Monday, April 23, 2007

சாமந்தி-i

"வேலை கிடைக்குமா?"- சாமந்தி கவலையுடன் இருந்தான்

"கவலை பட்டா மட்டும் கிடைக்கவா போகுது" - ஆறுதல் சொல்ல ஆசைபட்டான் கோதுமன்

" கேயான்களோடு வேலைக்கு போட்டி போடறது ரொம்ப சிரமம்டா. என்னதான் நாம மூளையில் சிப் வைச்சிகிட்டாலும், புராஸஸிங் சக்தி அவன்களுக்கு இயல்பா கூட போயிடுது" - சாமந்தி

கோதுமன் நல்ல வேலையில் இருந்தான். உணவும், உடை, உறைவிடம் மூன்றும் சம்பளமாக உண்டு. கோதுமன் வேலை செய்வது காய்கறி உற்பத்தி செய்யும் தொழிலில், கதிரியக்க பாதுகாப்புக்கு உட்பட்ட சிறப்பு வயல்களில் அவனுக்கு காய்கறி முற்றியதும் அறுக்கும் வேலை. எந்திரங்கள் பூரணமாக தடை செய்யப்பட்ட பகுதி அது.

கோதுமன்தான் அவனது மேலாளருக்கு இரண்டு வார உண்மை காய்கறி உணவை தருவதாக கூறி சாமந்திக்கு ்வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்ப செய்தான். மாத்திரை உணவு மட்டுமே சாத்தியமான சூழ்நிலையில் காய்கறி உணவு அரசின் சுழற்சி முறையில் குடிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. வருடத்திற்கு இரண்டு ்வாரங்கள் மட்டுமே காய்கறி உணவு கிடைக்கும்.

சாமந்தி கோதுமனோடு அரசின் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவன். சிறுவயதில் வயல்களை பற்றிய பாடங்களை சரியாக கற்காமல் கணிணியோடு பொழுதை ஒட்டி விட்டடான். பூமி-i மக்கள் தொகையில் எழுபது விழுக்காடு கணிணி துறை அறிவினை கொண்டு வேலை செய்து, வேலை ்தேடுவதால் அந்த ்துறை தேக்க நிலைக்கு வந்து விட்டிருந்தது. கேயான்கள் வந்ததும் கணிணியின் தேவையும் குறைய ஆரம்பித்து விட்டது.

அது பே.பி(பேரழிவிற்கு பின்) 200 வது வருடம். உலகம் பேரழிவை சந்தித்த பின் இரண்டு நூற்றாண்டுகள் ஆகி ்விட்டிருந்தன. உலக அழிவிற்கு முன் இருந்த மத ரீதியான வருட கணிப்புகள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டு இருந்தது. ஒரு சிலர் இன்னமும் அதை உபயோக படுத்தி கொண்டிருந்தாலும் பெரும்பாலோனார் அதை பயன்படுத்துவதில்லை.

பூமி-i ன் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் பூமி-ii உடன் செய்த ஒப்பந்த அடிப்படையில் இந்த கால அளவே உபயோகப்படுத்த படுகின்றது.

பேரழிவு பூமியை இரண்டாக பிளந்து இரு துண்டுகளாக மாற்றி விட்டது. வானில் இருந்த வந்த கல் மோதி ஏற்பட்ட பாதிப்பில் சுனாமி , நில நடுக்கம் என பல வகை உப பாதிப்புகள் உண்டாகின. அதிக பட்ச கதிரியக்கம், சுற்றும் அச்சில் ஏற்பட்ட மாறுதல் காரணமாய் பூமியில் பரிணாமம் துரிதப்படுத்தப்பட்டு மனிதரிலிருந்து கேயான்கள் உருவாகி இருந்தார்கள்.

கேயான்கள் காமம், பசி, சோர்வு போன்ற உணர்வின்றி இருந்தார்கள். கேயான்களால் தங்களை பிரதி எடுத்துக் கொள்ள முடியும். பிரதி எடுக்கையில் அசல் அழிந்து விடும். உருவம் கிட்டதட்ட மனிதர்களை ஒத்து இருந்தது. கேயான்களின் மூளை திறன் மனிதர்களோடு பல மடங்கு ஆகிவிட்டு இருந்தது.

"காய்கறி வயல்களில் கேயான்களுக்கு என்ன வேலை? அவர்களுக்கு பசி கிடையாதே" - கோதுமனுக்கு வருத்தமாய் இருந்தது

" அரசுதான் எல்லோருக்கும் ஒதுக்காமல் வேலை தரும் நிறுவனமாய் தன்னை சொல்லிக் கொண்டு மனிதர் தலையை உருட்டுகின்றது. வர வர அரசு நிறுவனத்தில் கேயான்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி விட்டது"- சாமந்தி

" சோர்வில்லாமல் வேலை செய்வதால் அரசு அவர்களை ஊக்குவிக்கின்றது. மனித இனத்தையே மனித இனம் கேள்வியாக்குகிறது. நீ வேண்டுமானால் பார் இன்னமும் சில நூற்றாண்டுகளில் கேயான்கள் ஆட்சிபீடம் ஏறி விடுவார்கள்" - கோதுமன்

" அப்படியும் ஆகலாம். உன் மேலாளரிடம் எனக்கு வேலை தருமாறு நீ வலயுறுத்த முடியாதா? "- சாமந்திக்கு இந்த வேலையும் கிடைக்காமல் ்போய் விடுமோ என்ற பயம் வந்து ்விட்டது.

" சொல்லிப் பார்கிறேன். உன் இரண்டு வார காய்கறி உணவையும் அவருக்கு தருவதாக போய் சொல்கிறேன். நீ அரசு பாதுக்காப்பு இடத்துக்கு போ. நான் இரவு வந்து சேர்கின்றேன்." - கோதுமன் ஆழ்ந்த யோசனையுடன் அலுவலகம் உள்ளே சென்றான்.

சாமந்தி கொஞ்ச நேரம் அந்த அறையிலேயே உட்கார்ந்திருந்தான். வேலையில்லாமல் இனபெருக்க உரிமம் கிடைக்காது. சில மாதங்களாக அவனுக்கு அதற்கான ஆசை அதிகமாகி விட்டிருந்தது. நேர்முக தேர்வில் ஆய்வாளார் கேட்ட எல்லா வினாக்களுக்கும், செய்முறை தேர்வுகளையும் நன்றாக செய்திருந்தாலும் தேர்வுக்கு வந்திருந்த கேயானை கண்டவுடன் நம்பிக்கை போய் விட்டிருந்தது.

என்ன செய்வது என்ற கேள்வியுடன் பாதுகாப்பு இல்லம் நோக்கி கிளம்பினான்
(தொடரும்)

2 comments:

Voice on Wings said...

சிறப்பு விவசாய மண்டலம்? :) இக்கதைக்கான creditஇல் எனக்கும் பங்குண்டு என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிர்மல் said...

VOW,

:-)

AEZ பற்றி படித்திருப்பிர்கள் என நினைக்கின்றேன்.