Saturday, August 26, 2006

சமூக நீதியும் ஆண்டையும்

ஊரிலே பெரிய வயல்
ஆண்டையோடது.
மேடைகளை கண்டால்
ஆண்டைக்கு மிக விருப்பம்
அன்னைக்கு
சட்டதிட்டங்களோடு ஆண்டை
சமூக நீதி பேசினார்
புள்ளிவிவரங்கள் எப்போதும்
நாக்கு நுனியில்
சோடாக் குடிக்கும்
இடைவெளியில்
ஆண்டைக்கு கோபம்
மனசுக்குள்
கோவணத்துக்கு
காசில்லாதனெல்லாம்
பள்ளிக்கூடம்
போனால் எவன்டா
வயலுக்கு அறுப்பு
அறுக்கறதென
ஆண்டை இருக்கும் வரை
சமுகநீதிக்கு கவலையில்லை

----

கட்டிலில் கிடக்கும்
அம்மாவுக்கு அள்ள
முனியம்மா வேண்டாம்
சூத்திர நாற்றம்
வேறாள் வேலைக்கு வேணுமென
சொன்னவரிடம்
காப்பி குடிக்கும்
ஆண்டை கேட்டார்
குளிச்சு கிளிச்சு
சுத்தமாதானே இருக்கோம்
கவுச்சியும் இல்லை
உங்க சாமிதானே எனக்கும்
எனக்கேன் காப்பிக்கு தனி டம்ளர்
கேட்டதால் வேலைக்கு
ஆள் கேட்டவர் சொன்னார்
என்ன செய்யறது
எல்லாம் கர்மாதான்
நீர் சத்சூத்ராளாய்யா
சூத்ரனில கொஞ்சம் உசத்தி
ஆனா சூத்ரன்தானே
ஆண்டைக்கு ்வாலிருந்தால்
அன்னைக்கு ஆட்டியிருப்பார்
அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி
முனியம்மா கூட்டம்
இன்னும் அவருக்கு கீழ்தான்

No comments: