Wednesday, January 31, 2007

பாடல்கள்


Crazy Music
Originally uploaded by pfly.
பாடல்கள் உடன் வந்து கொண்டே இருக்கின்றன. கார்களின் ரேடியோவிலும், கணிணியிலும் உடன் இருந்து கொண்டே இருக்கின்றன. சின்ன வயதில் எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த திரைப்பட பாடல்கள் மேல் ஏற்பட்ட ப்ரியம் இன்னும் அகலவில்லை. சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா என டி.எம்.சவுந்திராஜன் பாடுவது இன்னும் கேட்க இனிமையாக இருக்கின்றது. மற்றோரு பாடலான உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் என் குழந்தைக்கு நான் பாடும் தாலாட்டுகளில் ஒன்றாகவும் தங்கிவிட்டது.

பாடலை எழுதியது யாரென நியாபகம் இல்லை. வாலியோ, கண்ணதாசனோ, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ என அடையாளம் பிரிக்க முடியவில்லை. அடிமை பெண் திரைப்படத்தில் வரும் தாயிலாமல் நானில்லை பாடல் உதடுகளுக்குள் முணுமுணுப்பாக வந்து போகின்றது.

கொஞ்சம் வளர்ந்த போது ஒன்றிரண்டு டப்பாங்குத்து பாடல்களிடத்து பார்வை திரும்பியது. எனன படமென்று நியாபகம் இல்லை குன்னக்குடியின் இசையில் வந்த கொட்டாம்பட்டி ரோட்டிலே ஹோ ஹோய் பாடல் பிடித்த பாடல்களில் ஒன்றாய் இருந்தது. பின்பொழுதில் இளையராஜாவின் உருமியில் மனம் லயிக்க ஆரம்பித்தது.

அப்பா முருக பக்தர். அவரது தாக்கத்தினால் சிறுவயதில் முருகபக்தி மனம் நிறைந்திருந்தது. சீர்காழியின் பாடல்கள் வீட்டில் நிறைய இருந்தன. திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் மிகப்பிடித்த பாடலில் ஒன்று. ஊரில் சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசம் சலிக்காமல் வீட்டில் ஒலிக்கும், அதை சலிக்காமல் கேட்க இயலும். அம்மா பேத்தி பால் சாப்பிட அடம் பிடித்தால் பேத்திக்கு கந்த சஷ்டி கவசம் படித்துக்காட்டுகிறார். சாமி கும்பிடாமல் வளர்க்க கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார்கள். உம்மாச்சியின் இருப்பை பற்றிய கேள்விகளை வாரிசிடம் வளர்கையில் அறிமுகப்படுத்தலாம் என விட்டாகி விட்டது.

புன்னகை மன்னன் வந்த போது என்ன சப்தம் இந்த நேரம் கேட்க ஆரம்பித்து இன்னமும் நிறுத்தவில்லை. எனக்கு தெரிந்து அந்த பாடல் பிடிக்கவில்லையென யாரும் சொன்னதேயில்லலை.

காதல் அரும்பிய தருணம் ஆனந்தம் படத்தின் என்ன இதுவோ என்ன இதுவோ பாடல் தந்த மோகம் மறக்க இயலாத ஒன்று. ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்க காருக்குள் பாடல் பரப்பி சாலையில் அவளோடு நிகழ்த்திய உரையாடல் அசைப்போட்டு செல்லுதல் சேமிக்க கூடிய நினைவுகளில் ஒன்று.

கருத்தம்மா வந்த பொழுதில் மலேசியா வாசுதேவன் பாரதிராஜா குரலில் வந்த காடு பொட்டை காடு ்பாடல் கேட்கையில் திருச்சி அருகே ஊர் பக்கம் போகும் பாதையில் உள்ள வெயில் அடிக்கும் பொட்டை காடுகளும் மாடு மேய்க்கும் சிறார்களும் வயதானவர்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஆக்ரோஷமாய் காய்ந்த மண்ணிற்கு சொந்தகாரர்கள் பாடும் அந்த பாடல் மிகப் பிடிக்கும்.

கோட்டையை விட்டு வீட்டுக்கு போகும் சுடலைமாட சாமி பாடல் பிடித்தில் ஒன்று. குடந்தை டைமண்ட் தியேட்டரில் பார்த்த படம். பாடலின் முழு வரிகளோ, இல்லை படமோ நியாபகம் இல்லை. பாடலின் முதலிரண்டு வரிகள் மட்டும் நினைவில் உண்டு.

காதல் ஓவியம், முதல் மரியாதை இரண்டு படமும்தான் எல்லாப் பாடல்களும் பிடித்த படங்கள். கேட்க வைத்த ராசாவிற்கு நன்றி. நிலாவதான் நான் கையில புடிச்சேன் என்று கேட்பது கார் ஸ்டியரிங்கிலும் தாளம் போட வைக்கின்றன.

ஆங்கில பாடல்களுக்கு பரிச்சயம் கல்லூரி காலத்தில்தான் பரிச்சயம் கிடைத்தது. ஈகிள் குழுவினரின் வெல்கம் டு தி ஹோட்டல் கலிபோர்னியா பாடல் மிக பிடிக்க ஆரம்பித்தது. வரவேற்று வெளியே அனுப்ப மறுக்கும் அந்த வகை இடம் பிடித்திருந்தது. பின்னோரு நாளில் வேகாஸின் கேசினோ ஒன்றில் கொஞ்சம் ஜேக் ்டானியல்ஸ் மற்றும் மால்பரோ துணையோடு அமர்ந்திருந்த போது பான் ஜோவி குழுவினரின் இட்ஸ் மை லைப் பாடல் கேட்க நேர்ந்தது. அது முதல் தனியே நானும் ஜேக் ்டேனியல்ஸூம் இருக்கையில் அந்த பாடலை துணைக்கு வைத்துக் கொள்ளுதல் மரபாக வைத்துக் கொண்டேன். தற்சமயம் அந்த குறுந்தட்டும் தொலைந்து விட்டது, ஜேக் டேனியல்ஸையும் விட்டாகி விட்டது.

திருமணத்தின் பின் ்துணைவியின் கர்நாடக இசை ஆர்வத்தின் காரணமாய் எம்.எஸின் குறையொன்றுமில்லை பாடலை கேட்க நேர்ந்தது. அதற்கப்புறம் அடிக்கடி அந்த பாடலை கேட்க வேண்டியிருக்கிறது. மீராவில் எம்.எஸ் பாடிய பாடலையும் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.

இன்னும் பல பாடல்கள் உண்டு. தினதந்தியின் கன்னி தீவு முடியும் வரை எழுதலாம்.

3 comments:

கப்பி பய said...

//தினதந்தியின் கன்னி தீவு முடியும் வரை எழுதலாம்.
//

சரியா சொன்னீங்க நிர்மல். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் நம்ம மூடுக்கு ஏற்ற மாதிரி பாடல்களை ரசிக்கிறோம். விரிவான பட்டியலைக் கொடுத்திருக்கீங்க..

மதி கந்தசாமி (Mathy) said...

//இன்னும் பல பாடல்கள் உண்டு. தினதந்தியின் கன்னி தீவு முடியும் வரை எழுதலாம்.//

உண்மைதான் நிர்மல். இசையைப்பற்றி யார் எழுதினாலும் எதிரே உட்கார்ந்து திறந்தவாய் மூடாமல் உம் கொட்டும்பாணியில் ரசிக்கிறேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் பாடல்கள், வாசிக்கும்போது மனதில் ஒலிப்பது சுகமாகவிருக்கிறது.

ஒரு தொடராக எழுதுங்களேன்..

இசையைப் பற்றி எழுதியவர்கள் என்றது நினைவுக்கு வருவது.

இளவஞ்சியின் இடுகையொன்று. வாய்ஸ் ஆன் விங்க்ஸின் இடுகைகள் சில. சன்னாசி இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தூவிச் சென்ற சில இடுகைகள். ஸ்ருசல் தொடர்ந்து எழுதி வருவது. முன்பு சுந்தர் எஸ்பிபி பதிவில் எழுதிய சில இடுகைகள், பெயரிலியின் சில இடுகைகள். தூள்.காமில் தொடர்ந்து வரும் பாடல்களோடு சேர்ந்த சங்கதிகள்... எத்தனை வந்தால் என்ன, the more the better..

-மதி

மதி கந்தசாமி (Mathy) said...

ஸ்ஸ்ஸ்.. யளனகப கண்ணன் பேரு விட்டுப்போச்சு.
ரோசா வசந்த்தை விட்டுட்டேன். ஒரு பொடியன் சில அருமையான இடுகைகளை எழுதியிருக்கிறார்.


மேலே போட்டிருக்கும் பட்டியல், சக இசை இரசிகரோடு பகிர்ந்துகொள்ளும் பட்டியல்தானே தவிர, ஒப்பிட்டு நோக்குவது இல்லை. திடீரென்று அந்தமாதிரி ஒரு தொனி வருதோன்னு சந்தேகம் வந்திருச்சு.

-மதி