Sunday, August 27, 2006

சிருஷ்டி

ஹரிக்கேன் வந்து போன நியு ஆர்லியன்ஸின் அமைதியாய் தளமிருந்தது. நாப்பத்தி ஐந்து பேர் கொண்ட தளத்தில் அயற்ச்சி வேறு வேறு விகிதங்களில் நிறைந்திருந்தது.அது ஒரு உயிர் பொறியியல் ஆராய்ச்சி தளம். அதிக பட்ச எதிர்ப்பு சக்தியுள்ள ,நீட்டிக்கப்பட்ட ஆயுள் உள்ள செல்களை செயற்கையாய் தயாரிக்கும் வேலை அவர்களுடையது.சண்முகம் அதன் தலைமை விஞ்ஞானி. தளத்தின் இறுதியில் அவனது அறை. பல அடுக்கு கட்டத்தின் இருபதாவது தளம். உயிரியல் நிகழ்வுகளை கணித ரீதியாக ஆராய்வது அவனது வாழ்க்கை,பொழுது போக்கு,மற்றும் இத்யாதி,இத்யாதி. இந்த முறை விளிம்புக்கு வந்து விட்டதாக நினைத்தான்.நேற்று வரை சோதனை முடிவுகள் எல்லாம் சாதகமாகவே இருந்தது.இன்று காலையில் மேகலா பயந்து பயந்து அவனது கதவின் அறையை திறக்கும் வரை உலகத்தை கையில் பிடித்த நிலையில் இருந்தான்.ஏழு வருடங்களில் இவ்வளவு திருப்தியான முடிவுகள் அவனது.கைக்கு வந்ததில்லை.ஆனால் இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்டது.

இன்டர்காமில் மேகலாவை அழைத்தான் எல்லாவற்றையும் ரத்து செய்தான். தளத்திலிருந்த எல்லோருக்கும் விடுப்பு கொடுத்தான்.அடுத்த அரை மணியில் அறையை விட்டு வெளியே வந்தான்.மொத்த தளமும் காலியாய் இருந்தது. எல்லாவற்றையும் காலியாக பார்த்தால் நிறைவாக இருந்தது. மெல்லக் கண்ணை மூடி யோசித்தான், செல்களின் சூத்திரங்கள் எண்ணமெங்கும் ஓடின. எது அனாமலி என தெரியவில்லை. கொஞ்சம் ஜானி வாக்கர் சாப்பிடலாம் என முடிவு செய்து கண்களை திறந்தான். எ-பார்ம், பி-பார்ம், ஸி-பார்மாய் ஹெலிகல் வடிவங்கள் அறை முழுதும் சின்னதும் பெரிதுமாய் இருந்தது. காற்றில் பிம்பங்களாய் அவை மிதந்து கொண்டிருந்தன. கண்களை திறந்திருக்கிறோமா, மூடியிருக்கிறோமா என அவனுக்கு குழப்பமாயிருந்தது.

"குழம்பாதே"- சப்தம் வந்தது

சண்முகம் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் ப்ராக்டிகல் ஜோக்குகளுக்கான மனநிலையில் இல்லை.கோபம் வந்தது.

"யார் அது? இந்த விளையாட்டை நிறுத்துங்கள். உங்கள் இருக்கையை காலி செய்து விட்டு இப்போதே வெளியேறுங்கள். இதுதான் உங்களுக்கு கடைசி நாள்"-சண்முகம்

"சண்முகம் ரிலாக்ஸ். நான் இங்குதான் இருக்கிறேன். நான் முப்பரிமாண தோற்றமாக மாற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்"

கொஞ்ச நேரத்தில் சண்முகத்தின் எதிரில் இன்னோரு சண்முகம் நின்றுக் கொண்டிருந்தான்

சண்முகத்துக்கு கண்களை நம்ப முடியவில்லை.ஹெலிகல்கள் காணமல் போயிருந்தன.நிசப்தமான அந்த அறையில் இரண்டு சண்முகங்களும் எதிர் எதிரே.

"யார் நீ "- சண்முகம். குரல் நடுங்கியது.

"சண்முகம் உன்னை கண்ணாடியில் பார்க்கையிலும் இவ்வளவு பதறுவாயா என்ன? உனக்கு பிடிக்குமே என ஹெலிகலாய் இருந்தேன். கோபப் பட்டாய். அதை குறைக்க உன்னை போல் ஆனேன். பயப்படுகிறாய். எதுவும் தேவையில்லை.என்னை நீ முன்பே அறிவாய். நானாக மாறத்தான் முயற்சி செய்கிறாய். நான்தான் சிருஷ்டி. நான் வேறு உருவம் மாற்றிக் கொள்கிறேன்"- பிம்பம் அசைந்தது.

சண்முகம் ஓடிப் போய் அவனது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.கண்களை இருக்க மூடி காதுகளை பொத்திக் கொண்டான். இருட்டாய் இருந்தது.தலைக்குள் யாரோ இடிப்பது போலிருந்தது. பொத்திய காதுக்குள் முனுமுனுப்பு கேட்டது.

"சண்முகம் நான் எல்லா இடத்திலும் இருக்கிறேன். கண்களை மூடித் தெரியும் இருட்டிலும் , கண்களை திறக்கையில் இருக்கும் வெளிச்சத்திலும் நான் உண்டு."-சிருஷ்டி பேசியது.

சண்முகம் மேஜையின் விளிம்புகளை இருக்க ்பிடித்துக் கொண்டான். மூச்சினை சீராக்க ஆரம்பித்தான். உடலின் நடுக்கம் நிற்கவில்லை.

"நீ கடவுளா? இப்போது எங்கே இருக்கிறாய்? "- சண்முகம். தலைக்குள் இருக்கும் அந்த குரலை அவனுக்கு தவிர்க்க முடியவில்லை. உரையாடல் அவனுக்கு கட்டாயமாயிற்று.

"தெரியவில்லை. கடவுளாகவும் இருக்கலாம். அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது இந்த அறையின் வெறுமையிலும்,அமைதியிலும் இருக்கிறேன்"

"உன்னால் எவ்வாறு உருவம் மாற முடிகிறது. மூடிய அறைக்குள் வர முடிகிறது.மாய வித்தைகளோ?"

"நான் பாழ் வெளியேங்கும் இயங்குபவன். இடம்,நேரம் இதையெல்லாம் கடந்தவன். அடிப்படையில் எல்லாம் கணிதம்தான் சண்முகம். இன்னமும் உங்களால் நினைக்கவே படாத கணித சூத்திரங்கள் உண்டு. வரிக்குதிரைக்கு கருப்பு வெள்ளைதான் தெரியுமென்பதால், மற்ற வண்ணங்கள் இல்லாமலா போய் ்விட்டது. காட்சி எண்பது ஓளியின் கூட்டு. பலூனை கட்டி வித்தை காட்டுபனின் நுட்பத்தில் என்னால் ஓளியை வளைக்க முடியும். இது என்னை மாயக்காரனக்கிறதா?"

சண்முகம் அமைதியாய் இருந்தான். சிறு வயதில் அப்பாவிடம் முதலில் ராமயணம் கதை கேட்ட மனநிலையிலிருந்தான்.

"புதிய உயிர் சிருஷ்டி உன் கணித சூத்திரங்களுக்கு ்மிக அருகில் உள்ளது. வெளியெங்கும் பரவி இருந்த நான் இது வரை கட்டேயில்லாமல் சுற்றி விட்ட பம்பரம் போலிருந்தேன். குரோமசோம்கள் இணையும் நேரத்தில் அதன் முதல் துடிப்பு கொடுப்பதோடு முடிவேன் நான். யாரோ என்னில் இந்த வேலையை புதைத்து போய் விட்டார்கள். நிறுத்தவும் முடியாது. மாற்றவும் முடியாது. புரியவும் புரியாது. உன்னால் என்னை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். என் இயக்கம் எனக்கு பிடிப்பட்டது. இப்போது நான் இயங்கும் ஓரு கணித சூத்திரமாக என்னை உணர்கிறேன். எனக்கு சுய புரிதலுக்கு உதவியமைக்கு நன்றி."

"எனக்கு முன்பே டோலி உண்டு. கொரியாவில் கூட புதிய உயிர் படைக்கும் முயற்சிகள் நடந்ததே. ஏழு வருட என் உழைப்பு இன்று தோல்வி அல்லவா?"

"எல்லோரும் முயல்வார்கள். எல்லா சோதனைகளையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.ஆனால் முதல் துடிப்பு ்நான்தான் கொடுக்கலாயிற்று. நீதான் உடைத்துக் காட்டினாய். உன் முயற்சி தோல்வி அல்ல சண்முகம்.உன்னால் முதல் துடிப்பு கொடுக்க முடிந்திருக்கும். உன் சூத்திரத்தின் அனாமலி என் புரிதல்தான். நானும் கணிதம் வரைபவன்தான்,இனி மாற்றங்களும் சாத்தியமல்லவா?"- சிருஷ்டி சிரித்தது.

சண்முகம் மறுநாள் வேலையை ராஜினாமா செய்து விட்டான். இப்போது அவன் ஆராய்சிகள் செய்வதில்லை

No comments: