Friday, December 29, 2006

விலங்குகளும் நிலநடுக்கமும்


Springy Snake
Originally uploaded by Yogi.
அண்மையில் சீன தேசத்தில் நில நடுக்கத்தை கவனிக்க பாம்பு பண்ணைகளில் வெப் கேம் பொருத்தியுள்ளனர். இந்த பாம்பு பண்ணைகளில் உணவிற்காக பாம்புகளை வளர்ந்து வருகின்றனர். நானிங் எனும் நகரத்தில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இந்த நகரம் நிலநடுக்கத்தை உண்டாக்க கூடிய நில தகடுகளில் அமைந்துள்ளது.

இந்நகரத்தின் நில நடுக்க கண்காணிப்பு துறை அதிகாரிகள் பாம்புகள் நிலநடுக்க உருவாக்கத்தை 120 மைல்களுக்கு அப்பாலிருந்தே கவனிக்க வல்லன என்று கூறியுள்ளார்கள். நிலநடுக்கம் கடுங்குளிர் காலங்களில் ஏற்படும் போது கூட பாம்புகள் தங்கள் புற்றினை விட்டு வெளியேறி பதட்டமான நிலைக்கு மாறி விடுகின்றன. கடுமையான நில நடுக்கம் உருவாகுகையில் தங்கள் தலையினை சுவர்களில் மோதவும் செய்கின்றன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நகரத்தில் பாம்பு பண்ணை வைத்திருக்கும் குடும்பங்கள் நிறைய உள்ளனவாம். அக்குடும்பங்கள் இந்த திட்டங்களுக்கு பெரும் ஆதரவை தெரிவித்துள்ளன.

Paso Robles Earthquake
Originally uploaded by Hey Paul.

வரலாற்றில் விலங்குகளின் சுபாவம் நிலநடுக்கம் ஏற்பட்டும் காலத்தில் மாறுவது பற்றிய குறிப்புகள் உண்டு. கிருத்து பிறப்பதற்கு 373 ஆண்டுகளுக்கு ஹெலிஸ் எனும் கிரேக்க நகரத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கதின் முன் எலி,பாம்பு போன்றவை நகரத்தை விட்டு நீங்கின போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

1975ம் ஆண்டு சீன அதிகாரிகள் விலங்களுகளின் பதட்டமான குணங்களை கண்டு ஹாய்செங் நகரத்தின் ஒரு மில்லியன் மக்களை நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். சிலநாட்களுக்கு பின் அந்நகரத்தை 7.3 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் தாக்கியது. அரசின் முன்னச்சரிக்கையால் பெருமளவு உயிர் சேதமும், பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டது.

அறிவியல் பூர்வமாய் விலங்கினங்களின் மாறுபடும் குணங்களையும், பதற்றத்தையும் நிலநடுக்கத்தோடு இதுவரை இணைக்க இயலவில்லை. ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

No comments: