Monday, April 9, 2007

கதாநாயகர்களை தேடி

ஸ்பைடர் மேன்/சூப்பர் மேன்/வொன்டர் வுமன் ஒத்த கதாநாயகர்களை தேடுதல் கலாச்சாரத்தின் பெரும் பகுதியாக இருக்கின்றது. விளையாட்டு, அரசியல், நிறுவனங்கள் என பார்க்கும், உணரும் எல்லா இடங்களிலும் இந்த இரண்டின் பங்கும் உண்டு.

எம்.ஜி.ராமச்சந்திரன் அரசியல் சித்து விளையாடலில் அசைக்க முடியாதவராக இருந்தருக்கு திரைப்படங்களில் அவர் கொண்ட அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கதாநாயகர்களை காட்டியதே காரணம். தாயை கண்டு இரங்கல், தங்கை கண்ணீர் துடைத்தல், பொருளாதாரத்தில் பின் தங்கியவரை தோள் தழுவுவதல் என அவரால் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அசரீரி போல் மக்கள் மனத்திற்கு சென்று சேர்ந்தன. கற்பனைக்கும், கற்பனை தாண்டிய உண்மை வாழ்விற்கும் இடையேயான வித்தியாசம் நழுவிவிட்டது. அவர் காலமான போது எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த குடும்பம் அவருக்கு பதினாறாம் நாள் காரியம் செய்து ஒப்பாரி வைத்து அழுதது. தனிமனித கவர்சியின் உச்சகட்டம் இது. இன்றைய அரசியலில் மன்னராட்சி முடிந்தும் மன்னராட்சி/நில ஜமீன்களின் தன்மையுடைய வேறு வகை கதாநாயகர்கள் முன்னிறுத்தப்படுகின்றார்கள். சராசரி மனிதனுக்கு அப்பால் பூச்சாண்டிகளை ஒத்த ஆளுமை உள்ள தலைமையே இப்போது காணமுடிகின்றது. தலைவர்களின் சுயநலம், ஊழல் போன்றவை கதாநாயக தன்மையின் பின்னால் ஒளிந்து கொள்கின்றது.

அடைமொழி வைத்து மட்டுமே தலைவர்களை விளிப்பதும் போற்றி பாடலின் ஒரு அங்கமே. அன்னை, கர்மவீரர்,அறிஞர், தந்தை,மகாத்மா, கலைஞர், புரட்சி தலைவி என அடைமொழி என்று எல்லா நிலையிலும் உண்டு. இவர்கள் வரலாற்று புத்தகத்துக்குள் இவ்வாறே பதிக்கப்படுகின்றனர். தொடர்ச்சியான தேர்வெழுதுவதற்காக செய்யும் மனப்பாட வாசிப்பு நாளைடவில் அடைமொழி இல்லாத தலைவர்களை ஏற்றுக் கொள்ளுதல் இயலாமல் செய்து விடுகின்றது. காற்றில் துலாவியாவது அடைமொழி கொண்டு வந்து ஒட்டிக் கொள்ள வைக்கச் சொல்கின்றது.

அடைமொழிக்கப்பால் உள்ள உண்மைகள் சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனாலும் கதாநாயகதன்மை சித்தரிப்பு மூளைக்குள் சலவை செய்யப்பட்டுள்ளதால் அதனை சுலபமாக ஒதுக்கி விடுகின்றோம். தனித்தன்மை கொண்டு ஆளுமை உள்ள எதிர்கால சமுதாயம் வர வரலாற்று பாடப்புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்படல் வேண்டும்.

விளையாட்டிலும் இந்த தன்மை உண்டு. பதினோரு நபர்கள் விளையாடும் மட்டை பந்து விளையாட்டில் ஒரே கடவுளாக டெண்டுல்கர் சித்தரிக்கப்படுகின்றார். அவர் ஆட்டமிழந்தால் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பவர்களையும் பார்த்திருக்கின்றேன். கூட்டு ஆட்டம், அணித்திறன் என்ற அளவில் ஆட்டம் ரசிக்கப்படாமல் , வளர்க்கப்படாமல் தனிதனி கதாநாயகர்களின் பின்னே ஒளிந்துள்ளது. கங்குலி இதற்கு மற்றுமொரு உதாரணம்.

பகுத்தறிவு, சுயமரியாதை உள்ள சமுதாயத்தில் அனைவருக்கும் அனைவர் நோக்கி மரியாதை உண்டு. ஆனால் ஆண்டவனாக யாரும் சித்தரிக்கப்படுவதில்லை. ஆண்டவன் பற்றிய விளக்கங்களும், சிந்தனைகளும் தனிமனிதனின் உரிமையாக கொள்ளப்படுகின்றது, கூட்டுச்சமுதாயம் சகமனிதனை முத்திரைகள் அற்ற மனிதாய் பார்க்கின்றது. உருக்கம், கண்ணீர், கோபம், எள்ளல் போன்ற பலகீனமான தருணங்களில் பகுத்தறிவோ, சுய மரியோதையோ இருப்பதில்லை. பகுத்தறிவுள்ள சமுதாயத்தில் கதாநாயக தன்மை கொண்ட ஆளுமைகள் தேடி அலைதல் தேவையற்ற ஒன்று. நல்ல நிர்வாகிகளும், நிர்வாக ்கோட்பாடுகளுமே தேவை. இது ஒரு தூரத்து கனவே. ஆனால் என்றாவது ஒருநாள் சாத்தியப்படும்.

3 comments:

MSV Muthu said...

//உருக்கம், கண்ணீர், கோபம், எள்ளல் போன்ற பலகீனமான தருணங்களில் பகுத்தறிவோ, சுய மரியோதையோ இருப்பதில்லை.
//

நாமெல்லாம் -உங்களையும் சேர்த்தான்னு தெரியல- உருக்கம், கண்ணீர், கோபம், எள்ளல் இவையெல்லாம் ஒருங்கே -நிறையவே!- கொண்ட சென்டிமெட்டல் இடியட்ஸ் தானே!
-கேப்டன் படத்தில வரும் இந்த சென்டிமென்டல் டையலாக். கவனிக்க "கேப்டன்"! :)

கப்பி | Kappi said...

அருமையான பதிவு!

நிர்மல் said...

நன்றி மக்களே,

முத்து,

நம்மகிட்ட இன்னோரு பழக்கம் என்ன இருக்குனா இந்த மேற்கோள் காட்டறது. அந்தாளு சொன்னாரு, இந்தாளு சொன்னாருனு ஒருத்தரை விடமாட்டோம். கடைசில சினிமா டயலாக்கும் மேற்கோள் ஆயிடுத்து பாருங்க.