நிறுவனங்கள் லாபத்தை குறி வைத்து இயங்குகின்றன. அதில் முதலீடு உண்டு. விளம்பரங்கள் மற்றும் உத்திகள் மூலம் பொருளை சகலருக்கு அறிமுகம் செய்ய தனி அணிகள் உண்டு. அவர்களின் செயல்பாடுகள் அளக்கப்பட்டு அதற்பகேற்ப ஊக்க தொகை உண்டு.
எதிர் நிறுவனத்தின் பொருளை விடாது சாடுதலும் ஒரு வகை விற்பனை தந்திரமே. நுகர்வோரை பொருளுக்கு அடிமையாக்கி விடுதல் விற்பனை செயலின் உச்ச கட்டம். இந்த இடத்தில் நுகர்வோருக்கு மாற்று பொருள் பற்றிய எதிர்மறை சிந்தனை பூரணமாக ஊட்டப்பட்டிருக்கும். நுகர்வோர் தன்னையும், பொருளின் மீதான தனது சிந்தனையும் தனித்து பார்க்கும் சிந்தனையை முற்றிலும் மறுத்திறுப்பார். இரண்டும் ஒன்றே என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கும்.
நுகர்வோர் அவர் பயன்படுத்தும் பொருளுக்கு இணையான பொருள்களை சந்தையில் ஒப்பீடு செய்யவோ அல்லது உபயோகப்படுத்தபடும் பொருளின்றி மாற்று இருக்கலாம் என்ற நிலையையோ நினைக்கும் இடம் தவறானது என்ற போதனையும் நிறுவனங்களால் உண்டாக்கப்படுகின்றது. நுகர்வை பற்றிய ்பொது அறிவையும், கட்டுடைக்கும் சிந்தனையும் கொண்டெழும் சமூதாயவாதிகள் பின்னாளில் ஏதோ ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாகி மாற்றப்படுதலும் உண்டு. நுகர்வோர் நலனை கருத்தில் கொள்வதாய்தான் இன்று வரை எல்லா நிறுவனங்களும் சத்தியம் செய்கின்றன. ஆனால் நுகர்வோரின் நலமே நிறுவன பொருளில்தான் என்ற மிரட்டலையும் உள்ளடக்குகின்றன.
நிறுவனங்களை தாண்டிய பெருவெளி உண்டு. கால் வைத்து நிற்க தைரியம் வேண்டும். எதிலும் பற்றாது எது வரினும் ஊழ் என்று எண்ணாத மனநிலை அங்கு தேவை. அங்கு போதனைகளும், பிரார்த்தனைகளும் கிடையாது. தேவைகளும், தேவையை நிறைவேற்றும் வழிகளும் யாராலும் வரமாய் வராது. பெருவெளி ஒரு போதும் நிறுவனமாகாது. எல்லோரும் ஒரே போல் அங்கு இயங்க இயலாது. மாறுபட்ட இயங்கங்களே பெருவெளியின் அச்சாணி. இம்மையும் , மறுமையும் நிராகரிக்கப்பட்டு விடுவதால் அவை சார்ந்த அச்சங்களும் அங்கே சுமையாவதில்லை.
நிறுவனம் கொடுத்த பொருளாய் தம்மை நினைப்போர் சகமனிதன் நோக்குகையில் முதலில் தெரிவது சகமனிதனிடத்து உள்ள பொருளே. ஆனால் பெருவெளியில் சகமனிதன் நிறுவனத்தின் பகுதியாய் அறியப்படுவதில்லை, அவன் தனக்கே உள்ள குறை நிறைகளோடு அறியப்படுகின்றான். பார்வை வித்தியாசம் புதிய மானுடம் படைக்க உதவும்.
8 comments:
ஒன்னுமே பிரியல நைனா. :-(
மிக நல்ல சிந்தனைகள்.
ஆனால், ஒன்று, இம்மையை நிராகரிக்க இயலாது. மறுமையை மறுத்தல் சாத்தியமே. இம்மையை மறுத்தால் - பின் மனித வாழ்க்கை எந்த உந்துதலுமின்றிப் போய்விடும். இல்லையா?
பெருவெளி என்பது நிருவனமல்ல என்பதற்கு முன்னால், எது பெருவெளி, அதன் பண்பாடுகள் என்ன என்று விளக்கி இருந்தால் அது பற்றி பேச இயலும். இல்லையேல், இல்லாத ஒரு வெற்று வெளியில், வாழ்க்கையைத் தொலைத்து விட்டு, அல்லாடிக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்படலாம்.
அன்புடன்
நண்பன்
ஏற்கெனவே இப்போதுதான் பதிவர் நண்பனின் பதிவில் இதைப் பற்றி பேசியுள்ளோம்.
நாத்திக வாதம் எப்படி ஒரு நிறுவனமாகாது என்பது பற்றி அதில் வாதிட்டேன். அந்த வாதத்தில் இல்லாத ஆழமும், அழுத்தமும் உங்களின் வரிகளில் இருக்கக் காண்கிறேன். வாழ்த்துக்கள்.
பிடித்த அழகான வரிகள்:
//நிறுவனங்களை தாண்டிய பெருவெளி உண்டு. கால் வைத்து நிற்க தைரியம் வேண்டும். எதிலும் பற்றாது எது வரினும் ஊழ் என்று எண்ணாத மனநிலை அங்கு தேவை. அங்கு போதனைகளும், பிரார்த்தனைகளும் கிடையாது. தேவைகளும், தேவையை நிறைவேற்றும் வழிகளும் யாராலும் வரமாய் வராது. பெருவெளி ஒரு போதும் நிறுவனமாகாது. எல்லோரும் ஒரே போல் அங்கு இயங்க இயலாது. மாறுபட்ட இயங்கங்களே பெருவெளியின் அச்சாணி. இம்மையும் , மறுமையும் நிராகரிக்கப்பட்டு விடுவதால் அவை சார்ந்த அச்சங்களும் அங்கே சுமையாவதில்லை.//
இம்மை எனும் சிந்தனையே மறுமை என்பதை வலியுறுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. இரண்டையும் குறித்து காட்டப்படும் நிறுவனங்களின் பயமுறுத்தல் தேவையில்லையே.
நியதிகளுக்கு இடையே உலாவி உலாவி பார்க்குமிடமெல்லாம் நியதிகள் இருக்குமோ என அச்சம் வருதலும், இல்லாத இடங்களை கண்டு நம்ப மறுத்தலும் இயல்பே. மானுடம் மதித்தல் மட்டுமே பெருவெளி உள்ளடக்கம். அதற்கான அனுபவமும்,அனுகுமுறையும் மனிதர் சார்ந்து மாறுபடலாம்.
வெற்று வெளியில் இருந்தால் தொலைவது வாழ்க்கையல்ல, நுகர்பொருள் பூட்டும் நிறுவன பிடிகளே அங்கு தொலைந்து போகின்றன.
அங்கிருப்பது அல்லாட்டமல்ல. அதுவே இருப்பு. நிறுவனம் இறுக்க பிடித்திருப்பது அரவணைப்பாகவும், உதவியாகவும் போதிக்கப்பட்டிருந்தாலும், நிறுவனத்தின் நோக்கமும், செயலும் அதுவன்று.
நிறுவனத்தின் பொருளை வாங்குவதும் வாங்காமல் இருப்பதும் நம் கையில் தான் இருக்கிறது. வாங்கியபிறகு பயன்படுத்தாமல் இருப்பதும் நம் முடிவு சார்ந்த ஒன்றே. பொருளைத் தயாரித்து அழகு சேர்த்து விளம்பரப்படுத்தி விற்பனைக்கு வைப்பதுடன் நிறுவனங்களின் வேலை முடிந்து விட்டது.
நாத்திகமோ ஆத்திகமோ யாருக்கு எதில் இன்பம் -மற்றவருக்கு துன்பம் விளைவிக்காத வகையில்- கிடைக்கிறதோ அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். "மணியே மணியின் ஒலியே" என்றால் தான் அவருக்கு சோறு இறங்குகிறது என்றால் அவர் அப்படியே பாடிவிட்டுப் போகட்டும். இறை மறுப்புக் கொள்கையா? சரி, பேஷா செய்யுங்கோ. இந்த உலகத்தில் நாம் செய்யும் அனைத்திற்கும் என்ன உந்துசக்தி? நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தானே? கடவுளைக் கும்பிட்டால் சந்தோஷமாக இருப்பீர்கள் என்று மதங்கள் சொல்கின்றன. கடவுளை விட்டுத்தொலைத்தால் சந்தோஷமாக இருப்பீர்கள் என்று இறை மறுப்புக்கொள்கையாளர்கள் சொல்கிறார்கள். இருவருமே மக்களின் இன்பத்தைக் கெடுக்கின்றனர்.
நாத்திகமும் நிறுவனம் தான். ஆத்திகமும் நிறுவனம் தான். இவர்களின் நிறுவனம் மதம். அவர்களின் நிறுவனம்: மதத்தின் மதம். இருவராலும் லாபமில்லை. பகுத்தறிவு ஒன்றே வழி. அது கல்வியால் மட்டுமே கிடைக்கும்.
உங்கள் எழுத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். எப்படி இப்படி எழுதுகிறீர்கள்? ஒரு வலைப் பதிவாளரின் எழுத்து மாதிரியே தெரியவில்லையே. இப்பம் நான் சொல்லுதேன், இது பின்நவீனத்துவ எழுத்துமாதிரில்லா கெடக்கு!
தருமி,
நன்றி.
முத்து,
//நிறுவனத்தின் பொருளை வாங்குவதும் வாங்காமல் இருப்பதும் நம் கையில் தான் இருக்கிறது. வாங்கியபிறகு பயன்படுத்தாமல் இருப்பதும் நம் முடிவு சார்ந்த ஒன்றே. பொருளைத் தயாரித்து அழகு சேர்த்து விளம்பரப்படுத்தி விற்பனைக்கு வைப்பதுடன் நிறுவனங்களின் வேலை முடிந்து விட்டது.
//
இந்த சிந்தனை ஓடைதான் முத்து நுகர்வின் பகுத்தறிவு. இது இல்லாத போது பொருளை ஒட்டிய அடிமை மனநிலை நிறுவனத்தால் முன் வைக்கப்பட்டு அது ஸ்டோக்ஹோம் சின்ட்ரோம் போல் நிறுவனத்துடன் உறவேற்படுத்துகின்றது.
அது போல் உறவில்லாமல் தெளிவான நிலையில் நகரும் போது நிறுவனம் தகர்க்க படுகின்றது.
சிற்பிக்கு உளி போல் மனிதனுக்கு கல்வி ஆனால் செதுக்கலே பகுத்தறிவு. உளியோடு உருட்டி விளையாட்டாய் பொழுதும் போக்கலாம், செதுக்கி சிற்பத்தையும் உருவாக்கலாம்
நிர்மல்,
// இம்மை எனும் சிந்தனையே மறுமை என்பதை வலியுறுத்தவே பயன்படுத்தப்படுகின்றது. இரண்டையும் குறித்து காட்டப்படும் நிறுவனங்களின் பயமுறுத்தல் தேவையில்லையே. //
தொடக்க வரிகளில் தவறு இருக்கிறது. எந்த ஒரு மதமும், நான் வாசித்த வரையிலும், இம்மையைக் கொண்டு மறுமையைக் கட்டமைக்க வில்லை. மாறாக, மறுமையில் சிறப்புற வாழ வேண்டுமென்றால், இம்மையில், நீங்கள் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கட்டமைத்தல் நடக்கிறது. இதைத் தான் Carrot and Stick என்று தருமி குறிப்பிட்டார்.
இரண்டையும் குறித்து காட்டப்படும் அச்ச உணர்வு - இதில் அச்சம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. கடவுளுடன், ஒரு MOU போட்டுவிடலாம் - லாபத்தைப் பங்கு வைக்கலாம் என்ற எண்ணமுடையோருக்குத் தான் இந்த அச்ச உணர்வு, அதீத பாசம், வெறுப்பு, ஆத்திரம், கோபம், மூட நம்பிக்கை எல்லாம் வருகிறது. இடைத்தரகரான ஒரு கும்பல் - இந்த உணர்வுகளைக் கடவுளின் பெயரால் வளர்த்து வருகிறது.
என் வாதமே - இவை மனிதர்களின் தவறு தானே தவிர - இறைவனின் தவறு அல்ல. இதை இறைவன் மீது தள்ளி, மறுக்க முற்படுவது, கடவுளுடன் ஒப்பந்த முயற்சியில் தோற்றுப் போன விரக்தி மனநிலையைத் தான் குறிக்கிறது. இவை எதுவுமே கடவுளின் இருப்பை மறுக்கப் போதுமானதல்ல.
விஞ்ஞானத்தாலே மறுக்க முடியாத, இறைவனின் இருப்பை, ஒரு 'பெருவெளி' என்ற வார்த்தையைக் கொண்டு, மடக்கி விட முடியாது. இந்தப் பெருவெளியில் இறைவனின் இருப்பைக் குறித்து, பின்னொரு பதிவு இடுகிறேன்.
என்றாலும் தர்க்கப் பூர்வமாக விவாதிக்க மற்றுமொரு நண்பர் கிடைத்ததில் மகிழ்ச்சியே.
அன்புடன்
நண்பன்
நிர்மல்,
அமைதியாகப் பல நல்ல இடுகைகளை நட்சத்திரவாரத்தில் எழுதியிருக்கிறீர்கள். முன்பே ஒருமுறை உங்கள் கவிதை என்று நினைக்கிறேன், படித்துப் பிடித்த நினைவு வருகிறது. வாழ்த்துக்கள். நன்றியும்கூட.
இந்தப் பதிவு தருமி கூறியதுபோல் சுருக்கமாகவும் அழகாகவும் மதம் எனும் நிறுவனங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது. தொடர்ந்து எழுதிவாருங்கள்.
இம்மாதிரி ஆர்ப்பாட்டமில்லாத, அதே சமயம் சமூக, மொழி அக்கறையுடனான எழுத்துக்களே மிகுந்த தேவையாக இருக்கிறது இங்கு.
Post a Comment