Monday, December 18, 2006

மேய்ச்சல் 5

காட் மஸ்ட் பி கிரேசி என்ற திரைப்படம் சின்ன வயதில் பார்த்தது. ஆப்ரிக்க கண்டத்தின் புஷ்மென் எனப்படும் பழங்குடியினரை பற்றியது. நகைச்சுவையாய் இயல்பாய் பயணிக்கும் கதை. இரண்டு பாகங்களாய் வந்தது. அண்மையில் படித்த ஒரு செய்தி இந்த திரைப்படத்தை நினைவு படுத்தியது.போட்ஸ்வானா நாட்டின் உயர் நீதி மன்றம் தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 1000 புஷ்மென் பழங்குடியனருக்கு அவர்கள் நிலத்தை திரும்ப வழங்கியிருக்கிறது. பழங்குடியினர் அந்நிலத்தில் உள்ள தாதுப் பொருள்களின் மேலுள்ள ஆசையால் வெளியேற்றப்பட்டார்கள். இப்போது நீதிமன்றத்தின் கட்டளையை ஏற்றுக் கொண்ட போட்ஸ்வானா அரசு அந்நிலத்திற்கு திரும்பும் பழங்குடியினருக்கு மிக கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. அவர்களது தண்ணீரிலும்,அவர்கள் பயன்படுத்தும் குதிரை, கழுதைகளளிலும் கை வைத்துள்ளது. இருபதாயிரம் ஆண்டுகளாக காலகாரியில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முறையான நீதி கிடைக்குமாவென தெரியவில்லை. சனநாயகம் கேலிக் கூத்தாய் சனங்களின் உரிமையில் விளையாடுவதாய் மாறி வருகின்றது.

காலகாரி பாலைவனம்

நம்மூரிலும் சனநாயகத்திற்காக அரசியல் இல்லாமல் அரசியலுக்காக சனநாயகம் மாற இங்கு வேதனையான சூழ்நிலை நிலவுகிறது. எல்லா விஷயங்களும் அரசியல் துகிலுரிக்கப்படுகின்றன. மக்களை மேல் நோக்கி கூட்டி செல்வதற்கு பதிலாய் சனநாயக காவலர்களாய் நியமிக்கப்பட்டவர்கள் கண் கட்டு வித்தை நடத்துகிறார்கள். காவிரி பிரச்சனையாக இருக்கட்டும், பெரியாறு அணை பிரச்சனையாகட்டும், நாட்டை பாதுக்காப்பவனின் மரணமாய் இருக்கட்டும், எல்லாமே எத்தனை ஒட்டுக்கள் கிடைக்கும், எவ்வளவு பரபரப்பை கிளப்பலாம் என்ற ரீதியிலியே கையாளப்படுகின்றது. சனநாயகம் வளர்சிதை மாற்றங்களில் ஆரோக்கியமாய் வளராமல் இது போன்ற திசைகளில் நகரும் போது சற்று மிரட்சியாய் உள்ளது.

பொது சொத்து எனபதை பற்றிய அறிவும், அதை பாதுகாப்பதன் ஆர்வமும் சமூகத்தில் குறைவாய் இருக்கிறது. எதுவாயிருந்தாலும் எடுத்து உடைப்பதில்தான் புரட்சி இருப்பதாய் நினைக்கும் ஆட்டு மந்தை மனநிலையே சமூகத்தில் உள்ளது.ராம்கி என்னும் ஜென்ராம் பொது சொத்து பற்றிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

நீலச்சட்டை நாயகர்கள் வெள்ளைச்சட்டை போட்டவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கங்குலியின் பங்கு இந்த வெற்றியில் குறிப்பிடதக்கது. எல்லாரும் வந்து வந்து போன முதல் இன்னிங்ஸில் உருப்படியாய் ஏதேனும் செய்தவர் இவர் ஓருவரே. இந்த வெற்றியில் அனில் கும்ளேவின் ஆறு விக்கெட்களை மறக்க கூடாது. போலாக்கை இரண்டாவது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தாவிட்டால் கணக்கு மாறியிருக்க வாய்ப்புண்டு. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் என்பது மிக பெரிய நகைச்சுவை துணுக்காக ஆகி கொண்டிருக்கிறது. வாஸிம் ஜாப்பர் பெவிலியனிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கலாம் போலிருக்கிறது. வீணாய் களத்துக்கு வந்து அவர் ஒன்றும் பங்களிப்பதில்லை. சேவாகிற்கு வாழ்வுதான், மற்றப்படி சொல்ல ஒன்றுமில்லை.

காசநோயை பற்றி இரண்டு செய்திகள். ஒன்று நல்லது, மற்றொன்று அதற்கு மாறானது. புழக்கத்தில் உள்ள மாத்திரைகளின் வீரியத்தை தகர்க்கூடிய வலுவுள்ளதாய் காசநோய் கிருமிகள் மாறி உள்ளன. இந்தியா, ரஷ்யா மற்று சீன தேசத்தில் உள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை உலகின் காச நோயாளிகளில் பாதிக்கு மேல். ஒவ்வொரு வருடமும் காசநோய் 9 மில்லியன் மக்களை பாதிக்கின்றது, அதில் இரண்டு மில்லியன் மக்களை காவுக் கொள்கின்றது.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின்-மேடிசன் கல்லுரியின் மருத்துவ பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் காசநோயை உருவாக்கும் பாக்டிரியாவிற்கும், உடலின் நோய் எதிர்க்கும் வெள்ளை செல்களும் இடையேயான போராட்டத்தை ஆராய்ந்து அதன் நுட்பங்களை பதிபித்துள்ளனர். வெள்ளை செல்கள் உருவாக்கும் தாமிர சத்து தாக்குதலை பாக்டிரியா ஒரு வகை புரத சத்தை கொண்டு தடுக்கின்றது. பாக்டிரியாவின் புரத சத்து உருவாக்கத்தை மட்டுறுதுவதன் மூலம் பாக்டிரியாவினை வலுவிலக்க செய்யலாம் என்று கருதுகிறார்கள். இந்த ஆய்வு சராசரி மனிதனுக்கும் பயனுறும் வகையில் நடைமுறை படுத்தப்படும் போது பலரை காவு வாங்கும் காசநோய் ஒழிய வாய்ப்புண்டு.

இயற்கைமுறை விவசாயிகள் சங்கத்தை பற்றி ஹிண்டுவில் செய்தி வந்திருந்தது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றாய் சேர்ந்து நடத்தும் இந்த அமைப்பு விவசாய பொருள்களை நேரடியாக சந்தைக்கு கொண்டு வருகின்றது. இடை மனிதர் எதுவும் கிடையாதாம். உரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்களுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் தகவல்களுக்கு

காலசுவட்டில் கவிதைகள் பகுதியில் கவிதா என்பவரின் கவிதையை படித்தேன். அழகான வார்த்தைகளால் கோர்கப்பட்டு இருந்தது. சேர்ந்து வாழ்க்கையை பயணிக்கும் முன் பயணத்தை பற்றிய எண்ணங்கள் பல. நடைமுறை சாத்தியமாகுமா , ஆகாதா என ஆராயாத மனநிலையில் உருவாக்கப்படும் பிம்பங்கள் அவை. பயணம் நகர்கையில் பிம்பம் நொறுங்கிறது.அப்போது பிம்பங்களை நகர்த்தி உண்மை ஏற்றுக கொள்ளுதல் சிரமமாய் இருக்கையில், பயணத்தை வெறுத்தல் சுலபமான தீர்வாக தோன்றலாம்.

அவன் எழுதுகோல் காதலன்
அவள் பிரபஞ்சத்தின் வாசகி
காலம் அவர்களை நேர்க்கோட்டில் நிறுத்தியது.
அங்கு கனவு போன்ற ஒரு சிறுகதை
உருவாவதாக அவர்கள் நினைத்தார்கள்
அவன் வேண்டும்போது அவள்
தன்னை ஒரு முத்தமாக மாற்றிக்கொண்டாள்.
அவள் விரும்பும்போது அவன்
பெயரற்ற இசையாக வெளிகளில் கரைந்தான்
சிறுகதைக்குள் இருக்கும் அவன்தான்
அந்தச் சிறுகதையை எழுதுவதாக
அவன் நம்பினான்.
கனவிலுள்ள அவள்தான் நிஜமென்று
அவளும் நம்பினாள்.
அகாலம் சிரித்தது.
அவர்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்
தான் வசித்த கனவு கலைந்த கோபத்தில்
அவள் பைத்தியக்காரியாகவும்
களவுபோன எழுதுகோல் தேடி
அவன் நாடோ டியாகவும்
நமக்கு மிகவும் பழகிய வீதிகளிலேயே
திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

புகைபடத்திற்க்கு நன்றி quinnums

No comments: