Friday, November 3, 2006

கடலுணவு

வீட்டில் அம்மா சைவமாக இருந்ததால் அசைவம் சாப்பிட பழகின காலங்களில் முழுக்க முழுக்க ஹோட்டல்களில் மட்டன் வகையறாவில்தான் வாழ்க்கை இருந்தது. ஓரு நாள் அக்கா கையால் வறுத்த மீன் சாப்பிட எல்லாமே மாறி போனது. சாப்பிட்டது என்ன மீன் என்று நியாபகம் இல்லை. ஆனால் அந்த ருசி இன்னமும் மனசில் உண்டு. அப்போது தஞ்சை பக்கம் வீடு. அக்கா வீட்டு மீனுக்காக திருச்சி வர ஏக்கமிருக்கும்.

அமெரிக்கா வந்து பிரம்மசாரியாய் இருந்த போது கோழிதான் பிராதான அசைவ உணவு. அறை நண்பர்களின் அற்புத சமையல்களில் வகை வகையாய் கிடைத்தது. மீன் சமையல் செய்தல் யாருக்கும் புலப்படவில்லை. நல்ல மீன் வருவல் வெளியிலும் கிடைப்பதில்லை. அப்போது கிரிலில் வாட்டி எடுத்த அமெரிக்க மீனிற்கு நாக்கு பழகவில்லை.

ஆரம்ப காலத்தில் கிராப் கேக் என்ற நண்டு உணவு மட்டும் மிக பிடிக்கும். அதை மட்டும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்போது இந்த ஊர் கடல் உணவும் பழகி விட்டது.

இன்று காலை அலுவலகம் வரும் போது என்.பி.ஆர் வானோலியில் அதிர்ச்சி தரும் செய்தியை கேட்க நேர்ந்தது. 2048ல் கடலுணவு எல்லோருக்கும் சாத்தியமில்லை என்று சொன்னார்கள். அதிகப்படி மீன் பிடிப்பும், மாசுப்படுத்தப்பட்ட இயற்கை சூழல்களும் கடல்வாழ் உயிரிகளின் இருப்பை பெரிதும் பாதிக்கின்றன. 1960ல் இருந்து மீன் பிடிப்பது கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இந்த நிகழ்வை எதிர்பார்க்கின்றனர். காரை நிறுத்தி விட்டு நடந்து செல்லாமா என்று யோசித்தேன். என் காரும்தானே சுற்று சூழலின் மாசுக்கு ஒரு காரணம்.நடைமுறையில் சாத்தியமானது அலுவலக பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்தி அலுவலகத்திற்கு நடப்பது மட்டுமே.

மீன் பிடித்தல் பலரின் வாழ்க்கை முறையாய் உள்ளது. அவர்களது அன்றாட வாழ்வும் இது போல் கடல் உயிர்கள் அரிதாவதால் பாதிக்கப்படும். கவலையான விஷயம்.

இதை தவிர்க்க கடலுக்குள் கடல் உயிர்களுக்கான சரணாலயமும், மீன் பிடிப்புகள் தடை செய்யப்பட்ட பகுதிகளும் வர வேண்டியிருக்கும். இது போல் கொணர்தலின் பயன் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் சில இடங்களில் வெளிப்படையாக உள்ளது.

ஏற்கனவே மாசுப்பொருள்களால் உலகில் ஏறி வரும் வெப்பம் துருவ முனைகளில் பனி உருகுதலை அதிகப்படுத்தி உள்ளது. அதன் விளைவுகளையும், கட்டுப்படுத்தும் முறை பற்றியும் விவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன. அதன் பக்க விளைவுகளாய் ஏற்படும் கடல் உயிரிகளின் பாதிப்பும் எதிர்கால மாசுக்கட்டுப்பாடு பற்றிய திட்டமிடல்களின் அவசியத்தை இன்னமும் அதிகமாய் வலியுறுத்துகின்றன.

No comments: