Wednesday, May 30, 2012

சில எண்ணங்கள், சில வினாக்கள்

 வைதீகம்  வேறு இந்து மரபு வேறு என்றே நான் நினைகிறேன். வேதம் குறித்த எந்த எண்ணமும் இல்லாத பல குடும்பங்கள் இந்து வழிபாட்டு முறையில் உள்ளன. அந்த வழிபாட்டு முறையை பேணுகின்றன. குறிப்பிட குல  சடங்குகள் வைத்துள்ளன. அந்த  முறை முழுக்க முழுக்க அந்த குடும்பங்களின் உள்ளுணர்வால் அவர்களின் பழுங்குடி வடிவத்தில் இருந்து முளைத்து வந்ததே என்று  நினைகின்றேன். அவை வேத பின்னணி கொண்டோ, மந்திர பின்னணி கொண்டோ இருப்பதன் அவசியம் இல்லை.அது ஒரு எளிய நம்பிக்கை சார்ந்த அமைப்பு. அதுவே அதன் பலம் , அதுவே அதன் பலவீனம்.
 எளிய நம்பிக்கை சார்ந்த அமைப்பின் பலம் அதற்க்கு எந்த  மூல நூல்  கிடையாது , ஒற்றையான பார்வை கிடையாது.  மாறும் காலகட்டத்தின் மாறும் அறமாய் முளைப்பவை மேல் அது நிற்கின்றது. அதனால் அதன்  வரையறைகள்  மாறி கொண்டே இருப்பது, வளருவது. அது நிற்பது தனது  நம்பிக்கையின் பெயரில், தனது மாற்றின் வீழ்ச்சியில்  அல்ல, அங்கு மாற்று என்ற ஒன்றே இல்லை. இந்த நம்பிக்கை சார்ந்த வழிபாடிற்கு புதிய உறுபினர்களை உள்ளுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இல்லை. புதிய நம்பிக்கைகள் முளைக்கும் சமயம் அதனை தொட்டு அந்த நம்பிக்கையும் எளிய வடிவில் சுருக்கி உள்ளே கொண்டு வர கூடியது. நிறுவன அமைப்பு இல்லாதது. இந்த பன்முக நம்பிக்கை அமைப்பினை தொகுக்கலாம். ஆனால் தொகுப்பின் உள்ளே தற்சமயமும் தனி தனியே நிற்க கூடியது. மனிதரின் அன்றாட லௌகிக வாழ்வோடு முளைத்து கிளைத்து வேர் விட்டு வளர்ந்து வந்தது. அந்த உள்ளிருந்து முளைக்கும் இயல்பே இந்து வாழ்வு முறையின்  நெகிழ்வின் காரணம். உள்மனம் என்பது புற காரணங்களால் மாறும் பொழுது எளிதில் வழிபாடு நெகிழ்ந்து மாறி கொள்கின்றது.

அதன் பலவீனம் அதன் நம்பிக்கை சார்ந்த பன்மை தன்மையே. மூல நூல்காரர்கள் பெரும் நிறுவன வடிவில்  அரசு. ஆலயம் , நூல் வடிவம் கொண்டு தங்களை நிறுவி  கொண்டு வலுவாய் தங்களை முன் வைத்து பன்மை தன்மையினை புரிந்து கொள்ள தவறும் பொழுது தங்களின் பன்மை தன்மையை பலமாய் முன் வைக்கும் தொகுப்பு நிலைப்பாடு இந்து வாழ்வு முறைக்கு அமையவில்லை. லௌகீகம் சார்ந்த நம்பிக்கை வடிவம் ஆனதால்  உற்பத்தி சாதனங்களோடு மிகுந்த தொடர்புடையவை. உற்பத்தி சாதனங்கள் தேங்கும் பொழுது உருவாகும் உருவாகும் தடுமாற்றத்தினால் எளிய நம்பிக்கை மிக இறுகி போகும் தன்மை உடையது. பன்மைய நம்பிக்கை தன்னை உணர ஒரு விரிவான இணைப்பு வேண்டும், கல்வி அமைப்பு வேண்டும், சமூகங்களுக்கு இணையான தொடர்பு வேண்டும , அது 
இல்லாமல் போனது. பன்மைய அமைப்பு பல சிறு நம்பிக்கைகளை உண்டாக்குவதன் மூலம் பல சிறு குழுக்களை உண்டாக்குகின்றது.இன்னும் விரிவாய் சொல்ல எண்ணுகின்றேன், வார்த்தைகள் அமையவில்லை.  

இந்த பலமும் , பலவீனமும் கொண்ட அமைப்பே அடிப்படை இந்து வாழ்வு முறை என எண்ணுகின்றேன். இதன் உள்ளே தான் பௌத்தமும், ஆசிவகமும், சமணமும் நடமாடி வந்தன. இந்த மதங்கள் இந்த வாழும் முறையினை தொகுக்க நினைக்கவில்லை, இதனூடே தழைத்து வளர்ந்து தத்துவம் உருவாக்கி வந்தன. பள்ளிகள் நிறுவ பட்டன. அறகோட்பாடுகள் கவிதை வடிவில் எழுத பட்டன. ஆனால் இந்த வகை முயற்சிகள் பின் வந்த வழி முறைகளில் காணாமல் போயின. 

கணியன் பூங்குன்றனாரின் அந்த மாபெரும் கவிதை என்னுள் பல கேள்விகளை தருகின்றது. இது ஒற்றை பாடலா அல்லது ஒரு பெரும் அற நூலின் ஒற்றை கவிதையா? யாரிடம் சொல்கிறார்?  அவரது எதிர்பார்பென்ன?  இந்த பாடலில் உருக்கம் இல்லை ,கண்ணீரில்லை, மன்றாடுதல் இல்லை,  கோபம் இல்லை, பக்தி இல்லை ,வழிபாடு இல்லை, தன்னை தாழ்த்தி கொள்ளவில்லை. இது பரமாத்மாக்களை குறித்த பாடல் போல தெரியவில்லை. ஒரு சமூக விழிப்பின் குரலாகவும், ஒரு கல்வி பேராசானின் குரலாகவும் படுகின்றது.  இது  போன்ற குரல்கள் ஒரு பெரும் வரலாற்றின் முதல் எழுத்தாய் கூட இருந்திருக்க வாய்ப்புண்டு.  இவைகள் மந்திரங்களை முன் வைக்கவில்லை, பெரும் தத்துவங்களை குறுக்கி விதையாய் மாற்றவில்லை, சிந்தனையை வெறும் வழிபாடாக மாற்றவில்லை. இந்த வகை சிந்தனைகள்  உற்பத்தி சாதனங்களை மாற்றும் வழி தேடும் சாத்தியமுடையது என படுகின்றது. இவையும் இந்து வாழும் முறையின்  ஒரு பகுதிதான். பின்னர் இது போன்ற சமூக மாற்ற சாத்தியங்கள் தொலைந்து  போயின. 
      
எளிய நம்பிக்கை வடிவான இந்து  வாழ்வின்  மீது பல்வேறு வைதீகம் முதற்கொண்டு  மூல நூல் அமைப்புகள் இயங்குகின்றன. வைதீகம் காலத்தே வெகு முன் தோன்றி  இந்து நம்பிக்கை வழி தொடர்பில் இருந்ததால் , வைதீக மதமும், இந்து வாழ்வு முறையும்  ஒரே போல் ஆயின.  இதில் பக்தி இயக்கத்தின் பங்கு மிக பெரியது. இந்து வாழ்வு முறையின் பன்மை தன்மையை வைதீகமும் முழுதும் உண்டு செரிக்கவில்லை. அதுவும் துவக்கத்தில்  தன்னை செல்வத்தோடும், அதிகாரத்தோடும் தொடபுடைய இடங்களோடு நிறுத்தி கொண்டது.  தற்சமயம் வைதீகம் தன்னை இந்து மதமாய் அறிவித்து கொண்டு வாழ்வு முறையை மதமாய் மாற்றி கொண்டு வருகின்றது என்று நான் நினைக்கின்றேன்.    இந்த இடம் இன்னும் எனக்கு தெளிவாகவில்லை.

வைதீகமே இந்து வாழ்வு முறை எனவும், வேதமே அதன் முழு முதல் நூலெனவும் ஒப்பவில்லை. வைதீகம் மதம், இந்து என்பது ஒரு எளிய நம்பிக்கை சார்ந்த வழிபாடுடைய வாழும் முறை. பெளத்த ,சமண, ஆசிவகம் போல வைதீகம் இந்த வாழும் முறையின் உள்ளே 
தோன்றி மதமாக வளர்ந்திருக்கலாம். இன்று அது ஊடு பயிராக முளைத்து ஒட்டு பயிராக மாறி இருக்கலாம், ஆனால்  அதுவேதான் இந்து மதம் என சொல்ல கூடாதென படுகின்றது.  

 வேதம் என்பது வைதிக மரபின் சுருதி. ஆனால்  வைதிக மதம் அதை சுவீகாரம் செய்து சுருதியாகியது என புரிந்து கொள்ளலாமா? இல்லையென்றால் இரண்டாயிரம் ஆண்டு அறிவு தொகுப்பாக கருதப்படும் வேதம் என்பது ஒரு குறிப்பிட்ட மரபினரால் மட்டுமே உருவாக்க பட்டது என ஆகும். அப்படி என்றால் இரண்டாயிரம்  ஆண்டுகள் இந்த மண்ணில் வேறு எந்த அறிவு வடிவமும் இருக்கவில்லை, மற்ற  எந்த பழங்குடி மரபும்  அறிவை  தொகுக்கவில்லை என கொள்ளலாமா?



ஐரோப்பிய காலனிய ஆதிக்கம மக்களிடையே ஒரு வெளிப்படையான தகவல் தொடர்பினை சாத்திய படுத்தியது. தகவல் மிக முக்கியமானது, வலிமையானது. தகவல்கள் ஒரு தனி மனிதனால் எவ்வாறு உள்வாங்க படுகின்றது, ஒரு சமூகத்தினால் எவ்வாறு உள்வாங்க படுகின்றது என்பது வரலாற்றின்  பக்கங்களை மிக வேகமாக புரட்ட கூடியது. அதை குறைத்து மதிப்பிட கூடாது. 
விழிப்புணர்வின் முதல் புள்ளி தகவலே என எனக்கு படுகின்றது. தகவல் சமூக  மனதினை புரிதல் ,அறிதல் என தளங்களுக்கு  நகர்த்தும் சாத்தியம் உடையது. நான் முன்பு வைத்த எளிய இந்து வாழும் முறையில் இருந்த மக்கள் முதலில் தகவல்களின் காரணமாய் தங்களை ஒரு பெரும் உலகின் பகுதியென உணர்கிறார்கள், தங்களை போன்ற மனிதர்கள் பிற இடங்களில் வாழும் முறையினையும், அவர்களது தொழிலையும்  கற்கிறார்கள். இந்த இடம் புரிதல் இடம் என கொள்ளலாம். 
இவர்களின் இந்த விழிப்புணர்வினை எதிர்த்து குரல் வருகின்றது.  இந்த புள்ளியில் தங்கள் உரிமையினை, தங்களது உணர்ச்சியினை, வலிமையினை உணரும் சமூகம் தனது வழியில் வரும் தடைகளோடு மோதி உடைகின்றது. மோதல் நிகழும்  முறையோ, அதன் ஒழுங்கோ எல்லா வழியிலும இருக்க சாத்தியம்.  
தீண்டாமை ஒழிப்பு யாரால் வெளிப்படையாக எதிர்க்க பட்டது, ஆலய பிரவேசம் யாரால் வெளிப்படையாக எதிர்க்க பட்டது , சதி ஒழிப்பு யாரால் எதிர்க்க பட்டது , இட ஒதுக்கிடு யாரால் எதிர்க்க பட்டது, பகுதி நேர கல்வி/ குல கல்வி யாரால் முன் வைக்க பட்டது என்றுதான் சமுதாயம் பார்த்து இருக்கின்றது. இது நிகழும் நேரம் வரலாறு கல்வியாக பட்டு முறையாக பயில படாத காலம் என்பதை கணக்கில் கொள்ளுதல் வேண்டும், இந்த இடத்தில பல வகை பிரசாரங்களும் , வரலாற்று உருவாக்கங்களும் சாத்தியம். அதுவே நிகழ்ந்தது.  இந்த வழியில் யோசித்து பார்த்து என்னை  தெளிவு படுத்தி கொள்ள முடியும் என நினைகின்றேன். சரியாக இன்னும் விரிவு கிடைக்கவில்லை.

No comments: