Wednesday, August 30, 2006

இது இப்படிதான்

அது சோழத் தேசத்தின் தாசித் தெரு. தாசித் தெருவுக்கான பசியின் வலியில் சிலரும்,அது தீர்ந்த உச்சத்தில் சிலரும் உலவிக் கொண்டிருந்தனர். அலங்காரமான அர்த்தமற்ற சிரிப்பு சப்தங்கள் எங்குமிருந்தன. பல்லக்குகளும்,சிறு குதிரை வண்டிகளும் அங்காங்கே. சாதிக் குதிரைகள் லாயங்களிலும், பல்லக்குகள் வீட்டின் திண்ணைகளிலும் ஓய்வெடுக்க அதன் கூட வந்த வேலையாட்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தார்கள். சுடலையும் ,மூக்கனும் அதில் உண்டு. அவர்கள் பல்லக்கு தூக்கிகள்.சுடலை அண்மையில் வேலைக்கு வந்தவன்.மூக்கன் பல வருடமாக இதே ்வேலையில் இருக்கிறான்

"சுடலை வெய்யில் இன்னைக்கு ்கொஞ்சம் கடுமைதான்?"-மூக்கன்

"என்னைக்குதான் இது குறைவு.போத்திக்கு வரவர காலையிலியே இது தேவைப்படுது.ஆண்டவனை பார்த்தவுடன் அடுத்து இங்கு அம்மன் தரிசனந்தான்"-சுடலை

"இது யாருக்குதான் தேவையில்லை.சோழ ராஜனுக்கே தூக்கிட்டு இருக்கனும்னு நினைக்கற இரண்டு விஷயம் குறியும் அவன் கட்டுற கோபுரமுந்தான். வாழ்க்கையே கைப்பிடி யோனியிலும், இரண்டு கலசங்களிலும் முடிஞ்சி போய்டுது. ராஜா எவ்வழியோ, தேசமும் அவ்வழிதான். அது கிடக்கு. உங்கண்ணன் உன்னைய பத்தி பெருமையா சொன்னான். என் தம்பி பெரிய சாதிக்காரன் மாதிரி பேசறான்,கேட்டுகிட்டே இருந்தேனு. அப்படி என்னடா மூனு தைக்குள்ள கத்துக்கிட்ட? எங்க போன? என்ன பண்ணின?"-மூக்கன்

"வடக்க சாளுக்கிய ராஜா கட்டின கோவில் ஒன்னுல மர வேலைக்கு போயிருந்தேன். அப்ப ஔவைனு ஒரு பொண்ணோன்னு கொஞ்ச நாள் தங்கியிருந்துச்சு. சிறு வயசு.அப்படியே கருகருனு நம்ப முத்துமாரியம்மன் மாதிரி களையான முகம்.பேச்சுனா பேச்சு அப்படி ஒரு பேச்சு.பாட்டெல்லாம் பாடினா நாள் முழுதும் கேட்கலாம்.ராஜா அதனோட அறிவை பார்த்திட்டு விருந்தாளியா கூட்டி வந்திருந்தாரு. இந்த பொண்ணு அவரோட அரண்மனைல தங்காம எங்க கூட கோவில் ்வேலை பாக்கற இடத்தில்தான் இருந்துச்சு. இரவு நேரத்தில எங்க கூட கள்ளு குடிச்சிட்டு கதைகளாம் சொல்லும். சன்னதம் வந்த மாதிரி ஆவேசமா அந்த பொண்ணு பேசும் போது நம்மால கண்ணை நகர்த்த முடியாது. ஆகா என்ன வாழ்க்கை தெரியுமா அது. இருட்டில் இருந்தவனுக்கு வெளிச்சத்தை காட்டின மாரியாயி அந்த பொண்ணு. கோவில் முடிஞ்சு கருவறையில சாமி வைக்கயில கிளம்பிடிச்சு. அந்த பொண்ணு சொன்னத ஊருல சொல்லிக்கிட்டு இருந்தேன். அதான் அண்ணனுக்கு ்பெருமையா இருந்துச்சு"- சுடலை

"அது என்ன பேரு ஔவைனு. நம்ப சாதியா? இல்ல போத்தி சாதியா?"-மூக்கன்

"அதெல்லாம் கேட்கவே தோனலை.அந்த பொண்ணு ரெண்டே சாதிதான் இங்கனு சொல்லும். கொடுக்கறவன், வாங்கறவன். அவ்வளவுதான். காற்று மாதிரி வந்திட்டு அப்படியே போய்டிச்சு."-சுடலை

"இப்படி உளறிட்டு இருக்காதே. சாதியை பத்தி தப்பா பேசினா, போத்திக்கு பிடிக்காது."-மூக்கன்

"சரி சரி.பெருந்தனக்காரர் அறுப்பு நேரத்தில போத்திய பார்க்க வந்திருக்காரு. அதுவும் தாசி வீட்ல.அதிசயமா இருக்கு.அறுப்பு முடிஞ்சதும் தானே கோவிலுக்கு வரி வரும் "-சுடலை

"எல்லாம் உங்கண்ணாலதான் அவன் ஊர்ல இரண்டு மரக்கா நெல்லு கேட்டு பெருந்தனக்காரட்ட வம்பு பண்ணியிருக்கான் போல. நாடு சண்டைல
இருக்குது அது மட்டும் இல்லாம காவிரி கரை மூச்சூடும் ராசா கோவில் கட்டறாரு அதனால வரி கூட போய்டுத்து. நமக்கு குடும்பத்துக்கு மூனு மரக்கா கூலி இருந்தது, ஓரு மரக்கா ஆயிடுத்து. ஊர்ல அவன் பேச்சை கேட்டு நம்ப சாதியே வேலைக்கு போகாம முறுக்கிட்டு இருக்காம். இதெல்லாம் நல்லதில்லை"- மூக்கன்

"அண்ணன் சொல்லறது நியாயமாதான் படுது. அதுதான் ஊரே அவரு சொல்லுக்கு கட்டுப்பட்டு நிக்குது. ஒரு மரக்கா வச்சி எத்தனை பேர் சாப்பிடறது?"-சுடலை

"உன்னையும்,உங்கண்ண்னையும் அந்த மாரியாத்தாதான் திருத்தனும். போத்தி இருக்கையில இனி வாயே திறக்காதே"-மூக்கன்

பிறகு நெடுநேரம் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. மட்டு மரியாதை தெரியாதவனோடு பேசி ஆவதென்ன என மூக்கனுக்கு வருத்தமிருந்தது.

போத்தி வெளியே வந்தார். பெருந்தனக்காரரும் கூட இருந்தார். போத்தி கொஞ்சம் சிந்தனையிலிருந்தார். பெருந்தனக்காரர் சற்றுக் களைத்து வாயெல்லாம் பல்லாக இருந்தார். உள்ளுக்கு விருந்து இன்னைக்கு பெருந்தனக்காரருக்கு மட்டுந்தானென மூக்கன் நினைத்துக் கொண்டான். போத்தி எதையோ பெருந்தனக்காரரிடம் சொல்ல அவர் முகத்தில் பற்கள் இன்னமும் கூட தெரிந்தது. இருவரும் சுடலையை கைக் காட்டி ஏதோ பேசினர். மூக்கனுக்கு கவலையாயிற்று. போத்தி பல்லக்கில் ஏறி அமர்ந்தார்.சுடலையும், மூக்கனும் ஓடிப்போய் பல்லக்கை தூக்கினர். பெருந்தனக்காரர் உள்ளே போய் விட்டார். இன்னும் விருந்து ்பாக்கி இருந்தது போலும்.

வீடு வந்ததும் போத்தி பல்லக்கை விட்டு இறங்கினார்.

"சுடலை "- போத்தி கூப்பிட்டார்

சுடலை நெடுஞ்சாண் கடையாக காலில் விழுந்தான்.

"தெய்வமே சொல்லுங்க"- சுடலை

"தென்னாடுடைய சிவனே என் கனவிலே வந்து உங்க அண்ணனை பார்க்கனும்னு வர சொல்லியிருக்கான். நீ ஊருக்கு போய் உங்க குடியில எல்லாரையும் இங்கு கூட்டிட்டு வா"- போத்தி

"தெய்வமே நீங்க சொன்னா சரி. அந்த சிவன் கூப்பிட்டதா சொல்லி கூட்டிட்டு வரேன். தெய்வம் அனுமதி தாங்க"-சுடலை

"போய்ட்டு வா சுடலை. உன்னை மாதிரி சின்ன சாதிகாரவுங்களை தெய்வம் பாக்கனும்னு சொன்னதெல்லாம் அந்த பரமேஸ்வரனின் அருள். எல்லாம் நல்லப்படியா நடக்கும்"-போத்தி

சுடலையால் நம்பவே முடியவில்லை. மாடனையும்,வீரனையும் கும்பிடும் நம் குடிக்கு இப்படி ஒரு வரமாவென ஆச்சரியமா இருந்தது அவனுக்கு. அண்ணன் நந்தன் பற்றி போத்தியின் கனவில் ஆண்டவனே சொன்னதால் அவன் எவ்வளவு பாக்கியசாலியென மகிழ்ச்சியாய் இருந்தது.

சற்று நாளில் சுடலை, அவன் அண்ணன் நந்தன் மற்றும் அவன் குடியை சேர்ந்த நூறு பேரும் சிவலோக பதவி அடைந்தனர். சுடலையை யாரும் நியாபகம் வைத்திருக்கவில்லை.

No comments: