Thursday, March 1, 2007

நிதி அறிக்கை

இந்த ஆண்டு நிதி அறிக்கையில் கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பை முன்னேற்றுதல் போன்ற திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வழக்கம் போல் எதிர்கட்சிகள் கடுமையாய் கண்டணம் தெரிவித்துள்ளன. நிதி அறிக்கை வெளியாகும் முன்னரே கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கின்றேன்.புதிய பொருளாதார கொள்கைகள் வாயிலாக அரசின் நிதி அளவு வரிகளின் மூலம் 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது, அதுவே இப்போது சமூக முன்னேற்றத்திற்கு செலவிட பட போகிறது.

இந்த வார ஜீனியர் விகடனில் சமூகத்தை அறிவியல் பூர்வமாக(?!) ஆராய்ந்து வண்ண தொலைக்காட்சி அளித்தால் சமூகம் மேம்படும் என்று அரசு முடிவு செய்து கொண்டு வந்த திட்டத்தில் ஊழல் நடப்பதை பற்றி சொல்லியிருந்தார்கள். இந்த மாதிரியெல்லாம் ஊழல் செய்ய முடியுமா என நாமெல்லால் ஆச்சரிய படுமளவுக்கு ஊழல் செய்கிறார்கள். இந்த திட்டத்தினால் சமூகம் எந்த அளவுக்கு முன்னேறுகின்றது என்பதை எப்படி அளவிட போகிறார்கள் என்று தெரியவில்லை.

மான்யங்களும் இலவச திட்டங்களும் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு படிக்கட்டுகளாகவும் இருத்தல் நலம். மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடிகள் இதற்கு சிறந்த உதாரணம்.

சமீப காலங்களில் சமூக நல திட்டங்களில் செலவிடல் நிறைய கட்சிகாரர்களின் நிதி இருப்பை அதிகரிக்கின்றதே தவிர யாரை குறிவைத்து திட்டம் அறிவிக்கப்படுகின்றதோ அங்கே போய் சேருவதில்லை. சுவரோட்டிகளிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இந்த திட்டங்களை பற்றி அதிகம் காண முடிகின்றது. ஒரு கட்சிகாரர் இன்னோரு கட்சிகாரரிடம் என் தொலைக்காட்சி சானலுக்கு அரசு விளம்பரம் கொடுங்கள் என்று பொது மேடையில் கேட்டு விட்டு சமூக நீதியும் பேசுகிறார், அதற்கும் கை தட்டுகின்றோம். ஒரு கட்சி தலைவர் விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரக்கூடிய சந்தையை போன ஆட்சியில் அமைக்கப்பட்டது என்ற ஒரே காரணம் காட்டி மூடி விடுகின்றார், அவருக்கும் கை தட்டுகின்றோம். விதியை மீறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதித்த அரசு ஊழியர் கண்டிக்கப்படுகின்றார், அவரை பிழைக்க தெரியாதவர் என்று முத்திரை குத்தி விளையாட்டு வீரருக்கு கைதட்ட போகின்றோம். கலாச்சாரம் என்பது கைதட்டுதலிலும், புகழ்பாடுதலிலும், கையூட்டு வாங்குதலிலும் உண்டு.

கல்விக்கான நிதி அறிக்கையின் அளவு 34 சதவீதம் உயர்ந்துள்ளது. மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கான அளவு 21.9 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வில் எத்தனை சதவீதம் உண்மையில் சமூக பலனளிக்க சென்று சேர போகிறதோ தெரியவில்லை. ஊழலையும், சுரண்டலையும் கட்டுப்படுத்தாமல் விடுவது பொருளாதார முன்னேற்றத்தை பெரிதும் பாதிக்கும். மக்களின் மனோபாவம் கையூட்டு வாங்கினால் என்ன தவறு என்று ்கேட்கும் நிலையில் வந்து நிற்கின்றது. இந்த மனோபாவம் வளரும்போது எங்கு போய் முடியும் என்பது பயமாக உள்ளது. இது பிரச்சனையே இல்லை என்று கண்களை மூடிக்கொண்டு சமூக மேம்பாட்டிற்கு உழைக்க முன்னே போவதும் ஒடுகிற ஆற்றில் வரிப்பணத்தை கொட்டுவதும் ஒன்றுதான்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவதலின் ஊடான பிரச்சனைகள், சலுகை மட்டும் கேட்டு ஒட்டு போட வராத மத்திய தர வர்க்கமும், மேல் தட்டு வர்க்கமும், வரப்போகும் தேர்தல்கள் போன்ற பல மூடப்பட்ட கதவுகள் நடுவே இந்த நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயம் அறுபது சத வீத மக்களை தாங்கும் பொருளாதார அமைப்பின் நடுவே விவசாய துறையை நவீனபடுத்துதலுக்கும், அதன் மேம்பாட்டிற்கும் எதும் சொல்லபடவில்லை. தொழிளாளர் சட்ட சீர்திருத்தங்கள், பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், வெளிநாட்டு முதலீட்டை அதிகப்படுத்துதல் குறித்தும் எதும் தகவல்கள் இல்லை.

No comments: