Wednesday, May 30, 2012

எனது புரிதல்

அடுக்கு நிலை சாதிய அமைப்பின் பிரச்சனைகள்  , சாதிய அமைப்பினை நோக்கிய  எதிர்ப்பு  என்பது பலராலும் ஏற்றுக் கொள்ள பட்டது.  சாதிய எதிர்ப்பு என்பது  இரண்டு தளங்களில் நிகழலாம். 

1) இருக்கும் அமைப்பினை நொறுக்கி தள்ள விழைவது.
2) மற்றோன்று இந்த அமைப்பினை உள் நோக்கி  பார்த்து ஒரு அடுக்குகளின் நடுவில் உரையாடலை உண்டாக்குவது, அடுக்குகளின் மனசாட்சியினை நோக்கி தொடர்ந்து பிரச்சார ரீதியில் வைப்பது.
கால கட்டம்
---------------------

இந்த இரண்டினையும் பார்க்கும் பொழுது  இவை நிலவிய கால கட்டம் கணக்கில் கொள்ளபடல் வேண்டும். வர்ணாசிரமம் நிலை சக்திகளால் ஆதியில் முன் எடுக்க பட்டது என உருவகம் செய்ய படுகின்றது. அது முழு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. நிலை சக்திகளாய் அறியப்படும் சமூக குழுக்கள் அற்ற கிராமிய அமைப்பும் கடுமையான அடக்கு முறை சாதிய முறை உடையதாகவே இருக்கின்றது. இங்கு சாதிய அமைப்பு உற்பத்தி சார்ந்ததாய் உள்ளது. நவீன அறிவியலும் அதை சார்ந்த புதிய உற்பத்தி கூறுகளும் , மாற்று தொழில் அமைப்புகளும் இல்லாத நிலையில் உணவு , உடை , கட்டுமானம சார்ந்த ஒரு எளிய சுய சார்புள்ள அமைப்பானது கிராமமாக உருவெடுக்கின்றது. புதிய உற்பத்தி கருவிகளும் , தொழில்களும் தொடர்ச்சியாக நெடுங்காலம் இல்லாத காரணத்தினால் இந்த எளிய அமைப்பு இறுகி போகின்றது. அது தனது உற்பத்தி கூறுகளில் கருணையை கட்ட மறுக்கின்றது.


உயிரியின் தகவமைப்பு கூறு போல , ஒரு சமூக மன நிலையின் தகவமைப்பு கூறு என்று ஒன்று உள்ளது. உயிரியல் சூழலில் ஏற்படும் மாறுதல்கள் உயிரின மரபணுவோடு மோதி அதில் மாற்றதினை கட்டாயாய படுத்துகின்றன. அது இல்லாத பொழுது அந்த உயிரினம் அதை நிலையில் தங்கி போகிறது. அதே போல ஒரு சமூகம் அதன் பொருளியல் உற்பத்தி கூறுகளில் மாற்றங்கள் இல்லாமல் போகையில் ஒரு எளிமை படுத்த பட்ட அமைப்பில் தங்கி போகிறது. இந்த எளிய அமைப்பானது பின்பு சிறு கிராமம் ,  நகரம் , அரசு என விரிதல் கொண்டு  நகருகின்றது. ஆனாலும் விரிதலிலும் அதன் உற்பத்தி முறைகள் மாறுவதில்லை. ஆகையால் அதிகார அமைப்புகள் தங்களை மேலும் கீழும் அடுக்கில் நகர்த்தும் போதும் அடிப்படையான அடுக்கு முறையினை தளர்த்த முயல்வதில்லை.

இந்த அதிகார அமைப்பின் வெளியே ஒரு நிலையான இடம் தேடி சில சமூகங்கள் நகரும் பொழுது அவை நிலை சக்தி வடிவம் கொள்கிரன. இந்த நிலையான இடம் நிறுவ ஆதி தேடலின் தொடர்ச்சியான கடவுள் வடிவம் பயன் படுத்த பட்டது. கடவுள் கோட்பாடு அதிகார அமைப்பு தாண்டி வலிமையானது. உற்பத்தி கூறுகளோடு தொடர்பு அற்றது. புற கூறுகள் தாண்டி அக நிலைபாட்டினை தொடுவது. அதில் முன்னோடியாக நிறுவிகொள்வதன் மூலம் இந்த அடுக்கின் வெளிபுறம் சென்று விடலாம். அடுக்கின் மேல் கீழ் நகர்வின் விசையை தாண்டி சென்று விடலாம். அடுக்கின் வெளியில் நகர்ந்த குழுக்கள் தங்களை நிறுவனபடுத்தி கொள்ள மடாலயங்கள் , ஆதீனங்கள் என நகர்ந்தன.
நிறுவன படுத்தபட்ட எந்த அமைப்பும் தனது சமூக பொருளாதார் மதிப்பினை நிலை நாட்ட அகல படுத்த பிரச்சார உத்திகளை கையாளும். இந்த வகை பிரசாரங்கள் ஒரு அரசியல் செயல்பாடே. ஆழங்களை அதிகார சக்திகளும் , அகலம் செய்தலை நிலை சக்திகளும் முன் எடுத்தன. விழிப்புணர்வு  கொண்டு இவ்வகை இயங்கு தன்மை கொண்ட அதிகார, நிலை சக்தி அமைப்புகளை வன்மையாக எதிர்த்து கிளம்பும் தனி நபர்கள் நிறுவனமாக்க பட்ட நிலை சக்தி அமைபுகளால் எளிதில் உளவாங்கபடுவர், உற்பத்தி சமூகம் அதன் உற்பத்தியின் கூறுகளை பாதிக்காத எந்த செயலையும் பெரிதாய் எடுக்கும் மன நிலை கொள்வதில்லை.  

           
இப்படி நிலைபாடு கொண்ட ஒரு சூழலில் ஒரு காலனி ஆதிக்கம் இங்கு நுழைகிறது. காலனி ஆதிக்க சக்தி நவீன அறிவியல் துணை  உள்ளது. அந்த அறிவியலின் துணை கொண்டு தன்னை வளப்படுத்தி கொள்ள  சுரண்டல் நிகழ்த்த நில உடமை சமூகத்தின் மீது ஒரு ஒருங்கினைக்கபட்ட நிரவாக அமைப்பை கொண்டு வர முயல்கிறது.  ஆனால் காலனி ஆதிக்கம் இந்த நில உடமை சமூகம் கண்டு ரத்த கண்ணீர் எல்லாம் சிந்தி சீர்த்திருத்தம் செய்யும் நோக்கில் வந்திருக்காது. மூலதனம் திரட்டல், தன்னுடைய உற்பத்தி கூறுகளை விரிவாக்குதல் போன்ற எண்ணங்களே காலனி ஆதிக்கத்தின்  நோக்கமாக இருந்திருக்க முடியும்.

காலனி  ஆதிக்க  வரி வசூல் சமூகத்தின் மேல் பகுதிகளிலே முதலில் நடந்தது, மன்னர் அமைப்பு , சமஸ்தானம் போன்ற நிலைகளை இந்த வகையில் சொல்லலாம். ஆனால் சுரண்டல் வலிமையானது, அதை இன்னமும் வலிவு படுத்த வரி வசூல் அதிகார அடுக்கின் உள்ளே நகருகின்றது. உள்ளே நகரும் இந்த அமைப்பு அடுக்கு நிலை நில உடமை சமுகதினை வரி வசூலுக்காக  அளவிட துவங்கியது, அளவுகளை நிர்வாக அமைப்பின் ஒரு பகுதியாக ஆவண படுத்த ஆரம்பித்தன. காலனி ஆதிக்கம் உருவாக்கிய வரி வசூல் துறை , ரயில்வே , தபால் துறை , குமாஸ்தா கல்வி  ,அதனை சார்ந்த துணை தொழில் அமைப்புகள் போன்றவை அதனுடைய சுரண்டலின் கருவிகளாகவே உள்ளே வந்தன.  இந்த வகை  நிர்வாக அமைப்பு  நாடு முழுவதும் ஏறத்தாழ ஒரே கால .கட்டத்தில் நடைமுறை படுத்த பட்டு கொண்டிருந்தது. 

நிலை சக்திகளும், அதிகார அமைப்புகளும் இந்த மாற்றதினை வழக்கம் போல உள்ளிலுத்து தன்னில் ஒரு பகுதியாய் மாற்ற தங்களுக்கு உரிய வழியில்  பெரிதும் முயன்றன. அடுக்கு அமைப்பின் வெளியில் இருந்த நிலை சமூகம் அதிகார அமைப்பினை விட தன்னை விரைவாக தகவவமைது கொண்டது. ஆனால் புதிய காலனி ஆதிக்க நிர்வாக அமைப்பின் விரிவு மிக வலுவாய் இருந்ததாலும், அதன் விட்டம் மிக பெரியதாக இருந்ததாலும் முழுக்க உள் எடுத்து செரிக்க முடியவில்லை. புதிய காலனி ஆதிக்க  நிர்வாக அமைப்பு மெல்ல நில உடமை அதிகார அமைப்பினை செயல் இழக்க செய்து அதன் மாற்றாய் உருவெடுக்க ஆரம்பித்தது. அதன்  வேர்கள்  அடுக்கின் பல நிலைகளில் பரவலாக சென்றது, ஒரே நேரத்தில் வேறு பட்ட சமூகங்களை  குமாஸ்தாகளாக மாற்றியது.

இந்த கால கட்டத்தில் காலனி ஆதிக்க நிர்வாகத்துக்கு இணையாக ஒரு அரசியல் இயக்கம் வெளியில் தோன்றி இயங்க ஆரம்பித்தது. இந்த அரசியல் இயக்கம் மன்னர்களை , பண்ணையார்களை , ஆசாரவாதிகளை மட்டுமே பங்கேடுக்க கோரவில்லை, அதை தாண்டியும் பங்கெடுப்பு கோரியது. அந்த அரசியல் அமைப்பின் குறியீடாய் இருந்தவர் ஒரு மன்னர் இல்லை , மதவாதி இல்லை , பண்ணையார் இல்லை, அவர் ஒரு வணிக சமூகம் சார்ந்தவர், சாதாரண பின்புலம் கொண்டவராய் இருந்தார. நவீன அறிவியல் காரணமாய் முளைவிட தொடங்கிய அச்சு ஊடகம் , புகைவண்டி தடங்கள், மக்களாட்சி தத்துவங்கள் போன்றவற்றை அவர் தனது  சித்தாந்தம் பரப்பும் கருவிகளாய் பயனபடுத்தினார். அந்த கருவிகள் குறித்த அவரது அறிவு இங்கு குறிப்பிடதக்கது. இந்த கருவிகள் அவராய் நேரடியாக அடுக்கு நிலையின் பல படிகளை நோக்கி  உரையாடலை கொண்டு செல்லவைத்தது. இந்த சூழலில் அந்த தலைமையை ஒத்த சாத்வீக வழி தலைமைகள் தொடர்ந்து முன் வந்தன. லட்சியவாத பார்வை கொண்ட இந்த அரசியல் செயல்பட்டாளர்கள்  தங்களுக்குள்  எதிர்தும், ஆதரித்தும் பல நிலைகளில் இருந்தாலும் மக்கள்  பிரதிநிதித்துவ அரசியல் வழி முறைகளை நம்பினர். புதிதாக வந்த மாற்று பொருளாதார் வழி முறைகளும் , பிரதிநிதித்துவ அரசியல் கோட்பாடும்தான் அடுக்கு நிலை சாதிய அமைப்பினை களைய வேண்டிய கட்டாய சூழ்நிலையை விதையாய் விதைத்தன.     

நொறுக்கி தள்ளுதல் 
---------------------
ஒரு அமைப்பின் வீழ்ச்சியை அதன் உச்சியிலும் ,வெளியிலும் இருப்பவர்கள் அதன் அடியில் இருப்பவர்களை விட விரைவில் உணர முடியும். அவர்களை ஆளவைத்த அரசியல் கண்முன்னே காலாவதியாவதை அதிகார அடுக்கிலும், நிலை சக்தி அமைபினரும்
முதலில் அறிந்தனர். இந்த சமூக கூட்டத்தில் மனசாட்சி விழிக்க பெற்றவர் சாதிய அமைப்பின் வீழ்ச்சியை வேண்டி நின்றனா். அதே நேரம் இந்த அடுக்கு அமைப்பின் உச்ச கட்ட நுகர்வார்களாய் இருந்தவர்கள் புதிய மாற்றங்களை நோக்கிய தங்கள்  எதிர்பின் குரலை 
மிக கடுமையான முறையில் வைத்தனர்.

முதலில் இந்த மாறுதலை ஊகித்த பின்னர் நிலை சக்தி சமூகங்கள்  புதிய அதிகாரதினை தன் நிறுவனங்கள் வாயிலாக எதிர்க்கும் அதே நேரத்தில்  நிலை சக்தி இடத்தில்  இருந்து புதிய அதிகார நிர்வாகத்தினை கைபற்றுதல் நோக்கியும் சென்று இருக்கிறார்கள்.
இது பழைய அதிகாரவாதிகளால் எதிர் கொள்ள படுகின்றது. இந்த அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிலை சக்தியின் ஒரு பிரிவினர் கருத்தியல் வன்முறையில் மதத்தின் ஆச்சாரவாததினை முன் வைத்து இயங்கி இருக்கலாம்.

கருத்தியல் வன்முறை அடுக்கு முறையின் அழிவினை தள்ளி போட தனது கடைசி யுத்ததில் இருந்தது, ஊழி பெருங்காற்றாய் தாக்கியது. அந்த காற்றுக்கு  எதிரான விசையாய் உருவான கோபம் முறையான  சிந்தாந்த வடிவம் கொண்டு பகுத்தறிவு தளத்தில் நகராமல் ஒரு பாவனையாக   மாறி  தங்கி விட்டது.   கருத்தியல் வன்முறையினை ஒட்டி வந்த  மதமும் , மதம் சார்ந்த கடவுளும் வர்ண எதிர்பின் எதிரிகளாய் ஆக்கபட்டு , கடுமையாக எதிர்க்க பட்டன. எப்போதும் வெறுப்பு, கோபம சார்ந்த எதிர்ப்பு நிலை என்பது எளிய சிந்தனை நிலைப்பாடு , அது காரணம் தேடாது, தெளிவு நிலையை அடைய விடாது. தெளிவு இல்லாமை பகுத்தறிவை அடைய விடாது. 

இவ்வகை எதிர்ப்பின் பின்னால் ஒரு நியாயம் இருந்தாலும் ஒரு உணர்ச்சி நிலை செயல்பாடு என்றே நினைக்கிறேன். மதமும், கடவுளும் அகம் சார்ந்தது. ஆதி தேடலின் ஒரு பகுதி. கையறு நிலையில் சாதாரண மனிதனுக்கு கை கொடுப்பது. கடவுள் மற்றும்  
மதங்கள் அற்ற பெருவெளியில் நின்று  எது வரினும் ஊழ் எனும் எண்ணாத   நிலை நுகர்வு நிலையில்  உள்ள  அன்றாட  மனிதருக்கு சாத்தியம் இல்லை என்று நான் நினைக்கின்றேன். நுகர்வின் பிடிகளை தாண்டிய மனிதருக்கே அது சாத்தியம். எனவே இந்த கடவுள்
மற்றும் மத எதிர்ப்பு என திசை மாறிபோன சாதிய  எதிர்ப்பு உண்மையில் சாதியின் தாக்கத்தை உடைத்து எறியவில்லை. மாறாக ஒரு மேல் மட்ட அளவில் சிறிய சலனதை உண்டு பண்ணியது மட்டுமே உண்மை. இந்த கோபமும் ஆவேசமும் முழு  உண்மையாக இருப்பின் நாம் இன்று காணும் மணமகன், மணமகள் தேவை விளம்பரங்களில் சாதியே இருந்திருக்க கூடாது.  ஆனால் அப்படி இல்லாமல் பெரும்பாலான  தொழில் இடங்களான மளிகை கடைகளில், நகை கடைகளில், மருத்துவமனைகளில்  சாதி சார்ந்த தொழிலாளர் மட்டுமே இருப்பதை காண்கிறோம். சாதி சார்ந்த போஸ்டர்கள் கூச்சமின்றி  நகரங்களில் இருந்து சிறு கிராமம் வரை ஓட்டபடுகின்றது , அதை கண்டு மனம் அசூயை கொள்வதிலை. தனி சுடுகாடும் , இரட்டை டம்ளரும் இன்னமும் உண்டு .

முரட்டு எதிர்ப்பு ஜனநாயக சாத்தியங்களை மக்களுக்கு கொண்டு செல்லவில்லை. அவரகளுக்கு குடிமை சமூகம் குறித்த விழிப்பை தரவில்லை. ஒரு அரசியல் கோட்பாட்டினை உருவாகவில்லை.  மீண்டும் பண்ணையார் தனமும், குல வழி பதவி  முறையும் 
முளைக்கும் பொழுது அதை சிந்தனை வாயிலாக எதிர் கொள்ள கருவிகள் தரவில்லை, இயற்கை ஆதாரங்கள், நுகர்வு, நுகர்வின்  எல்லைகள் போன்றவற்றின்  அவசியம் பகுத்தறிவாய் முன் வைக்க படவில்லை. பாவனையான கோபம் மட்டும் மிச்சமாகின்றது. 
இந்த வகை எதிர்ப்பை முன் வைத்த அரசியல் தலைவர்களும் இப்படி இந்த எதிர்ப்பு மனநிலை இப்படி மாறிவிடுமென எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் எனவே நினைக்கின்றேன். அவர்கள் நோக்கமும் ஒரு பெரிய சமத்துவ சமுதாயமாகவே இருந்திருக்கும். தார்மீக கோபம் முன் வைத்து அக வையமான சூழலில் சாதிய அமைபிணை உடைக்க நினைத்து இருக்கலாம். மனிதரின் அகத்தினை கோபத்தின் வழி தீண்டுதல்,அது தார்மீகமான கோபமாக இருந்தாலும் கூட  அத்தனை சுலபம் இல்லை.

உரையாடுதல்  
--------------------
மற்றொரு முறையானது சாதியதுக்கு நிலை சக்தியையோ, அதிகார சக்தியையோ மட்டும் பொறுப்பு என சொல்வதில்லை. அது சாதி அடுக்கினை சமூக பரிணாமதின் ஒரு பகுதியாய் காண்கிறது. அடுக்கு முறைக்கு அனைவருமே பொறுப்பு, இந்த அடுக்கு பல தளங்களினை கொண்டது. ஒரு அடுக்கின் கால் மற்றொரு அடுக்கின் தலை மேல் உள்ளது என உணர்வதன் மூலம் அடுக்கினை கலைக்க சொல்கின்றது. மனித சமத்துவம் வலியுறுத்த படுகின்றது. கூட்டாய் உழைப்பதான் மூலம் , பிரசாரம் செய்வதன் மூலம் இந்த அடுக்கின் மனசாட்சினை எழுப்பி மேலிருந்து கீழ் நிற்பதற்க்கு பதிலாய் கை கோர்த்து சமமாய் நிர்க்கலாம் என சொல்கின்றது. இந்த முறை இரண்டு வகையாய் சமூகதினை பிரிகின்றது. மனசாட்சி விழிப்பு பெற்றோர், விழிப்பு நிலை இல்லாதவர் என இரு நிலை மட்டும் முன் வைக்க படுகின்றது. விழிபடைந்தவர் சமூகத்தின் எந்த அடுக்கிலிருந்தும் வந்திருக்கலாம், அல்லது அடுக்கின் வெளி நிற்க்கும் நிலை சக்தி இடத்திலிருந்தும் வந்திருக்கலாம். அது முக்கியம் இல்லை. நிலை சக்தி என சில சமூகங்கள் இருந்ததை அகற்றி அந்த இடதில் ஒரு கூட்டு மக்கள்  பிரதிநிதித்துவ அமைப்பை வைக்க விழைந்தது அதன் விதிகளாய் அரசியல் அமைப்பும் , அந்த அரசியல் அமைப்பினை சார்ந்த நீதி மற்றும் காவல் அமைப்பும் முக்கியம் என்பதும் வலியுறுத்த பட்டது.
சமூகம் இத்தனை சிக்கலான அமைப்பினை கூட்டாகதான் உருவாக்கி இருக்க முடியும், எனவே கூட்டாய் உழைத்து வெளிவர வேண்டுமென அது கோரியது. விவாதம், உரையாடல் என நடைமுறைக்கு சாத்தியமான வழிகளை முன் வைத்தது. அந்த வழிகளை வலியுறுத்தி சாத்வீக வழி போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டுமென சொன்னது. சமத்துவத்துக்காக போராடுவது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்றது. உழைப்பை சுரண்டல் , உணர்வை சுரண்டல் என இருக்கும்  அடுக்கின் செயல் பட்டினை எதிர்த்தது , தங்கள் தலை மேலிருக்கும் காலினை அகற்றுதல் அடுக்கின் ஒவ்வொரு உறுப்பின் கடமை என குரல் முன் வைக்க பட்டது. இந்த சாத்வீக வழி போராட்டங்களும் ஓரளவு பயன் தருமே. ஆனால் இந்த வகை போராட்டங்கள் லட்சியவாதங்களை சார்ந்தது, அந்த வகை மனிதர்கள் அரிது. லட்சியவாதம் இருப்பினும் மக்கள் நலம் பேணும் போராட்ட குணமுள்ள ஆளுமையாக இருக்க வேண்டும். அது அதனினும் அரிது.  எனவே  இந்த வகை போராட்டங்கள் துரித ரீதியில் பரவாது. இந்த வகை போராட்டங்களுக்கு குறைந்த பட்ச நேர்மை கொண்ட காவலமைப்பும், நீதி துறையும் அவசியம் அல்லது குறைந்த பட்ச மனசாட்சி உடைய மாற்று தரப்பு தேவை,  இந்த முறை தற்போதும் நடை முறையில் உள்ளது.  எடுத்துக்காட்டாய் தற்சமயம் நடந்த  கோவில் நுழைவு , தண்ணீர் சண்டைகள் மற்ற உரிமை போராட்டங்கள் இந்த வகையிலயே சமரச படுத்த படுகின்றன.
           
இந்த சாத்வீக வழி முன் வைத்தவர் நுகர்வினை எதிர்த்தார். கிராம அமைப்பினை ஆதரித்தார். கிராம அமைப்பானது நூற்றாண்டு கால சாதியதின் மீது கட்ட பட்டது. அந்த கிராம அமைப்பினை பேணி அதே நேரம் சாதியம் பயனற்று போக செய்தல் அத்தனை நடைமுறை  இல்லை. சாத்வீக வழி முன் வைத்த தன்னிறைவு பெற்ற கிராமிய பொருளாதார்ம் என்பது லட்சியவாதம் மேல் உள்ளது , நுகர்வின்  மீது இல்லை எனவே கிராமியம் என்பது  மீண்டும் சாதிய அமைப்பாக மாற நிறைய சாத்தியம் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

இன்றைய நிலை  
---------------------.----------------------------------
சாதிய அமைப்பு ஒரு உற்பத்தி சார்ந்த பொருளாதார அமைப்பு. புறவய காரணிகளால் தூண்ட பட்டு நீண்ட கால சமூக பயன் பாட்டின் காலமாக  அகவய நிலை அடைந்தது. அதனால் இதனை எதிர்க்கும் போக்கில் முதலில் புறவய காரணிகளை மாற்றுதல் அவசியம். இந்த மாற்றங்கள் நடைமுறையாக்க பட்டு சமூக பழக்கமாக மாற்ற படும் பொழுது அகத்தினை மாற்ற முடியும்.
இட ஒதுக்கீடு, இலவச கல்வி , நவீன குடிமை சமூகம் குறித்த பிரசாரம், நுகர்வு  குறித்த விழிப்பு, நவீன அறிவியல் , அறிவியல் வழி வரும் வேலை வாய்ப்பு, அதன் அடுத்த கட்ட்மான புதிய தொழில் முதலீடுகள் போன்ற கருவிகள் வழி  சாதியத்தின் அடுக்கு முறை அமைப்பினை பயனற்று போக செய்ய முடியும். சாதியின் பெயரால் பிளவுண்டு கிடப்பது லாபமாக இல்லாமல் போகும் பொழுது சமூகம் அதனை தாண்டி செல்லும். சாதி பல நூறு ஆண்டுகளாக சமூக மனதில் கட்ட பட்ட ஒரு பயிற்சி, அதனை பிரிவு, மற்றும் அடக்கு முறை சக்தி எனும் நிலை பாட்டிலிருந்து நகர்த்தி ஒரு பயனற்ற பழைய சமூக செயல் எனும் இடத்துக்கு கொண்டு செல்லலாம்.

நமக்கு கிடைத்த சில லட்சியவாத தலைவர்கள் இந்த நவீன கருவிகளில் சிலவற்றை நடை முறை சாத்தியம் செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். அந்த நடைமுறை படுத்த பட்ட கருவிகளின் பலன் இப்போது வர தொடங்கி உள்ளது. நுகர்வு மட்டும் மேலோங்கிய மன நிலையில் ஒரு சினிமா அல்லது கிரிக்கெட்  பார்ப்பது போல சமயத்தில் வரலாற்றை காண்கிறோம். ஆரம்பித்து , மட்டையடி அடித்து மிக விரைவில் ஒரு சுகமான முடிவுக்கு வர வேண்டுமென விளைகிறோம். நிஜ வாழ்வில் பெரும்பாலும் சாமான்யர் நடுவே  வில்லன்கள் கிடையாது, போட்டி அணிகள் கிடையாது. மாற்று தரப்பு மட்டுமே உண்டு. அவர்களும் மனிதர்களே. நமக்கு உள்ளது போல உணர்ச்சியும், உரிமையும் அவருக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். அதை நேரத்தில் அவருக்கு உள்ளது போல நமக்கும் உணர்வும் உரிமையும் உள்ளதென்பதில் தெளிவாய் இருக்க வேண்டும்.மாற்று கருதாளரிடமும்  சமூக பங்கினை கோருவோம். நமது சமூக பங்கினை முன் வைப்போம. சமூக பங்கு என்பது சமூக சேவை என்பது மட்டும் அல்ல, வெறுப்பும், திரிப்பும் மட்டும் அன்றி உரையாடல் , மக்களாட்சி விழுமியங்கள் வழி  குடி மகனாய் இருக்க முயல்வதும் சமூக பங்கேனவே நினைக்கிறேன்.
    
இந்த நவீன கருவிகள் உண்டாக்கும் மாற்றங்கள் மெல்ல  நடந்து கொண்டுதான் இருக்கின்றது. போக்குவரத்து டிக்கெட் வாங்கும் பொழுது  சாதியின் பெயரால் வாங்குவதில்லை , வசதியின் பெயரால் வாங்குகிறோம். உடன் பயனிபவர் சாதி பார்ப்பதில்லை,நமது வசதியை பார்க்கின்றோம் திருப்பதியிலும், பழனியிலும் கூட்டத்தில் முந்தும் பொது முன்னாலும், பின்னாலும் இருப்பது எந்த சாதி என சலனம் கொள்வதில்லை..இவையெல்லாம்  ஒரு சிறிய உதாரணமே. இது போன்ற பல சிறு  செயல்கள்  சாதியை தாண்டி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நுகர்வின் கனவுகள் மிக எளிதில் சாதியை தாண்டும் தன்மை கொள்ளும்.ஆனால்  நுகர்வின் பேராசைக்கும் ஒரு கடிவாளம் வேண்டும். அது வேறு பிரச்னை  
      
மானுட இணைப்புக்க்கான சாத்தியங்களை நவீன அறிவியல் மற்றும் நுகர்வு சார்ந்த பொருளாதார சித்தாந்தங்களே நிருவமுடியும் . நுகர்வு வெறி , நுகர்வு விழிப்பு நிலைக்கு மாறும் பொழுது இந்த வகை சித்தாந்தம் சமநிலை படும்.  அந்த இடத்துக்கு செல்வதான பாதை காந்திய வகை சார்ந்த சமரச மற்றும் உரையாடல் சார்ந்தே அமையும் என நினைக்கிறேன்.

No comments: