Thursday, August 3, 2006

அவளும் நானும் மற்றும் ஓரு கேள்வியும்

இரவு அடித்த ஓல்டு மாங்க் இன்னும் கிறுகிறுவென்று இருந்தது. இன்னோரு கட்டிங் விட்டு கிங்ஸ் அடித்தால் பரவாயில்லையாக இருக்குமென தோனியது.

"ஆரத்தி எடுத்துக்கங்கோ"-குரல் கேட்டு கண்ணை திறந்தால் குருக்கள் ஆரத்தியை காட்டிக் கொண்டு நின்றிருந்தார். தொட்டு கண்ணில் ஓற்றிக் கொண்டு சன்னதி விட்டு வெளியே வந்தேன்

"டேய் தூங்காதேடா. இந்த கருமத்துக்குதான் வராதேனு சொன்னேன்"-சண்முகம் கோபமாக கூறினான்.

"குளிச்சியாடா" - அரவிந்தன்

"பாத்ரூம்குள்ள போய்ட்டுதான் வந்தான்"- சண்முகம்

யாரும் என் பதிலை எதிர் பார்த்ததாய் தெரியவில்லை. எனக்கும் பதில் சொல்ல முடியவில்லை. தலைவலி பின்னி எடுத்தது. ஒரு கட்டிங் விட்டே ஆக வேண்டும்

அது கல்லுரியின் கடைசி வருடம். காம்பஸ் இன்டர்வியுவில் சண்முகத்துக்கு வேலை கிடைத்திருந்தது. கோவில் போய் விட்டு சினிமா போகலாமென பேசிக்கொண்டதால் நானும் கிளம்பி விட்டேன். சண்முகத்தோடு வெளியே வந்தால் எல்லா செலவும் அவனதே. சாப்பாடு, சினிமாக்கு ஆசை. அதனால் கோவிலுக்கும் வர வேண்டியதாயிற்று. சண்முகத்திற்கு தோழர்,தோழியர் வட்டம் சற்று பெரிது. எனக்கு வட்டமே கிடையாது. ஓரு புள்ளி மட்டுமே இருந்தது. அதுக்குள்ள ஓல்டு மாங்க் மற்றும் ஓசி தம் பக்தர்கள் கொஞ்சம் இருந்தார்கள். அவர்கள் அன்னியில் சண்முகம் மட்டும் அந்த புள்ளிக்குள் வேறு வழியில்லாமல் இருந்தான்.

அன்று கோவிலுக்கு சண்முகத்தின் நட்பு வட்டம் முழுதும் வந்து இருந்தார்கள். பஸ்டான்ட் பக்கத்திலுள்ள ஓரு கடையில் சாப்பாடு. இரண்டு கடை தள்ளி ஓரு ஓய்ன் ஷாப் இருந்தது.சண்முகத்திடம் காசு கேட்க முடியாது. திட்டுவான்.

"சண்முகம் ஓரு நெய் ரோஸட் சொல்லிடு. நான் ஓரு தம் போட்டு வரேன்"-நான்

"வெறும் ரோஸ்ட் சாப்பிடமாட்டியோ?"

"சும்மா சொல்லுடா.ஏன் கரையிற?"

"சரி . சரி வந்து தொலை."

தம்மை பத்து வைச்சி இழுத்தால் தலை வலி கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. அப்போது அவள் என்னை பார்த்து வந்தாள்.அவள் பெயர் ரம்யா.என் வகுப்புதான். இந்த நான்கு வருடங்களில் நாங்கள் அதிக பட்சம் நான்கைந்து வார்த்தைகள் பேசி இருப்போம்.என் யோசனை எக்ஸ்பிரஸ் வேகம் எடுப்பதற்க்குள் மிக அருகில் வந்துவிட்டாள். வாயில் இருந்த புகையை எந்த பக்கம் ஊதுவது என நான் முடிவெடுப்பதற்க்குள் ஹாய் என்றாள்.

"என்ன ரம்யா,சாப்பிடலயா?"- அவசரமாக கேட்டதில் புகை அவள் முகத்தில் பட்டது.அவள் முகம் சுருங்கியது.

எனக்கு என்னவோ போல் ஆனது. அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதுமென இருந்தது.

"நான் இப்பதான் ஆர்டர் பண்ணிணேன்.வர கொஞ்ச நேரமாகுமாம்.அதான் காத்தோட்டமா இருக்குமேனு வெளில வந்தேன்"-ரம்யா

"சாரி ரம்யா.புகை மேல பட்டிடுச்சு"-வேறு வழியில்லாமல் சிகரட்டை கீழே போட்டேன்.காலையில்தான் ரூம் மேட் சட்டை பாக்கெட்டிலிருந்து இரண்டு எடுத்து வந்திருந்தேன். ஓன்று போய் விட்டது.மனசுக்கு கஷ்டமாக இருந்தது. இவளை என்ன பண்ணலாமென யோசிக்கையில் திரும்ப ஓயின் ஷாப் கண்ணில் பட்டது.

"ரம்யா ஓரு இருபது ருபாய் சில்லறையாய் கொடேன்.வீட்டுக்கு ஓரு போன் பண்ணனும்.நூறு ரூபாய்க்கு கடையில் சில்லறை இல்லை. தியேட்டர்ல மாத்தி தாரேன்"- கேட்டு பார்த்தேன்.

"இந்தா வைச்சுக்கோ"-யோசிக்காமல் கொடுத்தாள். மனசாட்சி உறுத்த ஆபத்துக்கு பாவமில்லையென வாங்கி கொண்டேன்.

"நீ உள்ள போ ரம்யா. நான் போன் பண்ணிட்டு வந்திதிடரேன். சண்முகத்திட்ட சொல்லி என்னோட ஆர்டர் கேன்சல் பண்ண சொல்லிடு."

அவள் கடைக்குள் திரும்ப காத்திருந்து அவசரமாக போய் ஓரு கட்டிங் விட்டு வெளியே வந்தால் நல்ல வேளையாக யாரும் கடைக்கு வெளியே இல்லை. சரி தோசையிருந்தால் இரண்டு வாய் போடலாமென சாப்பாடு கடைக்குள் நுழைந்தால் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பினால் ரம்யா.

"எல்லாரும் பஸ்டான்ட் போயாச்சு. நான்தான் நீ போன் பண்ணிட்டு வருவேனு வெய்ட் பண்ணினேன்.வா போகலாம்."

எனக்கு அவளை பார்த்ததும் வாய் வழியா இதயம் வந்திடும் போல இருந்தது.

சண்முகம் சிவனாக மாறி என்னை எரித்து விடுவது போல் பஸ்ஸ்டான்டில் நின்றிருந்தான். பஸ் காலியாக இருந்தது. எல்லாரும் முன் வழியாக ஏற நான் அவனுக்கு பயந்து கடைசி சீட்டில் முலையில் உட்கார்ந்து கொண்டேன். முன்னால் உட்கார்ந்தவர்கள் எல்லாம் சிரிப்பும் பாட்டுமாக வந்தார்கள்.

"முன்னால வாடா"-அரவிந்தன்

"அவன் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கிமினு அங்க இருக்கான். இருந்திட்டு போறான் விடு"-சண்முகம்.

நான் வழக்கம் போல எதுவும் சொல்லவில்லை. நேற்றைய களைப்பும்,இன்றைய மப்பும் கலக்க எனக்கு அவர்கள் பேசுவது கொஞ்சம் மந்தமாய்தான் கேட்டது.

"எனக்கும் கொஞ்சம் காத்து வேணும்"-ரம்யா.

சொன்னதோடு மட்டுமில்லாமல் எழுந்து என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.கொஞ்ச நேரம் கழித்து அவள் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். மிக மெதுவாக பேசினாள்.மிருதுவாக பேசினாள். என்னை பார்த்து ஏதோ வேறு கேட்டாள். பஸ் ஓடும் சத்தம், பசியோடு வேறு காதை அடைக்க அவள் உதடு அசைவது மட்டும்தான் எனக்கு தெரிந்தது , பேசுவது புரியவில்லை.என்னால் ஓரு மாதிரி மையமாக தலை ஆட்டதான் முடிந்தது.அவ்வபோது அவளுக்கு கண் வேறு கலங்கியது.யாரும் பார்க்காத போது கண்ணை துடைத்துக் கொண்டாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை.பேசினால் நாக்கு குளருமோவென பயம் வேறு.அடுத்த அரை மணி நேரம் ஓரு யுகமாய் இருந்தது. அவளை பார்க்கவும் பாவமாய் இருந்தது.என்ன கஷ்டமோவென இரக்கமாகவும் இருந்தது.

பஸ் விட்டு இறங்கவும் தலை சுத்தலும்,மன பாரமும் அதிகரித்து இருந்தது.ரம்யா பக்கத்திலியே இருந்தாள்.தியேட்டர் போய் படம் பார்த்து ஹாஸ்டல் போகும் வரை அவள் என்னை விட்டு நகரவில்லை,ஆனால் நல்ல வேளையாக எதுவும் பேசவில்லை. சண்முகம் மட்டும் என்னை அடிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.நானும் அவன் திட்டுக்கு பயந்து அவன பக்கம் போகவேயில்லை.

அதற்கப்புறம் இரண்டே மாதம்தான். கல்லுரி முடிய ஆளுக்கு ஓரு பக்கம் போயிவிட்டோம்.
கல்லுரியில் இருந்த மீதி நாட்கள் எல்லாம் பார்த்தால் சிரிப்பாள். நானும் ஓரு தூரத்தில் இருந்து சிரித்து விட்டு ஓட்டி விட்டேன்.அன்றைக்கு என்ன சொன்னாளோ அது ஓரு கேள்வியாகவே இருந்தது.

மூன்று வருடங்கள் கழித்து ரம்யாவை ப்ராங்பர்ட்டில் ஓரு கான்பரன்ஸில் பார்த்தேன். அதே சிரிப்பு. பழைய தோழர்களை பற்றி அக்கப்போர் பேசி முடிக்கையில் மீண்டும் அதே கேள்வி விக்ரமாதித்தனின் வேதாளமாய் வந்தது.அவளிடம் கேட்கலாமா? வேண்டாமா?

No comments: