Monday, February 12, 2007

குழுக்களும் அவற்றின் சப்தங்களும்

சிந்தனையை கோர்க்கும் போது அதை வெளிப்படுத்த பல வடிவங்கள் உண்டு. சிலையாய், சித்திரமாய் , பாவனையாய், எழுத்தாய், பேச்சாய் வெளிப்படுத்தலாம். இவற்றில் எல்லா தரப்பையும் கவரக் கூடிய இரு படிமங்கள் எழுத்தும், பேச்சும். பல்லியின் நாக்கில் படியும் பூச்சியை போல எழுத்துகளும், பேச்சுக்களும் எண்ணத்தில் படியும்.

பரிணாமத்தின் துவக்கத்தில் சப்தங்கள் வார்த்தைகளாக மாற ஆரம்பித்தன. வேட்டைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் ஏற்படுத்தபட்ட குழுவில் ஒரே போல் எழுப்பட்ட சப்தங்கள் வார்த்தைகளாக நிறுவப்பட்டு பகிரப்பட்டது. வார்த்தைகள் அதிகமாக அதை பாதுகாக்க எழுத்து வடிவம் உருவாகி இருக்கலாம.

குழு அமைப்பு உருவாக்கம் ஒரு செல் உயிரி பல செல்லாக மாறுவதிலிருந்தே உண்டு. பல செல் உயிரிகளில் யானைகள், சிங்களின், கழுதை புலிகள் பற்றி குழு அமைப்புகளை அன்றாடம் டிஸ்கவரி சானலில் காணலாம்.

ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் யானையும், ஆசிய கண்டத்தில் இருக்கும் யானையும் ஒரே போல் சப்தம் இடுகின்றன. கிட்டதட்ட ஒரே போல் குழு அமைப்பில் இயங்குகின்றன. மனிதருக்கு ஆறாம் அறிவின் காரணமாய் இருக்கும் நில அமைப்புக்கேற்ற தனது பயம், பயத்தால் உருவான பக்தி, இனப்பெருக்க தேவைகள், வேட்டை தன்மை இவற்றிற்கேற்ப எழுப்பிய சப்தம் குழுவுக்கு குழு மாறியது. துவக்கத்தில் இருந்த சித்திர வடிவ எழுத்துக்கள் பின்பு வடிவம் மாற ஆரம்பித்தன. குழுக்களின் கற்பனைக்கு ஏற்றது போல் அவற்றின் எழுத்து வடிவம் மாறியது.

அலுவலகத்தில் இருக்கையில் வீட்டோடு தமிழில் பேசினால் அருகிலிருக்கும் சீன தோழருக்கு அது சப்தமாகதான் படுகின்றது. சீன தோழர் அவரது மொழியில் உரையாடுகையில் எனக்கும் அது சப்தமாகதான் இருக்கின்றது. முக அதிர்வுகள்,முன்னர் நடந்த உரையாடல்கள் வாயிலாக பொருள் கொள்ள முடிகிறதே தவிர அவர் சொல்வதன் பொருள் புலப்படுவதில்லை. பேச்சில்தானென்று இல்லை எழுத்தும் இதே கதைதான். நம்முடையது அவருக்கு ஜிலேபியாகவும், அவருடையது எனக்கு குச்சி கோபுரமாகவும்தான் படுகின்றது

சப்தம் மொழியானது, எழுத்து மொழிக்கான இலக்கணத்தை உருவாக்கியது. குழுக்கள் பெருகுகையில் அவை பிரிய ஆரம்பித்தன, கிட்டதட்ட உடலில் நடக்கும் செல் பிரிதல் போல் குழு பிரிதலும் ஆரம்பித்தன. குழுவின் வலிமை அதன் உறுப்பினரின் வலிமை கொண்டு மாறியது.

விலங்குகள் குழுவிலும் தலைமையை காணலாம். தலைமைக்கு நடக்கும் போட்டிதனையும் காணலாம். சிந்திக்கும் உரிமையிருந்ததால் மனித குழுக்களில் வலிமை அதிகமானவன் தலைவனாகவும், புத்தி அதிகமுள்ளவன் ஆலோசனை சொல்பவனாகவும் அமைய பெற்றது. புத்தியின் வலிமையை உணர்ந்தவன் புத்தியை பகிர்ந்து குழுக்களை வலிமையாக்குதலில் ஈடுபட்ட அதே தருணத்தில் புத்தியின் உதவியால் தன்னை தற்காத்து கொள்ளவும் ஈடுபட்டான்.

தன்னை மேம்படுத்தி கொள்வது உயிரினத்தின் மரபனுக்களில் உண்டு. தன்னை பாதுகாக்க நினைக்கும் உணர்வின் திரிபே வலிமையானதே வாழும் எனும் கோட்பாடு. தனிமனிதன் குழுவாகதான் இதை சாதிக்க முடியும் என்பதை அறிந்ததால் குழுவை வலிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டான். குழுவை இணைப்பதற்கான பொதுவானதொரு கருவி தேவைபடுகையில் மொழி சுலபமாய் அவ்விடத்தில் பொருந்தியது.அதனால் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சாதனமாய் உண்டான மொழி உணர்வுகளை இயக்குவதாய் மாற ஆரம்பித்தது. மொழியின் அடிப்படையில் குழுக்களிடையே மோதல்கள் உருவாயின. அறிவியல் பெருகி உலகம் சுருங்க தொடங்கும் இக்காலத்திலும் அது மாறாமல் உண்டு. கணிணி உலகத்திலும் டாட் நெட், ஜாவா மோதல்களாக குழு மோதல்கள் உண்டு.

சித்திரமும், சிலைகளும் காலந்தொட்டு மாறியது போல் எழுத்தும், பேச்சும் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றது. குழுக்கள் தன் விட்டம் அதிகரிக்க மொழியினை பரப்புதலும் , பிற மொழி அழித்தொழித்தலும் ஒரு வழி என அடையாளம் கண்டதால் அம்முயற்சியிலும் ஈடுபட ஆரம்பித்தனர். சில குழுக்கள் மொழியினால் உண்டான அதிகார அமைப்பினை காக்க மொழியை குறைந்த விட்டத்திற்கு கொண்டு வர அம்மொழிகள் அழிய ஆரம்பித்தன.

பொருளாதாரத்தை உயர்த்தும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளோடு ஒத்திசைந்து அதனை விரைவாய் உள்வாங்கும் தன்மை கொண்ட சிந்தனையாளர் சார்ந்த மொழிகள் விரைவாய் வட்டங்களை விரிவுபடுத்தின. விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உள்வாங்காமல் நின்ற மொழி கொண்ட குழுக்கள் நாள்போக்கில் அவற்றினை அவசரமாக கற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால் பிற மொழி வாயிலாக அறிய தொடங்கி அவ்வழி நகர ஆரம்பித்தனர். மொழியால் குழு வளராமல் குழுவால் மொழி வளர வேண்டிய அவசியம் அக்தகைய மொழிகளுக்கு உண்டானது.

No comments: