Friday, April 20, 2007

மது

மது மனிதரிடத்து எப்போது சேர்ந்ததென தெரியவில்லை. புராணங்கள் தொடங்கி நவீன காலம் வரை எல்லா காலங்களிலும் உண்டு. கொண்டாட்ட காலங்கள், சோக சுமைகள் என்று மனித உணர்வின் முரண்பட்ட இரு நிலைகளிலும் சுலபமாய் பொருந்த கூடியது.

நான் வளர்ந்த மத்திய தர குடும்ப சூழ்நிலையில் அச்சமும், அருவருப்புமான குணங்களை கொண்டதாகதான் எனக்கு மது போதிக்கப்பட்டது . பெண்கள் மீது வன்முறை செலுத்துபவரும், குடித்து விட்டு தெருவில் உருளுபவரும் மட்டுமே பார்க்க முடிந்ததில் வேறு வடிவங்கள் கண்ணில் படவில்லை. இவற்றை தாண்டி மதுவை காண முடிந்தது திரைப்படங்களில்தான். பொதுவாக வில்லன்கள் குகையில்தான் மதுவிருக்கும். கதாநாயகன் சோகமடையும் போதும் மது அவனுக்கு தேவைப்படும். இயல்பான ஒரு விஷயமாகவே மது இருந்ததில்லை. இந்த சித்தரிப்பில் குப்பை கொட்டியதில் இதற்கு மேல் ்யோசிக்க முடிவதில்லை.


மது அருந்தாமல் இருப்பது புனித தன்மை உடையதாகவும், அருந்துவது குற்ற உணர்ச்சியை தூண்டுவதாகவும் கற்பிக்கப்பட்டது. புனிதம் தேவைப்படாத காரணத்தினால் மதுவுடன் சிநேகம் ஆரம்பித்து நீடித்தது. நுரைக்கும் பியரும், கொறிக்கும் கடலையும், காது மூளை நகரும் இசையும் பிடித்திருந்தது. கண்மண் தெரியாத போதை காரணமாய் தொலைத்த அனுபவங்கள் காண கிடைத்தன. அதன் வழியே நிலை மறக்க அருந்துதல் மது ரசிக்க தேவை இல்லை என முடிவானது.


நாள் போக்கில் போதையின் ரசிப்பிலிருந்து மனசு மதுவின் ருசிக்கு நகர்ந்தது. வேறு வேறு வகைகளுக்கு இடையேயான ஒப்பீடு அவசியமாய் பட்டது. மதுவுக்குள் முடங்கி போகமால் மதுவை பார்க்கும் நிலையில் இருக்கையில் அடிமையாகி வாழ்க்கை தொலைக்க வேணடியதில்லை.


உள்ளம் அடக்கி வார்த்தைகளில் கருமிதனம் காட்டும் தோழர் வட்டம் கூட புட்டியின் உடைப்பு இசையில் உடைய ஆரம்பித்து புட்டிகளின் எண்ணிக்கையோடு ்வார்த்தைகளை அதிகரிப்பதையும் கண்டிருக்கின்றேன். நான் , அவன், இவன், அவள் என்ற உள்மனக்கூடு கட்டிய திரைகள் அவிழ்ந்து தருணங்களின் ரசிப்பினை கூட்டுவதாய் உரையாடல்கள் நகரும். இத்தனை வார்த்தைகளை இது வரை இவன் பயன்படுத்தியேதே இல்லை என்ற அளவுக்கு பேசிக் களிக்கும் சுதந்திரம் மதுவினால் சிலருக்கு வாய்திருக்கின்றது.

அடித்தட்டு வாழ்க்கை நிலையிலும், மேல் தட்டு வாழ்க்கையிலும் மதுவருந்தல் இயல்பான ஒரு செயலாகவே கருதப்படுகின்றது. இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை நிலையில்தான் புனிதம் கெடுக்கும் ஒரு அம்சமாய் மதுவருந்தல் உள்ளது. மது சிலருக்கு ஒவ்வாமல் போகலாம், சிலருக்கு அதன் சுவை பிடிக்காமல் போகலாம், அதனால் எல்லோருக்கும் அதே உணர்வு இருக்க வேண்டுமா என்ன?

க்ளாஸின் பனிக்கட்டிகளின் ஊடே இடம் தேடி ஒடும் விஸ்கியின் ஒட்டம் கவிதையாகதான் இருக்கின்றது திரவ இயக்கவியல் தெரிந்த நண்பனுக்கு அது பாடமாக இருந்தது. எதனிடமிருந்தோ ்விலகி ஒடும் கருவியாய் இல்லாமல் இயல்பான இளைப்பாறும் வேளையில் துணையாய் இருப்பதும் மதுவுக்கு சாத்தியமே.

No comments: