Wednesday, June 27, 2012

எல்லாம்

அமெரிக்காவில் கோடை காலங்கள் நீண்ட பகலையும், குறைந்த இரவையும் கொடுக்கும். இரவு சூரியன் மறைய ஒன்பது மணி கூட ஆகும். இது போன்ற ஒரு நாளில் இரவு உணவு முடித்து  ஒரு நடை நடந்து வரலாம் என கிளம்பினேன். பள்ளி கூடங்கள் எல்லாம் முடிந்து போனதால் என்ன செய்வது என தெரியாமல் ஆட்டம் இடும் எனது ஐந்து வயது வாரிசு முந்தி கொண்டு செருப்பணிந்து காத்து நின்றது. நானும் அவளும் நடந்து போக ஆரம்பிதோம். ஆரஞ்சு நிற சூரியன் மனதுக்கு இதம். நடைபாதையை ஒட்டிய குளம் போன்ற மழை நீர் சேகரிப்பு அமைப்பு நிறைந்து  காற்று தொட்டு வீசியது. மகள் காற்றில் சிறகு விழும் பாவனையில் குதித்து நடந்து கொண்டிருந்தாள். அது ஒரு நிறைவான அனுபவம் தந்தது.

  "கொஞ்சம் நில்லுங்கள் " யாரோ அழைத்தது போல் குரல் வர திரும்பினேன்.

 ஒரு வயதான பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். வயது எழுவதுக்கு மேல் இருக்கலாம். வெள்ளை வேஷ்டி ,சட்டை போட்டு ஆறடிக்கு மேல் உயரமாக இருந்தார்.  கை கால்கள் தளர்ந்து முகம் சற்று சுருக்கமாக இருந்தது. நல்ல குறுஞ்சிரிப்பு ஒன்று முகத்தில் இருந்தது. யாரென தெரியவில்லை. யாருடைய தந்தையோ, யாருடையா மாமனாரோ   எனக்கு சட்டென தோன்றவில்லை.

"ஹையா தாத்தா" மகள் கண்கள் விரிய எம்பினாள்.   சட்டென முகம் மலர்ந்தாள்.

"யாரடி தாத்தா" கிழவர் முகம் சுளித்தார்.
 
"வணக்கம் யார் நீங்கள் ? உங்களை எனக்கு தெரியுமா?" குழப்பமாய் கேட்டேன்.

"என்ன சொல்கிறாய் ?" பெரியவர் சலித்து கொண்டார்.

"கால கோளாறு. அதுதான் குழப்பம்" - மகள் மீண்டும் காற்றில் கால்களை துளாவி கைகளை இலையுதிர் கால இலையென ஆக   முயன்றாள்.

மகளை பார்த்தேன் , இப்போது பெரிதாக வளர்ந்து இருந்தாள், ஒரு 20 வயது வடிவில் இருந்தாள். பயம் உடலெங்கும் வந்தது , படபடப்பானது, வலது கை வலித்தது, தலைக்கு ரத்த ஓட்டம் அதிகமானது, பைத்தியம் பிடித்ததா எனக்கு என தெரியவில்லை. ஐயோ என அலறினேன். சுற்றி நடை பயிலும் யாரும் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.

"என் கண்ணே" என மகளை அள்ளி தூக்க போனேன். அழுகை ததும்பி வந்தது.
என்ன ஆனது என் மகளுக்கு என பயம் ஆட்டியது.

மகள் இன்னும் வளர்ந்திருந்தாள்,  அந்த கிழவர் இன்னும் இளமையானார். அவர் முகம் மிக குழப்பதில் இருந்தது. வானத்தில் இருந்து பனி பொழிய ஆரம்பித்தது.

"சங்கரா  இது நீ இல்லை"  என்றார் அந்த மனிதர்.

"நான் சங்கரன் இல்லையே" என்றேன். என் கால்கள் பூமிக்குள் புதைய ஆரம்பித்தன. அவை வெடித்து வேராக மாறுவது போல் இருந்தது.உடம்பின் எலும்புகள் வெடித்து வெளி வந்தன, அவை மரத்தின் கிளை போல மாறுதல்
கொண்டன. நான் உடைந்து ஆழ ஆரம்பிதேன். என் மகள் , மனைவி, பெற்றோர் ,வீடு, வேலை என எல்லாம் என்னை வீட்டு போக போவது உள்ளுக்குள் உலுக்கி எடுத்தது. என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. எங்கோ தொலைந்து போனது போல இருந்தது.  

"என்ன செய்கிறாய் இவனை" என கண்ணீரோடு   என் மகளிடம் அந்த மனிதர் கேட்டார்
    
அவள் சிரித்தாள். கை கால்கள் சுழன்றன. அவள் காற்றில் தன்னை கரைத்து மீண்டு வந்து வந்தாள், மேலும் சிரித்தாள்.

உற்று மகளை பார்த்தேன். என் அம்மா போல இருந்தாள். அவள் கண்ணில் கனிவு வழிந்தது. இரு  பற்கள் வெடித்து உதட்டின் வெளியே வந்திருந்தது.

" அஞ்சாதே" என்றாள். அவள் உதடுகள் பிரியவில்லை. ஆனால் என்னோடு பேசினாள்.

"அம்மா" என்றேன்.

கையில் வேல் எடுத்து என்னுள் கிழித்தாள். நான் ஒரு மரமானேன்.


   
         
     

   

சோமன் சரித்திரம்

சோமன் காலையிலிருந்தே ஒரு வித குதுகலத்திலிருந்தார். உண்மை, உழைப்பு, உயர்வு என உவன்னாவை விதவிதமாக உபயோகித்து பெரிய புரட்சி கட்டுரை ஒரு முழத்துக்கு எழுதியிருந்தார். அவரது எழுத்து திறமையிலும், பேச்சிலும் அவருக்கு தனி சிலாகிப்பு உண்டு. சீர்காழி கோவிந்தராசனை ஒத்த கணீர் குரலில் அவர் முழக்கமிடுகையில் ஊரே அசரும்.



இன வேங்கை சோமன் என அவரது அல்லக்கை வட்டராம் அவருக்கு பட்டம் அளித்து இருந்தது. இப்போதெல்லாம் அவரை யாராவது சோமன் என அழைத்தால் அவருக்கு ஒரு அவமரியாதையாகவே பட ஆரம்பித்ததுள்ளது. வேங்கையார் என்று அவரை அழைத்தலே அவருக்கு பிடித்திருந்தது.



அல்லக்கை வட்டாரம் அவரிடம் காரியம் சாதிக்க நினைக்கையில் எல்லாம் தென்னாட்டு வேங்கை, தமிழ்நாட்டு சிறுத்தை என வாயில் வந்த வார்த்தையெல்லாம் போட்டு பேசும் போது அவருக்கு முடியெல்லாம் சிலிர்க்கும்.




"பகுத்தறிவு வாழ்க. வேங்கையார் புகழ் ஒங்குக" - சப்தம் வெளியில் கேட்டது.



காலையில் கட்டுரை எழுதிவிட்டு சனிஸ்வரனுக்கு பூஜை செய்யும் வேளையில் கூட்டம் வந்தது வேங்கையாருக்கு எரிச்சலாய் வந்தது. ஆனாலும் வேறு வழியின்றி வெளியில் வந்தார். அடுத்த சனி பெயர்ச்சி வரும் வரையில் பிரதி சனி நெய் விளக்கு போடுமாறு ஆஸ்தான ஆருடர் கூறி சென்றதில் இருந்து விடாபிடியாய் கடைபிடித்து வருகின்றார்.



துவக்கத்தில் வேங்கையார் கடவுள் சிலையை உடைக்கவெல்லாம் செய்து கொண்டுதான் இருந்தார். முப்பந்தி ஐந்தாம் வயதில அவரது இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளைக்கு உடம்பு தொடர்ந்து சரியில்லாமல் போய் கொண்டிருக்கையில் மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆருடரை சந்தித்தார். சும்மாவேனும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் கிரகம் ஒன்றின் பெயரை சொல்லி மூன்றாவது கல்யாணம் கட்டினால்தான் குடும்பத்தில் நிம்மதி வருமென சொல்லி விட்டார். அதை கேட்டு அவருடைய இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளையின் உடம்பினுள் இருக்கும் நோய் கிருமிகள் அதிர்ச்சியில் செத்து விட பையன் தெளிவாக ஆரம்பித்தான்.



தோஷ நிவர்த்திகாக வேறு வழியின்றி வேங்கையார் தன்னுடைய சாதியில் தனக்கு தொடுப்பாக இருந்த ஒரு பெண்மணியின் தங்கையை கல்யாணம் செய்து கொண்டார். பகுத்தறிவு பிரச்சாரங்களுக்கு இது இடையூறாக இருக்குமென்பதற்காக இந்த திருமண விஷயத்தை காதும் காதும் வைத்தது போல் ரகசியமாக வைத்து விட்டார்.



புரட்சி வேங்கை வாசலுக்கு வந்த போது அங்கிருந்த அல்லக்கைகள் எல்லாம் இன்னமும் மகிழ்சியாகி பகுத்தறிவு வாழ்க பகுத்தறிவு வேங்கை வாழ்கவென விடாமல் சப்தம் கிளப்பின. வேங்கையார் கண்கள் உன்னிபாக எவனேனும் சப்தம் போடாமல் இருக்கின்றதா என ஆராய்ந்தது. மூன்றாவது வரிசையில் நின்ற மாவட்ட செயலாளர் ஒருவன் சப்தம் போடாமல் இருப்பதை மனதில் குறித்துக் கொண்டார்.




" என்ன எல்லோரும் நலமா? உங்களையெல்லாம் பார்க்கையில் உள்ளம் பூரிக்கின்றது. " - சிம்மக் குரலில் பேசினார்.


கூட்டம் அதற்கும் கைதட்டியது. ஆய் போனீர்களா என அவர் கேட்டால் கூட கை தட்ட பழக்க படுத்தப்பட்ட அந்த கூட்டம் பகுத்தறிவு கடவுள் வாழ்க என கூவியது.


கூட்டத்தின் மையபகுதியிலிருந்து வாயெல்லாம் பல்லாக நற்றுணை நாரயணசாமி முன்வந்து பொன்னாடையை போர்த்தினார். நற்றுணை என்ற ஊரை சார்ந்தவர். ரோடு போடும் குத்தகை விஷயமாய் மாதா மாதம் வருவார்.

( தொடரும் )


Tuesday, June 26, 2012

தமிழ் வழி நாத்தீகம்

 நாத்திகவாதம் எதிர்மறை மனநிலை மட்டும் உடையதா என்பதில் எனக்கு தொடர் கேள்விகள் உண்டு. நாத்தீகம் என்பது பல்பொருள் கொண்டது எனவே எனக்கு படுகின்றது. பொது வெளியில் கடவுள் மறுப்பு எனும் தளம் கொண்டு முன் வைக்க படுகின்றது. ஆனால் கடவுள் இருக்கலாம் ஆனால் நிறுவனமாக பட்ட மத அமைப்பு வேண்டாம் என்பதே நாத்தீக கொள்கை கொண்டவரின் உள் தேடல் என எனக்கு தெரிந்த தமிழ் நண்பர் வட்டாரத்தில் கண்டிருக்கின்றேன். ஆனால் அதை நண்பர்கள்  வார்த்தையில் சொல்லும் பொழுது கடவுள் மறுப்பு என முடிப்பர். இந்த இரு வார்த்தை முடிவுக்கு  காரணம்  லௌகீக வாழ்வில் விரிவான உரையாடலும் , உரையாடல் சார்ந்த தொடர் சிந்திப்பும் பெரும்பாலும்  இல்லை என நினைக்கின்றேன்.  பெரும்பாலான கருத்துகள் பொது நம்பிக்கை தளத்தில் நேர்ந்து விட பட்டுள்ளன. பொது நம்பிக்கை தனி மனிதர் அகங்காரம் சார்ந்தது. அதை  கையாளுவது அனைவருக்கும்  சுலபம் அல்ல. 

 நாத்தீகவாதம்  நகர கூடிய ஒரு தேர். பிருமாண்டமாய் அது  கட்ட பட்டு கிடக்கின்றது. அதை இழுத்து நகர்த்தும் பொறுப்பு உள்ளவர் முடங்கி போதலில் தேரும் பழுதானதாய் படுகின்றது. நாத்தீக வாதம்  நிறுவன உடைப்பு வாதம் எனும் பொருளில் முன் வைக்க பட்டு நகருதல் வேண்டும் என்று சில நேரம் படும். அந்த நேரத்தில்  கையில் உளியை வைத்து கொண்டு உருட்டி விளையாடி கொண்டு இருக்கின்றோமா என தோன்றும். உளியில் செயல் சிலையாய் பூத்தலில் உண்டு.

நிறுவனமாய் கூட்டபட்டு ,அதிகாரமும், மூலதனமும் தேங்கி அலையும் அமைப்புகளின் இயங்கு தன்மையை உடைத்து நெறி செய்யும் அமைப்பினையே நாத்தீகம் எனலாம். அது வெற்று கடவுள் மறுப்பன்று. கடவுளோடு அதற்கு பேச ஒன்றும் இல்லை. கடவுள் நம்பிக்கை தனி மனித உரிமை என பூரண  நாத்தீகம் உணரும். அது மறுப்பது நிறுவன அமைப்பின் செயல்தளத்தினையே.

நாத்தீகம் கடவுள் மறுப்பாய் குறைத்து நிற்கையில் அது உணர்வெழுச்சியோ கவித்துவமோ சாத்தியமாவதில்லை என உருவம் வரலாம் . ஆனால் அது உண்மையன்று. நாத்தீகம் அற வடிவினை, கருணையை ,அழகை  நிறுவன  அமைப்பின் வெளியே தேடுகின்றது ,இந்த தேடல் கவிதையை , கவித்துவதினை  கொடுக்க கூடியதே என  நான் நினைக்கின்றேன்.  

எல்லாவகை மன எழுச்சியிலும் தர்க்க முழுமை உடையவர் நடை முறை சாத்தியம் அல்ல எனவே படுகின்றது. அவ்வாறு உள்ளவர் பூரணம் ஆனவர் ஆவார். நாத்தீகம் கோரும் தர்க்கம் மன எழுச்சியின்  மறுப்புக்கு அல்ல, மன விரிவுக்கு என்பதே என் எண்ணம்.   

மரபு என்றால் என்னவாக இருக்கலாம்?

மரபு இரு வகையில் பொருள் கொள்ள கூடியது என்பது என் எண்ணம். ஒன்று நமக்கு முன் வாழ்ந்த கோடானு கோடி மனிதர்களின் அறிவு வடிவம், மற்றொன்று பொருளாதார,அதிகார  சிந்தனை ஒட்டி எழுந்த  அடக்கு முறை கொள்ளும் அரசியல் வடிவம் என புரிதல் உண்டு. ஜெயமோகனை  வாசிக்கும் முன் அரசியல் மட்டுமே கொண்டது மரபு என்ற எண்ணம் இருந்தது. பின்னர் அது மாறி விட்டது.

அரசியல் வடிவம் கொண்ட மரபினை எண்ணி 2006 ஆண்டு எழுதியது. இது ஒரு மன எழுச்சி கொண்டு எழுதிய கவிதைதான்.  

மரபு 
----------------------------
இப்படிதான் இருக்க வேண்டும்
அப்படிதான் இருக்க வேண்டும்
என்றார்கள்
அவர்கள் சொன்ன
இப்படியும் அப்படியுமில்
அடங்கி முடங்கினோம்
விதைகள் சில
எங்கள் தோட்டத்தில் விழுந்தது
நாங்கள் அதை கவனிக்கவில்லை

ஏனடா இதுவென
கூடி பேசிய பொழுது
இப்படிதான் பேச வேண்டும்
அப்படிதான் பேச வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
பேசாமல் எழுதி கொடுத்தை
வாசிக்க ஆரம்பித்தோம்
வாசிப்புக்குள் பேசவும் கற்றோம்
மெல்ல களைகள் விதை
தாண்ட ஆரம்பித்தன
நாங்கள் அது தரும்
நிழலுக்குள் ஒன்டிக் கொண்டோம்

Monday, June 25, 2012

நிறுவனம் vs அநிறுவனம்

நிறுவனம் vs  அநிறுவனம் எனும் தரப்பினை ஒட்டி எழும் மோதலாய் பார்க்கலாம்.

நிறுவனமற்ற அமைப்பு எனபதை அநிறுவனம் என சொல்லலாம். அநிறுவன அமைப்பானது பன்மயமானது, பன்மைய விரிவுகள் ஒட்டியும் , ஒட்டாமலும் இயங்கும் தன்மை உடையது. மனித லௌகீகத்தின் மேல்
உண்டாகி வளர்ந்து வந்தது. நிறுவப்பட்டது அல்ல.தனி மனித , குடும்ப மற்றும் சமூக உள் உணர்வால் உண்டாகி இருந்தது. பொருட்கூறுகளின் அடுக்குகளோடு தொடர்புடையது. மாறும் மானுட அறகோட்பாட்டின் மேல் நிற்பது.


இந்த அநிறுவன அமைப்பினை மாற்ற  இரு நிறுவன அமைப்புகள் இயங்க முன் வருகின்றன. ஒன்று அநிறுவன அமைப்பு இயங்கிய அதே சூழலில் உருவானது, தொன்மையானது . அநிறுவன அமைபோடு நெடுங்காலம் உரையாடல் கொண்டிருந்தது. கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தது. கொண்டும் , கொடுத்தும் இயங்கியது. ஆனால் இந்த நிறுவனத்தின் கோட்பாடுகள் அநிறுவன உறுப்பினர் கல்வி, மருத்துவம், சமூக ஒருங்கிணைப்பு போன்றவை மீது வளர்ச்சி பார்வை கொண்டிருக்க வில்லை, வளர்ச்சி பார்வை கொள்ளும் திறனும் அதற்கு அறவே இல்லை. ஒரு ஒட்டுண்ணி வடிவம் மட்டுமே கொண்டிருந்தது.அதன் கோட்பாடு சம நிலை சமுதாயம் எனபதை எழுத்து வடிவில் கூட அங்கீகரிக்க மறுக்கின்றது.

 இரண்டாம் நிறுவனமும் தொன்மையானது , வார்க்கபட்ட நிறுவன வடிவம் உண்டு.  அதற்கு   இலக்கு உண்டு, அளவீடு உண்டு, நிர்ணயிக்க பட்ட செயல்பாடு உண்டு, உறுப்பினர் பெருக்குதல் அதனுடைய
நிறுவன கோட்பாட்டினில் ஒன்று. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
 இரண்டாம்  நிறுவனம் கல்வி , மருத்துவம் முதலிய சமூக அடிப்படை தேவைகளோடு  அநிறுவன உறுபினர்களை அணுகுகின்றது. அவர்கள் உறுபினராகும் காலத்து இந்த பயன்பாடு பொருள்கள் குறைத்த பொருள் செலவில் கிடைக்கும் எனும் வழி முறை சொல்ல படுகின்றது. இந்த நிறுவனம் அதன் கோட்பாட்டினில் சமநிலை சமுதாயம் என்பதை எழுத்து வடிவில் அங்கீகரிக்கின்றது, நடைமுறை என்பது வேறு விஷயம்.


நுகர்வோருக்கு மூன்று  வழி முறை உண்டு. தங்களது அநிறுவன கோட்பாட்டில் நின்று நிலைப்பது. நிறுவனம் ஒன்றினை சார்ந்த ஒரு நிலைப்பாடு கொண்டு தனது அநிறுவன கோட்பாட்டினை வாழ்வாக கொள்வது. நிறுவன வடிவுக்கு முற்றிலும் மாற்றி கொள்வது.நுகர்வாளருக்கு
அதற்கான சுதந்திரம் இருந்தால் சரி.

இதில் இரண்டாவது நிறுவன அமைப்பு தனது பிரசார வடிவில் ஒன்றாய் அது தொகுத்த அறிவு வடிவதினை பொதுவில் வைக்கின்றது. அநிறுவன உறுபினர் அதனை பயன்படுதி தனது உள் பிரச்சனைகளை முன் வைக்கும் பொழுது முதலாவது நிறுவனம் தடுமாறி போகின்றது. அதன் மங்கிய திறன்
கல்வியை சமூக செயல்பாடென இல்லாமல் தனி மனித செயல்பாடாய்
பார்ப்பது. ஆவனங்கள் தொகுப்பது, பெரும் கல்வி சாலைகள் அமைப்பது போன்றவை அதன் உள்ளே செயல்பாடாய் இருந்தது இல்லை. வரலாறு அநிறுவன உறுபினர்களோடு மேம்பட்ட உரையாடல் காண வழி செய்த கதவுகளை முதல் நிறுவனம் சேர்ந்தவர்கள் பல நேரங்களில் மூடி இருக்கின்றார்கள். அந்த தொலைந்த வாய்ப்புகள் குறித்தும் அறிவும் ,தெளிவும் இல்லை. முன்னோக்கு பார்வை குறைவான முதல் நிறுவனம்
கால வெளியை திருப்பி எங்கோ பின் கொண்டு சென்று அநிறுவன உறுப்பினர்களை ஒரு சொர்க்க பூமி இருந்தது என நம்ப சொல்கின்றது.
முன்னோக்கி செல்லவே எல்லோருக்கும் விருப்பம்.


 



   
            

Thursday, June 14, 2012

உருவ வழிபாடு எப்படி உண்டாகி இருக்கலாம்?

வழிபாடு என்பது என்ன? அது ஒரு கோரிக்கை. கீழிருந்து மேல் செல்வது. அது வெறும் கோரிக்கையாக மட்டும் இருக்க முடியுமா? அதில் ஒரு மரியாதை , அங்கீகாரம் இருக்கின்றது. அந்த அங்கீகாரம் தான் என்ற உணர்வினை கீழாகவும், தன்னை விட உயர்ந்த ஒன்றிடம் அகங்காரம் அற்று நிற்பதிலும் உள்ளது.

ஆதியில் மனிதனின் மிக பெரிய தேடலாக  உணவும் , இன பெருக்கமும் , குடும்ப உணர்வும் இருந்திருக்க முடியும். அதை பரிணாம சூழலில் விலங்குகளிடமும் காண்கிறோம். ஆனால் மனிதனுக்கு குடும்பம் தொடர்ச்சியானது, அது மனித விருதிக்கு  மட்டும் அல்ல. உணவு பசிக்காணது மட்டும் அல்ல. அதை விட மேலானது. இந்த சூழலில் உணவையும், குடும்பதையும் ஒட்டி ஒருவான லௌகீகமே , நுகர்வே மனிதனுக்கு வழிபாட்டை உண்டாக்க சாத்தியம்  அதிகம். பயம் என்பதை விட நுகர்வின் தேடல் மிக முக்கிய பங்கு கொண்டிருக்கும். தேடல் என்பது உள்ளம் , உடல் இரண்டின் உச்சம் வரைக்கும் மட்டுமே செல்ல முடியும் , அதை மீறிய தேடல் வரும் பொழுது கை பற்றல் தேவை படுகின்றது. அந்த கை பற்றல் தான் என்ற மனித சாத்தியதுக்கு மீறியதாக இருக்கிறது. அது கடவுளானது. மொழியும், சிந்தனையும் உருவாகி வளரும் காலத்தில் தொடர்பு மொழியாக குறியீடுகள் இருந்தன. அந்த குறியீடுகளே உருவ வழிபாடாகின.

வம்சம் விருதி செய்யும் பெண் தாய் தெய்வமானாள்.  அது ஒரு குறியீடு. வம்சம் விருத்தி அன்றைய வாழ்வில் மிக முக்கியம். வெள்ளாண்மையிலும்,வேட்டையிலும் ஆட்கள் தேவை. அது குடி தழைக்க அவசியம். ஜெயமோகன்  முன்பு எழுதிய ஒரு இயற்கை விவசாயம் பற்றிய கட்டுரையில் ஒரு மூத்த விவசாயி மண்ணின் மனத்தை( ஸ்பைரில்லம்)   வைத்து அது விதைக்கு தயாரவதை சொல்லி இருந்தார். ஆதியில் இது போன்ற உணவு உண்டாகும் நுட்பம் தெரிந்த மூத்தோர் ஒரு குடியின் பெரும் வரமாக இருந்திருப்பா். அவர்களது அந்த அறிவு இயற்கையின் நுட்பங்களை குறியீடாகியது. அதன் தொடர்ச்சியாக குல மூப்பரும் குறியீடானர். இதனுடே பரிணாம ரீதியில் மனிதனுக்கு அதிகாரம் நோக்கிய பார்வை உண்டு. கூட்டத்தின் தலைவனாதல் ஒரு ஆதி வேட்கையே. இந்த தேடலும், நோய் ,விபத்து போன்ற நிழவுகள் உருவாக்கும் கையறு நிலையும் பயத்தை குறியீடாக்க முயன்றிருக்கும் என நினைக்கிறேன்.      
 
மொழி வளம் பெரும் காலத்து , சிந்தனை வளரும் காலத்து குறியீடுகள் குல வழி ஆயிருக்கலாம். குஷ்புக்கு கோவில் கட்டியதும் ஆதி மன நிலையில் ஒன்றாக இருந்திருக்களோமோ என ஐயம் வருகின்றது.   அதிகாரம் மற்றும் ஆன்மீக தேடல் வலிமை கொண்ட பொழுது இந்த குறியீடுகள் கடினமாயின, விரிவாயின , ஆலயங்களுக்குள் சென்றன என நினைகிறேன். ஆன்மீக தேடல் குறைந்து அதிகார தேடல் மிகுந்தது, புதிய தலைமுறைகளில் பெரும் பாலோர்  குறியீடுகளை கவனித்தல் குறைந்தது, அவர்கள் குறியீடுகளை தொழ மட்டும் செய்தனர். புதிய பொருளியல் சமூகங்கள் வந்தன, அவை தங்கள் தேவைக்கு ஏற்ப குறியீடுகளை மாற்றின. தற்போது ஆயுத பூஜைக்கு டேப்லட் வைத்து வழி படுவது  அதில் ஒன்றுதான்.    
 
தான் , எனது என்ற உணர்வு  மனித  பரிணாமத்தில் உண்டாகும் , உண்டாகிய விளைவுகள் அதிகம்.  கூட்டு  சிந்தனை செய்யும் ஜெயமோகனின் பனி மனிதன் கதையில் வரும்   யதிக்கள் வழிபாடு செய்வதில்லை. அவர்கள் இயற்கையை மீறுவதில்லை. அவர்களே இயற்கையின் ஒரு உறுப்பென தங்களை உணர்கிறார்கள். அந்த இடத்தில அவர்களுக்கு குறியீடுகள் தேவை இல்லாமல் ஆகிறது.