Thursday, April 12, 2007

புள்ளிவிவரம் கொஞ்சம் மாறியிருக்கும்

மற்றுமொரு தற்கொலை. எதாவது ஒரு புள்ளி விவரத்தில் கொஞ்சம் அசைவிருக்கும். மகாராட்டிர முதல்வருக்கு இரண்டு கொட்டாவிகளுக்கு இடையே செய்தி சொல்லப்பட்டு மறக்க பட்டிருக்கும். இறந்தவரும் இந்திய பிரஜையே. அவருக்கும் அரசியலமைப்பின் பாதுகாப்பும், அரசின் கவனமும் இருந்திருக்க வேண்டும். முன்பு அவருக்கும் வாழ்வின் மீதான பிடிமானங்கள் எல்லோரையும் போல இருந்திருக்கும். ஒவ்வொரு முறையும் பருத்தி விதைக்கையில் பருத்தி முற்றிய உடன் கடன் தீரும் என்ற நம்பிக்கை இருந்திருக்கும். ஏதோ ஒரு நொடியில் புள்ளியில் அந்த நம்பிக்கை காணாமல் போய் விட்டது. எதிர்காலம் இறந்தகாலத்தை விட புதிதாய் வராது என்ற முடிவுக்கு வந்திருக்க கூடும். குடும்ப தலைவரின் மறைவு குடும்பங்களில் உருவாக்கும் கையறு நிலை கொடுமையானது. கணவனுக்கு துணையாய் இருந்தே பழகி போன பெண் தன் குடும்பத்தை தானே இழுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார். அதன் நடைமுறை சிரமங்கள் வார்த்தைகளில் சொல்ல இயலாது. GDP , பண வீக்கம் போன்ற பல புள்ளி விவரங்கள் நடுவே தற்கொலை புள்ளி விவரமும் இடை விடாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒரு ஒட்டு குறைந்து போனது முதல்வருக்கு பிரச்சனை இல்லை. இறந்து போனவனும் தன்னைதான் பிரதிநிதியாக நினைத்தான் என்ற உணர்வும் இருப்பதாய் தோன்றவில்லை. நிவாரண நிதி அறிவிப்புகளில் மட்டும் உண்டு. சென்ற வருட செய்திகளில் நிவாரண நிதி வழங்குவதில் ஊழல் காரணமாய் கால தாமதம் ஆகி அதனால் தற்கொலையும் நடந்த செய்தி வந்தது. பிணந்தின்னி கழுகுக்கிற்கு சுடுகாட்டு சாப்பாடு மாறுபட்டதாய் தெரிவதில்லை.

விதர்பாவின் அழுத்தமான மன இறுக்கம் வாய்ந்த சூழ்நிலையில் மாநில அரசு மன ஆலோசனை குழுக்களை அமைத்து அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தியிருக்கலாம். மகாராட்டிரா காட்டன் போர்ட் விதர்பாவிலாவது ஊழல் செய்வதை கட்டுப்படுத்தி இருக்கலாம். விவசாயத்தின் முதலுக்கு மேல் வருமானம் வரும் வழிகளை உடனிருந்து கண்டறிந்து அதனை செய்ய முற்பட்டு இருக்கலாம். (அப்புறம் எந்த எழவுக்கு விவசாய அறிவியல், பொருளாதார நிபுணர்களை அரசு வைத்திருக்கின்றது என தெரியவில்லை). பாசன வசதிகளுக்காக வழங்கப்படும் காசில் ஊழல் இல்லாமல் கொடுத்திருக்கலாம். வேறு புதிய தொழில்கள் நிறுவ ஆலோசனை வழங்கி உதவியிருக்கலாம். பிச்சைகாரனுக்கு பிச்சை வழங்கிய தோரணையில் விதர்பாவின் மான்ய தொகையை பத்திரிக்கைகளுக்கு செய்தியாக கொடுத்து விட்டு வேடம் போடாமலும் இருந்திருக்கலாம்.

2 comments:

மணியன் said...

நான் கவனிக்கின்ற அளவில் மகாராஷ்ட்ரத்தில் அரசு என்பதே செயல்படுவதாகத் தெரியவில்லை. நம் தமிழகத்திலாவது இரண்டு வலுவான அணிகளின் போட்டியால் வாயளவிலாவது தீர்வு தேடுகிறார்கள். இங்கு நிரந்தர வாக்குவங்கியை ஒருவருக்கொருவர் பங்கு போட்டுக் கொண்டு எல்லோரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அதிலும் வளமான கொங்கண் மற்றும் மராட்டா அரசியல்வாதிகள் விதர்பாவை மாற்றாந்தாய் மனப்பான்மையிலேயே நடத்துகிறார்கள் :((

நிர்மல் said...

ஓவ்வொரு முறை விதர்பா விவசாயி அரசியல், ஊழல் அடக்குமுறைக்கு பலியாகும் போது அரசு மான்யம் இத்தனை கோடி செலவிடுகிறதென்ற எந்த அதிகாரியாவது அறிக்கை விடுவார். எந்த வெகுஜன பத்திரிக்கையும் இத்தனை மான்யத்தில் எத்தனை விதர்பாவினை தொட்டது, இவ்வளவு மான்யத்தையும் முறையாக நிர்வாகித்து செலவிட முடியாமல் என்ன ஆட்சி நடக்கின்றது என கேள்வி கேட்டதில்லை.

செய்தி வாசிப்பவருக்கு இத்தனை கோடி செலவு செய்தும் ஏன் இவர்களால் மேல் வர முடியவில்லை என்ற மேலோட்டமான கேள்வியை எழுப்பி எல்லா குறைகளையும் விதர்பா விவசாயி மேல் போடுவது போலவே செய்திகள் வருகின்றன. அதுதான் இன்னமும் வருத்தம் தருகின்றது