மரபணு மாற்றம் செய்யப்பட்ட BT பருத்தியின் வர்த்தகமும் அது கிளப்பிய எதிர்மறை தாக்கங்களும் பல பத்திரிக்கைகளில் தகவல்களாக வந்திருந்தன. பருத்தியை போல் வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் அரிசி போன்றவற்றிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு சோதனை முறையில் பயிரிடப்பட்டு வருகின்றன. பயிரிட்ட இடங்களோ மற்றும் சோதனை முடிவுகளோ உயிர் தொழில்நுட்ப துறையினால் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் க்ரீன்பீஸ் நிறுவனம் கடந்த வருடம் இது தொடர்பாக தகவல்களை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வர தகவல் உரிமை அறியும் சட்டம் ்வாயிலாக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த மத்திய தகவல் கமிஷன் மரபணு பரிசோதனை பயிர்கள் பயிரிடப்பட்ட இடங்களையும், அவற்றினால் உண்டான ஒவ்வாமை மற்றும் அதன் நச்சுத்தன்மை குறித்த தகவல்களை தகவல் உரிமை சட்டம் 4.1(d)யின் அடிப்படையில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
மக்களாட்சியில் நல்ல சட்டங்களும் அதன் முறையான நெறியாண்மையும் இருக்கையில் வர்த்தக நலனும், பொது மக்கள் நலனும் சமநிலைப்படுத்த படலாம் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்சி. அரசு வர்த்தக நிறுவனங்களின் பின்னால் நின்று முக்கிய தகவல்களை மக்களுக்கு மறுக்கும் போது சட்டத்தினை பயன்படுத்தி அதனை சரி செய்யலாம் என்பது மக்களாட்சியின் முக்கிய கூறுகளில் ஒன்று. மக்களாட்சி இல்லாத இடங்களில் இதற்கான விவாதமோ, சாத்தியமோ கற்பனைக்கு அப்பாற்பட்டது.
No comments:
Post a Comment