Sunday, October 8, 2006

Thank You For Smoking- திரை விமர்சனம்

கருத்தாக்கங்கள் சந்தை மயமாக்கப்பட்டு, அலங்காரமான வார்த்தைகளில் வாதங்களை பொட்டலம் கட்டி விற்கும் மனிதனை பற்றி சினிமா இது.

அமெரிக்காவில் லாபி செய்வது என்பது ஒரு தொழில். உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் அதற்கு அரசின் உதவி வேண்டுமென்றால் இவர்கள்தான் அதற்கான இடை மனிதர்கள். பல்வேறு பட்ட தொழில்கள், அமைப்புகள், நாடுகள் இவர்களை தங்கள் பிரதிநிதிகளாக வாடகைக்கு எடுத்து அரசை தங்கள் பக்கம் திருப்ப பயன்படுத்துகிறன. கிட்டதட்ட இந்தியன் படத்தில் கமல் போக்குவரத்து அலுவலகம் முன் பண்ணும் வேலை. ஆனால் சட்டபூர்வமாக அங்கிகரிப்பட்ட வேலை,

படத்தின் நாயகன் உலகத்தில் சரியானது, தவறானது என்று எதுவும் இல்லை. விஷயங்கள் அவை சொல்லப்படும் விதத்தில் சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம் என்பது அவனது முடிவு.

சிகரெட் தொழில் அமெரிக்காவில் பல்வேறு தடைகள், வழக்குகள் மத்தியில் இருக்கிறது. கதை நாயகன் அந்த தொழிலை பற்றிய கருத்தாங்கங்களை மக்களுக்கு விற்பவன்.

சிகரெட் வேண்டும் என்ற வார்த்தைகளை தவிர்த்து, மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்ற உரிமை வேண்டும் என்பதே அவனது வாதமாக வைக்கிறான். தனி மனிதனுக்கான நல்லது , கெட்டதுகளை முடிவு செய்யும் உரிமையை எந்த அரசோ,அமைப்போ தவறென வாதாட முடியாது. ஒரு நாளைக்கு அமெரிக்காவில் 1200 நபர்களை கொல்லும் ஒரு பொருளை எளிமையான ஒரு வாதம் கொண்டு அவனால் நியாயப்படுத்த முடிகிறது

படத்தில் அவனது நண்பர்களாக வருபவர்கள் இரண்டு நபர்கள். ஒருவர் ஆயுத விற்பனையாளர்களின் லாபியை சேர்ந்தவர், இன்னோருவர் மது விற்பனையாளர்களின் லாபியை சேர்ந்தவர். மூவரும் தங்களை மரண விற்பனையாளர்கள் என்று நகைச்சுவையாக அழைத்து கொள்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் நடக்கும் உணவருந்தும் இடத்திற்கான உரையாடல் மிக அழகாய் செல்கிறது. அவர்கள் உணவருந்தும் இடத்தின் பின்னே இருக்கும் ஒரு புகைப்படத்தில் அமெரிக்காவின் பெருமையை பறை சாற்றும் வாக்கியங்கள் இருப்பதில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.

கதாநாயகனின் மகன் தந்தையை கண்டு கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் இருப்பவராக காட்டப்படுகிறான்.அப்பாவின் அஸ்திரமான சொல்லும் விதத்தில் சொன்னால் எல்லா வாதங்களும் நியாங்களே என்பதை தன் அம்மாவுக்கே பயன் படுத்தி அவள் பலவீனத்தை முன்னகர்த்தி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள தயங்குவதில்லை.

மகனின் பாத்திரம் அப்பா தன் தொழிலில் மூழ்கி முத்தெடுக்கும்(!) போது சிறிது காற்றாய் இருந்து சுவாசிக்கவும் வைக்க உபயோகப் படுத்த படுகிறது.

நாகரிக உலகத்தில் திரைப்படங்களின் தாக்கமும் இந்த படத்தில் காட்டப்படுகிறது. திரைப்படங்களின் மூலம் சிகரெட் விளம்பரம் செய்ய லாஸ் ஏஞ்சலிஸ் போகும் நாயகன் தன்னை விட பெரிய வியாபார புலியை சந்திக்கும் இடங்கள் அருமை.

சிகரெட் தொழிலுக்கு எதிராய் போராடும் செனட்டர் படும் தடுமாற்றங்கள் நகைச்சுவையுடன் படம் முழுக்க வருகிறது. எண்ணங்கள் சிறந்ததாய் இருந்தால் மட்டும் போதாது, அதை மக்களிடம் கொண்டு செல்ல தெரிய வேண்டும் என்பது இந்த பாத்திரம் வழியாக காட்டப்படுகிறது. டிவி நிகழ்ச்சியில் ஓரு கேன்சர் நோயாளியை வைத்துக் கொண்டு சிகரெட்டின் தீமைகளை சொல்ல ஆசைப்படுவதும், அதை சரியாக சொல்ல முடியாமல் கதாநாயகனிடம் குட்டு படுவதுமான இடங்கள் இயக்குனரின் திறமையை காட்டுகிறது.

சிகரெட் குடித்து கேன்சர் வந்து கோர்ட்டுக்கு செல்லவிருக்கும் நோயாளியை கதாநாயகன் சுலபமாக கையாளுவான். யாருக்கு எது பலவீனமோ அதை கொண்டு அவன் பொருள் விற்பான்.

இந்த தொழில மனசாட்சிக்கு விரோதமாய் தோன்றாதா என யாராவது கேட்கும் போது சால்ஜாப்பு சொல்லுதலையையும் காட்டியிருப்பார்கள். அந்த சால்ஜாப்பு கதாநாயகன் தனக்கு சொல்லிக் கொள்வதல்ல, அடுத்தவருக்காக அவன் வைத்திருக்கும் பொட்டலத்தில் அதுவும் ஒரு ்பகுதி

பெண் பத்திரிக்கை நிருபருடன் ஏற்பட்ட தொடர்பினால் பழி ஏற்பட்டு பணி இழப்பதையும், பின் நடந்த சம்பவத்தை திரித்து பழியை தனக்கான விளம்பரமாக்குவதும் கதாநாயகனுக்கு லாவகமாய் வருகிறது.

இந்த படம் போதனைகளுக்கான படமல்ல. லாபி உலகின் நடப்புகளை நகைச்சுவையாக சித்தரிப்பது. ஆர்ப்பாட்டமான சண்டைகளோ, அதிரடி திருப்பங்களோ கிடையாது. ஆனால் அவசியம் பார்க்கலாம். அதற்கு முன் அமெரிக்க லாபி பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வார இறுதியில் இந்த படத்தை பார்த்தேன். மரியா பெல்லா, கேட்டி ஹோம்ஸ் ,வில்லியம் மேசி ஆகியோர் தெரிந்த முகங்கள். மரியா பெல்லாவை history of violence படத்தில் பார்த்து இருக்கிறேன். கேட்டி ஹோம்ஸ் batman returns-ல் வருவார். பட கதாநாயகன் ஏரான் ஹேக்ஹார்ட். பாத்திரமுணர்ந்து செய்திருக்கிறார். இயக்குனர் ஜேசன் ரிட்மேனின் திறமை படம் முழுதும் தெரிகிறது.

No comments: