Tuesday, April 10, 2007

கருப்பு பணம்

கருப்பு பணம் இந்திய பொருளாதாரத்தின் அளவீடான GDP-ல் 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆன்றோர், சான்றோர்,வலதுசாரி, இடதுசாரி முதல் சாமான்யர் வரை எல்லோரும் பங்கெடுத்து முழு வீச்சுடன் கருப்பு சந்தை வளர்சிக்கு பணி செய்கின்றோம்.

வரி கட்டாமல் வியாபாரம் தெருவுக்கு தெரு உண்டு. தெருவில் சாக்கடை புரண்டாலும் கவலை இல்லை. கோடையில் ்சின்னம்மை தாக்கினாலும் கவலை இல்லை.வரி கட்டாவிட்டாலும் கவலை இல்லை. மரத்து போய் விட்டதா இல்லை இது போதும் என்று நிறைவடைந்து விட்டோமா என தெரியவில்லை.

1983ம் ஆண்டு 36,768 கோடியாக இருந்த கருப்பு பணம், இன்று 9 இலட்சம் கோடியாக வந்து நிற்கின்றது. கடுமையான வரிச்சட்டங்கள், அளவுக்கு அதிகமான முத்திரைதாள் கட்டணம் போன்றவையே கருப்பு பணத்தினை தீ மூட்டி வளர்க்க முதல் காரணம். பின்னாளில் இவை தளர்த்த பட்ட போதும ஏமாற்றி பழகியது வசதியாய் இருந்ததால் வரி கட்டுதல் அநாவசியமாய் போய் விட்டது. அதற்கு அடுத்த காரணம் ஊழல்.

மக்களுக்கு அரசு நிர்வாகிகள் மேல் நம்பிக்கை இல்லை. தொகுதிக்கு தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் கிட்டதட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்கிறாராம். இது கணக்கில் வராத பணமே. 542 தொகுதியை கணக்கில் எடுத்தால் மொத்த கருப்பு பண அளவு 10000 கோடி பக்கம் வருகின்றது. இது இல்லாமல் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் எல்லாம் உண்டு. புழங்கும் இந்த கருப்பு பண அளவை நினைத்து பாருங்கள். இன்று உள்ள எல்லா அரசியல் கட்சிக்கு இதில் பங்கு உண்டு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் அறவே இல்லை.

சந்தையில் கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும், நிலமாகவும், வீடாகவும் புழங்குகின்றது. இது இல்லாமல் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டாகவும் கருப்பு பணம் அதிகம் இருக்கின்றது. அதிக மதிப்புள்ள பணத்தினை சந்தையில் குறைத்து, வங்கி கணக்குகள் வழியே வர்த்தக பரிமாற்றங்கள் வர வழி செய்வது முக்கியமாகும். கருப்பு சந்தையின் அளவு விரியும் போது அதன் சுமை வரி செலுத்துவோரின் மேல் அதிகமாகும். அதன் விளைவாக ஒழுங்காய் வரி செலுத்துபவரும் அதை தவிர்க்கவே பார்ப்பார்கள்.

இந்தியா வல்லரசு ஆக வேண்டிய அவசியத்தை விட தொழில் வளத்தில், மக்கள் வளத்தில் முன்னேறிய நாடாக வேண்டிய அவசியம் நிறைய உண்டு. எளிமையான வரி அமைப்பு, அரசின் சிவப்பு நாடா அகன்ற தொழில் ஊக்குவிப்பு முறைகள், உள்கட்டுமான உயர்வுகள், அதிகரிக்கும் வரி செலுத்துவோர், குறைந்த பட்ச நேர்மை உள்ள அரசியல்வாதி போன்றவைதான் அடிப்படை தேவை. பாகிஸ்தானோடும், சீனாவோடும் ராணுவ அளவில் ஓப்பிடு செய்து ்கொண்டு மதச்சண்டைகளில் இன சண்டைகளில் நேரத்தை செலவீடு செய்தால் நிலையான முன்னேற பாதையில் உள்ள அரசு என்பது கனவில்தான் இருக்கும்.

1 comment:

MSV Muthu said...

ஒன்பது லட்சம் கோடி கருப்பு பணமா? இப்பவே கண்ணக்கட்டுதே! ஆனா என்ன செய்யமுடியும்னு நினைக்கறீங்க? எல்லா இடத்திலும் கருப்புபணம் இருக்கு. ஒரு ஷோபா வாங்கப்போனா, அவன் கேக்குறான் பில் இல்லீண்ணா ஒரு தொகை. பில் இல்லாட்டி ஒரு தொகை. அந்த வகையில மூவாயிரம் ரூபாய் மிச்சமாகுது. மூவாயிரம் ரூபாய். யாவரும் சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறது. பிள்ளைக்கு ஒரு டர்ம் பீஸ் கட்டிடலாம்னு நினைப்பாங்க. ஆனா ஷோபாவையும் வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. ஏன் ஷோபா வாங்குவதற்கு அவ்வளவு வரி? நகைக்கும் இது பொருந்தும். பல்வேறு பெரிய நகைக்கடைகளில் வெளிபப்டையாகவே இதைக்கேட்கின்றனர். நான் என் செல்போனில், அவர் கேட்டதை ரெக்கார்ட் செய்து, போலீஸிடம் ஒப்படைத்தால் அவர்கள் கேட்கவா போகிறார்கள்? உனக்கு வேறு வேலை இல்லையா என்று தான் கேட்ப்பார்கள். இதனால் தான் நிறைய மக்கள் : எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது, நாங்கள் ஒதுங்கி வேடிக்கை பார்க்கிறோம் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள்.அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பலசரக்கு கடை இருக்கிறது. பெரிய கடை இல்லை. அங்கு தான் அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள்யாவரும் மளிகை வாங்குவார்கள். அங்கும் கிரெடிட் கார்ட் சிஸ்டம் தான். சிகரெட் அட்டையில் கணக்கு வைத்துக்கொள்வார்கள். அங்கு வாங்கும் முக்கால்வாசி மக்கள் கடனுக்குத்தான் வாங்குகிறார்கள். சிகரெட் அட்டையில் கணக்கு குறிக்கப்படும். மாதம் ஆனதும் முழுப்பணத்தையோ அல்லது ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து மீண்டும் வாங்கிக்கொள்ளலாம். அந்த சிறிய கடையில் பலருக்கு நாலாயிரம் ரூபாய் வரைக் கணக்கிருக்கிறது. அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரு சுழற்சியிலே இருக்கிறார்கள். கடன். கடனை அடைத்தல். மீண்டும் கடன் வாங்குதல். அப்படியிருக்க அவர்கள் அந்தக் கடையில் பில் கேட்க முடியுமா என்ன? பல பெரும் தொழிலதிபர்கள் வைத்திருக்கும் கருப்புப்பணமும் அந்தக் கடைக்காரர் வைத்திருக்கும் கருப்புப்பணமும் ஒன்றுதான்.

மக்களின் குணங்கள் மாறியபடி இருக்கின்றன. மக்களின் குணங்களுக்கு ஏற்ப மன்னர்களின் குணங்களும் மாறிவருகின்றன. அதனால் தான் இலவச கலர்டீவி. நாளை வரும் அரசாங்கம், இல்லையேல் அட்லீஸ்ட் கவுன்சிலர் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பலசரக்குக் கடையில் கடன் வைத்திருக்கும் அனைவரது கடனும் தள்ளுபடி என்று அறிவிக்கலாம். நாம் அவரை ஜெயிக்கவைக்க மாட்டோமா என்ன? அந்த கடன் தள்ளுபடியால் நம் வீட்டுக்கு எதிரே இன்னும் வராமல் இருக்கும் சிமெண்ட் ரோட்டைப் பற்றி கவலைப்படுவதை விட நமக்கு வேறு வேலைகள் இல்லையா என்ன?