மென்பொருள் துறையால் சம்பளம் அதிகரிக்கின்றது. விலைவாசி ஏறுகின்றது. அதன் பலன் பல தட்டு மக்களிடம் சென்று சேருவதில்லை.விதர்பாவில் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வது மறக்கப்படுகின்றது போன்ற கருத்துகள் வலைத்தளங்களில் முன்னிறுத்தப்படுகின்றது.
விதர்பாவின் பிரச்சனையை முதலில் எடுத்துக் கொள்வோம். விதர்பா மகாராஷ்டிர மாநிலத்தில் இணைக்கப்பட்ட காலத்திலிருந்தே பிரச்சனைதான். மென்பொருள் துறை வளர்ச்சி அடையாமல் இருந்திருந்தாலும் இப்போது உள்ள குறைபாடுகள் எதுவும் களையப்பட்டிருக்காது. மகாராஷ்டிர மாநில ஆண்டு நிதி அறிக்கையில் எப்போதும் விதர்பா பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு குறைவே. மகாராஷ்டிராவின் மொத்த நீர் வள பெருக்கும், தடையில்லா மின்சாரமும் வேறு பகுதிகளுக்கு திருப்பப்டுகின்றது. இதை பற்றிய பல தகவல்களை வலைதளங்களில் காணலாம். ஆட்சில் இருப்போர் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வந்து கொண்டு இருப்பதால் அந்த பகுதியின் ஓட்டு வங்கியை காப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள்.
விதர்பாவின் பாசன வசதிகள் மிக மோசமானவை. அதை மேம்படுத்தும் திட்டம் பற்றிய குரல்கள் எழுவதில்லை. விவசாயியை ஆதரிப்பதாக வரும் குழுமங்கள் கூட அவர்களின் நோக்கமான வெளிநாட்டு நிறுவன எதிர்ப்பு என்ற நிலையில் பிடி காட்டனை கண்டிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள். அடிப்படை உரிமையான பாசன வசதி பற்றிய விழிப்புணர்வோ, முக்கியத்துவமோ மறக்கப்படுகின்றது. மரபணு மாற்றப்ட்ட பிடி காட்டனிலும் போலி விதைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை செய்தவர் யார், தொழில்ரீதியாக இவ்விதைகளை விற்பனை செய்வதற்கு தனிமனிதர் இயலாது, ஒரு கூட்டம் இருக்கவேண்டும். அவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் காண இயலவில்லை. விவசாயம் நஷ்டமடைந்து வறுமையில் இருப்பவர்களிடம் செத்தால் இரண்டு லட்சம் என அறிவிக்கும் 'புத்திசாலி' நிர்வாகமே மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் உண்டு. மகாராஷ்டிரா பருத்தி கொள்முதல் கூட்டுறவு அமைப்பின் ஊழல் மற்றும் நிர்வாக கோளாறுகளை பற்றி தகவல்களை வலைத்தளங்களில் காணலாம். இருப்பே போராட்டமாய் இருக்கும் விதர்பாவின் விவசாயிகளின் கடைசி கோவணத்தையும் உருவும் இவர்களின் கரை படிந்த கரங்களையும் பல வலைத்தளங்கள் கண்டு கொள்வதில்லை. இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் எனெனவென்றால் இது போன்று ஊழல்களில் ஈடுபடுவோரும் சாமானயரே. குழந்தை, மனைவி பாசம் என்று எல்லா விஷயங்களை அனுபவித்து டிவி சீரியல் பார்த்து கண்ணீர் விடும் மத்திய தர வர்க்கத்தினரே.
வெறும் மென்பொருள் துறையை பிடித்து குறைப்பட்டு கொண்டே இருந்தால் நிகழ்வின் வேறு குறைபாடுகள் புனிதப்படுத்தப்பட்டு மறக்கடிக்க படுகின்றன. மென்பொருள் துறைக்கெதிரான பிரச்சாரத்திற்கே இது பெரிதும் பயன்படுகின்றது.தெலிங்காணா பருத்தி விவசாயிகள் விஷயத்தில் தொடக்கத்தில் கோட்டை விட்டாலும் இழுத்து கட்டி குறை களைந்த ஆந்திர அரசு மென்பொருள் துறையிலும் கவனம் செலுத்து மாநிலம் மேம்படுத்துவதை காணலாம்.
மென்பொருள் துறையில் வேலை செய்வது காற்றில் மிதப்பது போல் சுகமானது என்ற கருத்துகள் பல இடங்களில் உண்டு. இங்கு வேலை நிரந்தரம் இல்லை, வேலைக்கான தகுதிகள் மேல் நோக்கி பிரயாணித்து கொண்டே இருக்கும். எட்டு மணி நேர வேலை, வாரக் கடைசி இளைப்பாறுதல் போன்றவை அவ்வளவு சுலபமாக எல்லா மென்பொருளாளருக்கும் அமைவதில்லை. மன அழுத்தமும், கடின உழைப்பும் தேவைப்படும் துறையாகவே மென்பொருள் துறை உள்ளது.
உருவாக்கப்படும் மென்பொருள்கள் வானில் விண்கலம் செல்லவும், சுலபமாய் புகைவண்டி சீட்டு வாங்கவும், தட்பவெப்பநிலைகளை கணக்கிடவும் மேலும் பல துறைகளிலும் உதவுகின்றது என்பது அவ்வளவாக நினைவில் கொள்ளப்படுவதில்லை.
மென்பொருள் நிறுவன உருவாக்கம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது. என்பதுகளில் வேலை என்றால் அரசு வேலைகளே என்றிருந்த நிலை மாறி தனியார் நிறுவன வேலைகளையும் திரும்ப பார்க்க வைக்கின்றது. மென்பொருள் உருவாக்கத்தின் காரணமாய் கட்டடம் கட்டுதல், கட்டட நிர்வாகம், சாலை வசதிகள், புதிய குடியிருப்புகள், மின்சார உற்பத்தி மேம்பாடு, மின் விநியோக மேம்பாடு , விமான போக்குவரத்து, மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், வங்கிகளும் அதை சார்ந்த தொழில்களும் என பல உப தொழில்களும் வேறு வழியில்லாமல் மேல் வருகின்றன. மென்பொருளின் பயன்பாட்டை அதிகரித்து அதை முறைபடுத்தி அரசு அலுவலகங்களுக்கு கொண்டு வந்தால் நிர்வாகம் மேம்படும், ஊழல் குறையும் சாத்தியமும் உண்டு.
சர்வீஸ் தொழில் நிறுவனங்களே அதிகம் நம்நாட்டில் வர காரணம் மனிதவளமே. அடிப்படை கட்டுமான பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. நம்நாட்டில் தடையில்லா மின்சாரமும், மேடு பள்ளம் இல்லா சாலைகளும் ஒரு ஆடம்பர பொருளாகவே உள்ளது. இவை அடிப்படையாக மாறும் பொழுதே உற்பத்தி தொழில்களுக்கான முதலீடு அதிகரித்து அந்த வகை தொழில்கள் மேம்படும்.
இப்போது நிகழ்ந்திருக்கும் டாடா- கோரஸ் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் சாத்தியம் உண்டு. டாடாவிற்கு ஐரோப்பாவின் மிக பெரிய சந்தையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இரும்பு கோரஸ் வழியாக ஐரோப்பாவை குறைந்த விலையில் அணுகுவது சாத்தியமே. இந்த டாடா-கோரஸ்க்கான நிதி இந்தியாவின் மென்பொருள் நிறுவனமான டிஸிஸ்லிருந்து கிடைத்திருப்பதாக பத்ரியின் பதிவில் படித்தேன். ஒரு துறையின் லாபம் வேறு துறைக்கு முதலீடாக நகருகையில் அந்த துறை மேம்பட்டு பணிவாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
மென்பொருள் துறையின் மேம்பாடு சமான்யரின் பொருளாதார நிலையை உயர்த்த அதில் ஒரு பகுதி இல்லாதவருக்கு சேருதலும் அதிகரித்துள்ளது. இயற்கை சேதங்களின் போதும, கல்வி உதவிகளிலும் மென் பொருள துறை சார்ந்த இளைஞர்கள் கொண்ட தன்னார்வ அமைப்புகள் இயங்குவதை காணலாம்.
திரைப்பட மோகமும், பரபரப்பு செய்திகளுக்கு அலைவதும் நமது அடிப்படை குணம். மென்பொருள் துறை அறவே இல்லாமல் இருந்தாலும் விதர்பா விவசாயின் தற்கொலை முதல் பக்கம் வரப் போவதில்லை. ஐஸ்வர்யா-அபிஷேக்தான் முதல் பக்கம். அவர்களது திருமணமே முதல் கவனம். அது நமது கலாச்சாரம். வேலைவாய்ப்பு அதிகரித்து படிப்பறிவு பட்டறிவாக மாற காலம் பிடிக்கும். பேஸன்சர் ரயிலின் வேகத்தில்தான் கலாச்சார மாற்றங்கள் நிகழும்.
5 comments:
நல்ல பதிவு. 1. மென்பொருள் பணியாளர்களின் வாழ்க்கை நீங்கள் சொன்னது போல் இலகு இல்லை என்பது எத்தனையோ அறிவாளிககளுக்கு புரிவதேயில்லை. 2. சமூக அவலங்களுக்கான நிஜமான காரணங்கள் மறைக்கப்படுவது வருத்தமே. நன்றிகள் பல.
Excellent post Nirmal. You read my mind exactly. கல்வெட்டின் பதிவை படித்து விட்டு நான் இரவில் எழுத நினைத்த விஷயங்களை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.
மென்பொருள் துறையின் அசுர வளர்ச்சியால் இந்தியாவில் சமூகம் இரு வேறு நிலைகளை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதற்கு சரியான தீர்வு மென்பொருள் துறையை ஒழிப்பது என்ற முடிவுக்கு ஏன் சிலர் வந்து விட்டார்கள் என்பது எனக்கு புரியவில்லை.
அதேபோல இன்னும் எத்தனை காலம்தான் outsourcing, china, இந்தியா காலி என்று உண்மை புரியாமல் பேசுவார்களோ என்பதும் புரியவில்லை. இது குறித்து விளக்கமாய் எழுத ஆசையாயிருக்கிறது. சோம்பேறித்தனம் ஒத்துழைத்தால் இந்த வாரயிறுதிக்குள் எழுதுகிறேன்.
நல்ல பதிவு. இது போன்ற மேம்போக்கான ஊடக 'talk show' களினால் பதிவர்களையும் மயக்குவதும் உண்மையான காரணங்கள் அலசப்படாததும் வருத்தமளிக்கிறது. மேலும் நமது தன்னம்பிக்கையின்மையே மென்பொருள்துறை ஒரு 'bubble' என்ற எண்ணங்களுக்கு வித்திடுகின்றன. Y2K முடிந்தவுடன் நமது மென்பொருள் வருமானம் அவ்வளவுதான் என்றவர்களும் வியக்கும் வளர்ச்சி கண்டும் ஏன் நம் தன்னம்பிக்கை வளரவில்லை ?
அதே சமயம்,மென்பொருள் நிறுவனங்கள் தமது உடனடி அடுத்த ஊர்ப்புறத்தின் பொருளாதார மேம்பாட்டில் பங்கேற்பது 'அதிக சம்பள' புகைச்சல்களை குறைக்க ஏதுவாகும்.
Customary நல்ல பதிவு etc etc :)
யாரும் மென்பொருள் துறை வேண்டாம் என்று கூறியதாகத் தெரியவில்லை. ஆனால், அரசில் கவனம் என்று வரும்போது எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பது பற்றி விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மென்பொருள் துறை ஏற்கனவே லாபங்களை ஈட்டிக் கொண்டு ஒரு சமயத்தில் வருடத்திற்கு 100% வளர்ச்சி என்ற வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த, மற்றும் இன்றும் அதிவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு துறை. அதற்கு அரசின் ஆதரவு, tax holdidays போன்ற சலுகைகளெல்லாம் இல்லாமலேயே அது ஓரளவுக்கு வளரக்கூடிய ஒரு துறையாகும். அதற்கு அளிக்கும் சலுகைகள், மானியங்கள் ஆகியவற்றை, பின்தங்கிய துறைகள் / பகுதிகள் / மக்கள் போன்றவைகளுக்கு செலவிட்டு முன்னேற்றலாமே என்பதுதான் பொதுவாக நிலவும் கருத்து.
ஒரு ரயில் வண்டியின் இஞ்சின் போன்றிருக்கும் ஒரு அங்கத்தை, மற்ற ரயில் பெட்டிகளிலிருந்து கழட்டி விட்டு விட்டால் அது மணிக்கு 500 கி.மீ வேகத்தில் கூட பயணிக்கக் கூடும். அத்தகைய வேகத்தால் யாருக்கு என்ன பலன்? ஒரு இஞ்சின் என்றால் அது மற்ற பெட்டிகளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போனால்தான் அதனால் பயன் ஏற்பட்டதாகக் கருத முடியும். இஞ்சின் மட்டும் தனியாக 500 கி.மீ வேகத்தில் முன்னேறுவதை விட, மொத்த இரயில் வண்டியும் 50 கி.மீ வேகத்தில் முன் செல்வதையே பலரும் விரும்புகிறார்கள். தற்போதைய அரசுகளின் நடவடிக்கைகள் பெரும்பாலும் இஞ்சினைக் கழட்டி அதைத் தனித்து ஓட விட்டு சாதனை படைக்கும் முயற்சிகளாகவே உள்ளன. அதைத்தான் பலரும் கண்டிக்கிறார்கள் என்பது எனது புரிதல்.
//அதற்கு அரசின் ஆதரவு, tax holdidays போன்ற சலுகைகளெல்லாம் இல்லாமலேயே அது ஓரளவுக்கு வளரக்கூடிய ஒரு துறையாகும். அதற்கு அளிக்கும் சலுகைகள், மானியங்கள் ஆகியவற்றை, பின்தங்கிய துறைகள் / பகுதிகள் / மக்கள் போன்றவைகளுக்கு செலவிட்டு முன்னேற்றலாமே என்பதுதான் பொதுவாக நிலவும் கருத்து.
//
பொதுவாக நிறைய கருத்துகள் பிரச்சாரமாக்க படுவது சகஜம். அது நம் கலாச்சாரத்தின் ஒரு முகமே.
இந்த ஒரளவு முன்னேறிய துறையை கவனிக்காமல் விட்டுவிட்டால் அப்புறம் அரசின் அலட்சியம் என கருத்துகள் வருமா? வராதா? அப்போது அன்றே சொன்னேன் இந்த துறை அவ்வளவுதான் என்று அது நடந்து விட்டது பாருங்கள் என்று சோசியகாரர்கள் எல்லாம் ஒரு புறம் நிற்பார்கள். ;-)
உலகளவில் கடுமையான போட்டிகள் நிறைந்த துறை இது. இன்று இருப்பது நிறைவானது போன்ற கோட்பாடுகள் இத்துறைக்கு ஆகாது. தொடர்ந்தளிக்கப்படும் அரசின் ஆதரவும் ஊக்கமும் இதற்கு முக்கியம்.
இந்த துறையினால் அடையும் பயன்பாடுகள் அதிகம் இருப்பதாலேயே இதற்கான ஆதரவு அதிகமாய் உள்ளது.
நீங்கள் பின்தங்கிய துறையை/ பகுதியை கவனியுங்கள் என்பது பொதுவான கருத்து. எந்த துறை , எந்த பகுதி எம்மாதிரியான கவனிப்பு என்பது பற்றி விரிவாக தெரியாமல் பொதுவாக வைக்கப்படும் கருத்து.
Post a Comment