மாமு விளையாட்டுக்கு எடுத்துக்கோனு ஏதேனும் நடந்தா நட்பு வட்டங்கள் சொல்லும். உண்மையில் விளையாடும் இருக்கும் மனோபாவத்தில் எடுத்துக் கொண்டால் பேரன்பற்ற பெருங்கோபத்தில்தான் முடியும்.
மனிதனின் குழு இயக்கம் விலங்கினமாய் திரிந்த காலத்திலிருந்து வந்தது.தனி மனிதன் தன்னை ஒத்த அல்லது தன்னை விட கொஞ்சம் மேலான தன்மை உடையவர்களோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறான். விளையாட்டை பற்றிய அறிவை பகிரவும் அந்த விளையாட்டு குழுவோடு தன்னை அடையாளப்படுத்தி கொள்ளுதலும் அவசியமாகிறது. குழுவை தேர்ந்தெடுத்தல் நகரம், மதம், நாடு என்ற பல வளையங்களுக்குள் அமைகின்றது.
விளையாட்டில் விளையாடுவதோ, அணி ஆதரவு நிலையிலோ அட்ரினலின் உச்சம் ஏற ஆர்பரித்து நிற்கும் போது அதை விட பேரின்பம் தேட இயலாது. காமத்தின் பரவசம் ஒத்த நிலை அது. காமம் இருவருக்குள் தனியறைக்குள் இயங்குவது(பொதுவாக). விளையாட்டு அனுபவம் பலரிருக்க நபர்கள் அதிகரிக்க மிகுந்த அளவாக மாறக்கூடியது. பிறந்த உறவா , பகிர்ந்த உறவா, இல்லை பழகிய உறவா? எதுவும் இல்லை. ஆனாலும் மனம் வெற்றியில் மகிழ்ந்து, தோல்வியில் துவண்டு போகின்றது.
நிம்பஸ் ஒளிபரப்பை தூர்தர்ஷனுடன் பகிர மறுக்கையில் பாதி இந்தியா வாடி வதங்குகிறது. கோடிகள் புரள ஒளிப்பரப்பு உரிமைகள் பேரம் பேசப் படுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொன்றும் இரு நாட்டுக்கிடையே யுத்தம் போல்தான் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ரோம நகரத்தில் கிளாடியேட்டர்கள் ரத்தம் சிந்துகையில் குதுகலித்த பார்வையாளார்களின் மனநிலை விக்கெட்டுகளின் வீழ்ச்சியிலும், மட்டையில் பட்டு விழும் நான்கிலும், ஆறிலும் கிடைக்கின்றது.அண்மையில் உலக கோப்பை தோல்வியும் சிலரின் இதய துடிப்பை நிறுத்தவும் செய்திருக்கின்றது.
தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கடவுள் சாக்கர் வடிவில் உலவுகின்றார். இன்னோரு மதமாகவே சாக்கர் உள்ளது. தன் அணியின் தோல்விக்கு காரணமானதால் சுட்டுக் கொள்ளப்பட்ட கொலம்பிய கால்பந்தாட்ட வீரரை மறக்க இயலுமா? அமெரிக்காவில் புட்பால் காலங்கள் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களாகவே உள்ளன. நுரைக்கும் பியர் பாட்டில்கள், கார்களில் பறக்கும் அணிகளின் கொடிகள், ஆர்பரிக்கும் கூட்டம் என்று கோலகலமாகவே உள்ளது.
அமெரிக்காவின் புட்பால் அணிகள் நகரங்களை மையமாக கொண்டவை. கலிபோர்னியா மாகாணத்தில் இருந்த போது சான்பிராஸிஸ்கோ, ஒகலாந்து இரு நகரங்களும் இரு புட்பால் அணிகளை கொண்டிருந்தன. நண்பர் ஒருவர் ஒக்லாந்து எனும் நகர அணியை ஆதரிப்பவராய் இருந்தார். அவரது தலை தொப்பியில் ஒக்லாந்து அணியின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஒரு முறை விளையாட்டு பொழுதினில் சான்பிரான்ஸிஸ்கோவின் பார் ஒன்றிற்கு செல்கையில் எங்களுக்கு அந்த தொப்பியை நீக்குதல் எங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு நல்லதென அறிவுறுத்தப்பட்டு நண்பர் தொப்பியை நீக்க வேண்டியதாயிற்று. அவர்களிடம் ்விளையாட்டாய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தால் பூசைதான் விழுந்திருக்கும்.
இதற்கு அப்புறமும் யாராவது 'it is just a game' என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கின்றது.
6 comments:
நட்சட்த்திர வாழ்த்துக்கள் நிர்மல்.
மேலும் உங்களது நிறைவான கட்டுரைகளை இந்த வாரம் எதிர்பார்க்கிறோம்.
நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள் நிர்மல். விளையாட்டை விளையாட்டாய் எடுத்துக்கொள்ள நிறைய விளையாட்டுத்தனம் வேணும்.
நட்சத்திர வாழ்த்துக்கள் நிர்மல்!!
---கடவுள் சாக்கர் வடிவில் உலவுகின்றார்.---
கடவுள் == சந்தை (மார்க்கெடிங்)?!
விளையாட்டு மதங்களுக்கு உண்டான கவர்ச்சி , ஆர்வம், உள்ள எழுச்சியை உண்டாக்குவதைதான் சாக்கர் கடவுளாகிறது என்று சொல்லியிருந்தேன்.
விளையாட்டை சந்தையாக்குவது விளையாட்டு நிறுவனங்கள், அதன் வாடிக்கையாளரே இரசிகர்கள்.
//அணி ஆதரவு நிலையிலோ அட்ரினலின் உச்சம் ஏற ஆர்பரித்து நிற்கும் போது அதை விட பேரின்பம் தேட இயலாது//
நடசத்திர வாழ்த்துக்கள் நிர்மல். நீங்க மேலே சொல்லி இருக்கிற மேட்டர் ரொம்ப நிஜம் அந்த உணர்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. அதுவும் நான் ஒரே ஒரு முறை ஒரு டெஸ்ட் மேட்சை ஸ்டேடியத்தில் இருந்து பார்த்தேன் அப்பொழுது போட்ட ஆட்டத்தை இன்னும் மறக்க முடியாது. நானா அது அப்படின்னு இப்ப நினைச்சாலும் சந்தேகமா இருக்கு.
Post a Comment