Wednesday, November 15, 2006

விழா

உச்சி வெய்யில் பளிச்சென்று இருந்தது. மாணவர்கள் வரிசையாய் மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.சண்முகத்துக்கு வெயில் தலையில் அடித்தது. சட்டை வேர்த்து உடலோடு ஒட்டிக் கொண்டது. விடுமுறை நாளுக்கும் வீட்டில் இருக்க முடியவில்லையே என ஏக்கமாய் இருந்தது. முன்னால் நின்று கொண்டிருந்த சத்திய சீலன் சற்று முன் கால் வலிக்கிறதென உட்கார பிடி மாஸ்டர் கணபதி வெளு வெளு என்று வெளுத்து விட்டார். சுற்றும் பார்த்தான். பி.டி மாஸ்டர் மூன்றாம் கிளாஸ் பசங்களை ஐந்தாறு வரிசை தள்ளி விரட்டிக் கொண்டிருந்தார்.

"சார் " - சண்முகம் சத்தமாய் கூப்பிட்டான்.

"என்னடா"- கணபதி வேகமாய் வந்தார். ஞாயிற்று கிழமையும் அதுவுமாய் தாலி அறுக்கிறார்களே என கோபமாய் இருந்தார்.

"தலை சுத்துது சார். மயக்கமா இருக்கு சார். ஓடி போய் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வந்திடறேன்"- சண்முகம்

அவர் கையில் இருந்த பிரம்பு சுழன்றது. சண்முகத்தின் பின்புறத்தில் நிச்சயம் ஒரு கோடு விழுந்திருக்கும்.

"ஏமாத்தவாடா பாக்கறே. உன்னோடத்த பசங்கதானே மத்தவன்லாம். அவன்லாம் நிக்கல. எவனும் நகர கூடாது. காலைல பத்து மணிலருந்து கஷ்டப்பட்டு இப்பத்தான் வரிசைல நிக்க வச்சிருக்கேன். எவனாவது நகர்ந்திங்க பின்னிடுவேன் பின்னி. மினிஸ்டர் வந்து போன பின்னாடிதான் நகரனும்."-கணபதி

***************
வெயில் இன்னும் ஏற ஆரம்பித்தது. கணபதி மெல்ல நடந்து மைதானத்தின் ஓரமாய் மர நிழலில் நின்று கொண்டார். ஏற்கனவே கணக்கு வாத்தியார் பரமசிவன் அங்கே நின்று கொண்டிருந்தார்.

"என்னா சார் இது. இன்னைக்கு வயலுக்கு போகனும். இங்க வந்து நிக்க வேண்டியிருக்கு. அந்தாளு பதினோறு மணிக்கு வரேன்னான். இப்ப மணி ஓன்னாச்சு இன்னும் காணலே. இவனுங்க போஸ்டர் ஒட்டிக்க நாம காய வேண்டியிருக்கு" - பரமசிவன்

"ஆமா சார். ஞாயித்து கிழமையாச்சே. சித்த சாப்பிட்டோமா, தூங்கினோமானு இருக்கும். இன்னைக்கு எல்லாம் போச்சு. காலாண்டு தேர்வே முடிஞ்சு போச்சு. இப்ப போய் புத்தகம் இலவசமுனு கொடுக்கறானுங்க. இந்த கூத்துக்கு நாம வேற வந்த நிக்க வேண்டியிருக்கு. மினிஸ்டருக்கும் அறிவில்ல. அவன் கூட இருக்கவனுக்கும் அறிவில்ல."-கணபதி

"பத்து புள்ளைகளுக்குதான் வேற தாரானுங்க. அதுக்குதான் இத்தனை அலம்பல். அந்த பத்தும் பாத்திங்களா, நம்ப பள்ளிக்கூடமே இல்லை. கட்சிகாரன் புள்ளைங்க. பாவம் நம்ம நண்டும் சிண்டுந்தான் வெயில்ல கருகுதுங்க"- பரமசிவன்.

"நீங்க வேற. ஆயிரம் புள்ளைங்களுக்கு இலவச புத்தக கணக்கு காட்டியாச்சு. காசும் கை மாறியாச்சு, இப்ப பண்ணறது வர எலக்ஷனுக்கு கொசரம். மினிஸ்டருக்கே இவனுங்க பண்ணி கூதல் முழுசா தெரியுமானு தெரியல"-கணபதி
***************

சண்முகத்துக்கு கண்கள் இருள ஆரம்பித்தது. நாக்கு வரண்டு உதடு ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. பசி வேறு வயிற்றை கிள்ளி கொண்டிருந்தது. அழுகையாய் வந்தது. மர நிழலில் நிற்க்கும் வாத்தியாரை பார்த்தான். கை பிரம்பு இடதும் வலதும் நகர்ந்து பெண்டுலம் போல் இருந்தது.

தரை நழுவுவது போல உணர்வு ஏற்பட்டது.மயங்கி விழுந்தான். விழுந்த சுருக்கில் வரிசையில் சலசலப்பு ஆனது. கணபதி ஓடி வந்து, ஞாயித்து கிழமை தூக்கம் போன வேதனையில் பிரம்பால் இரண்டு அடி விட்டார். சண்முகம் அசைய கூட இல்லை. அதற்க்குள் இரண்டு கரை வேட்டியும், அசிஸ்டன்ட் எஜிகேஷன் ஆபிஸரும் ஓடி வந்தார்கள்.

"யோவ் வாத்தியாரே. என்னையா இதெல்லாம். நீ பார்க்கறதில்லையா. மினிஸ்டர் ஐயா வர நேரம் ஆச்சு. இந்த பயலை தூக்கிட்டு போய் ஸ்கூல்குள்ள போடு"- கரை வேட்டி ஓன்று.

கணபதிக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. இதில் கரை வேட்டி ஓருமையில் பேசியது வேறு கோபம் வந்தது. ஆனால் கரை வேட்டியை பார்த்த பயம் கோபத்தை தின்று விட்டிருந்தது.

"சார் நான் தூக்கிட்டு போறேன். நீங்க பசங்க வரிசை கலையாம பார்த்துகுங்க. மினிஸ்டர் ஐயாவுக்கு டிசிப்ளின்னா உயிரு"- எஜிகேஷன் ஆபிஸர்.

சண்முகத்தை தோளில் போட்டுக் கொண்டு கொண்டு ஓடினார்.

"நம்ம ஆளுங்க இரண்டு பேரையும் இங்க ஓரு கண்ணு வச்சுக்க சொல்லு. இன்னும் ஏதேனும் மூதேவி மயக்கம் போட்டா உடனே எடுத்திட சொல்லு. வூட்டை விட்டு கிளம்பும் போதே அம்மா மூஞ்சில முழிச்சிட்டு கிளம்பினேன். தாலியறுத்த மூஞ்சை பார்த்திட்டு போகாதிங்கனு வீடல சொல்லியும் கேட்காம அவசரத்தில ஓடி வந்திட்டன். கருமம் இங்க இப்படி ஆகுது."- கரை வேட்டி இரண்டு புலம்ப ஆரம்பித்தது.

கரை வேட்டி ஓன்று காலையில் தான் யார் மூகத்தில் முழித்தோமென யோசிக்க ஆரம்பித்தது.

கணபதி பதட்டமாய் லேசாக கலைந்த வரிசைகளை ஓழுங்கு படுத்த ஆரம்பித்தார்.

********************

அசிஸ்டென்ட் எஜிகேஷன் ஆபிஸர் மைதானத்தில் இருந்து கொண்டு வந்த சண்முகத்தை மேடைக்கு பின்புறம் போய் பெஞ்ச் ஓன்றில் படுக்க வைத்தார். தண்ணீரை தேடி சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்தார்.

"சார் உங்களை எங்கெல்லாம் தேடுறது. மினிஸ்டரோட ஓன்னு விட்ட மச்சினி கூப்பிடறாங்க. அவங்களுக்கு மினரல் வாட்டர் எடுத்து வரச் சொன்னா சாதா தண்ணீயை கொண்டு போய் கொடுத்திடிங்களாமே"- தலைமயாசிரியர் வேர்த்து விறுவிறுத்து ஓடி வந்தார்.

அசிஸ்டென்ட் எஜிகேஷன் ஆபிஸருக்கு பேச்சு மூச்செல்லாம் நின்றிடும் போல் இருந்தது. ஏதாவது தண்ணியில்லா காட்டுக்கு மாற்றல் வந்தால் என்ன செய்வதென்ற கவலையும் வந்தது.

"அப்படி கொடுப்பேனா சார். ப்யூன் ராஸ்கல் மினரல் வாட்டர்னுதான் சொல்லி க்ளாக்ஸை கொடுத்தான். அவனை என்ன பண்ணறேன் பாருங்க'- சொல்லிவிட்டு தலை தெறிக்க அந்த அம்மாவை பார்க்க ஓடினார்.

தலைமை ஆசிரியரும் நடக்க போகும் கூத்தை பார்க்கும் ஆர்வத்தில் பின்னால் ஓடினார். சண்முகம் வெய்யில் கிடந்தான்.

**************************

கூட்டம் முடிகையில் மூன்று மணியாகி விட்டது. வெயில் அதிகமாக இருந்ததால் ஏசி காரில் வந்த ஏழை பங்காள தலைவர் குழந்தைகள்தான் இந்தியாவின் எதிர்காலமென முழங்கி, உண்மை , நேர்மை, கடமை பற்றி அறிவுறுத்தி, எதிர் கட்சிகாரனுக்கு எச்சரிக்கை விடுத்து இலவச புத்தகம் பத்து பிளைகளுக்கு கொடுத்து விட்டு ஓய்வெடுக்க ஏசி அறை தேடி சென்று விட்டார்.

தலைவர் என்னமா பேசினாரென கட்சிக்காரர்கள் பெருமையாடு பேசிக் கொண்டனர். வள்ளுவருக்கு அப்புறம் சுருங்க சொல்லி இவ்வளவு அர்த்தமா பேசறது தலைவர் ஓருத்தர் தானேன கரை வேட்டிகள் சொல்லி பெருமை பட்டுக் கொண்டனர்.

பிள்ளைகள் பசியோடு வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தனர். சத்திய சீலன் சண்முகத்தை தேடி பள்ளியை சுற்றி வந்து விட்டு மேடைக்கு பின்னால் போன போது சண்முகத்துக்கு மூச்சு காற்று இல்லை.

விளையாட போன சண்முகம் தடுக்கி விழுந்து தலையில் காயம் பட்டு இறந்து விட்டதாக கட்சிக்காரர்கள் சொன்னார்கள். யாரும் அதை மறுக்கவில்லை.

1 comment:

Unknown said...

Romba nalla kadhainga. padichadhum manasu kashtamayiduchi. namakkunnu pullai kuttinga vandhappuram dhaan ulagathai pakkura paarvaye maarippogudhu.