Monday, November 27, 2006

மேய்ச்சல் 2

ஒரு வழியாய் நன்றி நவிலும் விடுமுறை முடிந்தது. இலையுதிர் காலம் போல விடுமுறை காலத்தில் சோர்வை உதிர்க்க மனம் பாரம் குறைக்கிறது.ஊர் கதை, திரைப்படம் இரண்டு, மகளுடன் பொழுது , பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று என கலவையாய் போனது. மீண்டும் அடுத்த வருடம் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடுமுறை விடை பெற அலுவலகம் வந்து சேர்ந்தாகி விட்டது.

விடுமுறையே இல்லாத வேலையை எண்ணி பார்க்கையில் சற்று பயமாக உள்ளது. ஊர் பக்கம் அது போல் உறவினர் நிறைய உண்டு. சொந்த தொழில் புரியும் அவர்களுக்கு ஒய்வு, ஒழிச்சலே இருப்பதில்லை. மனதில் சக்கரம் கட்டிய வாழ்க்கை. எப்போதும் தொழில் ரீதியான சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும். முதல் போட்டவனுக்குதான் தொழிலின் வலி புரியும் என்பார்கள். சொந்த தொழில் புரிவோருக்கு சோதிடம், கடவுள் ரீதியான நம்பிக்கை அதிகமாய் இருப்பதாய் எப்போதும் ஒரு எண்ணம் உண்டு. தொழிலின் மேடு பள்ளங்களின் போது அவை ஒரு குஷனாக அவர்களுக்கு அவை உதவுகின்றன.

கடல் சார்ந்த கரையோரங்கள் இனிமையானவை. இரு வருடங்களுக்கு முன் டேடோனா பீச்சில் செலவிட்ட விடுமுறை நாட்கள் நியாபகம் வந்தது. நாள் முழுதும் கடலுக்குள் செல்வதும், கரைக்கு வருவதுமாய் போனது. ரசிக்கதக்க பொழுது அது. சூடும் , குளிர்ச்சியும் ஒன்றாய் பரவும் அந்த கணத்தின் ஈரச்சுவடுகள் இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளன.

கடலை பற்றி யோசனை வருகையில் பசிபிக் கடலில் ஹவாய் அருகே உருவாகி இருக்கும் ப்ளாஸ்டிக் வோர்டெக்ஸ் பற்றி படித்தது பற்றி சொல்ல வேண்டும். இந்த ப்ளாஸ்டிக் சுழல் கிட்டதட்ட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணம் அளவிற்கு பெரியது. பொறுப்பற்ற முறையில் கடலில் வீசப்படும் ப்ளாஸ்டிக் இந்த சுழலை உருவாக்கி கடல் உயிரினங்களை கொன்று கொண்டு வருகிறது. சுற்றுலா, கடலில் கலக்கும் கசடுகள்,மீன் பிடிப்பு, கப்பல்களில் இருந்து வரும் குப்பை என்ற நான்கு காரணிகளால் கடலில் இந்த பாதிப்பு உருவாகி வருகிறது. கையிலிருக்கும் ப்ளாஸ்டிகை மறுசுத்திகரிக்கும் குப்பை கூடையில் போட மறுக்கும் தனி நபரின் சோம்பேறி தனமோ, அலட்சியமோ இன்று இந்த அளவுக்கு கடலை பாதிக்கும் ஒரு காரணியாய் பெரிதாய் வளர்ந்துள்ளது. இது வருந்த தக்க ஓரு விஷயம்.


இன்று படித்த ஒரு சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால் ஹம்ப்பேக் திமிங்கலங்களிடம் ஸ்பின்டில் நியுரான் எனப்படும் மனிதரிடமும், சிம்பன்ஸி வகையினத்திலும் காணப்பட்ட மூளை செல்கள் இருப்பதாய் அறிவியலார்கள் அறிவித்துள்ளனர்.


ஸ்பின்டில் நியுரான்கள் மனித அறிவிற்கும், சிந்திக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான செல்கள் ஆகும். நம்மிடையே வாழும் சில சிந்தனாவாதிகள்(!) போல் இந்த ஸ்பின்டில் நியுரான்கள் ஹம்பேக் திமிங்கலங்களால் எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பதை இன்னும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

சுற்றுப்புற சுழலின் கேடுகளின் பாதிப்பு கங்கையை தொட்டு விட்டதை பற்றி இந்திய செய்திகளில் பார்க்க முடிந்தது. பல்வேறு அரசியல் மற்றும் கிரிகெட் காமெடிகளுக்கு இடையே இந்த செய்தி மறைந்திருந்தது. கங்கோத்ரியில் பனி 1935ம் வருட வாக்கில் ஏழு மீட்டர் கணக்கிற்கு ஓவ்வொரு வருடமும் உருகி வந்திருந்ததாம், இப்போது இது இருபத்தி மூன்று மீட்டர் ஒரு வருடத்திற்கு உருகுகிறதாம். புனித நதி , வருட விழா என கங்கையை கொண்டாடினால் மட்டும் போதுமா? அதன் இருப்பை பற்றி அக்கறை கொள்ள வேண்டாமா? உட்கார்ந்து யோசிக்க வேண்டும்.


உட்கார்ந்து யோசிக்கையில் ஒரு விஷயத்தை நினைவு கொள்ள வேண்டும். 90 டிகிரியில் நேராய் உட்கார்தலே நலம் என்று நினைத்து தவறு என்று அறிவியலார் கூறுகின்றனர்.135 டிகிரியில் உட்கார்தலே நலம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.முதுகு வலி வராமல் இருக்க இதுவே நல்ல வழி என கனடாவை சேர்ந்த அல்பெர்ட்டா பல்கலை கழக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

(ஹம்பேக் திமிங்கலத்தின் பட உரிமை gwoodford. )

No comments: