Wednesday, June 27, 2012

சோமன் சரித்திரம்

சோமன் காலையிலிருந்தே ஒரு வித குதுகலத்திலிருந்தார். உண்மை, உழைப்பு, உயர்வு என உவன்னாவை விதவிதமாக உபயோகித்து பெரிய புரட்சி கட்டுரை ஒரு முழத்துக்கு எழுதியிருந்தார். அவரது எழுத்து திறமையிலும், பேச்சிலும் அவருக்கு தனி சிலாகிப்பு உண்டு. சீர்காழி கோவிந்தராசனை ஒத்த கணீர் குரலில் அவர் முழக்கமிடுகையில் ஊரே அசரும்.



இன வேங்கை சோமன் என அவரது அல்லக்கை வட்டராம் அவருக்கு பட்டம் அளித்து இருந்தது. இப்போதெல்லாம் அவரை யாராவது சோமன் என அழைத்தால் அவருக்கு ஒரு அவமரியாதையாகவே பட ஆரம்பித்ததுள்ளது. வேங்கையார் என்று அவரை அழைத்தலே அவருக்கு பிடித்திருந்தது.



அல்லக்கை வட்டாரம் அவரிடம் காரியம் சாதிக்க நினைக்கையில் எல்லாம் தென்னாட்டு வேங்கை, தமிழ்நாட்டு சிறுத்தை என வாயில் வந்த வார்த்தையெல்லாம் போட்டு பேசும் போது அவருக்கு முடியெல்லாம் சிலிர்க்கும்.




"பகுத்தறிவு வாழ்க. வேங்கையார் புகழ் ஒங்குக" - சப்தம் வெளியில் கேட்டது.



காலையில் கட்டுரை எழுதிவிட்டு சனிஸ்வரனுக்கு பூஜை செய்யும் வேளையில் கூட்டம் வந்தது வேங்கையாருக்கு எரிச்சலாய் வந்தது. ஆனாலும் வேறு வழியின்றி வெளியில் வந்தார். அடுத்த சனி பெயர்ச்சி வரும் வரையில் பிரதி சனி நெய் விளக்கு போடுமாறு ஆஸ்தான ஆருடர் கூறி சென்றதில் இருந்து விடாபிடியாய் கடைபிடித்து வருகின்றார்.



துவக்கத்தில் வேங்கையார் கடவுள் சிலையை உடைக்கவெல்லாம் செய்து கொண்டுதான் இருந்தார். முப்பந்தி ஐந்தாம் வயதில அவரது இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளைக்கு உடம்பு தொடர்ந்து சரியில்லாமல் போய் கொண்டிருக்கையில் மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆருடரை சந்தித்தார். சும்மாவேனும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் கிரகம் ஒன்றின் பெயரை சொல்லி மூன்றாவது கல்யாணம் கட்டினால்தான் குடும்பத்தில் நிம்மதி வருமென சொல்லி விட்டார். அதை கேட்டு அவருடைய இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளையின் உடம்பினுள் இருக்கும் நோய் கிருமிகள் அதிர்ச்சியில் செத்து விட பையன் தெளிவாக ஆரம்பித்தான்.



தோஷ நிவர்த்திகாக வேறு வழியின்றி வேங்கையார் தன்னுடைய சாதியில் தனக்கு தொடுப்பாக இருந்த ஒரு பெண்மணியின் தங்கையை கல்யாணம் செய்து கொண்டார். பகுத்தறிவு பிரச்சாரங்களுக்கு இது இடையூறாக இருக்குமென்பதற்காக இந்த திருமண விஷயத்தை காதும் காதும் வைத்தது போல் ரகசியமாக வைத்து விட்டார்.



புரட்சி வேங்கை வாசலுக்கு வந்த போது அங்கிருந்த அல்லக்கைகள் எல்லாம் இன்னமும் மகிழ்சியாகி பகுத்தறிவு வாழ்க பகுத்தறிவு வேங்கை வாழ்கவென விடாமல் சப்தம் கிளப்பின. வேங்கையார் கண்கள் உன்னிபாக எவனேனும் சப்தம் போடாமல் இருக்கின்றதா என ஆராய்ந்தது. மூன்றாவது வரிசையில் நின்ற மாவட்ட செயலாளர் ஒருவன் சப்தம் போடாமல் இருப்பதை மனதில் குறித்துக் கொண்டார்.




" என்ன எல்லோரும் நலமா? உங்களையெல்லாம் பார்க்கையில் உள்ளம் பூரிக்கின்றது. " - சிம்மக் குரலில் பேசினார்.


கூட்டம் அதற்கும் கைதட்டியது. ஆய் போனீர்களா என அவர் கேட்டால் கூட கை தட்ட பழக்க படுத்தப்பட்ட அந்த கூட்டம் பகுத்தறிவு கடவுள் வாழ்க என கூவியது.


கூட்டத்தின் மையபகுதியிலிருந்து வாயெல்லாம் பல்லாக நற்றுணை நாரயணசாமி முன்வந்து பொன்னாடையை போர்த்தினார். நற்றுணை என்ற ஊரை சார்ந்தவர். ரோடு போடும் குத்தகை விஷயமாய் மாதா மாதம் வருவார்.

( தொடரும் )


No comments: