிக்கின்றான். நல்ல உத்தி.

கதையின் மேஜிக்கின் மூன்றடுக்குகளாய் கதையில் காட்டப்படும் ப்ளட்ஜ், டர்ன், ப்ரஸ்டீஜ் என நகர்கின்றது. எல்லா திரைப்படங்களுமே இதே மாயவித்தை காட்டிதான் பார்ப்பவர்களை கட்டி போட முயல்கிறார்கள். எனக்கு கிரிஸ்டோபர் நோலனின் மாயவித்தை பிடித்திருந்தது.

ஹு ஜேக்மேன் மற்றும் கிரிஸ்டியன் பேல் கதையின் மைய மாந்தர்களாய் நடித்திருந்தார்கள். ஸ்கார்லட் ஜோகான்சன் முக்கிய பாத்திரத்தில் வருகின்றார். மைக்கேல் கெய்னும் கதையில் உண்டு.

Tuesday, April 24, 2007

தகவலறியும் சட்டமும் அரசு அதிகாரிகளும்

தகவலறியும் சட்டத்தினால் சாமான்யர்களுக்கு பயனிருக்குமா என்ற கேள்வி வருகின்றது. தகவலறியும் சட்டம் பயன்படுத்த அமைப்பு ரீதியான முறையே சரியாக இருக்கும். அமைப்பும் வலுவானதாக இருக்க வேண்டும். தனி மனிதனாக அரசு அதிகாரிகளோடு மோதும் போது அதற்கான பிரச்சனைகள் உண்டு.

யூனியன், தொழிளாளர் நலம் எல்லாம் பேசும் போது வாய் கிழியும் அரசு அதிகாரிகள் கை நிறைய காசு வாங்குவதும், அதிகார கொம்பின் உச்சாணியிலிருந்து மிரட்டுவதும் அன்றாடம் பார்க்க கூடியதே. மிரட்டுதல் எளிது. எல்லோருக்கும் பலவீனம் உண்டு. கண்டுபிடிப்பது குதிரை கொம்பு கிடையாது. மத்திய தர வர்க்கத்திற்கு வேலை, குடும்பம் இரண்டுந்தான் பொதுவாக முக்கியமானதாக இருக்கும். தகவலறியும் உரிமையை தனிமனிதன் பயன்படுத்தும் போது இந்த இரண்டை குறித்த அச்சத்தை சுலபமாக அரசு அதிகாரிகள் அவரிடத்து கொண்டு வர இயலும். பாதுகாப்பு கேட்டு தனிமனிதன் ஒரு இழவும் செய்ய இயலாது. காவல் துறை நண்பன் கதையெல்லாம் எழுத்தளவில்தான்.

ரேஷன் கார்ட் விநியோகத்தில் நடக்கும் அலுவலக முறைகேடுகளை குறித்து தகவல் அறியும் சட்டம் வழி அனுகிய ஒருவரின் கதையை தகவல் அறியும் சட்டம் குறித்த மத்திய அரசின் வலைப்பதிவில் படித்தேன். சப்பை கட்டான காரணங்களும் இழுத்தடிப்புந்தான் அங்கு பதிலாக இருந்தது. கிராம புற அதிகாரிகள் அதிக தொடர்பில்லாமல் இருப்பவர்கள். அங்கேயே இந்த கதையென்றால், நகர் புறங்களை நினைத்து பார்த்தால் பயமாக இருக்கின்றது.

மணிசங்கர் ஐயர் உரை- இ.எக்ஸ்பிரஸில் இருந்து

மணி சங்கர் ஐயர் பற்றி பெரிய கருத்தெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை.
இன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் அவர் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையை படித்தேன். அவரது உரையியின் உள்ளடக்கத்தில் முற்றிலும் ஒப்புதல் இல்லாவிட்டாலும் அவரது கருத்துகள் சில கவனத்தில் கொள்ளக் கூடியவையே.

உரையின் முழுவதினை காண இங்கு செல்லுங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மனித வள வளர்ச்சியும் தனிதனியே இயங்குவதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனித வள மேம்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென அவர் குறிப்பிடவில்லை.

இன்னமும் 700 மில்லியன் இந்திய மக்களை ்பொருளாதார சீர்திருத்தங்கள் தொடமால் பொருளாதார பின்னடைவில் இருப்பாதாக என அவர் கூறியிருக்கின்றார். 50 மில்லியன் மக்களே இந்த புதிய பொருளாதார கொள்கையால் பலனடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். என் ஐயம் என்னவெனில் இப்போது இருக்கும் 700 மில்லியன் 750 மில்லியனாக இருந்திருந்து எல்லோரும் பொருளாதார ்பின்னடைவில் இருப்பதைதான் அவர் விரும்புகிறாரா என்ன? எந்த ஒரு திட்டமும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கியே வட்ட வடிவில் விரியும். இன்று வட்டத்திற்குள் 50 மில்லியனாக இருப்பவர்கள் எல்லாம் பிறக்கும் போதே வெள்ளி ஸ்பூனோடனு பிறந்தவர்கள் எனற வகையிலேயே மணிசங்கர் பேசுவதாக தெரிகின்றது. இந்த 50 மில்லியனில் நடுத்தர, கீழ்தட்டு வர்க்கத்தில் இருந்தவர்களும் நிறைய உண்டு என்பது அவருக்கு தெரியாதா என்ன? வரும் ஆண்டுகளில் சீர்படுத்தபட்ட ்பொருளாதார திட்டங்களை தொடர்ந்து பேணுவதன் மூலம் 50 மில்லியனை 100 மில்லியனாகவும் மாற்றலாம்.

சிங்குர், நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் வந்த பிரச்சனை புத்ததேவ் பட்டார்சார்யாவின் நிர்வாக கோளாறே தவிர திட்டத்தின் குறை அல்ல. மணி சங்கர் தமிழ்நாட்டில் சீராக நிறுவப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை மறந்து விடுகின்றார். நிர்வாக கோளாறு திட்டத்தின் குறையாக முன் வைக்கப்படுகின்றது. ஊழலும், முரட்டுதனமான நிர்வாகமும் கடவுள் வழிபாடு, ஐமின் வழிபாட்டில் ஊறி போன இந்திய கலாச்சாரத்தின் எச்சமே. மக்கள் ஆட்சி , மக்கள் உரிமை என்ற கருத்தியல்களை கொண்ட கலாச்சார மாற்றமே இதற்கு மாற்று. இடைவிடாது நந்திகிராம் முன் நிறுத்தி எதிர் மறை பிராச்சாரம் கட்டவிழ்த்து தமிழகத்தில் சிறப்பான முறையில் நிறுவப்படும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை ்பின் நகர்த்துவது ஒரு வகை பிரச்சார தந்திரமே.

கோடிக் கணக்கில் திட்டங்களை போட்டு ்வறுமை அகற்ற ்நினைப்பதை விட திட்டங்கள் வழியே செல்வத்தை ்பெருக்க நினைப்பதே முக்கியமானதாகும். மான்யங்களும், உதவிகளும் படிக்கட்டுகளாக அமைந்து கீழ்தட்டு மக்களை உயர்த்த வேண்டுமே தவிர இரக்க வழி பிச்சையாக கருதப்படும் மேல்தட்டு எண்ணங்கள் தகர்க்க பட வேண்டும். ஏழை இருக்கின்றான், வறுமை இருக்கின்றது என மூலையில் உட்கார்ந்து புலம்பி ஆவது என்ன? எப்படி செல்வத்தை அவ்விடத்திற்கு கொண்டு செல்வது , அதறகான வழிகள் என்ன? என யோசிக்க தெரிய வேண்டும்.

7000 கோடி செலவில் ஒலிம்பிக் இந்தியாவில் நடப்பதை அமைச்சர் தவிர்த்து இருக்கின்றார். இது பாரட்ட பட வேண்டியதே. இந்த பணத்தை வைத்து ஒலிம்பிக் திருவிழா நடத்தி கிழிப்பதை விட இதை கொண்டு உருப்படியாக ஏதனும் செய்யலாம் என்பதை அவர் சொல்லியிருக்கின்றார். தேசிய பற்றும், பெருமையும் மனித வள குறீயிட்டில் இந்தியா மேல் வளர்வதில் உள்ளதே தவிர 7000 கோடி பணத்தில் ஒலிம்பிக் நடத்துவதில் இல்லை.

பணம் சேர்க்க நினைப்பதும், தொழில் முனைவதும், தொழிலில் வளர்வதும் குற்றமே என்ற மனப்பாங்கேதான் இது போன்ற பேச்சுகளில் தென்படுகின்றது. தொழில்களுக்கான முறையான விதிகளை உருவாக்குவது, அதை ஒழுங்காக பேணுவது, திறந்த , எளிய சட்ட அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கி நடைமுறை படுத்தும் போது இது போன்ற மனப்பான்மை குறையும்.

Monday, April 23, 2007

சாமந்தி-i

"வேலை கிடைக்குமா?"- சாமந்தி கவலையுடன் இருந்தான்

"கவலை பட்டா மட்டும் கிடைக்கவா போகுது" - ஆறுதல் சொல்ல ஆசைபட்டான் கோதுமன்

" கேயான்களோடு வேலைக்கு போட்டி போடறது ரொம்ப சிரமம்டா. என்னதான் நாம மூளையில் சிப் வைச்சிகிட்டாலும், புராஸஸிங் சக்தி அவன்களுக்கு இயல்பா கூட போயிடுது" - சாமந்தி

கோதுமன் நல்ல வேலையில் இருந்தான். உணவும், உடை, உறைவிடம் மூன்றும் சம்பளமாக உண்டு. கோதுமன் வேலை செய்வது காய்கறி உற்பத்தி செய்யும் தொழிலில், கதிரியக்க பாதுகாப்புக்கு உட்பட்ட சிறப்பு வயல்களில் அவனுக்கு காய்கறி முற்றியதும் அறுக்கும் வேலை. எந்திரங்கள் பூரணமாக தடை செய்யப்பட்ட பகுதி அது.

கோதுமன்தான் அவனது மேலாளருக்கு இரண்டு வார உண்மை காய்கறி உணவை தருவதாக கூறி சாமந்திக்கு ்வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்ப செய்தான். மாத்திரை உணவு மட்டுமே சாத்தியமான சூழ்நிலையில் காய்கறி உணவு அரசின் சுழற்சி முறையில் குடிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. வருடத்திற்கு இரண்டு ்வாரங்கள் மட்டுமே காய்கறி உணவு கிடைக்கும்.

சாமந்தி கோதுமனோடு அரசின் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவன். சிறுவயதில் வயல்களை பற்றிய பாடங்களை சரியாக கற்காமல் கணிணியோடு பொழுதை ஒட்டி விட்டடான். பூமி-i மக்கள் தொகையில் எழுபது விழுக்காடு கணிணி துறை அறிவினை கொண்டு வேலை செய்து, வேலை ்தேடுவதால் அந்த ்துறை தேக்க நிலைக்கு வந்து விட்டிருந்தது. கேயான்கள் வந்ததும் கணிணியின் தேவையும் குறைய ஆரம்பித்து விட்டது.

அது பே.பி(பேரழிவிற்கு பின்) 200 வது வருடம். உலகம் பேரழிவை சந்தித்த பின் இரண்டு நூற்றாண்டுகள் ஆகி ்விட்டிருந்தன. உலக அழிவிற்கு முன் இருந்த மத ரீதியான வருட கணிப்புகள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டு இருந்தது. ஒரு சிலர் இன்னமும் அதை உபயோக படுத்தி கொண்டிருந்தாலும் பெரும்பாலோனார் அதை பயன்படுத்துவதில்லை.

பூமி-i ன் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் பூமி-ii உடன் செய்த ஒப்பந்த அடிப்படையில் இந்த கால அளவே உபயோகப்படுத்த படுகின்றது.

பேரழிவு பூமியை இரண்டாக பிளந்து இரு துண்டுகளாக மாற்றி விட்டது. வானில் இருந்த வந்த கல் மோதி ஏற்பட்ட பாதிப்பில் சுனாமி , நில நடுக்கம் என பல வகை உப பாதிப்புகள் உண்டாகின. அதிக பட்ச கதிரியக்கம், சுற்றும் அச்சில் ஏற்பட்ட மாறுதல் காரணமாய் பூமியில் பரிணாமம் துரிதப்படுத்தப்பட்டு மனிதரிலிருந்து கேயான்கள் உருவாகி இருந்தார்கள்.

கேயான்கள் காமம், பசி, சோர்வு போன்ற உணர்வின்றி இருந்தார்கள். கேயான்களால் தங்களை பிரதி எடுத்துக் கொள்ள முடியும். பிரதி எடுக்கையில் அசல் அழிந்து விடும். உருவம் கிட்டதட்ட மனிதர்களை ஒத்து இருந்தது. கேயான்களின் மூளை திறன் மனிதர்களோடு பல மடங்கு ஆகிவிட்டு இருந்தது.

"காய்கறி வயல்களில் கேயான்களுக்கு என்ன வேலை? அவர்களுக்கு பசி கிடையாதே" - கோதுமனுக்கு வருத்தமாய் இருந்தது

" அரசுதான் எல்லோருக்கும் ஒதுக்காமல் வேலை தரும் நிறுவனமாய் தன்னை சொல்லிக் கொண்டு மனிதர் தலையை உருட்டுகின்றது. வர வர அரசு நிறுவனத்தில் கேயான்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி விட்டது"- சாமந்தி

" சோர்வில்லாமல் வேலை செய்வதால் அரசு அவர்களை ஊக்குவிக்கின்றது. மனித இனத்தையே மனித இனம் கேள்வியாக்குகிறது. நீ வேண்டுமானால் பார் இன்னமும் சில நூற்றாண்டுகளில் கேயான்கள் ஆட்சிபீடம் ஏறி விடுவார்கள்" - கோதுமன்

" அப்படியும் ஆகலாம். உன் மேலாளரிடம் எனக்கு வேலை தருமாறு நீ வலயுறுத்த முடியாதா? "- சாமந்திக்கு இந்த வேலையும் கிடைக்காமல் ்போய் விடுமோ என்ற பயம் வந்து ்விட்டது.

" சொல்லிப் பார்கிறேன். உன் இரண்டு வார காய்கறி உணவையும் அவருக்கு தருவதாக போய் சொல்கிறேன். நீ அரசு பாதுக்காப்பு இடத்துக்கு போ. நான் இரவு வந்து சேர்கின்றேன்." - கோதுமன் ஆழ்ந்த யோசனையுடன் அலுவலகம் உள்ளே சென்றான்.

சாமந்தி கொஞ்ச நேரம் அந்த அறையிலேயே உட்கார்ந்திருந்தான். வேலையில்லாமல் இனபெருக்க உரிமம் கிடைக்காது. சில மாதங்களாக அவனுக்கு அதற்கான ஆசை அதிகமாகி விட்டிருந்தது. நேர்முக தேர்வில் ஆய்வாளார் கேட்ட எல்லா வினாக்களுக்கும், செய்முறை தேர்வுகளையும் நன்றாக செய்திருந்தாலும் தேர்வுக்கு வந்திருந்த கேயானை கண்டவுடன் நம்பிக்கை போய் விட்டிருந்தது.

என்ன செய்வது என்ற கேள்வியுடன் பாதுகாப்பு இல்லம் நோக்கி கிளம்பினான்
(தொடரும்)

Friday, April 20, 2007

பாவம் ஜெகன்நாதன்

ஜெகன்நாதன் எந்த சாதியோ
சாத்திய அறைக்குள்
அடிமை பட்டம் பூட்டப்பட்ட
ஜெகன்நாதன் என்ன சாதியோ
எங்கள் நிழல் அவனுக்கு தீட்டாம்
சாத்திய கதவுக்கு சொந்தகாரர்கள்
சாசனம் எழுதினார்கள்
சாசன கதவுக்கு வெளியே நாங்களும்
உள்ளே ஜெகன்நாதனும்

வாசிக்க தெரியாதவனா ஜெகன்நாதன்
செவிட்டு பயலாய் இருக்கின்றானா
சாசனமும் மறுக்கவில்லை
எங்கள் அழைப்பும் அவன் கேட்கவில்லை

ஊர் கூடி பேசி பார்த்தோம்
நாட்டாமைகள் சிலர்
எங்களுக்கும் பாத்தியதை உண்டென்றார்கள்
அதை கேட்டு அவனை பார்க்க போக
நிழல் பட்ட தீட்டெடுக்க இரண்டு நாள் பூசை

நாட்டாமைகளும் சிறையிருக்கும் ஜெகன்நாதனும்
சேர்ந்திருக்க வாழ்த்தி விட்டு
வேறு சாமி பார்த்துக் கொண்டோம்

நன்றி; ndtv.com

ஊர்

ரயிலோசை சடசடக்க
எழ வேண்டியிருக்கும்
புழுக்கம் நிறைந்த இரவின்
மிச்சம் கண்ணிலும் என்னிலும்
கட்டில் ஒட்டும் மேசை
காலில் தட்டாமல் எழ முடிவதில்லை

மெதுவாய் நகர்ந்து திண்ணைக்கு வர
ஆசைக்கு வைத்த வேப்பமர காற்று
ஆள் தழுவ
பக்கத்தில் துணைக்கு
பழைய புத்தமொன்றும் காப்பி தண்ணியும்
மதிய சமையலுக்கு
காய்தேடி வீராசாமி கடைக்கு நடை
எத்தனை வருடம் ஆனாலும்
இன்னும் பிடித்திருக்கிறது
எதையோ சுமந்து இறக்கி வைக்கும் நினைப்புண்டு

ஊருக்கு வரும் தினங்களுக்கான
ஊஞ்சல் உள்ளுக்குள் ஆடிக் கொண்டே இருக்கின்றது

மது

மது மனிதரிடத்து எப்போது சேர்ந்ததென தெரியவில்லை. புராணங்கள் தொடங்கி நவீன காலம் வரை எல்லா காலங்களிலும் உண்டு. கொண்டாட்ட காலங்கள், சோக சுமைகள் என்று மனித உணர்வின் முரண்பட்ட இரு நிலைகளிலும் சுலபமாய் பொருந்த கூடியது.

நான் வளர்ந்த மத்திய தர குடும்ப சூழ்நிலையில் அச்சமும், அருவருப்புமான குணங்களை கொண்டதாகதான் எனக்கு மது போதிக்கப்பட்டது . பெண்கள் மீது வன்முறை செலுத்துபவரும், குடித்து விட்டு தெருவில் உருளுபவரும் மட்டுமே பார்க்க முடிந்ததில் வேறு வடிவங்கள் கண்ணில் படவில்லை. இவற்றை தாண்டி மதுவை காண முடிந்தது திரைப்படங்களில்தான். பொதுவாக வில்லன்கள் குகையில்தான் மதுவிருக்கும். கதாநாயகன் சோகமடையும் போதும் மது அவனுக்கு தேவைப்படும். இயல்பான ஒரு விஷயமாகவே மது இருந்ததில்லை. இந்த சித்தரிப்பில் குப்பை கொட்டியதில் இதற்கு மேல் ்யோசிக்க முடிவதில்லை.


மது அருந்தாமல் இருப்பது புனித தன்மை உடையதாகவும், அருந்துவது குற்ற உணர்ச்சியை தூண்டுவதாகவும் கற்பிக்கப்பட்டது. புனிதம் தேவைப்படாத காரணத்தினால் மதுவுடன் சிநேகம் ஆரம்பித்து நீடித்தது. நுரைக்கும் பியரும், கொறிக்கும் கடலையும், காது மூளை நகரும் இசையும் பிடித்திருந்தது. கண்மண் தெரியாத போதை காரணமாய் தொலைத்த அனுபவங்கள் காண கிடைத்தன. அதன் வழியே நிலை மறக்க அருந்துதல் மது ரசிக்க தேவை இல்லை என முடிவானது.


நாள் போக்கில் போதையின் ரசிப்பிலிருந்து மனசு மதுவின் ருசிக்கு நகர்ந்தது. வேறு வேறு வகைகளுக்கு இடையேயான ஒப்பீடு அவசியமாய் பட்டது. மதுவுக்குள் முடங்கி போகமால் மதுவை பார்க்கும் நிலையில் இருக்கையில் அடிமையாகி வாழ்க்கை தொலைக்க வேணடியதில்லை.


உள்ளம் அடக்கி வார்த்தைகளில் கருமிதனம் காட்டும் தோழர் வட்டம் கூட புட்டியின் உடைப்பு இசையில் உடைய ஆரம்பித்து புட்டிகளின் எண்ணிக்கையோடு ்வார்த்தைகளை அதிகரிப்பதையும் கண்டிருக்கின்றேன். நான் , அவன், இவன், அவள் என்ற உள்மனக்கூடு கட்டிய திரைகள் அவிழ்ந்து தருணங்களின் ரசிப்பினை கூட்டுவதாய் உரையாடல்கள் நகரும். இத்தனை வார்த்தைகளை இது வரை இவன் பயன்படுத்தியேதே இல்லை என்ற அளவுக்கு பேசிக் களிக்கும் சுதந்திரம் மதுவினால் சிலருக்கு வாய்திருக்கின்றது.

அடித்தட்டு வாழ்க்கை நிலையிலும், மேல் தட்டு வாழ்க்கையிலும் மதுவருந்தல் இயல்பான ஒரு செயலாகவே கருதப்படுகின்றது. இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை நிலையில்தான் புனிதம் கெடுக்கும் ஒரு அம்சமாய் மதுவருந்தல் உள்ளது. மது சிலருக்கு ஒவ்வாமல் போகலாம், சிலருக்கு அதன் சுவை பிடிக்காமல் போகலாம், அதனால் எல்லோருக்கும் அதே உணர்வு இருக்க வேண்டுமா என்ன?

க்ளாஸின் பனிக்கட்டிகளின் ஊடே இடம் தேடி ஒடும் விஸ்கியின் ஒட்டம் கவிதையாகதான் இருக்கின்றது திரவ இயக்கவியல் தெரிந்த நண்பனுக்கு அது பாடமாக இருந்தது. எதனிடமிருந்தோ ்விலகி ஒடும் கருவியாய் இல்லாமல் இயல்பான இளைப்பாறும் வேளையில் துணையாய் இருப்பதும் மதுவுக்கு சாத்தியமே.

இந்திய அணியில் அதிரடி மாற்றம்

உலக கோப்பையில் ரன் மற்றும் விக்கெட் எதுவும் எடுக்காத காரணத்தினால் இர்பான் பதான் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக இந்திய அணி இனி வரும் போட்டிகளில் அபாரமாக விளையாட வாய்புள்ளதாக இந்திய கிரிக்கெட் போர்ட் எதிர்பார்க்கின்றது. ;-)

விளம்பரங்களில் விக்கெட்டுகளையும், ரன்களையும் அடித்து குவித்து
அணிக்கு தூணாய் நின்று மானம் காத்த சிங்கங்களான சேவாக், தோனி, சாகிர் கான் போன்றவர்கள் தங்களது வீரத்தை காட்ட பங்களாதேஷ் செல்கிறார்கள்.

அணியில் அரசியல் குழப்பம் இருப்பதால் உதவி கேப்டன் அறிவிக்கபடவில்லை. அரசியலும் ஊழலும் இல்லாமல் கிரிக்கெட் இருந்தால் பாரத கலாசார கேடாக போய் விடும் அபாயத்திலிருந்து அணி காப்பாற்ற பட்டதை கண்டால் மகிழ்வாக உள்ளது.


சுமாராக நெடுநாளாக விளையாண்டு கொண்டு ஏனென தெரியாமல் அணிக்குள் அவ்வப்போது நுழையும் தினேஷ் மாங்கியாவும், அதிரடி ஆட்டக்காரர் என தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் கவுதம் காம்பிரும் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுழல் பந்து, வேகப்பந்து, சுவிங் ஆகும் பந்து தவிர மற்ற பந்துகளை அடித்து துவைக்க போவதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உறுதியுடன் இறுப்பது மன ஊக்கத்தை அளிக்கின்றது.

Thursday, April 19, 2007

வேண்டும்

வறுமை ஒழிப்பென
வாயெல்லாம் பேச்சு உண்டு
இசங்கள் பல கொண்டு
முழம் போட்டு விற்பனையுமுண்டு
முழக்கங்கள் உள்ளே கரைந்து
போன பின்னும்
முழக்கங்கள் முடிவதில்லை
எதிர்த்து கேள்வி கேட்டால்
எதிரி முத்திரையும் உண்டு

தேசமென மருகும் போலிதனமும்
பணத்தினை வெறுப்பதாய் சொல்லும்
பகல் வேசமும் உண்டு
வாழ்க்கைக்கு முன்னேற
இரக்கத்தை தவிர வேறு எதுவும் தேவை
தின்னாமல் திருடாமல்
திட்டங்கள் தீட்டலும்
இசத்தின் கசங்கலில் சுருங்காமல்
இருப்பு கொள்ளும் இயங்கு தன்மை வேண்டும்

இதெல்லாம் இல்லாமல்
பேசிக் கிழித்தே வாழ்க்கை
பண்ண பார்த்தால்
எல்லோருக்கும் பணங்காய்க்க
ஏதாவது மரந்தான் முளைக்க வேண்டும்

Wednesday, April 18, 2007

மரபணு மாற்றமும் மக்களாட்சியும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட BT பருத்தியின் வர்த்தகமும் அது கிளப்பிய எதிர்மறை தாக்கங்களும் பல பத்திரிக்கைகளில் தகவல்களாக வந்திருந்தன. பருத்தியை போல் வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் அரிசி போன்றவற்றிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு சோதனை முறையில் பயிரிடப்பட்டு வருகின்றன. பயிரிட்ட இடங்களோ மற்றும் சோதனை முடிவுகளோ உயிர் தொழில்நுட்ப துறையினால் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் க்ரீன்பீஸ் நிறுவனம் கடந்த வருடம் இது தொடர்பாக தகவல்களை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வர தகவல் உரிமை அறியும் சட்டம் ்வாயிலாக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த மத்திய தகவல் கமிஷன் மரபணு பரிசோதனை பயிர்கள் பயிரிடப்பட்ட இடங்களையும், அவற்றினால் உண்டான ஒவ்வாமை மற்றும் அதன் நச்சுத்தன்மை குறித்த தகவல்களை தகவல் உரிமை சட்டம் 4.1(d)யின் அடிப்படையில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

மக்களாட்சியில் நல்ல சட்டங்களும் அதன் முறையான நெறியாண்மையும் இருக்கையில் வர்த்தக நலனும், பொது மக்கள் நலனும் சமநிலைப்படுத்த படலாம் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்சி. அரசு வர்த்தக நிறுவனங்களின் பின்னால் நின்று முக்கிய தகவல்களை மக்களுக்கு மறுக்கும் போது சட்டத்தினை பயன்படுத்தி அதனை சரி செய்யலாம் என்பது மக்களாட்சியின் முக்கிய கூறுகளில் ஒன்று. மக்களாட்சி இல்லாத இடங்களில் இதற்கான விவாதமோ, சாத்தியமோ கற்பனைக்கு அப்பாற்பட்டது.

Monday, April 16, 2007

மதுரையில் ஒரு காப்பிக்கடை

கட்டியகாரனின் வடக்கு மாசி வீதி சுவராஸ்யமான பதிவு. மதுரையின் நுணுக்கங்கள் அழகாய் விவரிக்கப்படும்.

அவரது காபிக் கடை அனுபவத்தை பாருங்கள்


இப்படி ஈ ஓட்டும் கடையில் கணக்கு மட்டும் கம்ப்யூட்டர் பாணியில் இருக்கும். அதாவது முதலாளியிடம் காசைக் கொடுத்து டோக்கன் வாங்கினால்தான் மாஸ்டர் காப்பி போட்டுத் தருவார். இத்தனைக்கும் மாஸ்டரும் முதலாளியும் அருகருகில் இருப்பார்கள். காப்பியென்றால் சிவப்பு டோக்கன். டீ என்றால் பச்சை டோக்கன். இரண்டும் ஒரே விலை. சிவப்பு டோக்கனை வாங்கிவிட்டு டீ கேட்டால் ஸ்ட்ரிக்டாக மறுத்துவிடுவார் மாஸ்டர். டோக்கனை மாற்ற முதலாளியிடம் சிபாரிசு வேண்டுமானால் செய்வார். “நம்ம பையந்தான். தெரியாம காப்பிக்குப் பதிலா டீ டோக்கனை வாங்கீட்டான். டோக்கனை மாத்திக் குடுங்க“ என்பார் முதலாளியிடம். அவர்கள் பேசுவதைப் பார்த்தால் நாளைக்கே கவர்மெண்ட் ஆடிட்டர் வந்து, ஏன் டோக்கன் மாறியது என்று இவர்களை ஜெயிலில் போட்டுவிடுவார்கள் என்பதைப் போல இருக்கும்.

Sunday, April 15, 2007

ஆண்டைகள் உலகம்

கட்டம் கட்டி முன் பக்கம்
பதிவுகள் வர நட்சத்திர வாரம் மூலம் உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி.

வாசித்து கருத்துகளை பகிர்ந்த தோழமைக்கும் நன்றி.

நம் நாட்டின் நில அமைப்பு முறை சாதியத்தின் மேல் நிறுவப்பட்டது. நில உடமையாளர் சமுகத்தின் ஊடே நான் வளர்ந்த போது அவர்களின் சாதிய இறுக்கங்களும், ஆக்கிரமிப்பு தனமும் அந்த கட்டுகளை மீற வேண்டிய நிர்பந்தம் மற்றும் சிந்தனையின் அவசியத்தை உணர்த்தியது. ஆண்டைகள் என்று மிராசுகளை அழைப்பார்கள்.

இந்த கவிதைகள் அந்த வட்டத்தினை பற்றியது. இவை ஒரு மீள் பதிவே
----------------------------------------------------------------


ஊரிலே பெரிய வயல்
ஆண்டையோடது.
மேடைகளை கண்டால்
ஆண்டைக்கு மிக விருப்பம்
அன்னைக்கு
சட்டதிட்டங்களோடு ஆண்டை
சமூக நீதி பேசினார்
புள்ளிவிவரங்கள் எப்போதும்
நாக்கு நுனியில்
சோடாக் குடிக்கும்
இடைவெளியில்
ஆண்டைக்கு கோபம்
மனசுக்குள்
கோவணத்துக்கு
காசில்லாதனெல்லாம்
பள்ளிக்கூடம்
போனால் எவன்டா
வயலுக்கு அறுப்பு
அறுக்கறதென
ஆண்டை இருக்கும் வரை
சமுகநீதிக்கு கவலையில்லை

----

கட்டிலில் கிடக்கும்
அம்மாவுக்கு அள்ள
முனியம்மா வேண்டாம்
சூத்திர நாற்றம்
வேறாள் வேலைக்கு வேணுமென
சொன்னவரிடம்
காப்பி குடிக்கும்
ஆண்டை கேட்டார்
குளிச்சு கிளிச்சு
சுத்தமாதானே இருக்கோம்
கவுச்சியும் இல்லை
உங்க சாமிதானே எனக்கும்
எனக்கேன் காப்பிக்கு தனி டம்ளர்
கேட்டதால் வேலைக்கு
ஆள் கேட்டவர் சொன்னார்
என்ன செய்யறது
எல்லாம் கர்மாதான்
நீர் சத்சூத்ராளாய்யா
சூத்ரனில கொஞ்சம் உசத்தி
ஆனா சூத்ரன்தானே
ஆண்டைக்கு ்வாலிருந்தால்
அன்னைக்கு ஆட்டியிருப்பார்
அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி
முனியம்மா கூட்டம்
இன்னும் அவருக்கு கீழ்தான்

-----------

குறள் வழி சமுகம்தான்
ஆண்டைக்கு மிக விருப்பம்
ஆனாலும் ஆண்டைக்கு
எப்போதுமே ஒரு சந்தேகமுன்டு
அதனால் ஒருநாள்
புரியாத பாசையில் பூசை
கொடுப்பவரிடம் கேட்டார்
ஐயன் சாதியென்ன
உம்மதா எங்களுதானு
ஆண்டையின் சந்தேகத்தில் கூட
ஐயன் சட்டையில்லா சாதியில்லை
ஒருவேளை இருந்திருந்தால்
குறளுக்கும் உண்டோ தீட்டு
ஆண்டைக்குதான் எங்கேயும்
சமூகநீதி வேணுமே

அடுத்து என்ன?

அலுவலகத்திலும், பிற இடங்களிலும் அதிகமாய் பிரச்சனைகள் போதோ அல்லது பொறுப்புகள் கை மாற்றி விடும் போதோ பார்க்கும் ஒரு பழக்கம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பு. வாசித்து முடித்து தொடர்ச்சியான நகர்வாக இருக்காமால் நிறைய சமயங்களில் ஒரு தேக்க நிலையை காணலாம்.

கலந்தாலோசனை கூட்டங்களில் இரைச்சல் அதிகமாகி முன்னால் நடந்த சம்பவங்களின் குறைகள் மட்டும் பேசப்பட்டு ஏற்பட்ட இழப்பிற்கு யாரையாவது திட்டிக் கொண்டே கூட்டமே முடிந்து விடும். புதிய ஆலோசனைகளும், நடவடிக்கைகளும் அதற்கு மேல் மாற்று பாதைகளும் பற்றி அதிகம் விவாதிக்கப்படாது.

வேலைக்கு சேர்ந்த பொழுதில் இது போன்ற குழப்பம் ஏற்பட்ட ஒரு புரோஜக்ட்டில் புதிய தலைமை நிர்வாகி "IT IS WHAT IT IS. ALL THIS BLAME GAME CAN NOT CHANGE OUR SCREW UPS. " என்று பொரிந்து தள்ளினார். அதற்கு பிறகு அணியின் போக்கு மாறி விட்டது. பழங்கதைகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தன. இந்த it is what it is வழி சிந்தனை பிடித்திருந்தது. ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கண்டு மலைக்காமல் , அஞ்சாமல், இருப்பதை தீர்த்து ஆக வேண்டியதை செய்து வாடிக்கையாளருக்கு தரமான சேவையை வழங்குவதே முக்கியம்.

பழசை அள்ளி போட்டு கழுவி சுத்தம் செய்து அடுத்த வேலைக்கு நகர நினைப்பது தவறல்ல. ஆனால் பழமையினை கிளறி கூறு போடல் மேல் கொண்டு ஆக வேண்டிய காரண காரியங்களை பாதிக்கும் இடத்தில் கிளறி கொண்டே இருப்பதில் ஆவது என்ன? புதிய சிந்தனை, ஆர்வம், அதனை நடைமுறைபடுத்து்ம் மானகை திறன் போன்றவை கொண்டிருத்தலே நலம்.

ஒப்பாரி வைத்தலும், கட்டியலுதலும் வாழ்வை தூக்கி செல்லாது. அவை சமயத்தின் வெளிப்பாடாய் இருக்கலாமே தவிர, இரும்பு சங்கிலியாய் வாழ்வாதாரங்களை கட்டி விடுவதாய் இருக்க கூடாது.

நடந்து முடிந்து போன சம்பவங்கள் முடிந்தவையே. நீங்களோ, நானோ இல்லை வேறு யாரோ அதை மாற்றி விட முடியாது. குட்டையில் ஊறுதல் போல் அதில் ஊறி கிடத்தல் சுகமே, இங்கும் அங்கும் விரல் நீட்டி குற்றம் சுமத்தி இருத்தல் சுய இரக்கத்தையும், சிரங்கினை சொறியும் கோபத்தையும் கொடுக்கும், ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலிருக்காது. it is what it is. அதற்கு அடுத்து என்ன செய்வது?

Friday, April 13, 2007

வண்ண விளக்கு
பட்டை நாடா
சுற்றும் விசிறி
ஆர்வத்தை இழுக்கவில்லை முன்பு
ஆசையாய் பார்ப்பதிலும்
விரல் சுட்டி காட்டியதிலும்
வார்த்தைகள் வடிப்பதிலும்
கவிதை தெரிகிறது இன்று
ஒரடிக்கு கொஞ்சம் உயரமாய்
நிற்பதற்கும் உடகாருவதற்கும்
இடையே இருந்தாள் என் ஆசிரியை
அடுத்த வாரம் அவள் வயசு
ஒன்பது மாதம்

வங்கி , கடன் , அரசியல்வாதி

ICICI வங்கி அரசியல்வாதிகள், காவல்துறை சார்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வக்கில்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறதாக செய்தி வந்துள்ளது. இதை குறித்து வங்கி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதை கண்டித்து இந்திய குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் வங்கிக்குள் நுழைந்து வங்கியின் கணிணி, சாளரங்கள் மற்றும் இதர பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். எதையுமே மிரட்டி அடித்து நொறுக்கி சாதிக்க நினைப்பர்கள் மக்கள் பிரதிநிதியானால் மக்களாட்சியின் கதி என்ன? எல்லோரும் எல்லா நேரமும் நியுட்டனின் மூன்றாம் விதியை காரணம் காட்டி வன்முறையில் இறங்கி அதனை நியாப்படுத்தி பேசினால் எதற்கு அரசு, சட்டம், ஒழுங்கு எல்லாம். இந்திய குடியரசு கட்சி நியுட்டனின் மூனறாம் விதியை மட்டும் சட்டமாக்கி விட்டு மற்றதை தூக்கி எறிய சொல்கிறதா?

அரசியலமைப்பின் முக்கிய உறுப்பினர்களை வங்கி ஒதுக்குகின்றது என வருத்தப்படுவதா இல்லை கடன் இல்லை என்றதற்கே வங்கியை ்நொறுக்குபவர்கள் நம்பி கடன் கொடுத்து கடன் திருப்பி கேட்டால் என்ன செய்திருப்பார்களோ. பாவம் வங்கிகள் என நினைப்பதா?

நன்றி; பிஸினெஸ் ஸ்டான்டர்ட்

திருச்சி - பாரத மிகுமின் நிறுவனம்

பாரத மிகு மின் நிறுவனம் திருச்சியில் உள்ள தனது கிளையில் 1000 கோடி ரூபாய் புதிய முதலீடு செய்து அதன் உற்பத்தி திறனை மேம்படுத்த உள்ளது.
திருச்சியின் வளர்ச்சியில் பாரத மின் மிகு நிறுவனத்தின் பங்கு குறிப்பிடதக்ககது. தொத்து வேலை(welding) மற்றும் நிர்மித(fabrication) பணிகளில் சிறப்பு மையமாக திருச்சியை வளர்ப்பதற்கு இது வழி வகுக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது. புதிய வேலை வாய்புகளும் இதனால் உருவாகலாம். மார்ச் 31, 2007 வரையிலான பொருளாதார ஆண்டில் அதன் வரிக்கு முந்திய லாபம் சென்றைய ஆண்டை விட 103 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தாமோதர் பள்ளதாக்கு கார்பரேஷனின் மின்சார விரிவாக்க திட்டத்திற்காக உத்தரவை பாரத மிகு மின் நிறுவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்க மின் விரிவாக்கம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பையும், தொழில் மேம்பாட்டையும் கொண்டு வருகின்றது.

திருவரம்பூர் சாலைகளை விரிவுப்படுத்தவும் அவர்கள் முயற்சி செய்து வருகின்றார்கள். பேருந்து ்நிலையத்தை ஒட்டி உள்ள கடைகள் பாதிக்கப்படலாம். ஆனால் சாலை வசதி மேம்பட்டு நெரிசல் தவிர்க்கப்படும்.

அப்பாவிடம் பேசும் போது மிகுமின் நிறுவனம் ்நிறுவப்பட்ட போது திருச்சி மக்களிடம் இதன் வருகை ்விலைவாசியை அதிகரிக்க செய்து திருச்சியினை பாதிக்குமோ என்ற அச்சம் இருந்தது எனறு சொன்னார்கள். அந்த பயம் இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது.

Thursday, April 12, 2007

புள்ளிவிவரம் கொஞ்சம் மாறியிருக்கும்

மற்றுமொரு தற்கொலை. எதாவது ஒரு புள்ளி விவரத்தில் கொஞ்சம் அசைவிருக்கும். மகாராட்டிர முதல்வருக்கு இரண்டு கொட்டாவிகளுக்கு இடையே செய்தி சொல்லப்பட்டு மறக்க பட்டிருக்கும். இறந்தவரும் இந்திய பிரஜையே. அவருக்கும் அரசியலமைப்பின் பாதுகாப்பும், அரசின் கவனமும் இருந்திருக்க வேண்டும். முன்பு அவருக்கும் வாழ்வின் மீதான பிடிமானங்கள் எல்லோரையும் போல இருந்திருக்கும். ஒவ்வொரு முறையும் பருத்தி விதைக்கையில் பருத்தி முற்றிய உடன் கடன் தீரும் என்ற நம்பிக்கை இருந்திருக்கும். ஏதோ ஒரு நொடியில் புள்ளியில் அந்த நம்பிக்கை காணாமல் போய் விட்டது. எதிர்காலம் இறந்தகாலத்தை விட புதிதாய் வராது என்ற முடிவுக்கு வந்திருக்க கூடும். குடும்ப தலைவரின் மறைவு குடும்பங்களில் உருவாக்கும் கையறு நிலை கொடுமையானது. கணவனுக்கு துணையாய் இருந்தே பழகி போன பெண் தன் குடும்பத்தை தானே இழுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார். அதன் நடைமுறை சிரமங்கள் வார்த்தைகளில் சொல்ல இயலாது. GDP , பண வீக்கம் போன்ற பல புள்ளி விவரங்கள் நடுவே தற்கொலை புள்ளி விவரமும் இடை விடாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒரு ஒட்டு குறைந்து போனது முதல்வருக்கு பிரச்சனை இல்லை. இறந்து போனவனும் தன்னைதான் பிரதிநிதியாக நினைத்தான் என்ற உணர்வும் இருப்பதாய் தோன்றவில்லை. நிவாரண நிதி அறிவிப்புகளில் மட்டும் உண்டு. சென்ற வருட செய்திகளில் நிவாரண நிதி வழங்குவதில் ஊழல் காரணமாய் கால தாமதம் ஆகி அதனால் தற்கொலையும் நடந்த செய்தி வந்தது. பிணந்தின்னி கழுகுக்கிற்கு சுடுகாட்டு சாப்பாடு மாறுபட்டதாய் தெரிவதில்லை.

விதர்பாவின் அழுத்தமான மன இறுக்கம் வாய்ந்த சூழ்நிலையில் மாநில அரசு மன ஆலோசனை குழுக்களை அமைத்து அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தியிருக்கலாம். மகாராட்டிரா காட்டன் போர்ட் விதர்பாவிலாவது ஊழல் செய்வதை கட்டுப்படுத்தி இருக்கலாம். விவசாயத்தின் முதலுக்கு மேல் வருமானம் வரும் வழிகளை உடனிருந்து கண்டறிந்து அதனை செய்ய முற்பட்டு இருக்கலாம். (அப்புறம் எந்த எழவுக்கு விவசாய அறிவியல், பொருளாதார நிபுணர்களை அரசு வைத்திருக்கின்றது என தெரியவில்லை). பாசன வசதிகளுக்காக வழங்கப்படும் காசில் ஊழல் இல்லாமல் கொடுத்திருக்கலாம். வேறு புதிய தொழில்கள் நிறுவ ஆலோசனை வழங்கி உதவியிருக்கலாம். பிச்சைகாரனுக்கு பிச்சை வழங்கிய தோரணையில் விதர்பாவின் மான்ய தொகையை பத்திரிக்கைகளுக்கு செய்தியாக கொடுத்து விட்டு வேடம் போடாமலும் இருந்திருக்கலாம்.

Tuesday, April 10, 2007

கருப்பு பணம்

கருப்பு பணம் இந்திய பொருளாதாரத்தின் அளவீடான GDP-ல் 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆன்றோர், சான்றோர்,வலதுசாரி, இடதுசாரி முதல் சாமான்யர் வரை எல்லோரும் பங்கெடுத்து முழு வீச்சுடன் கருப்பு சந்தை வளர்சிக்கு பணி செய்கின்றோம்.

வரி கட்டாமல் வியாபாரம் தெருவுக்கு தெரு உண்டு. தெருவில் சாக்கடை புரண்டாலும் கவலை இல்லை. கோடையில் ்சின்னம்மை தாக்கினாலும் கவலை இல்லை.வரி கட்டாவிட்டாலும் கவலை இல்லை. மரத்து போய் விட்டதா இல்லை இது போதும் என்று நிறைவடைந்து விட்டோமா என தெரியவில்லை.

1983ம் ஆண்டு 36,768 கோடியாக இருந்த கருப்பு பணம், இன்று 9 இலட்சம் கோடியாக வந்து நிற்கின்றது. கடுமையான வரிச்சட்டங்கள், அளவுக்கு அதிகமான முத்திரைதாள் கட்டணம் போன்றவையே கருப்பு பணத்தினை தீ மூட்டி வளர்க்க முதல் காரணம். பின்னாளில் இவை தளர்த்த பட்ட போதும ஏமாற்றி பழகியது வசதியாய் இருந்ததால் வரி கட்டுதல் அநாவசியமாய் போய் விட்டது. அதற்கு அடுத்த காரணம் ஊழல்.

மக்களுக்கு அரசு நிர்வாகிகள் மேல் நம்பிக்கை இல்லை. தொகுதிக்கு தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் கிட்டதட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்கிறாராம். இது கணக்கில் வராத பணமே. 542 தொகுதியை கணக்கில் எடுத்தால் மொத்த கருப்பு பண அளவு 10000 கோடி பக்கம் வருகின்றது. இது இல்லாமல் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் எல்லாம் உண்டு. புழங்கும் இந்த கருப்பு பண அளவை நினைத்து பாருங்கள். இன்று உள்ள எல்லா அரசியல் கட்சிக்கு இதில் பங்கு உண்டு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் அறவே இல்லை.

சந்தையில் கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும், நிலமாகவும், வீடாகவும் புழங்குகின்றது. இது இல்லாமல் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டாகவும் கருப்பு பணம் அதிகம் இருக்கின்றது. அதிக மதிப்புள்ள பணத்தினை சந்தையில் குறைத்து, வங்கி கணக்குகள் வழியே வர்த்தக பரிமாற்றங்கள் வர வழி செய்வது முக்கியமாகும். கருப்பு சந்தையின் அளவு விரியும் போது அதன் சுமை வரி செலுத்துவோரின் மேல் அதிகமாகும். அதன் விளைவாக ஒழுங்காய் வரி செலுத்துபவரும் அதை தவிர்க்கவே பார்ப்பார்கள்.

இந்தியா வல்லரசு ஆக வேண்டிய அவசியத்தை விட தொழில் வளத்தில், மக்கள் வளத்தில் முன்னேறிய நாடாக வேண்டிய அவசியம் நிறைய உண்டு. எளிமையான வரி அமைப்பு, அரசின் சிவப்பு நாடா அகன்ற தொழில் ஊக்குவிப்பு முறைகள், உள்கட்டுமான உயர்வுகள், அதிகரிக்கும் வரி செலுத்துவோர், குறைந்த பட்ச நேர்மை உள்ள அரசியல்வாதி போன்றவைதான் அடிப்படை தேவை. பாகிஸ்தானோடும், சீனாவோடும் ராணுவ அளவில் ஓப்பிடு செய்து ்கொண்டு மதச்சண்டைகளில் இன சண்டைகளில் நேரத்தை செலவீடு செய்தால் நிலையான முன்னேற பாதையில் உள்ள அரசு என்பது கனவில்தான் இருக்கும்.

மதமென்னும் ்நிறுவனங்கள்

நிறுவனங்கள் லாபத்தை குறி வைத்து இயங்குகின்றன. அதில் முதலீடு உண்டு. விளம்பரங்கள் மற்றும் உத்திகள் மூலம் பொருளை சகலருக்கு அறிமுகம் செய்ய தனி அணிகள் உண்டு. அவர்களின் செயல்பாடுகள் அளக்கப்பட்டு அதற்பகேற்ப ஊக்க தொகை உண்டு.

எதிர் நிறுவனத்தின் பொருளை விடாது சாடுதலும் ஒரு வகை விற்பனை தந்திரமே. நுகர்வோரை பொருளுக்கு அடிமையாக்கி விடுதல் விற்பனை செயலின் உச்ச கட்டம். இந்த இடத்தில் நுகர்வோருக்கு மாற்று பொருள் பற்றிய எதிர்மறை சிந்தனை பூரணமாக ஊட்டப்பட்டிருக்கும். நுகர்வோர் தன்னையும், பொருளின் மீதான தனது சிந்தனையும் தனித்து பார்க்கும் சிந்தனையை முற்றிலும் மறுத்திறுப்பார். இரண்டும் ஒன்றே என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கும்.

நுகர்வோர் அவர் பயன்படுத்தும் பொருளுக்கு இணையான பொருள்களை சந்தையில் ஒப்பீடு செய்யவோ அல்லது உபயோகப்படுத்தபடும் பொருளின்றி மாற்று இருக்கலாம் என்ற நிலையையோ நினைக்கும் இடம் தவறானது என்ற போதனையும் நிறுவனங்களால் உண்டாக்கப்படுகின்றது. நுகர்வை பற்றிய ்பொது அறிவையும், கட்டுடைக்கும் சிந்தனையும் கொண்டெழும் சமூதாயவாதிகள் பின்னாளில் ஏதோ ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாகி மாற்றப்படுதலும் உண்டு. நுகர்வோர் நலனை கருத்தில் கொள்வதாய்தான் இன்று வரை எல்லா நிறுவனங்களும் சத்தியம் செய்கின்றன. ஆனால் நுகர்வோரின் நலமே நிறுவன பொருளில்தான் என்ற மிரட்டலையும் உள்ளடக்குகின்றன.

நிறுவனங்களை தாண்டிய பெருவெளி உண்டு. கால் வைத்து நிற்க தைரியம் வேண்டும். எதிலும் பற்றாது எது வரினும் ஊழ் என்று எண்ணாத மனநிலை அங்கு தேவை. அங்கு போதனைகளும், பிரார்த்தனைகளும் கிடையாது. தேவைகளும், தேவையை நிறைவேற்றும் வழிகளும் யாராலும் வரமாய் வராது. பெருவெளி ஒரு போதும் நிறுவனமாகாது. எல்லோரும் ஒரே போல் அங்கு இயங்க இயலாது. மாறுபட்ட இயங்கங்களே பெருவெளியின் அச்சாணி. இம்மையும் , மறுமையும் நிராகரிக்கப்பட்டு விடுவதால் அவை சார்ந்த அச்சங்களும் அங்கே சுமையாவதில்லை.

நிறுவனம் கொடுத்த பொருளாய் தம்மை நினைப்போர் சகமனிதன் நோக்குகையில் முதலில் தெரிவது சகமனிதனிடத்து உள்ள பொருளே. ஆனால் பெருவெளியில் சகமனிதன் நிறுவனத்தின் பகுதியாய் அறியப்படுவதில்லை, அவன் தனக்கே உள்ள குறை நிறைகளோடு அறியப்படுகின்றான். பார்வை வித்தியாசம் புதிய மானுடம் படைக்க உதவும்.

Monday, April 9, 2007

கதாநாயகர்களை தேடி

ஸ்பைடர் மேன்/சூப்பர் மேன்/வொன்டர் வுமன் ஒத்த கதாநாயகர்களை தேடுதல் கலாச்சாரத்தின் பெரும் பகுதியாக இருக்கின்றது. விளையாட்டு, அரசியல், நிறுவனங்கள் என பார்க்கும், உணரும் எல்லா இடங்களிலும் இந்த இரண்டின் பங்கும் உண்டு.

எம்.ஜி.ராமச்சந்திரன் அரசியல் சித்து விளையாடலில் அசைக்க முடியாதவராக இருந்தருக்கு திரைப்படங்களில் அவர் கொண்ட அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கதாநாயகர்களை காட்டியதே காரணம். தாயை கண்டு இரங்கல், தங்கை கண்ணீர் துடைத்தல், பொருளாதாரத்தில் பின் தங்கியவரை தோள் தழுவுவதல் என அவரால் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அசரீரி போல் மக்கள் மனத்திற்கு சென்று சேர்ந்தன. கற்பனைக்கும், கற்பனை தாண்டிய உண்மை வாழ்விற்கும் இடையேயான வித்தியாசம் நழுவிவிட்டது. அவர் காலமான போது எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த குடும்பம் அவருக்கு பதினாறாம் நாள் காரியம் செய்து ஒப்பாரி வைத்து அழுதது. தனிமனித கவர்சியின் உச்சகட்டம் இது. இன்றைய அரசியலில் மன்னராட்சி முடிந்தும் மன்னராட்சி/நில ஜமீன்களின் தன்மையுடைய வேறு வகை கதாநாயகர்கள் முன்னிறுத்தப்படுகின்றார்கள். சராசரி மனிதனுக்கு அப்பால் பூச்சாண்டிகளை ஒத்த ஆளுமை உள்ள தலைமையே இப்போது காணமுடிகின்றது. தலைவர்களின் சுயநலம், ஊழல் போன்றவை கதாநாயக தன்மையின் பின்னால் ஒளிந்து கொள்கின்றது.

அடைமொழி வைத்து மட்டுமே தலைவர்களை விளிப்பதும் போற்றி பாடலின் ஒரு அங்கமே. அன்னை, கர்மவீரர்,அறிஞர், தந்தை,மகாத்மா, கலைஞர், புரட்சி தலைவி என அடைமொழி என்று எல்லா நிலையிலும் உண்டு. இவர்கள் வரலாற்று புத்தகத்துக்குள் இவ்வாறே பதிக்கப்படுகின்றனர். தொடர்ச்சியான தேர்வெழுதுவதற்காக செய்யும் மனப்பாட வாசிப்பு நாளைடவில் அடைமொழி இல்லாத தலைவர்களை ஏற்றுக் கொள்ளுதல் இயலாமல் செய்து விடுகின்றது. காற்றில் துலாவியாவது அடைமொழி கொண்டு வந்து ஒட்டிக் கொள்ள வைக்கச் சொல்கின்றது.

அடைமொழிக்கப்பால் உள்ள உண்மைகள் சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனாலும் கதாநாயகதன்மை சித்தரிப்பு மூளைக்குள் சலவை செய்யப்பட்டுள்ளதால் அதனை சுலபமாக ஒதுக்கி விடுகின்றோம். தனித்தன்மை கொண்டு ஆளுமை உள்ள எதிர்கால சமுதாயம் வர வரலாற்று பாடப்புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்படல் வேண்டும்.

விளையாட்டிலும் இந்த தன்மை உண்டு. பதினோரு நபர்கள் விளையாடும் மட்டை பந்து விளையாட்டில் ஒரே கடவுளாக டெண்டுல்கர் சித்தரிக்கப்படுகின்றார். அவர் ஆட்டமிழந்தால் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பவர்களையும் பார்த்திருக்கின்றேன். கூட்டு ஆட்டம், அணித்திறன் என்ற அளவில் ஆட்டம் ரசிக்கப்படாமல் , வளர்க்கப்படாமல் தனிதனி கதாநாயகர்களின் பின்னே ஒளிந்துள்ளது. கங்குலி இதற்கு மற்றுமொரு உதாரணம்.

பகுத்தறிவு, சுயமரியாதை உள்ள சமுதாயத்தில் அனைவருக்கும் அனைவர் நோக்கி மரியாதை உண்டு. ஆனால் ஆண்டவனாக யாரும் சித்தரிக்கப்படுவதில்லை. ஆண்டவன் பற்றிய விளக்கங்களும், சிந்தனைகளும் தனிமனிதனின் உரிமையாக கொள்ளப்படுகின்றது, கூட்டுச்சமுதாயம் சகமனிதனை முத்திரைகள் அற்ற மனிதாய் பார்க்கின்றது. உருக்கம், கண்ணீர், கோபம், எள்ளல் போன்ற பலகீனமான தருணங்களில் பகுத்தறிவோ, சுய மரியோதையோ இருப்பதில்லை. பகுத்தறிவுள்ள சமுதாயத்தில் கதாநாயக தன்மை கொண்ட ஆளுமைகள் தேடி அலைதல் தேவையற்ற ஒன்று. நல்ல நிர்வாகிகளும், நிர்வாக ்கோட்பாடுகளுமே தேவை. இது ஒரு தூரத்து கனவே. ஆனால் என்றாவது ஒருநாள் சாத்தியப்படும்.

விளையாட்டாய் எடுத்துக்கொண்டால்

மாமு விளையாட்டுக்கு எடுத்துக்கோனு ஏதேனும் நடந்தா நட்பு வட்டங்கள் சொல்லும். உண்மையில் விளையாடும் இருக்கும் மனோபாவத்தில் எடுத்துக் கொண்டால் பேரன்பற்ற பெருங்கோபத்தில்தான் முடியும்.

மனிதனின் குழு இயக்கம் விலங்கினமாய் திரிந்த காலத்திலிருந்து வந்தது.தனி மனிதன் தன்னை ஒத்த அல்லது தன்னை விட கொஞ்சம் மேலான தன்மை உடையவர்களோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறான். விளையாட்டை பற்றிய அறிவை பகிரவும் அந்த விளையாட்டு குழுவோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்ளுதலும் அவசியமாகிறது. குழுவை தேர்ந்தெடுத்தல் நகரம், மதம், நாடு என்ற பல வளையங்களுக்குள் அமைகின்றது.

விளையாட்டில் விளையாடுவதோ, அணி ஆதரவு நிலையிலோ அட்ரினலின் உச்சம் ஏற ஆர்பரித்து நிற்கும் போது அதை விட பேரின்பம் தேட இயலாது. காமத்தின் பரவசம் ஒத்த நிலை அது. காமம் இருவருக்குள் தனியறைக்குள் இயங்குவது(பொதுவாக). விளையாட்டு அனுபவம் பலரிருக்க நபர்கள் அதிகரிக்க மிகுந்த அளவாக மாறக்கூடியது. பிறந்த உறவா , பகிர்ந்த உறவா, இல்லை பழகிய உறவா? எதுவும் இல்லை. ஆனாலும் மனம் வெற்றியில் மகிழ்ந்து, தோல்வியில் துவண்டு போகின்றது.

நிம்பஸ் ஒளிபரப்பை தூர்தர்ஷனுடன் பகிர மறுக்கையில் பாதி இந்தியா வாடி வதங்குகிறது. கோடிகள் புரள ஒளிப்பரப்பு உரிமைகள் பேரம் பேசப் படுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொன்றும் இரு நாட்டுக்கிடையே யுத்தம் போல்தான் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ரோம நகரத்தில் கிளாடியேட்டர்கள் ரத்தம் சிந்துகையில் குதுகலித்த பார்வையாளார்களின் மனநிலை விக்கெட்டுகளின் வீழ்ச்சியிலும், மட்டையில் பட்டு விழும் நான்கிலும், ஆறிலும் கிடைக்கின்றது.அண்மையில் உலக கோப்பை தோல்வியும் சிலரின் இதய துடிப்பை நிறுத்தவும் செய்திருக்கின்றது.

தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கடவுள் சாக்கர் வடிவில் உலவுகின்றார். இன்னோரு மதமாகவே சாக்கர் உள்ளது. தன் அணியின் தோல்விக்கு காரணமானதால் சுட்டுக் கொள்ளப்பட்ட கொலம்பிய கால்பந்தாட்ட வீரரை மறக்க இயலுமா? அமெரிக்காவில் புட்பால் காலங்கள் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களாகவே உள்ளன. நுரைக்கும் பியர் பாட்டில்கள், கார்களில் பறக்கும் அணிகளின் கொடிகள், ஆர்பரிக்கும் கூட்டம் என்று கோலகலமாகவே உள்ளது.

அமெரிக்காவின் புட்பால் அணிகள் நகரங்களை மையமாக கொண்டவை. கலிபோர்னியா மாகாணத்தில் இருந்த போது சான்பிராஸிஸ்கோ, ஒகலாந்து இரு நகரங்களும் இரு புட்பால் அணிகளை கொண்டிருந்தன. நண்பர் ஒருவர் ஒக்லாந்து எனும் நகர அணியை ஆதரிப்பவராய் இருந்தார். அவரது தலை தொப்பியில் ஒக்லாந்து அணியின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஒரு முறை விளையாட்டு பொழுதினில் சான்பிரான்ஸிஸ்கோவின் பார் ஒன்றிற்கு செல்கையில் எங்களுக்கு அந்த தொப்பியை நீக்குதல் எங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு நல்லதென அறிவுறுத்தப்பட்டு நண்பர் தொப்பியை நீக்க வேண்டியதாயிற்று. அவர்களிடம் ்விளையாட்டாய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தால் பூசைதான் விழுந்திருக்கும்.

இதற்கு அப்புறமும் யாராவது 'it is just a game' என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கின்றது.

Wednesday, April 4, 2007

டெண்டுல்கர் பொன்மொழியும் புள்ளிவிவரமும்

பொன்மொழி
எல்லோரும் அணியின் தோல்வி குறித்தே பேசுகின்றோர்கள் ஆனால் யாராவது எங்களை குறித்து யோசித்தார்களா?
-டெண்டுல்கர்

சில புள்ளி விவரங்கள்((செப்டம்பர் 2005க்கு பிறகு)

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டிகளில்

ஆட்டங்கள் : 11
ஒட்டங்கள் : 155
சராசரி : 14.09
ஐம்பது/நூறு : 0/0


பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில்

ஆட்டங்கள் : 18
ஒட்டங்கள் : 434
சராசரி : 27.13
ஐம்பது/நூறு : 2/1


தகவலுக்கு நன்றி ; cricinfo.com

Tuesday, April 3, 2007

சில்லறை வணிகம் - பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் தற்போதைய நிலமை.







படத்திற்கு நன்றி http://www.ficci.com/


நுகர்வோருக்கும் இழப்பு. உற்பத்தியாளருக்கும் இழப்பு. வெற்று இரக்கமும், பச்சாதாபமும் தாண்டி இருவருக்கும் வேறு தேவைகளும் உண்டு.

சில்லறை வணிகம்- வருவாய் பகிர்வு

5000 முதல் 20000 சதுர அடி வரை இடம் வைத்திருக்கும் கடைகளோடு வருவாய் பகிர்வளவில் ஒப்பந்தம் செய்து வியாபாரத்தில் இறங்க தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. எத்தனை சதவீதம் லாப பகிர்வு இருக்குமென தெரியவில்லை.

சிறு நகரங்களிலும் தங்களுடைய இருப்பை விரிவுப்படுத்தும் ஒரு வழியாக ரிலையன்ஸ் இந்த வழியை அறிவித்துள்ளது. இந்த வியாபார பகிர்வுக்கு ஒத்துக்கொள்ளும் சிறுவணிகரது கடைகளை மேம்படுத்தவும், புதிய பொருள்களை அறிமுகப்படுத்தவும் ரிலையன்ஸ் ்முன் வந்துள்ளது.

இந்த முறை வரும் போது உள்ளூர் சந்தைக்கு ரிலையன்ஸின் பெரிய வரத்துவாரி அறிமுகப்படுத்த படுதல் மூலம் பொருள்களின் தரம் உயர்ந்து வி்லை குறையலாம். அதே நேரம் உள்ளூர் மொத்த விற்பனையாளருக்கான தேவை குறைந்து அவர்களது வியாபாரம் பாதிக்கப்படும்.

Monday, April 2, 2007

சிறப்பு பொருளாதார மண்டலம்
















நாட்டின் மொத்த நில பரப்பு
29,73,190 சதுர கிலோமீட்டர்

விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் நில அளவு

15,34,166 சதுர கிலோமீட்டர்

இதுவரை அனுமதி அளிக்கப்பட்ட 234 சி.பொ.மண்டலங்களால்
பயன்படுத்தப்படும் நில அளவு

350 சதுர கிலோமீட்டர்

கருத்தளவில் அனுமதியளிக்கப்பட்டு இன்னமும் நிலம் கையகப்படுத்த
படாத சி.பொ. மண்டலங்களுக்கு பயன்படுத்த போகும் நில அளவு

1400 சதுர கிலோமீட்டர்


இது வரை அனுமதிக்கப்பட்ட 234 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் முழு அளவில் செயல் படும் போது அவற்றின் மொத்த மதிப்பு 3,00,000 கோடியாக இருக்கும். அதனால் 4 மில்லியன் வேலை வாய்ப்புகளும் உருவாகும். நில அளவினை ஒப்பிடுகையில் சிறப்பு பொருளாதாரத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட/படுத்த போகும் விவசாய நிலப்பரப்பில் 0.1 விழுக்காடே. அரசு இந்த விவசாய நிலத்தில் இருந்திருக்கும் வேலைவாய்ப்பை பற்றியோ, அல்லது விளைபயிர் பற்றியோ புள்ளி விபரம் அளிக்கவில்லை.

பச்சை புடவை, மஞ்சள் புடவை , அட்ச கிருத்திகை, பிள்ளையார் பால் குடித்தல் என வதந்தி கிளப்புவது போல மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை பற்றிய புரளிகளுக்கும், எதிர் மறை பிரச்சாரங்களுக்கும் விடையளிக்கும் விதமாய் அரசு இநத தகவல்களை அளித்துள்ளது