பெருவணிகர் நிலையில் லாபமே அவருக்கு பிரதானம். அவர்கள் தங்கள் பங்குதாரருக்கு லாபமூட்டும் வகையில் மூலப்பொருள் வழங்கும் விவசாயியை நோக்கி தங்கள் கரத்தை செலுத்துவார் என்பதும் நடக்க கூடியதே.விவசாயிகள் கூட்டுறவு முறையில் இயங்கி கொள்முதல் செய்யும் முதலாளிகளோடு பேரம் பேசி விலை நிர்ணயம் செய்யும் உரிமை கொண்டிருந்தால் இந்த பிரச்சனை தவிர்க்கப்படலாம்.
இடைமனிதர்களும், கடமை உணர்வற்ற அரசு கொள்முதல் இயந்திரங்களும் அகற்றப்பட்டு விவசாயம் தொழிலாக மாற்றப்பட்டு சந்தையில் இயங்கலாம். பிரச்சனையே இல்லாத தொழிலாக விவசாயம் இருக்குமென்பதற்கான உறுதி பத்திரம் எதும் கிடையாது.எல்லா தொழில்களுக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களோடு ஆனால் தனியார் மயமான விவசாயி விளைபொருளுக்கு விலை நிர்ணயம் தொழிலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
பெருவணிகர் கொள்முதல் வருகையில் வருட சாமான்கள் விற்கும் சந்தைகள் காணாமல் போகலாம் அல்லது அதன் அளவு குறைந்து போகலாம். இப்போது திருச்சியில் இருந்து கொல்லிமலை சென்று சந்தையில் பொருள் வாங்கும் எங்கள் ஊர் பொது மக்கள் அதற்கு மாற்றாக வேறு ஒன்றை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்கையில் பொருளாதார நட்டம் எங்கள் ஊருக்கு உண்டான போதும், கொல்லிமலையில் சந்தை வைக்கும் விளைவிப்போருக்கு பெருவணிகரிடம் விற்பதால் ஒரே தவணையில் விற்பனைக்கான பணம் கிடைக்கும்.
பெருவணிகர் வருகையில் அவர்களை மட்டுறுத்தும் நுகர்வோர் நலம் காக்கும் சட்டங்களை தூசு தட்டி எடுத்தலும், அவற்றின் இருப்பை பற்றிய அறிவை பொதுமக்களிடம் கொண்டு செல்லுதலும் மற்றும் இவ்வாறான சட்டங்கள் பாரபட்சமற்ற முறையில் நடைமுறை படுத்தபடுதலும் முக்கியம். நுகர்வோர் தங்கள் உரிமைகளை பற்றிய தெளிவான அறிவை கொண்டு, எல்லாம் என் விதி என்று நினையா மனநிலைக்கு வருதல் பெருவணிகர் வளர்களையில் அவசியமான ஒன்றாகும்.
பெருவணிகர் பங்குசந்தையில் பங்குகளை விற்று பொது அமைப்பாக இயங்குகையில் தொடர்சியான லாபம் முக்கியமானதாகும். கலப்படம், எடைக்குறைவு போன்றவை இவற்றை பாதிக்கும் என்பதால் இவ்வழியில் செலவதை தவிர்ப்பார். பெருவணிகம் நேரடி கொள்முதலால் பதுக்கல், கருப்பு சந்தை போன்றவற்றை குறைக்கவும் செய்யலாம்.
அடுப்பில் பாத்திரம் வைத்து விட்டு தாளிக்க கடுகு வாங்குவது நமதூரில் சகஜமான ஒரு செயல். இது போன்றவற்றால் தெருமுனை கடைகளில் நடக்கும் வியாபாரம் பெருவணிகர் வருகையால் பாதிக்கப்படாது. சிறு, பெரு நகரங்களில் மாத சாமான்கள் விற்கும் மத்திய தர கடைகள் இது போன்ற பெருவணிகர் வருகையால் பாதிக்கப்படும். தொழில்கள் விரியும் போது பாதிப்பென்பது இயல்பே. இது சில்லறை வணிகத்துக்கு மட்டுமன்று மற்ற எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment