Monday, August 7, 2006

எதிர்மறை நியாயங்கள்

வாசலில் ஓரு வயதானவர் ஓருவரும், நடுத்தர வயது பெண்மணி ஓருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் கிரில் கேட்டில் கையை வைத்தவுடன் நிமிர்ந்து பார்த்தார்கள்.

"யாருங்க வேணும்?"

"என் பேர் கணேசுங்க. இங்க சண்முகமுனு ஓருத்தர் குடியிருக்காருங்களா? நான் அவர் பிரண்டுதாங்க."

"வாங்க வாங்க. நீங்க வருவிங்க சொல்லியிருந்தாரு.இப்பதான் டூட்டி முடிஞ்சு வந்தாரு.நீங்களும் அகரமுங்களா?"

"ஆமாங்க."

"நாங்களும் அகரம்தான். இவங்க எங்க அப்பா. "

"வணக்கமுங்க." -நான்

அந்த வயதானவர் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அவங்களுக்கு காது கேட்காது. விடுங்க."

"எங்க வூட்டுகாரரும் மாடில இருக்கவர் கூடதான் வேல பாக்குறார். நீங்களும் அவங்க கூடதான் இருக்கிங்களா?"

"இல்லிங்க.நான் ரயில்வேஸில வேலை பாக்கறேன்."

"அப்படியா? சரி நீங்க போங்க.போறவங்களை புடிச்சி ஏதாச்சும் கேட்டுட்டே இருக்கேன்."

மாடி ஏறி போனேன். ஓரு பத்துக்கு பதினொன்னு ரூம்.அதில் ஓரு சுருட்டிய பாய் ஓன்னு, கொஞ்சமாய் மடிக்கப்பட்ட துணிகள.ரூமை ஓட்டி ஓரு ஏழுக்கு பத்து சமயலறை சன்னல் இல்லாமல. சண்முகம் கதவை திறந்து வைத்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருந்தான்.

"சண்முகம் என்னடா பண்ணிட்டு இருக்க?"

"வாடா. இன்னிக்கு நைட் ஷிப்டும் போறேன்.அதான் இப்பவே சமையல முடிச்சிடலாமுனு.உள்ளுக்கு பொகையா இருக்கும். மொட்டை மாடில சேர் ஓன்னு கெடக்கும் பாரு அதில உட்காரு."

சண்முகம்,நான்,ராசு மூன்று பேரும் அகரத்தில் ஓன்னா ஐஞ்சாம் வகுப்பு வரை படிச்சோம்.அப்புறம் எங்கப்பாவும், ராசுவோட அப்பாவும் டவுனுக்கு வந்து வட்டிக் கடை வைக்க நாங்க டவுனுக்கு வந்திட்டோம்.சண்முகம் மட்டும் ஊரோட இருந்திட்டான்.நான் டிப்ளமோ படிச்சிட்டு ரயில்வேஸுக்கு வந்திட்டேன்.ராசு அப்பா தவறின பிறகு ராசு எங்கப்பாவோட சேந்து வட்டிக்கடைக்கு வந்திட்டான்.சண்முகம் ஐடிஐ வெல்டருக்கு முடிச்சிட்டு அவங்க அப்பா அண்ணணோட விவசாயம் பாத்திட்டு இருந்தான். அப்புறம் எங்கப்பாதான் ரயில்வேஸ் சப்காண்ட்ராக்டர் ஓருத்தர் ஷாப்பில வேலை வாங்கி கொடுத்தார். கொஞ்ச நாள் கழிச்சு அவனோட அக்கா மகளை அவனுக்கு கல்யாணம் கட்டிட்டாங்க.ஊர்லெருந்து வேலைக்கு வந்திட்டிருந்தவன் திடிருனு தனியா வீடெடுத்து தங்கவும் பிரச்சனை ஆகிடுத்து.அவங்கப்பா எங்கப்பாவை பஞ்சாயத்துக்கு கூப்பிட அவர் என்னை இங்க அனுப்பி வைச்சார்.

சமைச்சிட்டு வேர்த்து விறுவிறுத்து வெளியே வந்தான். ஓரு அலுமினிய சட்டியில் தண்ணி மோந்து முகம் கழுவினான்.

பக்கத்தில் மொட்டை மாடிக் கட்டையில் உட்கார்ந்தான்.

"என்ன கணேசு கீழ சிபிஐ என்குயரி முடிஞ்சுதா?"

"ஏண்டா கேட்கற. என் தலபுராணத்தையை கேட்டுதான் மாடிப்படி ஏற விட்டாங்க."

"நம்ம வூட்ல ரண்டு வயசுக்கு வந்த பொண்ணிருந்தா,நமக்கும் அப்படிதான். சரி வூட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?"

"நல்லாருக்காங்க. நீ ஏண்டா இப்படி கஷ்டபடுற? ஊர்லெருந்து வந்திட்டு இருந்தெனா,சமையலெல்லாம் படுத்தாதுல.வாடகை கெடையாது. அங்கென பாவம் இப்போ வளர் தனியா கெடக்கு. அப்பா அம்மாலாம் தனியா இருக்காங்க."

"ஊர்ல கம்ளெய்ண்ட் பண்ணாங்களா? சரி இங்கென நின்னு ரொம்ப அரட்டை அடிக்க வேண்டாம். பக்கத்தில போய் ஓரு டீ சாப்பிட்டுடெ பேசலாம்."

மொட்டை மாடியில் கொடியில் இருந்த சட்டையை உதறி மாட்டிக் கொண்டான்.டீக்கடைக்கு போகும் வரையில் அவன் ஓன்னும் பேசவேயில்லை.அப்புறம் கொஞ்சமாய் யோசித்த ்பின் பேச ஆரம்பித்தான்

"கணேசு வெல்டிங் பண்ணிருக்கியா?"

"ஏண்டா கேட்கற? நீ கடையில பண்ணி பாத்துருக்கேன். அவ்வளவுதான்."

"விடாம நீ ஓரு நாலு மணி நேரம் வெல்ட் அடிச்சாலே கண்ணு எரியும். ஓன்னும் புரியாது. படுத்தா தூக்கம் வராது. கண்ணை மூடினாலும் வெளிச்சம் சனியன் மாதிரி வந்து நிக்கும். தெரியுமா?"

என்ன சொல்லனும்னே எனக்கு தெரியவில்லை. பொதுவா ம் என்றேன்.

"பன்னென்டு வருஷமா வெல்ட் அடிக்கிறேன். ஓரு நாளைக்கு பத்து பன்னென்டு மணி நேரம் வேலை.சமயத்தில கண்ணு ரண்டையும் புடுங்கி போட்டுலாமா தோனும் தெரியுமா?"

நான் மவுனமாக இருந்தேன். அப்போதைக்கு அதுதான் முடிந்தது.

"என் பசங்க இந்த கஷ்டம் படக்கூடாதுடா. நல்ல பள்ளிக்கூடம் போகனும்.நல்லா படிக்கனும். பேரிய வேலைக்கு போகனும்.அகரத்தில இதெல்லாம் இல்லடா. கஷ்டப்பட்டு சம்பாரிச்சாலும் ஆசையா புள்ளைக்கு ஓன்னும் வாங்க முடியல. மாச சம்பளம் வந்தா அப்பாட்ட கொடுக்க வேண்டியதா இருக்கு. அன்னைக்கு பையன் திருவிழால ஓரு கிலுகிலுப்பை கேட்கறான். வாங்க முடியல. இவனுக்கு வாங்கினா அண்ணண் பசங்களுக்கும் வாங்கனும்,முப்பது ரூபா ஆகும், சும்மா வானு அப்பா சொல்றாரு. இவனை மட்டும் அகரத்திலேருந்து கான்வண்ட் அனுப்பக்கூடாது,பெரியவன் புள்ளைங்க ஏங்கிடும்கறாரு. நான் படிச்ச படிப்புக்கு இவ்வளவுதாண்டா சம்பாதிக்க முடியும்.மூனு பசங்களை கான்வெண்ட் போடுறதுக்கு வருமானமில்லை. அண்ணன் மாசம் அப்பாட்ட எவ்வளவு தாராரு, அப்பாட்ட எவ்வளவு காசு இருக்குனு கேட்டா ஏண்டா என்னியவே கணக்கு ்கேட்கறியானு அவருக்கு கோவம் வந்து கன்னா பின்னானு திட்டறாரு.அதான் வந்திட்டேன்.ஓன்னைய பதினெட்டு வருஷம் வளத்ததுக்கு இதான் பலனாங்றாரு. நான் என்ன பேங்க் டெப்பாஸிட்டா மெச்சூர் ஆனதும் அவருக்கு வருமானம் ்கொடுக்கறதுக்கு. அ்ப்படியே ்பாத்தாலும் பன்னென்டு வருஷம் அவருக்கு சம்பாரிச்சு கொடுத்திருக்கேன். எனக்கு ஓன்னும் வேணானுமிட்டு வந்திட்டேன்.ராசுட்ட கொஞ்சம் பணம் வாங்கியிருக்கேன் வட்டி வேண்டாம், அசல் மட்டும் முடிஞ்சப்ப கொடுனுட்டான்.ரேஷன் கார்டு அப்ளை பண்ணியிருக்கேன்.வந்தா கம்பேனி முதலாளி கேஸ் கனெக்ஷன் ்வாங்கி தாரேன்னாரு. வளருதான் என்கிட்ட ்கோவிச்சிட்டு வர மாட்டேன்டு இருக்கு. அக்காட்ட சொல்லிருக்கேன், அக்கா நான் பாத்து கூட்டிடு வரேனுச்சு. பாப்போம் என்னாகுதுனு."

அவன் சொல்லி முடிக்கும் வரையில் 'ஙே'னு பாத்திட்டு இருந்தேன். எனக்கு இவன் ்சொன்னதும் நியாயமா இருந்துச்சு. நேத்திக்கு இவங்கப்பா எங்கப்பாட்ட புலம்பினதும் நியாயமா இருந்துச்சு.

டீ சாப்டுட்டு நான் அப்படியே நான் கிளம்பிட்டேன்.அவன்ட்ட போய் என்னனு சொல்ல அவன்தான் தெளிவா இருக்கானே.

No comments: