Saturday, March 3, 2007

சில்லறை வணிகம்

சில்லறை வணிகத்தில் பெரும் வணிகர்கள் இறங்குவதன் விளைவுகளை ஆய்வு செய்து பதிப்பிக்க வேண்டி இந்திய பன்னாட்டு வணிக உறவு ஆய்வு மைய குழுவை நமது பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் ஐந்து மாதத்தில் இதன் முடிவுகள் வழங்கப்படும்.

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலாளிகளை எதிர்ப்பவர்கள் உள்நாட்டு முதலாளிகளையும் எதிர்க்கின்றார்கள். ரிலையன்ஸின் ப்ரஸ், டாடாவின் இன்பினிட்டி போன்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் கொடி பிடிக்கப்படுகின்றது.

தற்போதைய வணிக சூழ்நிலையில் விவசாயிகள் விளைபொருள்களுக்கு முழுவிலை கிடைப்பதால் மகிழ்ச்சியாகவும்,நுகர்வோர் சரியான விலை உள்ளதால் மிக மிக மகிழ்ச்சியாகவும் இருப்பது போன்றும், இனி பெரு வணிகர்கள் வருவதால் இது பாதிக்கப்படும் என்றும் காட்சி வைக்கப்படுகின்றது.

எங்கள் வீட்டில் புள்ளிவிவர கணக்கு எடுத்ததில் அப்பா,அம்மா திருச்சியில் ரிலையன்ஸோ,டாடாவோ வந்தாலும் அவர்கள் போவாதாயில்லை என்று சொன்னார்கள்.நூறு கிராம், அல்லது நூற்றம்பது கிராம் என காய் வாங்குகிறோம். பால் ஒரு நாளின் தேவைக்கு பாக்கெட்டில் வாங்கி கொள்கிறோம். இதற்கு தெருமுனை கடைதான் வசதி என்றார்கள்.

நீங்கள் மொத்தமாக வாங்கி குளிர்பதன ்பெட்டியில் பதப்படுத்திக் கொள்ளலாமே என்றதற்கு செய்யலாம் ஆனால் இப்போது இருக்கும் குளிர்பதன பெட்டி சிறியது, வாரக் கணக்கில் சேகரிக்க இது ஆகாது, பெரிதாய் வாங்க வேண்டும். கோடையில் மின்சார தட்டுப்பாடு வருகையில் பெரிதாக இருந்தாலும் புண்ணியமிருக்காது என்றார்கள். மளிகை கடைகாரருக்கு எங்கள் வீட்டால் கிடைக்கும் வியாபாரம் எதிர்காலத்தில் மாற போவதில்லை.

உள்ளூர் சந்தையை காண்கையில் அங்கிருக்கும் வணிகர்கள் விவசாயிடம் இருந்து நேரடி வணிகம் செய்வதில்லை. அவர்கள் ஏல முறையில் காலையில் காய்கறிகளை இடைமனிதர்களிடத்து வாங்குகிறார்கள். அந்த இடைமனிதர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடைமனிதர்களிடத்து இருந்து பொருள்களை உள்ளூர் சந்தைக்கு தருவிக்கிறார்கள் போலும். இரண்டாம் நிலை இடைமனிதர்கள் விவசாயிகளிடத்து இருந்து விலைக்கு பொருள்களை வாங்குகிறார்கள். உள்ளூர் ்விவசாயி ்நேரடியாக விளைபொருளை கொணர்ந்து கடை விரிக்க இயலாதாம். இரண்டு இடை மனிதர்களுக்கான பங்கு பணம் பொருளின் விலையின் சேர்க்கப்பட்டு அதற்கும் சேர்த்து விலை செலுத்துகின்றோம். இந்த தகவல் செவிவழி அறிந்தது.

பெரும் வணிகர் வருகையில் இரு இடை மனிதர்கள் காணாமல் போகிறார்கள். விவசாயி, பெருவணிகர், நுகர்வோர் என்ற மூன்று அடுக்கு அமைகின்றது. இரு அடுக்குகள் காணாமல் போவது அதை தொழிலாக கொண்டிருப்போருக்கு இழப்பே. அவர்களின் இழப்பு நுகர்வோருக்கும், விவசாயிக்கும் வருமானம்.

மற்றொரு முக்கிய கோணம் வரிப்பணம். இடைமனிதரோ, சிறு அளவு வணிகம் புரிவோரோ வரி பொதுவாக செலுத்துவதில்லை. வரிப்பணமே சத்துணவாக, அங்கன்வாடியாக, இலவச மின்சாரமாக பொதுமக்களுக்கு போய் சேருகின்றது. ஆனால் பெரு வணிகம் வரும்போது வரிப்பணம் அரசுக்கு சேருகின்றது.

இப்போதே சிறு பெரு நகரங்களில் சூப்பர் மார்கெட் கடைகள் உண்டு. இவை உள்ளூரில் உள்ள சிறு கடைகளுக்கு போட்டியே. சிறு கடைகளை விட விலை குறைவே. அவைகளை எதிர்த்து போராடுவதில்லை. பால் சில்லறையாக கதவுக்கு வருவது கிட்டதட்ட காணாமல் போய் பாக்கெட்டுகளில் கடைகளில் கிடைக்கின்றது. அதற்காக கண்டண கூட்டங்கள் நடத்துவதில்லை. ஆனால் ரிலையன்ஸ்,டாடா என்ற பெயர்கள் வருகையில் அச்சம் பரப்பபடுகின்றது.

எனக்கு தெரிந்து காதி கதராடை கடைகளிலும், கோஆப்டெக்ஸிலும் மட்டும் வணிகம் செய்வோம் என யாரும் தீர்மானம் போட்ட்தில்லை. கெடுநாள் அறிவித்ததில்லை. மாற்று கடைகள் உண்டு, வணிகமும் உண்டு.சிறு வணிகர்,பெரு வணிகர் என்ற குரல்கள் இல்லை. கடந்த ்முறை சென்னை வந்தபோது ஆலன் சாலியும், டாக்கர் பேண்ட்ஸூம் நல்ல முறையில் ஸ்பென்சரில் இருந்தன.

3 comments:

Anonymous said...

வேற யாராவது எழுதிருக்காங்களா இதைப் பத்தின்னு (ரிலையன்ஸ் வணிகம்) கொஞ்ச நாளா தேடிட்டுருன்தேன். புளியமரம் - தங்கவேல் எழுதிருக்காங்க. http://puliamaram.blogspot.com/

முக்கியமான விஷயம் இது, பேசி தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு - தமிழ்மணத்தில ரொம்ப பேச்சு மூச்ச காணோம்! :)
நல்லா எழுதிருக்கீங்க நிர்மல்.

ஒரு பெண் விவசாயி, அல்லது பெண் காய்கறி விற்பனையாளரின் வாழ்கை எவ்வாறு மாறும் அப்படின்ற கோணத்தில இன்னும் யோசிச்சிட்டிருக்கேன். இன்னும் படிக்கணம் நிறைய. உங்கள் பதிவு நல்ல உதவியா இருந்தது.

Bala said...

சில்லரை வியாபாரத்தினால் ஒரு சில இடைமட்ட வியாபாரிகளிக்கு வியாபாரம் குறையும். ஆனால் கீழ்மட்ட வியாபாரிகளுக்கு பாதிப்பு சிறிதளவு மட்டுமே இருக்கும். உற்பத்தியாளர்களுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கும், மற்றும் அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்யப்படும். நுகர்வோருக்கு விலை குறையும் (வியாபார போட்டியினால்). மேலை நாடுகளில் தெருமுனைக் கடைகள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதனால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது நிச்சயம். சிலருக்கு கஷ்டம், பலருக்கு விடிவு.

இது குறித்த விரிவான என் கட்டுரைகள்
http://balablooms.blogspot.com/2007/02/microfranchising-1.html
http://balablooms.blogspot.com/2007/02/microfranchising-2.html
http://balablooms.blogspot.com/2007/02/microfranchising-3.html

நிர்மல் said...

மதுரா,

எனக்கு தெரிந்து செல்வனும் சந்தோஷூம் இது குறித்து எழுதியுள்ளார்கள். நீங்களும் அவசியம் எழுதுங்கள்.

பாலா,

நன்றி.இது வரை படிக்கவில்லை. அவசியம் படிக்கின்றேன்