Thursday, September 21, 2006

சினிமா பார்க்க போனவன்

சண்முகத்துக்கு பேய்கள்னா பயம். ராத்திரி தனியா இருந்தா பேன் இல்லாம, லைட் இல்லாம தூங்கமாட்டான். இன்னைய தேதிக்கு அவனுக்கு தெரிஞ்சு அவன் பேயை நேரா பார்த்தது இல்லை. சண்முகத்தோட அப்பா, அம்மால்லாம் தலைகீழாய் நின்று எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டார்கள். ஆனாலும் அவனுக்கு அந்த பயம் போகவில்லை. இரண்டு தாயத்து மட்டும் அவங்களுக்கு தெரிஞ்ச சாமிக்கிட்ட வேண்டி கட்டி வைத்திருந்தார்கள்.

இந்த நேரத்தில் சண்முகத்து அப்பாவை போலந்தில வேலைக்கு கூப்பிட்டார்கள். அவனுக்கு இந்தியாவிட்டு வெளிநாடு போக இஷ்டமே இல்லை. அவங்க அம்மா,அப்பாட்ட பிடிவாதமா தான் தனியா இருந்து பார்த்துக் கொள்வேன் என சொல்லி விட்டான். சரி வேற வழி இல்லை என்று அவர்களும் போலந்துக்கு பறந்து விட்டார்கள். இவன் தனியாளாய் உள்ளுரில் இருந்தான்

ஒரு நாள் போரடிக்குதேனு சாயந்தரமா சினிமாவுக்கு கிளம்பினான். இவனுக்கு பிடிச்ச ஒரு படமும் ஒரு தியேட்டர்ல ஒடிக்கிட்டு இருந்தது.சரினு அதுக்கு போனான். தியேட்டர்ல கூட்டம் அதிகம் இல்லை. டாம் குருஸ்க்கே இந்த கதியானு இவனுக்கு இருந்தது

மொத்தம் ஐஞ்சு ஆளுங்க தியேட்டர்ல. ஓரே ஓரு பொண்ணும் இருந்தது. அந்த பொண்ணு வெள்ளை கலர் ட்ரஸ் போட்டிருந்தது. முழி எல்லாம் பெரிசா வேற இருந்தது. தனியா பொண்ணிருக்கவும் இவன் பயந்துகிட்டு இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்துகிட்டான். படம் படு திரிலிங்கா ஆரம்பிச்சுது. ரத்தமும் சப்தமுமா போயிட்டு இருந்துச்சு. திடீர்னு அவனுக்கு பக்கதில்ல முச்சு சப்தம் கேட்டது. திரும்பி பார்த்தா அந்த பொண்ணு இவன் கிட்ட வந்தாள். எப்ப இங்க வந்தாளேன இவனுக்கு தெரியலை. காற்று போல் நகர்ந்திருந்தாள். அவள் மூச்சு சப்தம் பெரிதாய் ஆகி கொண்டு இருந்தது.

"எனக்கு இந்த மாதிரி படம்னா கொஞ்சம் பயங்க. அதான் இங்க வந்திட்டேன். தியேட்டரிலியே நீங்க கொஞ்சம் பாக்க டீசெண்டா இருந்திங்க. அதான் இங்க வந்திட்டேன்." - அந்த பெண்

"என்னங்க நீங்க கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் இப்படி பக்கதில வந்து உட்காந்திட்டிங்க"-சண்முகம்

"ஏன் இப்படி எரிஞ்சு விழறிங்க. கொஞ்சம் துணைக்குதான் பக்கதில இருங்களேன்.நான் என்ன கடிச்சா திங்க போறேன். பயமா இருக்கவும் வந்தேன். உங்களுக்கும் ஒரு கம்பெனியா நினைச்சுங்களேன்"- அந்த பெண். குனிந்து அவன் கழுத்தருகில் கிட்ட வந்து காதுக்குள் பேசினாள்.

அவளிடம் ஒரு அதித வசீகரம் இருந்தது போல சண்முகத்திற்கு தோன்றியது.மறுக்க முடியவில்லை. வாசனை அவன் நாசியோடு மூளைக்குள் பரவியது. பெண் வாசனையே அலாதிதான் என நினைத்துக் கொண்டான்.

"சரிங்க" -சண்முகம். சொல்லி விட்டு படத்தில் லயித்து போனான்.

சற்று நேரம் போனது. ஏதோ ஒரு காட்சிக்கு பயப்படுவது போல் அவள் அவன் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள்

"இந்த படத்தில வரதெல்லாம் நெஜமாங்க. இப்படில்லாமா இருப்பாங்க. வெள்ளைகாரன் கற்பனை தனிதான் போங்க"-அவள். ஒரு மாதிரியான இளஞ்சூடு கலந்த மூச்சோடு அவள் குரல் அவனை தொட்டது.

"இல்லாமலாங்க எடுப்பாங்க. நிஜந்தாங்க. எனக்கு நல்லா தெரியும். நம்ம ஊர்ல வேற பெயர்ல இருக்கும் "- சண்முகம்.

"இல்லிங்க. பேய் பிசாசெல்லாம் கூட நம்பிடலாம். இந்த மாதிரி குப்பையை நம்ப முடியாது.
நம்மூரு சினிமால இதெல்லாம் இல்லவே இல்ல பாருங்க. இந்த மாதிரி எதுவும் நடந்திருந்தா நம்ம ஊரிலேயும்தான் படமா வந்திருக்கும். இத பாக்கறத்துக்கு அப்படியே வெளியே போகலாம். விடியற வரைக்கும் நான் கம்பெனியா இருக்கேன். என்ன சொல்றீங்க?"- அவள்.

சண்முகத்தை எதோ ஓன்று மறுத்து பேசவே விடவேயில்லை. இந்தப் படம் வேறு அவனுக்கு பார்த்து முடிக்க வேண்டும். இவனை ஒத்த பசங்கள் எல்லாம் பார்த்து விட்டார்கள். இவன் மட்டுமே மீதி. ஆனாலும் அவளின் கவர்ச்சியால் யோசிக்காமல் சரி என்று சொல்லி விட்டான்

சண்முகமும் அவளும் ஆட்டோ பிடித்து அடுத்த சில நேரத்தில் அவளுடைய வீட்டிற்கு வந்தனர். ஆட்டோவில் அவள் இவன் மடியில் உட்காராத குறையாய் ஒட்டிக் கொண்டாள்.அவனுக்கு ஆசை அதிகமானது. அவள் அழகாய் சிரித்து வந்தாள். ஊரின் ஒதுக்கு புறமாய் அந்த வீடு இருந்தது. பக்கதில் வீடே இல்லை. எப்படி இந்த காலத்தில் இப்படி ஒரு வீடு என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டுக்குள் வந்ததும் குடிக்க எதுவும் வேண்டுமாவென அவள் கேட்டாள். சண்முகத்திற்கு அது வரை அடக்கி வைத்திருந்த ஆசையை அதற்கு மேல் நிறுத்த முடியாமல் அவளை இழுத்து அணைத்து கழுத்தில் கடித்தான். தாகம் தீர சற்று நேரமானது.அவள் துடித்து அவன் கையில் அடங்கினாள்.

அடுத்த ஷோ போய் திரும்ப போய் பாதியில் விட்டு வந்த இன்டர்வியு வித் வேம்பயர் பார்த்து முடிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். அம்மா அப்பாவிடம் பேசும் போது வேம்பயருக்கு தமிழில் என்ன என்று கேட்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான். யாரும் கேட்டால் சொல்ல முடியாமல் இருப்பது சங்கடமாக இருந்தது. எல்லோரும் வேறு இவனை போன்றவர்களை வெள்ளைக்காரன் கற்பனை என சொல்வது வேறு அவனுக்கு பிடிக்கவில்லை.

No comments: