அமெரிக்காவில் கோடை காலங்கள் நீண்ட பகலையும், குறைந்த இரவையும் கொடுக்கும். இரவு சூரியன் மறைய ஒன்பது மணி கூட ஆகும். இது போன்ற ஒரு நாளில் இரவு உணவு முடித்து ஒரு நடை நடந்து வரலாம் என கிளம்பினேன். பள்ளி கூடங்கள் எல்லாம் முடிந்து போனதால் என்ன செய்வது என தெரியாமல் ஆட்டம் இடும் எனது ஐந்து வயது வாரிசு முந்தி கொண்டு செருப்பணிந்து காத்து நின்றது. நானும் அவளும் நடந்து போக ஆரம்பிதோம். ஆரஞ்சு நிற சூரியன் மனதுக்கு இதம். நடைபாதையை ஒட்டிய குளம் போன்ற மழை நீர் சேகரிப்பு அமைப்பு நிறைந்து காற்று தொட்டு வீசியது. மகள் காற்றில் சிறகு விழும் பாவனையில் குதித்து நடந்து கொண்டிருந்தாள். அது ஒரு நிறைவான அனுபவம் தந்தது.
"கொஞ்சம் நில்லுங்கள் " யாரோ அழைத்தது போல் குரல் வர திரும்பினேன்.
ஒரு வயதான பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். வயது எழுவதுக்கு மேல் இருக்கலாம். வெள்ளை வேஷ்டி ,சட்டை போட்டு ஆறடிக்கு மேல் உயரமாக இருந்தார். கை கால்கள் தளர்ந்து முகம் சற்று சுருக்கமாக இருந்தது. நல்ல குறுஞ்சிரிப்பு ஒன்று முகத்தில் இருந்தது. யாரென தெரியவில்லை. யாருடைய தந்தையோ, யாருடையா மாமனாரோ எனக்கு சட்டென தோன்றவில்லை.
"ஹையா தாத்தா" மகள் கண்கள் விரிய எம்பினாள். சட்டென முகம் மலர்ந்தாள்.
"யாரடி தாத்தா" கிழவர் முகம் சுளித்தார்.
"வணக்கம் யார் நீங்கள் ? உங்களை எனக்கு தெரியுமா?" குழப்பமாய் கேட்டேன்.
"என்ன சொல்கிறாய் ?" பெரியவர் சலித்து கொண்டார்.
"கால கோளாறு. அதுதான் குழப்பம்" - மகள் மீண்டும் காற்றில் கால்களை துளாவி கைகளை இலையுதிர் கால இலையென ஆக முயன்றாள்.
மகளை பார்த்தேன் , இப்போது பெரிதாக வளர்ந்து இருந்தாள், ஒரு 20 வயது வடிவில் இருந்தாள். பயம் உடலெங்கும் வந்தது , படபடப்பானது, வலது கை வலித்தது, தலைக்கு ரத்த ஓட்டம் அதிகமானது, பைத்தியம் பிடித்ததா எனக்கு என தெரியவில்லை. ஐயோ என அலறினேன். சுற்றி நடை பயிலும் யாரும் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.
"என் கண்ணே" என மகளை அள்ளி தூக்க போனேன். அழுகை ததும்பி வந்தது.
என்ன ஆனது என் மகளுக்கு என பயம் ஆட்டியது.
மகள் இன்னும் வளர்ந்திருந்தாள், அந்த கிழவர் இன்னும் இளமையானார். அவர் முகம் மிக குழப்பதில் இருந்தது. வானத்தில் இருந்து பனி பொழிய ஆரம்பித்தது.
"சங்கரா இது நீ இல்லை" என்றார் அந்த மனிதர்.
"நான் சங்கரன் இல்லையே" என்றேன். என் கால்கள் பூமிக்குள் புதைய ஆரம்பித்தன. அவை வெடித்து வேராக மாறுவது போல் இருந்தது.உடம்பின் எலும்புகள் வெடித்து வெளி வந்தன, அவை மரத்தின் கிளை போல மாறுதல்
கொண்டன. நான் உடைந்து ஆழ ஆரம்பிதேன். என் மகள் , மனைவி, பெற்றோர் ,வீடு, வேலை என எல்லாம் என்னை வீட்டு போக போவது உள்ளுக்குள் உலுக்கி எடுத்தது. என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. எங்கோ தொலைந்து போனது போல இருந்தது.
"என்ன செய்கிறாய் இவனை" என கண்ணீரோடு என் மகளிடம் அந்த மனிதர் கேட்டார்
அவள் சிரித்தாள். கை கால்கள் சுழன்றன. அவள் காற்றில் தன்னை கரைத்து மீண்டு வந்து வந்தாள், மேலும் சிரித்தாள்.
உற்று மகளை பார்த்தேன். என் அம்மா போல இருந்தாள். அவள் கண்ணில் கனிவு வழிந்தது. இரு பற்கள் வெடித்து உதட்டின் வெளியே வந்திருந்தது.
" அஞ்சாதே" என்றாள். அவள் உதடுகள் பிரியவில்லை. ஆனால் என்னோடு பேசினாள்.
"அம்மா" என்றேன்.
கையில் வேல் எடுத்து என்னுள் கிழித்தாள். நான் ஒரு மரமானேன்.
No comments:
Post a Comment