Sunday, April 15, 2007

ஆண்டைகள் உலகம்

கட்டம் கட்டி முன் பக்கம்
பதிவுகள் வர நட்சத்திர வாரம் மூலம் உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி.

வாசித்து கருத்துகளை பகிர்ந்த தோழமைக்கும் நன்றி.

நம் நாட்டின் நில அமைப்பு முறை சாதியத்தின் மேல் நிறுவப்பட்டது. நில உடமையாளர் சமுகத்தின் ஊடே நான் வளர்ந்த போது அவர்களின் சாதிய இறுக்கங்களும், ஆக்கிரமிப்பு தனமும் அந்த கட்டுகளை மீற வேண்டிய நிர்பந்தம் மற்றும் சிந்தனையின் அவசியத்தை உணர்த்தியது. ஆண்டைகள் என்று மிராசுகளை அழைப்பார்கள்.

இந்த கவிதைகள் அந்த வட்டத்தினை பற்றியது. இவை ஒரு மீள் பதிவே
----------------------------------------------------------------


ஊரிலே பெரிய வயல்
ஆண்டையோடது.
மேடைகளை கண்டால்
ஆண்டைக்கு மிக விருப்பம்
அன்னைக்கு
சட்டதிட்டங்களோடு ஆண்டை
சமூக நீதி பேசினார்
புள்ளிவிவரங்கள் எப்போதும்
நாக்கு நுனியில்
சோடாக் குடிக்கும்
இடைவெளியில்
ஆண்டைக்கு கோபம்
மனசுக்குள்
கோவணத்துக்கு
காசில்லாதனெல்லாம்
பள்ளிக்கூடம்
போனால் எவன்டா
வயலுக்கு அறுப்பு
அறுக்கறதென
ஆண்டை இருக்கும் வரை
சமுகநீதிக்கு கவலையில்லை

----

கட்டிலில் கிடக்கும்
அம்மாவுக்கு அள்ள
முனியம்மா வேண்டாம்
சூத்திர நாற்றம்
வேறாள் வேலைக்கு வேணுமென
சொன்னவரிடம்
காப்பி குடிக்கும்
ஆண்டை கேட்டார்
குளிச்சு கிளிச்சு
சுத்தமாதானே இருக்கோம்
கவுச்சியும் இல்லை
உங்க சாமிதானே எனக்கும்
எனக்கேன் காப்பிக்கு தனி டம்ளர்
கேட்டதால் வேலைக்கு
ஆள் கேட்டவர் சொன்னார்
என்ன செய்யறது
எல்லாம் கர்மாதான்
நீர் சத்சூத்ராளாய்யா
சூத்ரனில கொஞ்சம் உசத்தி
ஆனா சூத்ரன்தானே
ஆண்டைக்கு ்வாலிருந்தால்
அன்னைக்கு ஆட்டியிருப்பார்
அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி
முனியம்மா கூட்டம்
இன்னும் அவருக்கு கீழ்தான்

-----------

குறள் வழி சமுகம்தான்
ஆண்டைக்கு மிக விருப்பம்
ஆனாலும் ஆண்டைக்கு
எப்போதுமே ஒரு சந்தேகமுன்டு
அதனால் ஒருநாள்
புரியாத பாசையில் பூசை
கொடுப்பவரிடம் கேட்டார்
ஐயன் சாதியென்ன
உம்மதா எங்களுதானு
ஆண்டையின் சந்தேகத்தில் கூட
ஐயன் சட்டையில்லா சாதியில்லை
ஒருவேளை இருந்திருந்தால்
குறளுக்கும் உண்டோ தீட்டு
ஆண்டைக்குதான் எங்கேயும்
சமூகநீதி வேணுமே

4 comments:

Santhosh said...

நட்சத்திர வாரத்தில் உங்களுடைய பார்வைகளை அருமையா விளக்கி இருந்தீங்க. வாழ்த்துக்கள். ஆனா நான் முன்னாடியே சொல்லி இருந்த மாதிரி பொருளாதாரம் சம்மந்தமான கட்டுரைகள் தான் உங்களோட பலம் :))

நிர்மல் said...

நீங்க சொன்னால் சரிதான் சந்தோஷ்.
;-)

கருப்பு said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

ஆண்டைகள் என்றால் இந்த ஏகாதிபத்திய ஆண்டிப் பண்டாரங்கள் என்று அர்த்தம்.

ஆண்டாண்டு காலமாக பிரம்மாவின் மூக்குச் சளியில் இருந்து பிறந்து வந்ததாகக் கூறி மக்களை அடிமைப்படுத்திய ஜந்துக்கள் அவர்கள்.

பிறப்பால் ஒருவனை ஜாதியால் கூறுபோட்டு மக்களுக்குள் பேதம் பார்த்தவன் இந்த பஞ்சம் பிழைக்க வந்த ஆண்டிக் கூட்டம்.

Voice on Wings said...

சிறப்பான நட்சத்திர வாரத்திற்கு நன்றி.

சந்தோஷுடன் வேறுபட விரும்புகிறேன் :) உங்களுடைய புனைவுகளையும்(உ-ம் ) கவிதைகளையும் விரும்பிப் படித்ததுண்டு.