Sunday, April 15, 2007

அடுத்து என்ன?

அலுவலகத்திலும், பிற இடங்களிலும் அதிகமாய் பிரச்சனைகள் போதோ அல்லது பொறுப்புகள் கை மாற்றி விடும் போதோ பார்க்கும் ஒரு பழக்கம் குற்றப்பத்திரிக்கை வாசிப்பு. வாசித்து முடித்து தொடர்ச்சியான நகர்வாக இருக்காமால் நிறைய சமயங்களில் ஒரு தேக்க நிலையை காணலாம்.

கலந்தாலோசனை கூட்டங்களில் இரைச்சல் அதிகமாகி முன்னால் நடந்த சம்பவங்களின் குறைகள் மட்டும் பேசப்பட்டு ஏற்பட்ட இழப்பிற்கு யாரையாவது திட்டிக் கொண்டே கூட்டமே முடிந்து விடும். புதிய ஆலோசனைகளும், நடவடிக்கைகளும் அதற்கு மேல் மாற்று பாதைகளும் பற்றி அதிகம் விவாதிக்கப்படாது.

வேலைக்கு சேர்ந்த பொழுதில் இது போன்ற குழப்பம் ஏற்பட்ட ஒரு புரோஜக்ட்டில் புதிய தலைமை நிர்வாகி "IT IS WHAT IT IS. ALL THIS BLAME GAME CAN NOT CHANGE OUR SCREW UPS. " என்று பொரிந்து தள்ளினார். அதற்கு பிறகு அணியின் போக்கு மாறி விட்டது. பழங்கதைகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தன. இந்த it is what it is வழி சிந்தனை பிடித்திருந்தது. ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கண்டு மலைக்காமல் , அஞ்சாமல், இருப்பதை தீர்த்து ஆக வேண்டியதை செய்து வாடிக்கையாளருக்கு தரமான சேவையை வழங்குவதே முக்கியம்.

பழசை அள்ளி போட்டு கழுவி சுத்தம் செய்து அடுத்த வேலைக்கு நகர நினைப்பது தவறல்ல. ஆனால் பழமையினை கிளறி கூறு போடல் மேல் கொண்டு ஆக வேண்டிய காரண காரியங்களை பாதிக்கும் இடத்தில் கிளறி கொண்டே இருப்பதில் ஆவது என்ன? புதிய சிந்தனை, ஆர்வம், அதனை நடைமுறைபடுத்து்ம் மானகை திறன் போன்றவை கொண்டிருத்தலே நலம்.

ஒப்பாரி வைத்தலும், கட்டியலுதலும் வாழ்வை தூக்கி செல்லாது. அவை சமயத்தின் வெளிப்பாடாய் இருக்கலாமே தவிர, இரும்பு சங்கிலியாய் வாழ்வாதாரங்களை கட்டி விடுவதாய் இருக்க கூடாது.

நடந்து முடிந்து போன சம்பவங்கள் முடிந்தவையே. நீங்களோ, நானோ இல்லை வேறு யாரோ அதை மாற்றி விட முடியாது. குட்டையில் ஊறுதல் போல் அதில் ஊறி கிடத்தல் சுகமே, இங்கும் அங்கும் விரல் நீட்டி குற்றம் சுமத்தி இருத்தல் சுய இரக்கத்தையும், சிரங்கினை சொறியும் கோபத்தையும் கொடுக்கும், ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலிருக்காது. it is what it is. அதற்கு அடுத்து என்ன செய்வது?

1 comment:

வெற்றி said...

நிர்மல்,
நல்ல பதிவு.