Monday, November 20, 2006

மேய்ச்சல் 1

மற்றுமொரு தேங்ஸ் கிவ்விங் டே வந்து விட்டது. கண்ணை கட்டி திறப்பதாய் காலம் நகர மீண்டும் முளைத்து நிற்கிறது. தொடர்ந்தாற் போல் நான்கு நாட்கள் விடுப்பு. நவம்பர் மாத கடைசி வாரத்தின் வியாழனில் இப்பண்டிகை கொண்டாப்படுகிறது. அமெரிக்க மரபுபடி இந்நாளில் வான்கோழி உணவு சாப்பிட்டு இரவு உணவு நடக்கும். நம்ம ஊர் பக்கம் தீபாவளி சமயங்களில் வான்கோழி பிரியாணி திடீர் கடைகள் தோன்றுவதை பார்த்திருக்கிறேன்.

அக்காலத்தில் குடியேறிய அமெரிக்க மூதாதைகள் இங்கிலாந்தின் உழவர் திருநாளை இங்கு தேங்ஸ் கிவ்விங் டேயாக கொண்டாட ஆரம்பித்தார்கள் என உடன் வேலை பார்க்கும் அமெரிக்க தோழர் கூறினார்.

இப்பண்டிகைக்கு அடுத்த நாள் கறுப்பு வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஆடிமாச சிறப்பு தள்ளுபடி கும்பல் போல் கறுப்பு வெள்ளி அன்று இங்குள்ள கடைகளில் கும்பல் அள்ளும். காலை இரண்டு மணி வாக்கில் இருந்தே கடுங்குளிரில் நின்று இந்த தள்ளுபடி விற்பனைக்கு கும்பல் காத்திருக்கும்.முதல் நாள் செய்திதாளில்தான் இந்த தள்ளுபடி பற்றிய அறிவிப்புகள் வரும். காலை ஆறு மணிக்கெல்லாம் எல்லா செய்திதாளும் விற்றுப் போகும்.

போன வருடம் மனையாள் அலுவலகம் சென்று விட நானும் நண்பன் ஒருவனும் வீடியோ கேம் நாள் என கறுப்பு வெள்ளியை எக்ஸ் பாக்ஸூடன் கொண்டாடினோம். இந்த முறை முதன் முறையாக அம்மா, அப்பா மற்றும் மகளுடன். வீடியோ கேம் வீட்டின் அடித்தளத்தில் படுத்துக் கொண்டு பார்க்கும் போதேல்லாம் என்னை பார்த்து புலம்பிக் கொண்டே இருக்கிறது.

செய்திகளில் வாசிக்கையில் குவாண்டம் கணிப்பொறி பற்றி படித்தேன். அசாத்திய ஆற்றல் உடையதாய் அதை பற்றி சொல்லியிருந்தார்கள். அமெரிக்காவின் உடா மாகணாத்தை சேர்ந்த ஆய்வுக்குழு ஓன்று சிலிக்காவில் பொதிக்கப்பட்ட பாஸ்பரஸின் அணுக்களின் சுழற்ச்சியில் தகவலை பொதித்து அதை படிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். குவாண்டம் கணிணி தொழில் நுட்பம் அதன் முதல் அடிகளில்தான் இன்னும் இருக்கிறது.

தற்போதுள்ள கணிணிகளில் தகவல் 0 மற்றும் 1 என பிட்ஸ்(bits) ஆக சேமிக்கப்படுகிறது. ஓவ்வொரு பிட்டும்(bit) 0 அல்லது 1 என்ற நிலையைதான் சேமிக்க முடியும். குவாண்டம் கணிணி நுட்பத்தில் க்யுபிட்(qubit) என்பதில் தகவல் சேமிக்கப்படுகிறது. ஓரு க்யுபிட் என்பது 0 மற்றும் 1 என்ற இருநிலைகளிலும் ஓரே சமயத்தில் இருக்க முடியும். ஆக சாதாரண பிட்டை விட க்யுபிட்டில் இரு மடங்கு தகவல் சேமிக்க முடியும். அப்படியானால் இதன் ஆற்றலை கற்பனை செய்து பாருங்கள்.

தற்போதைய யுடா சோதனையில் தனிப்பட்ட அணுவின் சுழற்சியை படிக்க முடியவில்லை. ஆனால் ஓரே நேரத்தில் 10,000 அணுக்களின் சுழற்சியை படிக்கும் முறை வரை வந்திருக்கின்றனர். இதற்கு முந்தைய முயற்சிகளில் 10 பில்லியன் அணுக்களின் சுழற்சியையே படிக்க முடிந்தது. அதனோடு ஓப்பிட இது பெரிய முன்னேற்றம்.

மேலும் தகவல்களுக்கு

சென்ற வார இறுதியில் எம்டன் மகன் என்ற படம் பார்த்தேன் சாவு வீட்டின் நகைச்சுவை நன்றாய் வந்திருந்தது. தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அதன் தாக்கம் இயக்குனரிடம் உண்டு.கிளைமாக்ஸ் காட்சி அதற்கு உதாரணம். ஓரு பாட்டில் பணக்காரனாய் மாறுவதை எப்போதுதான் நிறுத்த போகிறோமோ? பரத் நன்றாக செய்கிறார். கோபிகா வடிவாய் இருக்கிறார். யுகபாரதியின் கோலி குண்டு பாடல் ரசிக்க வைக்கிறது.

சாக்லேட் சாப்பிடுவது பற்றி சுவையான தகவல் ஓன்றை என்.பி. ஆர் ரேடியோவில் கேட்டேன். சக்கரை இல்லாத சுத்தமான சாக்லேட் இதயத்திற்கும், குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் நல்லதாம். இது எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த மருத்துவர்களின் ஆய்வு முடிவு. சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்ட்ஸ் என்னும் கெமிக்கல் இக்தகைய நல்லதை செய்யும். அதற்காக தட்டு நிறைய அள்ளி வைத்து சாப்பிட வேண்டாம். அது என்றும் நல்லதற்கில்லை.

No comments: