Monday, April 2, 2007

சிறப்பு பொருளாதார மண்டலம்
















நாட்டின் மொத்த நில பரப்பு
29,73,190 சதுர கிலோமீட்டர்

விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் நில அளவு

15,34,166 சதுர கிலோமீட்டர்

இதுவரை அனுமதி அளிக்கப்பட்ட 234 சி.பொ.மண்டலங்களால்
பயன்படுத்தப்படும் நில அளவு

350 சதுர கிலோமீட்டர்

கருத்தளவில் அனுமதியளிக்கப்பட்டு இன்னமும் நிலம் கையகப்படுத்த
படாத சி.பொ. மண்டலங்களுக்கு பயன்படுத்த போகும் நில அளவு

1400 சதுர கிலோமீட்டர்


இது வரை அனுமதிக்கப்பட்ட 234 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் முழு அளவில் செயல் படும் போது அவற்றின் மொத்த மதிப்பு 3,00,000 கோடியாக இருக்கும். அதனால் 4 மில்லியன் வேலை வாய்ப்புகளும் உருவாகும். நில அளவினை ஒப்பிடுகையில் சிறப்பு பொருளாதாரத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட/படுத்த போகும் விவசாய நிலப்பரப்பில் 0.1 விழுக்காடே. அரசு இந்த விவசாய நிலத்தில் இருந்திருக்கும் வேலைவாய்ப்பை பற்றியோ, அல்லது விளைபயிர் பற்றியோ புள்ளி விபரம் அளிக்கவில்லை.

பச்சை புடவை, மஞ்சள் புடவை , அட்ச கிருத்திகை, பிள்ளையார் பால் குடித்தல் என வதந்தி கிளப்புவது போல மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை பற்றிய புரளிகளுக்கும், எதிர் மறை பிரச்சாரங்களுக்கும் விடையளிக்கும் விதமாய் அரசு இநத தகவல்களை அளித்துள்ளது

8 comments:

Voice on Wings said...

நிர்மல், உங்களுக்குன்னு இந்தியாவில ஒரு சொந்த வீடு இருக்க வாய்ப்பிருக்குன்னு நம்பறேன். அதோட நிலப்பரப்பு எவ்வளவு இருக்கும்ன்னு தெரியல - ஒரு, ஒரு சதுர கிலோமீட்டர்ன்னே வச்சிக்குவோம். அப்படி பாத்தாலும் மொத்த இந்திய நிலப்பரப்புல .00001 விழுக்காடுதான் வருது உங்க வீட்டோட நிலப்பரப்பு. அதுனால, லேசா உங்க வீட்ட இடிச்சிட்டு, அதுக்கு நஷ்ட ஈடா எனக்குத் தோணின தொகைய குடுத்துடறேன். அதுல உங்களுக்கு ஒப்புதல்தானா?

பி.கு - உங்க இடுகை ரெண்டு நாள் தாமதமா வந்திருக்கு போலிருக்கு? :)

நிர்மல் said...

vow,

வருத்தமிருக்கும். ஆனால் ஒப்புதல்தான்.

திட்டங்கள் அமல்படுத்துவதில் முரண்கள் இருக்கலாம். ஆனால் திட்டத்தினையே எதிர்த்தல் சரியாக இருக்காது.

சந்தேகம்; அது என்ன இரண்டு நாள் தாமத கணக்கு. புரியவில்லையே?
;-(

Voice on Wings said...

நிர்மல், உங்க பதிலுக்கு நன்றி. இருந்தாலும் அதை நம்பத் தயாரா இல்ல.

இது மாதிரி ஒரு நடுத்தர வர்க்கத்தோட காலனிய அரசோ, வேற தனியாரோ தரைமட்டமாக்க முயற்சி செய்தாங்கன்னா, அவங்கல்லாம் கூட்டு சேர்ந்துக்கிட்டு அதுக்கு தடையுத்தரவு வாங்கி, அந்த திட்டத்தையே வேற இடத்துக்கு மாத்த வைக்கிற (அல்லது கைவிட வைக்கிற) நடவடிக்கையைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு அந்த நிலை வந்தா நீங்களும் அதைத்தான் செய்வீங்க.

தேச நலன் பேசும் நடுத்தர வர்க்கம், ஒரு விமானம் கடத்தப்பட்ட போது பிரதமர் வீட்டு வாசல்ல போய் குடுத்த அழுத்தமென்ன? அதுனால எவ்வளவு தீவிரவாதிங்க வெளில வந்தாங்க? நீங்க எதையும் விட்டு குடுக்க மாட்டீங்க, ஆனா மத்தவங்கல்லாம் தேச நலனுக்காக எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கணும். அதுக்காக சதுர கிலோமீட்டர் கணக்குல்லாம் தருவீங்க. அன்னிக்கி பிரதமர் சொல்லியிருக்கணும், நாட்டுல நூறு கோடி ஜனங்க இருக்காங்க, விமானத்துலயோ 300 பேர்தான், கணக்கு பாத்தா 0.00003 விழுக்காடுதான் வருதுன்னு.

ரெண்டு நாள் கணக்கு - உங்க இடுகை Apr 1ஆம் தேதி (All Fools' Day) வெளி வந்திருக்கணும்ன்னு சொல்ல வந்தேன்.

நிர்மல் said...

ஏப்ரல் ஒன்று கொண்டாடுவதில்லை. முட்டாளாவதிலோ, முட்டாளாக்குவதிலோ நம்பிக்கை இல்லை.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் விளைநிலங்களில் அமைவதால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு பஞ்சம் ஏற்படும் என்ற அளவில் செய்திகள் பரப்பபடுவதால் அரசு வெளியிட்ட தகவல் இது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நாட்டின் வேலைவாய்ப்பையும், உள்கட்டமைப்பையும் அதிகரிக்க உண்டாக்கப்பட்ட ஒரு கருவி. கருவியை பயன்படுத்துவதில் சில அமைப்புகள் தவறிழைத்திருக்கலாம். தவறுகள் கண்டிக்கப்பட வேண்டியவையே. முறையான அளவில் இந்த கருவி பயன் படுத்தபட வலியுறுத்த வேண்டியது முக்கியமே.
இந்த கருவிக்கு பக்க விளைவுகளும் இருக்கலாம். கூட்டுச்சமுதாய முன்னேறத்திற்கு இதனால் பலன் கிடைக்கும்.

நீங்கள் தொழில்மயமாக்கலை எதிர்க்கிறீர்களா?

Voice on Wings said...

//சிறப்பு பொருளாதார மண்டலங்கள் விளைநிலங்களில் அமைவதால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு பஞ்சம் ஏற்படும் என்ற அளவில் செய்திகள் பரப்பபடுவதால் அரசு வெளியிட்ட தகவல் இது.//

தொழில்மயமாக்கம்ங்கற பேர்ல விளைநிலங்கள ஆக்கிரமிக்கிறதுக்கு வழங்கப்படும் சப்பைக்கட்டாத்தான் என்னால இதைப் பாக்க முடியுது. ஒரு பக்கம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைஞ்சிட்டோம்ன்னு நம்ம முதுகை நாமே தட்டி விட்டுக்கிட்டு, இன்னொரு பக்கம் கோடிக்கணக்கில உணவுப் பொருள்களை இறக்குமதி செஞ்சிக்கிட்டுதான் இருக்கோம், அதுவும் ஜனத்தொகையில் 70% க்கு மேல விவசாயத் தொழில்ல ஈடுபட்டிருக்கிற ஒரு நாடா இருந்துக்கிட்டே. பஞ்சம் பட்டினியெல்லாம் Reliance / (வரப்போகும்) Wallmart கடைகள்ல போய் shopping செய்யற கூட்டத்துக்கு வராது. அங்கல்லாம் போக முடியாத ஏழை பாழைங்கதான் பஞ்சம் பட்டினியால பாதிக்கப்படுவாங்க. உணவுப் பாதுகாப்புங்கறத அவங்க பார்வையிலயிருந்து பாக்கணும். ஒவ்வொரு இடமா இடம் மாற்றப்படற விவசாயிகள் / அத கைவிட்டுட்டு கூலித் தொழிலுக்குப் போறவங்க.............. நாட்டின் 'உள்' கட்டமைப்பு வசதியப் பெருக்கறதுக்காக ஆங்காங்கே அகதிகள் ஆக்கப்படறவங்க........ அவங்களால செய்ய முடியாத விவசாயம், வாங்க முடியாத உணவுப் பொருட்கள்....... இப்படியெல்லாம்தான் பஞ்சம் ஏற்படுது. நாட்டின் 'உள்' கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கற மகாராஷ்டிரத்திலதான் பஞ்சம் ஏற்பட்டிருக்கு, விதர்பா பகுதியில. சந்திர பாபு நாயுடு ஏகத்துக்கு 'உள்' கட்டமைப்பை பெருக்கிய ஆந்திர மாநிலத்திலதான் தெலிங்கானாங்கற மிகப் பின்தங்கிய பகுதி இருக்கு. மேற்கத்திய 'உள்'கட்டமைப்புவாதம் நமக்குப் பொருந்தற மாதிரி தெரியல. அப்படியே அவசியம்ன்னாலும் யாரும் வாழாத இடங்களில் 'உள்'கட்டமைப்பு செஞ்சாதான் நீங்க சொல்ற 'கூட்டுச் சமுதாய' முன்னேற்றம் ஏற்படறதுக்கான வாய்ப்பு இருக்கிறதா படுது.
இல்லாட்டா, நாம ஒரு மாபெரும் அகதிகள் ஜனத்தொகையைத்தான் உருவாக்கியவர்களாவோம்.


மேற்கூறிய பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு முன்னெடுத்துச் செல்லப்படும் தொழில்மயமாக்கலை நான் ஆதரிக்கிறேன்.

//இந்த கருவிக்கு பக்க விளைவுகளும் இருக்கலாம்.//

'பக்க விளைவுகள்'ன்னு அமெரிக்கா பயன்படுத்தற collateral damage மாதிரி ஒரு சொல்லாடலை பயன்படுத்தியிருக்கீங்க. அவங்கவங்களுக்கு வராத வரைக்கும் இதெல்லாம் 'பக்க விளைவுகள்' / collateral damgesதான்.

நிர்மல் said...

விவசாயம் வாழ்க்கை முறையாக இருந்து இப்போ தொழிலா மாறி வருகின்றது.

பண்டமாற்றுக்கு விளைபொருள்கள் தேவைப்பட்ட காலத்தில் விவசாயம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்பட்டது.

இன்று பண்டமாற்று வழக்கொழிந்நு விட்டது, ஆனாலும் இன்னும் 70 விழுக்காடு விவசாயத்தில் இருக்கின்றோம். இது மாற வேண்டும். வேறு பல தொழில்களும் வளர வேண்டும்.

விவசாய தன்னிறைவு வராமல் இருப்பதற்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வழி பிற தொழில் ஊக்குவிப்பதற்கும் முடிச்சு போட வேண்டியதில்லை. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இல்லாமல் இருந்தாலும் விவசாய தன்னிறைவுக்கு இப்போதிருக்கும் நிலைமைதான் இருக்கும். அது தனி பிரச்சனை.

சி.பொ.மண்டலங்கள் இந்தியாவின் ஏழ்மையை மாற்றி உடனடியாக குடிசை வீட்டையெல்லாம் மச்சு வீடாக்கும் என்று சொல்ல முடியாது. வேலைவாய்ப்பை அதிகரிக்கும். வேலைவாய்ப்பு மேம்படுவதால் உருவாகும் குடும்ப மேம்பாடு சமூகத்தில் பரவலாகும்.

தொடர்ச்சியாக , ஊழலின் விகிதத்தை முடிந்த அளவுக்கு குறைத்து இந்த திட்டம் பேணப்பட்டால் நீண்ட கால பலன் உண்டு.

அரசு வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் தன்னுடைய வருவாயை உயர்த்துகின்றது. முறையான வேலைவாய்ப்பு வரும் பணம் கருப்பு சந்தையின் தாக்கத்தை கூட்டுச் சமுதாயத்தில் குறைக்கின்றது. இது போன்ற முறைப்படுத்தபடுத்தல் மூலம் உயரும் வருவாய் கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு பயன்படுத்த படுகின்றது.

இந்திய அரசியலமைப்பின் கீழ் வரும் எல்லா மக்களுக்கும் நல்ல குடிநீர், சாலை, சுகாதார வசதி, கல்வி, மின்சாரம், இருப்பிடம் போன்றவை ஒரே போல் கிடைக்க செய்வதே அவசியம். இது போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கத்தியவர்களுக்குதான் முக்கியம், நமக்கல்ல என்பது சரியாக படவில்லை.
எல்லாருக்கும் இது அவசியமே.

ஏழையாய் இருத்தலில் குற்றமில்லை. அவர்களை கண்டு இரங்கி வெறும் கண்ணீர் உகுத்து கதறி அழுதால் ஒப்பாரி மட்டுமே மிச்சம். அது அவர்களை அவமதிப்பது போன்றதாகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு கல்வி கொடுத்து தகுதி வளர்த்து சுய தொழிலோ இல்லாவிட்டால் பிற வேலைக்கோ போவதற்கான சூழலை உருவாக்குதலே ஆக்கப்பூர்வமானது. ஆனால் இது போன்ற செயல்கள் உடனடியாக உருவாக்கப்பட்டு கண் சிமிட்டும் நேரத்தில் பலனளிக்காது. கவர்ச்சியாக இராது.

பரம்பரை பரம்பரையாக விவசாய கூலியாக இருந்த குடும்பங்கள் இந்த தலைமுறையில் கட்டுமான துறையில் பணம் சேர்த்து சொந்த நிலம் வாங்கியுள்ளன. விவசாய கூலிக்கும், கட்டுமான துறையின் ஒரு நாள் சம்பளத்திற்கும் ஒப்பீடு செய்யுங்கள். கட்டுமானத்தில் வரும் பணம் பிற தொழில்களிலும் முதலீடு செய்யப்படுகின்றது.

விதர்பா மற்றும் ஆந்திராவின் பிரச்சனைகள் பல. முறையில்லா அக்கறை மற்றும் தொலைநோக்கிலா மாநில நிர்வாகம் அதற்கு காரணம். அதுவே தனிப்பதிவாகி விடும்.

இனி பக்கவிளைவிற்கு வருவோம். பக்கவிளைவு என்று நான் குறிப்பிட்டது
தொழிற்சாலைகள் வளரும் போது சூழலுக்கு உருவாகும் சேதங்களை. உதாரணத்திற்கு கார்கள் அதிகமானல் ஒசோனின் சேதம் அதிகமாகும். இது ஒரு பக்க விளைவே. ஆனால் கார்கள் அதிகமானால் சாலை மேம்பாடும், தொடர்சியான முறையில் சாலை பாதுக்காத்தலும், கார் பழுதுபார்க்கும் தொழிலும், உதிரி பாகங்கள் உருவாக்கும் தொழிற்சாலையும் , கார் சம்பந்த காப்பீட்டு துறையும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

அடுத்த உதாரணம் வேறு தொழில்களில் கணிணி அதிகமானால் அதிக நபர்கள் பணிக்கு தேவைப்பட மாட்டார்கள். இது ஒரு பக்க விளைவே. ஆனால் கணிணி சம்பந்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பு அதிகமாகும்.

பக்க விளைவின்றி காலையில் பல் கூட விளக்க முடியாது. உருவாகும் கழிவு நீர் சூழலுக்கு மாசுதான் இல்லையா?

நாட்டின் செல்வத்தை பகிர்தல் வேலைவாய்ப்பு, தொழில் உருவாக்க வாயிலாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

மக்கள் தொகை நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகரிக்கும் வேளையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

Voice on Wings said...

இந்த நாள்லயும் 70% ஜனத்தொகை விவசாயத்தை நம்பியிருக்கும் நிலை தொடரணும்ன்னு நான் எங்கயும் சொல்லல்ல. முறைப்படி இயந்திரமயப்படுத்தினா வெறும் 2-3% மக்களால் மட்டுமே நாட்டின் எல்லா உணவுத் தேவைகளையும் நிறைவேற்ற முடியும்ன்னுதான் நினைக்கிறேன்.

ஆனா அத்தகைய அணுகுமுறையில இருக்கற சாதக பாதகங்களை ஆராயணும். (GM / pesticides போன்ற சூழலியல் காரணிகளையும் தாண்டி) இப்போ இருக்கிற விவசாயிங்கல்லாம் எங்க போவாங்க, பொழப்புக்கு என்ன செய்வாங்க....... போன்ற கேள்விகளுக்கும் விடை தேடணும். கட்டுமானம்ங்கறது ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு சோறு போடலாம். அதுவும் தற்காலிகமா. அந்த கட்டுமானப்பணிகள் முடிஞ்ச பிறகு அந்த மக்கள் என்ன செய்வாங்க? கட்டுமானப் பணிகள் கிடைக்காத மக்கள் என்ன செய்வாங்க? இந்த கேள்விகளெல்லாம் விடையளிக்கப்படாத நிலையில, அவங்களோட விளை நிலங்களயும் வாழ்வாதாரங்களையும் பறிக்கறதுக்கு என்ன உரிமை இருக்கு அதிகார மையங்களுக்கு? உங்க சதுர கிலோமீட்டர் கணக்குப்படியே நாட்டுல 14 லட்சம் ச.கீ.மீ விவசாயத்துக்கு உபயோகப்படாத நிலப்பரப்பு இருக்கறதா தெரிய வருது. அதுலயிருந்து ஒரு 2000 ச.கீ.மீ நிலப்பரப்ப ஒதுக்க முடியலையா? விவசாய நிலத்திலதான் சி.பொ.ம.க்கள் வந்தாகணுமா? இல்ல, மலபார் ஹில்ஸ்லயும் பெசன்ட் நகர்லயும் செல்லுபடியாகாத எதேச்சதிகாரத்த விவசாய நிலங்கள் மீது காமிக்கறாங்களா, நம்ம அதிகார மையங்கள்?

பொருளாதார வளர்ச்சியால வேலைவாய்ப்புகள் கூறைய பிச்சிக்கிட்டு கொட்டப்போகுதுங்கற சிந்தனைத் தளத்தையும் கேள்விக்குள்ளாக்க விரும்பறேன். Jobless growthங்கறாங்களே....... வேலைவாய்ப்புகள் குறிப்பிடும்படியா அதிகமாகாமலே, பொருளாதாரம் சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருக்கிற நிலைய? அது மாதிரி சி.பொ.ம.க்களிலும் நடந்ததுன்னா? இன்றைய கணினிமய இயந்திரமய உலகத்தில அப்படி நடக்கிறதுக்குத்தான் அதிக சாத்தியங்கள் இருக்கிற மாதிரி தெரியுது.

குடிசை வீடுகள் மச்சு வீடுகளா மாறாட்டா பரவாயில்ல. இருக்கற குடிசையும் புல்டோசரால தரைமட்டமாகி, அங்க ஒரு பெரிய மச்சுக் கட்டடம் உருவாக்கப்போற ரியல் எஸ்டேட் சுறாவுக்கு தீனியாகும் நிலை வந்துடுமோன்னுதான் இன்றைய நிலையில கவலைப் படவேண்டியிருக்கு.

//இந்திய அரசியலமைப்பின் கீழ் வரும் எல்லா மக்களுக்கும் நல்ல குடிநீர், சாலை, சுகாதார வசதி, கல்வி, மின்சாரம், இருப்பிடம் போன்றவை ஒரே போல் கிடைக்க செய்வதே அவசியம். இது போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கத்தியவர்களுக்குதான் முக்கியம், நமக்கல்ல என்பது சரியாக படவில்லை. எல்லாருக்கும் இது அவசியமே.//

ஆமென். இதுதான் சி.பொ.ம. திட்டம்ன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா இந்தத் திட்டத்துக்கு பத்து ஆதரவுப் பதிவுகள் போட்டிருப்பேன். ஆனா, சி.பொ.ம. இது கிடையாது போலயிருக்கே? (வரி விலக்கு, விதி விலக்கு, இன்ன பிறவால்) பண முதலைகளைக் கொழிக்க வைக்கிற திட்டம்ன்னு இல்ல தெரிய வருது?

//இனி பக்கவிளைவிற்கு வருவோம். பக்கவிளைவு என்று நான் குறிப்பிட்டது
தொழிற்சாலைகள் வளரும் போது சூழலுக்கு உருவாகும் சேதங்களை. உதாரணத்திற்கு கார்கள் அதிகமானல் ஒசோனின் சேதம் அதிகமாகும். இது ஒரு பக்க விளைவே. ஆனால் கார்கள் அதிகமானால் சாலை மேம்பாடும், தொடர்சியான முறையில் சாலை பாதுக்காத்தலும், கார் பழுதுபார்க்கும் தொழிலும், உதிரி பாகங்கள் உருவாக்கும் தொழிற்சாலையும் , கார் சம்பந்த காப்பீட்டு துறையும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

அடுத்த உதாரணம் வேறு தொழில்களில் கணிணி அதிகமானால் அதிக நபர்கள் பணிக்கு தேவைப்பட மாட்டார்கள். இது ஒரு பக்க விளைவே. ஆனால் கணிணி சம்பந்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பு அதிகமாகும்.

பக்க விளைவின்றி காலையில் பல் கூட விளக்க முடியாது. உருவாகும் கழிவு நீர் சூழலுக்கு மாசுதான் இல்லையா?//

நீங்க பக்க விளைவுன்னு இப்போ ஓசோன் லேயர் (மற்றும் பல் துலக்கல்) பத்தியெல்லாம் சொல்லறீங்க. இந்த விவாதம் தொடங்கினதென்னவோ விவசாய நிலம் பறிக்கப்படறதப் பத்தி. ஓசோன் லேயர் பற்றி கேள்வி வராத போது நீங்க அதை குறிப்பிட வேண்டிய தேவையென்ன? இல்ல நீங்கதான் முதல்ல நில அபகரிப்பை பக்க விளைவுன்னு சப்பைக்கட்டு கட்டிட்டு, இப்போ ஓசோன் லேயரைச் சொன்னேன்னு பிளேட்டை மாத்தறீங்களா? எனது புரிதலில் தவறிருந்தா மன்னிக்கவும். நான் நினைச்சது நீங்க நில அபகரிப்பைத்தான் 'பக்க விளைவு'ன்னு குறிப்பிடறீங்களோன்னு. அதைக் கேட்டு கொஞ்சம் கொதிச்சுப் போனது உண்மைதான். ஓசோன் லேயர் பத்தி வேறொரு நாளைக்கு பேசலாம்.

//மக்கள் தொகை நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகரிக்கும் வேளையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?//

பெரிய திட்டமெல்லாம் பரிந்துரைக்கப் போறதில்லை. முன்னமே சொன்ன மாதிரி, தொழில்மயமாக்கம் தேவை / அவசியம், அது மற்றவரின் வாழ்வைப் பறிக்காத வரையில் / வகையில். இருக்கும் (கிராமப்புறக்) கட்டமைப்பைப் பாதிக்காத 'உள்' (வெளி?) கட்டமைப்பு மேம்பாடு, தொழில் வளர்ச்சிகள்.......... build outside of what's already there. Build ultrastructures, not infrastructures.

நிர்மல் said...

கட்டுமானங்கள் முடிவுறாத தொழில். எல்லா வித கட்டுமானங்களும் ஆகி விட்டன, இனி கட்டுவதற்கு ஏதுவும் இல்லை என்ற நிலை பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகளுக்கே இன்னும் வரவில்லை. ஆதலால் கட்டுமானம் தற்காலிக தொழில் என்ற அச்சம் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.கட்டுமானம் முதிர்ச்சி அடைந்து எந்திரமயமாகி இன்னும் விரியும் என்றே நினைக்கின்றேன்.

சி.பொ.மண்டலங்கள் மாற்று தொழில் உருவாக்க , விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியே. விவசாயத்துக்கு மாற்றான தொழில்கள் அனைத்தும் சி.பொ.மண்டலங்களால் மட்டுமே சாத்தியம் என்று கூற இயலாது. எல்லா பிரச்சனைகளுக்கும் ஒற்றை தீர்வென்பது இயலாத ஒன்றாகும். படிபடியான நிலையில்தான் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

நடுவண் அரசு அடுத்த கூட்டத்தொடரின் போது சி.பொ.மண்டலங்களுக்கான நில வர்த்தகத்தை ஒட்டிய மேம்படுத்தபட்ட சட்டத்தை கொண்டு வருகின்றது.

ஊழல் தேசிய பாரம்பரியமாய் உள்ள அரசியல் சூழ்நிலையில் முதிர்ச்சியான அணுகுமுறையில் மக்கள் நலனை பார்ப்பதில் உள்ள சிக்கல்கள் சில மாநில அரசுகளுக்கு இருக்கலாம். இவையும் மாறும்.

உதாரணத்திற்கு தமிழக அரசு நிர்மாணித்த/நிர்மாணிக்க போகும் சி.பொ.மண்டலங்கள் கூடுமானவரை விளைநிலங்களில் உருவாக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

குஜராத் அரசும் இது போல் விளைநிலங்களை தவிர்த்த இடங்களில் சி.பொ.மண்டலங்களை உருவாக்குவதாய் படித்திருக்கின்றேன்.

நீங்கள் கூறும் வேலைவாய்ப்பு குறைந்த வளர்ச்சி இப்போது நடக்கவில்லை. பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் நான்கு மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகவே போகின்றது.

//மலபார் ஹில்ஸ்லயும் பெசன்ட் நகர்லயும் செல்லுபடியாகாத எதேச்சதிகாரத்த விவசாய நிலங்கள் மீது காமிக்கறாங்களா, நம்ம அதிகார மையங்கள்?
//

கிட்டதட்ட மனிதனாய் பரிணமித்த காலத்தில் இருந்தே இருக்கும் கேள்வி. என்னிடம் பதில் இல்லை.


//நீங்க பக்க விளைவுன்னு இப்போ ஓசோன் லேயர் (மற்றும் பல் துலக்கல்) பத்தியெல்லாம் சொல்லறீங்க. இந்த விவாதம் தொடங்கினதென்னவோ விவசாய நிலம் பறிக்கப்படறதப் பத்தி. ஓசோன் லேயர் பற்றி கேள்வி வராத போது நீங்க அதை குறிப்பிட வேண்டிய தேவையென்ன? இல்ல நீங்கதான் முதல்ல நில அபகரிப்பை பக்க விளைவுன்னு சப்பைக்கட்டு கட்டிட்டு, இப்போ ஓசோன் லேயரைச் சொன்னேன்னு பிளேட்டை மாத்தறீங்களா? எனது புரிதலில் தவறிருந்தா மன்னிக்கவும். நான் நினைச்சது நீங்க நில அபகரிப்பைத்தான் 'பக்க விளைவு'ன்னு குறிப்பிடறீங்களோன்னு. அதைக் கேட்டு கொஞ்சம் கொதிச்சுப் போனது உண்மைதான். ஓசோன் லேயர் பத்தி வேறொரு நாளைக்கு பேசலாம்.//

பிளேட்டை மாற்றி என்ன செய்யப் போகின்றேன். மாற்றுப்பார்வை உடைய இருவருக்கு இடையே நடக்கும் சி.பொ.மண்டலங்களை நோக்கிய தருக்க வழியிலான உரையாடலாய்தான் இதை நினைக்கின்றேன். இதில் நமது ஈகோ மோதாலாக எண்ணி வெற்றி தோல்வி இலக்குகளை நோக்கி இருவரும் போகவில்லை என்று நம்புகின்றேன். சக மனிதனின் நலன் ்மீதான உங்கள் அக்கறை மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.

தொழில்மயமாதலின் பக்க விளைவாக சூழல் மற்றும் வாழ்க்கை ்முறையில் ஏற்படும் தாக்கங்களைதான் குறிப்பிட எண்ணிணேண்.

இருவருமே தொழில்மயமாதலை விரும்புகிறோம். விவசாயம் சார்ந்த குடிகள் வேறு தொழில்களுக்கு நகருதலை ஆதரிக்கின்றோம். முரண்படுமிடம் சி.பொ.மண்டலங்கள் இதை சாதிக்குமா என்பதில்தான். நான் சி.பொ.மண்டலங்கள் இந்த பிரச்சனைகளின் தீர்வின் ஒரு படி என நம்புகின்றேன். நீங்கள் அதில் மாறுபடுகின்றீர்கள்.

நீங்கள் ஒரு முதலிட்டாளாராய் இருந்தால் கடுமையான வரி அமைப்பு, புரியாத நிர்வாகவியல் விதிகள், தொழில் தொடங்க சிரமமான வழிகள் இருந்தால் கை பணத்தை முதலீட்டில் இறக்குவீர்களா? இல்லை பணத்தை கொண்டு இது போன்ற வழிகள் தவிர்த்த அரசின் கவனத்திற்கு வராத பின்புல வழிகளில் தொழிலமைத்து செலவிடுவீர்களா?

நீங்கள் ஒரு முதலீட்டாளராய் இருந்து முதலீட்டாளர் அனைவரையும் பணமுதலை, தீயவர், சுரண்டல்வாதி என்ற பார்வையில் முத்திரை குத்தும் கலாச்சாரம் இருக்கும் போது முதலீடு செய்வதை விரும்புவீர்களா?

தற்போதைய ்கிராமங்களுக்கு சாலைகள், தொழிலமைப்புகளை உருவாக்கும் போது இருக்கும் அமைப்பு பாதிக்கப்படும். அதை தவிர்க்க இயலாது. உதாரணத்திற்கு மேட்டூர் அணை உருவாகாமல் இருந்தால் எத்தனை நபர்கள் தலையெழுத்து மாறியிருக்கும். அதன் உருவாக்கமும் நிறைய மக்களின் இடப்பெயர்வுக்கும் காரணமாய் இருந்திருக்கும். இது போன்ற சூழலில் என்ன செய்வது?

எதிர்காலத்தில் நாகையில் ஜயர்லாந்து நாட்டு நிறுவனமொன்று நிலக்கரி கொண்டு மின் உற்பத்தி நிலலயமும், நிலக்கரியை நாட்டினுள் கொண்டு வர துறைமுகமும் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவை என்ற நிலையில் இந்த திட்டம் குறித்த தங்கள் கருத்தென்ன?